under review

இசைக்கவி ரமணன்

From Tamil Wiki
இசைக்கவி ரமணன்

இசைக்கவி ரமணன் (ரமணன்; டி.ஏ. வெங்கடேஸ்வரன்) (பிறப்பு: மார்ச் 30, 1954) கவிஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், இதழாளர், நாடக நடிகர், இலக்கிய - ஆன்மீகச் சொற்பொழிவாளர். 'தி இந்து' ஆங்கில இதழில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

டி.ஏ. வெங்கடேஸ்வரன் என்னும் இயற்பெயர் கொண்ட இசைக்கவி ரமணன், மார்ச், 30, 1954-ல், திருநெல்வேலியில், அனந்தராம சேஷன் - சாவித்திரி இணையருக்குப் பிறந்தார். சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை ஏ.எம். ஜெயின் கல்லூரியில் பயின்று பி.யூ.சி மற்றும் வணிகவியலில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இசைக்கவி ரமணன், 1977-ல், சென்னை 'தி இந்து' ஆங்கில இதழில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணியில் சேர்ந்தார். சென்னை, மதுரை, பெங்களூரூ, விசாகப்பட்டிணம் எனப் பல நகரங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். நூற்றுக்கணக்கில் சுய முன்னேற்ற வகுப்புகள், பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் வகுப்புகள், பயிற்சிகள் அளித்தார். மண்டல மேலாளராக உயர்ந்து ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: அனுராதா. மகன்கள் ஆனந்த், விக்ரம்.

இசைக்கவி ரமணன்

இலக்கிய வாழ்க்கை

இசைக்கவி ரமணன் தனது தந்தை மூலமும், ராமகிருஷ்ணா பள்ளித் தமிழாசிரியர் மா.வி. இராகவன் மூலமும் இலக்கிய ஆர்வம் பெற்றார். நண்பர் ஹரிகிருஷ்ணன் ஊக்குவிப்பால் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். பாரதி, கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். 'ரமணன்' என்ற புனை பெயரில் பல கவிதைகளை எழுதினார். 'நல்லூர் இலக்கிய வட்டம்' மூலமும், பாரதி சுராஜ் தலைவராக இருந்த 'பாரதி கலைக்கழகம்' மூலமும் பல கவியரங்குகளில் கலந்துகொண்டார். பல நூற்றுக்கணக்கான மேடைகளில் கவிதைகள் வாசித்தார். பல இலக்கிய, ஆன்மிகக் கருத்தரங்குகளில், சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். 'ரமணன்' என்ற பெயரில் பல எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் இருந்ததால், 'இசைக்கவி ரமணன்' ஆனார்.

இசைக்கவி ரமணன், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்களை எழுதினார். கவிதை, உரைநடை, ஆன்மிகம் என 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். ஸ்ரீ பக்தராஜ் மகராஜ் (இந்தோர்) என்ற மஹானைப் பற்றி இந்தியில் பல பாடல்களை எழுதினார். இசைக்கவி ரமணன், சில ஆங்கில நூல்களை எழுதினார். சில நூல்களை மொழிபெயத்தார். பத்துக்கும் மேற்பட்ட குறுந்தகடுகளை வெளியிட்டார்.

சொற்பொழிவுகள்

இசைக்கவி ரமணன், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன் மற்றும் மரபின்மைந்தன் முத்தையா இருவரும் அளித்த வாய்ப்பால் கோவையில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். தொடர்ந்து சென்னை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினரின் ஆதரவில் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகளை, உரையாடல் நிகழ்வுகளை நடத்தினார். தமிழகத்தில் மட்டுமல்லாது பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, தில்லி முதலிய ஊர்களிலும், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அபுதாபி, மஸ்கட் போன்ற நாடுகளிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

சென்னையில், கண்ணதாசன் குறித்து இசைக்கவி ரமணன் நடத்திவரும் 'காலங்களில் அவன் வசந்தம்' நிகழ்ச்சி நூறு மேடைகளைக் கடந்து சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதழியல்

இசைக்கவி ரமணன் திரிசக்தி பதிப்பகத்தின் செயல் தலைவராகப் பணியாற்றினார். எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்துப் பல நூல்களை வெளியிட்டார்.

இசைக்கவி ரமணன் - பாரதியார் ஆக

நாடகம்

இசைக்கவி ரமணன் தொலைக்காட்சியில் சில நாடகங்களில் நடித்தார். 'பாரதி யார்?' என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி, வசனமெழுதி, பாரதியாக நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல நகரங்களிலும், மஸ்கட், மெல்போர்ன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிலும் இந்நாடகத்தை அரங்கேற்றினார்.

ஆன்மிகம்

இசைக்கவி ரமணன், விசாகப்பட்டிணம் அருகே உள்ள பீமினிப் பட்டிணத்தில் வாழ்ந்த சத்குரு சிவானந்த மூர்த்தி மூலம் ஆன்மிக விழிப்புணர்வு பெற்றார். பல்வேறு ஆன்மிக நூல்களை எழுதினார். ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம், அராள கேசரி பதிகம், மரியன்னை பதிகம், காந்திமதியம்மை பதிகம் போன்ற பதிகங்களை எழுதினார். சாரதாம்பிகை பதிகம் ஸ்ரீ சிருங்கேரி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்தரால் வெளியிடப்பட்டது. மதுரை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா மூலம் பல ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 35-க்கும் மேற்பட்ட முறை இமாலயப் பயணம் மேற்கொண்டார்.

ஊடகம்

இசைக்கவி ரமணன், பொதிகைத் தொலைக்காட்சியில் 'கொஞ்சம் கவிதை; கொஞ்சம் தேநீர்' கவிதை இலக்கிய நிகழ்ச்சியை ஞாயிறு தோறும் பல மாதங்கள் நடத்தினார். இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் அதில் பங்கேற்றனர். பொதிகை, ஸ்ரீ சங்கரா, புதுயுகம், மக்கள் தொலைக்காட்சிகளில் 1000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். அகில இந்திய வானொலி நிலையத்திலும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

விருதுகள்

  • சென்னை கம்பன் கழக விருது
  • அம்பத்தூர் கம்பன் கழகத்தின் தமிழ்ச்சுடர் விருது
  • பாரதி இலக்கியச் செல்வர் பட்டம்
  • ஸ்ரீராம் குழுமத்தின் பாரதி விருது
  • பொற்றாமரை விருது
  • சென்னை பாரதி சங்கம் வழங்கிய பாரதி சேவைச் செம்மல் விருது
  • சிலம்புச் செல்வர் ம.பொ.சி. விருது
  • பாரத் கலாச்சார் வழங்கிய கவிகலா பாரதி விருது
  • இலக்கிய பீடம் அளித்த சிவசங்கரி விருது
  • மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் அறிவுக்களஞ்சியம் விருது
  • டி.கே.எஸ். குடும்பத்தார் வழங்கிய நாடகச் செல்வர் விருது
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • வடசென்னை தமிழ்ச் சங்கத்தின் பாரதி பணிச்செம்மல் விருது
  • நெமிலி பாலா பீடத்தின் 'பாலரத்னா' விருது
  • கண்ணதாசன் விருது

மதிப்பீடு

இசைக்கவி ரமணன், பல்வேறு கவிதைகளைச் சரளமாக உணர்ச்சிப் பெருக்கோடு மேடைகளில் பாடக்கூடியவர். நாட்டுப்புறப் பாடல்களில் அதிக ஈர்ப்புக் கொண்டவர். கவிதை, எழுத்து, நடிப்பு, இசைப் பாடல் எனப் பல களங்களில் செயல்பட்டார். 'பாரதி யார்?' நாடகம் மூலம் வெளிநாடுகளிலும் பரவலான கவனம் பெற்றார். தமிழின் குறிப்பிடத்தகுந்த இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • கோடுகள் இல்லா உலகம்
  • அகத்தியர் அந்தாதி
  • பிள்ளைப் புலம்பல்
  • மனோன்மணி மாலை
  • ரமணனைக் கேளுங்கள்
  • வண்டி போய்க்கொண்டிருக்கிறது
  • மரியன்னை பதிகம்
  • அராளகேசி அருட்பாமாலை
  • ஸ்ரீ சாரதாம்பிகை பதிகம்
  • துர்கா சப்தஸ்லோகி
  • நதியில் விழுந்த மலர்
  • அபிராமி அம்மை பதிகம்
உரைநடை நூல்கள்
  • ஒளிமயமான எதிர்காலம்
  • எந்த வானமும் உயரம் இல்லை
  • வெற்றி நிச்சயம்
  • ஈசாவாஸ்ய உபநிடதம்
  • இமயம்: அந்தரங்கத்தின் பகிரங்கம்
  • எல்லோர்க்கும் தந்தை இறைவன்
  • மனம் செய விரும்பு
  • என் குருவே என் இறைவன்
  • திருமணம் என்பது
  • சிகரம் (இயக்குநர் சிகரம் திரு. கே . பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு)
  • நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா?
ஆங்கில நூல்கள்
  • A Drop From The Gita
  • Chips Down? Chin Up!
  • Business Mantras, a Pictorial on Sri N. Mahalingam
  • A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites
  • Mahaprasthan (A Pilgrimage to Kedar-Badri)
  • Take Marraige Seriously
  • The Intimate Unknown

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 14:03:25 IST