ஆ. தசரதன்
ஆ. தசரதன் முனைவர் ஆ. தசரதன் (பிறப்பு: 1950) எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர். திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் போன்றவற்றில் பணியாற்றினார். 'இண்டர்நேஷனல் பிரிண்டர்ஸ்' என்ற நிறுவனத்தின் பதிப்பாளர். வெளியீட்டாளர். சுவடியியல் சார்ந்தும் வரலாற்று ஆய்வுகள் சார்ந்தும் பல நூல்களை எழுதினார். பதிப்பித்தார்.
பிறப்பு, கல்வி
ஆ. தசரதன், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் உள்ள குறும்பலாப்பேரியில், 1950-ல், தைப்பூசத்தன்று பிறந்தார். பாவூர்ச் சத்திரத்தில் பள்ளிக் கல்வி பயின்றார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். நாகர்கோவிலில் உள்ள தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் பயின்று மொழியியலில் பட்டயம் பெற்றார். 1974 முதல் 1977 வரை கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில், 'இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளின் தொடரமைப்புகள்' (Syntactical Structures of 20th Century Tamil Poems) என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
1978-ல், லண்டன் பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா மற்றும் கீழை நாட்டு ஆய்வு நிறுவனத்தில், டாக்டர் ஜான் மார் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் மற்றும் இலக்கணம் பயின்றார்.
தனி வாழ்க்கை
ஆ. தசரதன் மணமானவர்.
ஆய்வுப் பணிகள்
1978-ல் திருவனந்தபுரத்திலிருக்கும் உலகத் திராவிட மொழியியல் நிறுவனம், தசரதனை, ஜெர்மனியிலுள்ள கோலோன் பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்ற அனுப்பியது. அங்கு ஓராண்டு பணியாற்றிவிட்டு 1979-ல் தாயகம் திரும்பினார். 1980-ல், திராவிட மொழியியல் நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அதன் புதுதில்லி அலுவலகத்தில் பணியாற்றினார். 1981-ல் புதுதில்லியிலுள்ள Asian Educational Services என்ற புத்தக வெளியீட்டகத்தின் பிரதிநிதியாகப் பணிபுரிந்தார். 1982-84 ஆண்டுகளில் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். 1984 முதல் 1994 வரை சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ்த் துணைப் பேராசிரியராகவும், ஓலைச்சுவடித் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பல ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்தார். ஓலைச்சுவடிகள் குறித்த அட்டவணைகளைத் தயாரித்து வெளியிட்டார்.
1996-1997-ம் ஆண்டுகளில் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். 1998 முதல் 2000 வரை சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு நிலை ஆய்வாளராகவும், 2003 முதல் 2006 வரை திட்டக்கல்விப் பணியாளராகவும், பதிப்புத்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.
இலக்கிய வாழ்க்கை
ஆ. தசரதன், தமிழிலும், ஆங்கிலத்திலும் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்விதழ்களில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். சிறார் இலக்கியங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். தமிழில் வசைப் பாடல்கள் குறித்தும் ஆய்வினை மேற்கொண்டு நூலொன்றை எழுதினார். தசரதன் 30-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தார். 30-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
பதிப்பு
ஆ. தசரதன், 1980-ல், 'இன்டர்நேஷனல் பிரிண்டர்ஸ் அண்ட் பப்ளிசர்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 1982 முதல் அந்நிறுவனத்தின் பதிப்பாளராகவும் வெளியீட்டாளராகவும் செயல்பட்டார். ஆசியவியல் நிறுவனம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட சுவடிப் பதிப்பு நூல்களையும் வேறு பல நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.
'தமிழ் ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல ஓலைச்சுவடிகளைப் பதிப்பித்து நூல்களாக வெளியிட்டார். கதைப் பாடல் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தார்.
இதழியல்
ஆ. தசரதன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கோகயம் என்னும் சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார்.
நூலகம்
ஆ. தசரதன், தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி நூலகம் ஒன்றை அமைத்தார். அது 'டாக்டர் ஆ. தசரதன் நூலகம்' என்ற பெயரில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
மதிப்பீடு
ஆ. தசரதன் ஓலைச்சுவடி மற்றும் பதிப்புத் துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்தவர். பல்வேறு இடங்களில், பல்வேறு களங்களில் செயலாற்றியவர். ஓலைச்சுவடிகள் குறித்த அட்டவணைகளைத் தயாரிப்பதில் தேர்ந்தவர்.
ஓலைச்சுவடிகள் தேடல் குறித்த களச் செயல்பாட்டாளராகவும், சுவடியியல் துறையின் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும் அறியப்படுகிறார்.
நூல்கள்
- உ.வே.சுவாமிநாதையருக்குப் பின் ஓலைச்சுவடியியல்
- தமிழில் பிழை ஆய்வுக் கோட்பாடுகள்
- சான்றோர்குலத் தெய்வங்கள் (இரண்டு தொகுதிகள்)
- அரசகுலமும் பாண்டியர் வரலாறும் (இரண்டு தொகுதிகள்)
- மானாடு (மானவீர வளநாட்டுச் சமூக வரலாறு)
- வலங்கைச் சான்றோரும் சோழரும் (தமிழ்க் கதைப்பாடல் சுவடிகளில் வரலாற்றாய்வு)
- காயாமொழி முப்புராதி அம்மன் வரலாறும் வழிபாடும்
- காயாமொழி ஆதித்தன் திருமுக விலாசம்
- ஓலைச்சுவடிகளைத் தேடி ஒரு பயணம்
- ஓலைச்சுவடிகளைத் தேடி மீண்டும் ஒரு பயணம்
- சான்றோர் அறிஞரா? அரசகுலத்தவரா?
- அண்மை முதல் தொன்மை வரை அரசகுலத்தவர் வரலாறு
- வலங்கை மாலை என்னும் அரசகுல மாலை
- நாடாள்வார் கல்வெட்டு அகராதி
- உய்யக் கொண்டாரும் வலங்கை உய்யக் கொண்டாரும்
- கம்சன் கதைப் பாடல்
- தமிழில் வசைப்பாடல்கள்
- மார்க்கண்டேயன் கதைப்பாடல்
- அய்யனார் கதைப் பாடல்
- மாரியம்மன் கதைப் பாடல்
- அழிப்பாங்கதைப் பாடல்கள் (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- கபாலகார சுவாமி கதைப்பாடல் (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- செண்பக நாச்சியார் கதைப்பாடல் (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- முப்புராதி அம்மன் கதைப்பாடல் (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- பத்மநாப சுவாமி கதைப்பாடல் (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- அந்திரமுடையார் கதைப் பாடல் (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- வலங்கை வாழ்த்து என்ற க்ஷத்திரிய குலத்தவர் திருமண வாழ்த்து (பதிப்பாசிரியர் டாக்டர் ஆ. தசரதன்)
- ஆதித்த வமிச வரலாறு (கி.பி. 1001 முதல் கி.பி. 2000 வரை - பதிப்பாசிரியர் ஆ. தசரதன்)
- அருஞ்சுனை காத்த அய்யனார் - பங்குனி உத்திரத் திருவிழா மலர் (பதிப்பாசிரியர் ஆ. தசரதன்)
- வளர்தமிழில் அறிவியல் அறிவியல்தமிழ் ஊடகங்கள் (பதிப்பாசிரியர்கள்: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி, முனைவர் ஆ. தசரதன், சி. நாகப்பன்)
- தமிழில் ஆவணங்கள் (பதிப்பாசிரியர்கள்: முனைவர் தி. மகாலட்சுமி, முனைவர் சூ. நிர்மலாதேவி, திரு. த. பூமிநாகநாதன் ஆகியோருடன் இணைந்து எழுதியது)
- அறிவியல் தமிழ் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி (முனைவர் மு.வளர்மதி, முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து எழுதியது)
- தமிழில் சிறுவர் இலக்கியம் நூற்தொகை (முனைவர் மு.வளர்மதி முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து எழுதியது)
- அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும் (நெல்லை நெடுமாறன் உடன் இணைந்து எழுதியது)
- சரசோதி மாலை (பாகம் 2) (பதிப்பாசிரியர்கள்: முனைவர் பால சிவகடாட்சம், முனைவர் ஆ. தசரதன்)
- அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதி 1 - 4 (பதிப்பாசிரியர்கள்: முனைவர் ஆ.தசரதன், மொ. மருதமுத்து, மூ. பரிமணன்)
- A tale of romance (General editors Dr. Shu Hikosaka, Dr. G. John Samuel; English rendering V. Gowri Shanker; Editor Dr. A. Thasarathan)
உசாத்துணை
- ஆ. தசரதன் வாழ்க்கைக் குறிப்பு
- ஆ. தசரதன் நூல்கள், தமிழ் இணைய மின்னூலகம்
- ஆ. தசரதன் நூல்கள், மெரீனா புக்ஸ் தளம்
- ஆ. தசரதன், பத்திரகாளி அம்மன் கதைப் பாடல், யூ ட்யூப் தளம்
- தசரதன் காணொளி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2025, 10:40:22 IST