under review

ஆ. குப்புசாமி

From Tamil Wiki
ஒகொஜ்.jpg

ஆ. குப்புசாமி (பிறப்பு: நவம்பர் 20, 1942) சமூகச் செயற்பாட்டாளர், மேடை நாடகக் கலைஞர். மலேசிய நாடகத்துறைக்குப் பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி

ஆ. குப்புசாமி பேராக் மாநிலத்திலுள்ள கமுனிங் தோட்டத்தில் நவம்பர் 20, 1942-ல் பிறந்தார். இவரின் பெற்றோர் ஆறுமுகம், ஐயம்மா. ஆ. குப்புசாமியின் மூத்த சகோதரி தன் பத்தாவது வயதில் சாலைவிபத்தில் காலமானார்.

ஆ. குப்புசாமி 1949 முதல் 1955 வரை கமுனிங் எஸ்டேட் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். ஏழாம் வகுப்பை மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியில் தொடர்ந்தார். ஆ. குப்புசாமி மெத்தடிஸ்ட் இடைநிலைப்பள்ளிக்குப் பிறகு தமிழ்மொழியை மேலும் கற்க 1960-ல் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்திற்குச் சென்றார்.

தனி வாழ்க்கை

லுஇஹி.jpg

ஆ. குப்புசாமி பால்மரம் வெட்டுதல், மரக்கன்றுகளைப் பராமரித்தல், தற்காலிகத் தமிழாசிரியர், பகுதி நேர காவல்துறைப் பணியாளர், தோட்டத் தண்டல் போன்ற பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வந்தார்.

ஆ. குப்புசாமி 1962-ல் சேலம் பூங்காவடியைச் சேர்ந்த தூரத்து உறவுப்பெண் சிவகாமி செட்டி முத்து என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள், நான்கு மகள்கள்.

நாடகத்துறை

ல்க்.jpg

ஆ. குப்புசாமி தமிழிலக்கியங்களிலும் நாடகங்களிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1964-ல் சேலத்திலிருந்து மலேசியா திரும்பியதும் நாடகத்தில் ஆர்வம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து கலைவாணி நாடகக்குழுவை அமைத்தார். நாடகத்துக்காகத் தன் பெயரை இளங்கோ என மாற்றிக்கொண்டார். ஈப்போ நகராண்மைக் கழகத்தில் அரங்கேற்றம் கண்ட 'பூப்போலே ஒரு பெண்' நாடகத்தில் கதாநாயகனாக நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார். இந்நாடகம் மலேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. பக்தி, வரலாறு, நகைச்சுவை நாடகங்களைத் தானே எழுதி, இயக்கி, நடித்தும் வந்தார். 'வேங்கையின் மைந்தன்', 'கம்சன்', 'கவரிமான்', 'சேரன் செங்குட்டுவன்', 'கந்தன் கருணை', 'ஸ்ரீவள்ளி', 'பெருந்தலைச் சாத்தனார்', 'திருவிளையாடல்', 'ஏகலைவன்', 'சாக்ரடீஸ்', 'மனோகரா' போன்ற நாடகங்கள் பல்வேறு அமைப்புகளின் ஏற்பாட்டில் அரங்கேறின.

கலைவாணி நாடகக்குழு பின்னர் முத்துக்குமரன் நாடகமன்றம் என்று பெயர் மாற்றம் கண்டது. ஆ. குப்புசாமியின் மூத்த மகன் தமிழ்ச்செல்வம் நாடக அமைப்பில் ஒலி, ஒளி அமைப்புகளில் புதிய மாற்றங்களைச் செய்வதற்கு உதவினார்.

ஆ. குப்புசாமி ஓவியம் தீட்டுவதிலும் திறன்கொண்டிருந்தார். உருவப்படங்கள், இயற்கைக் காட்சிகள், வரலாற்றுக் காட்சிகளை மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் வரையக்கூடியவர். நாடகத்திற்கேற்ற பெரிய திரைக்காட்சிகளைத் தானே வரைந்தார். நாடகங்களுக்கான ஆடைவடிவமைப்புகள், வாள், கேடயம் போன்ற பொருட்களையும் ஆ. குப்புசாமி உருவாக்கினார்.

ஆ.குப்புசாமி சுங்கை சிப்புட் சுற்றுவட்டார ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இலக்கிய நாடகங்களில் பயிற்சி வழங்கி வந்தார். அவரது இலக்கியநாடகங்கள் பல பள்ளிகளில் இடம்பெற்றன.

பிற செயல்பாடுகள்

தமிழர் திருநாள்

ஆ. குப்புசாமியின் முயற்சியால் 1980-களில்தமிழர் திருநாள் கொண்டாட்டம் சுங்கை சிப்புட் நகரில் சிறப்பாக நடந்தது. இவருடன் இஷ்டலிங்கம், ஆனந்தராஜூ,தாமோதரன் ஆகியோரும் இணைந்து செயலாற்றினர்.

தமிழ் இளைஞர் மணிமன்றம்

1966-ல் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தேசிய தலைவராக சா.ஆ.அன்பானந்தன் தெரிவு செய்யப்பட்டபோது, ஆ. குப்புசாமி தேசிய துணைத் தலைவராகச் சேவையாற்றினார். பேராக் மாநில இளைஞர் மணிமன்றத்தில் செயலாளராகப் பொறுப்பிலிருந்தபோது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்.

மலேசிய திராவிடர் கழகம்

1984-ல் மலேசிய திராவிடர் கழகத்தில் இணைந்து முற்போக்குச் சிந்தனைகளைப் பரப்பும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். தமிழ்நாடு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கீ.வீரமணி, பேராசிரியர் சற்குணன், பேராசிரியர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சுங்கை சிப்புட் தொகுதி திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

ஆ. குப்புசாமி பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னெடுப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார். மதுவிற்கு எதிராக மகளிர் எனும் மது எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஆ. குப்புசாமி பெரும் பங்காற்றியுள்ளார். மக்களின் நல்வாழ்வுக்கான பல கருத்தரங்குகளை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் உதவியுடன் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தார்.

ஆ. குப்புசாமி சுங்கை சிப்புட்டில் இயங்கி வந்த பல அமைப்புகளிலும் சேர்ந்து தனது சேவையை வழங்கியுள்ளார். மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் பொறுப்பு வகித்த காலத்தில் பள்ளிக்கான புதிய கட்டிடம் அமைய பெரும் பங்காற்றியுள்ளார்.

க்ஜ்.jpg
விளையாட்டுத்துறை

ஆ. குப்புசாமி கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். பேராக் மாநில கால்பந்து சங்கத்தில் இணைந்து நடுவர் பயிற்சி பெற்றார். ஜூலை 1, 1979-ல் நடுவருக்கான சான்றிதழைப் (licensed referee) பெற்ற பின்னர் நாடு தழுவிய நிலையில் பல கால்பந்து போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றினார்.

தற்காப்புக்கலை

ஆ. குப்புசாமி அனைத்துலக கராத்தே புடோகன் (Karate Budokan International), தற்காப்புக்கலையில் 1973-ல் சான்றிதழும் அனைத்துலக தை ஜுட்ஸு (Tai Jutsu International) பிரிவில் 1978-ல் சான்றிதழும் பெற்றுள்ளார். இவ்விரண்டு தற்காப்புக்கலைகளையும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார். 1978-ம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்திற்கான விளையாட்டுப்போட்டி ஏற்பாட்டுக்குழுவில் ஆ. குப்புசாமி இடம்பெற்றிருந்தார்.

1970-களில் கிழக்கு மலேசிய மக்கள் சமூகத் தொடர்புக்குழுவில் இணைந்து பல சமூகச் சேவைகளை ஆற்றினார். இவ்வமைப்பு 1977, 1978 ஆகிய இரு ஆண்டுகளில் ஆ. குப்புசாமிக்கு சிறந்த பொதுச் சேவையாளர் பாராட்டுப்பத்திரம் வழங்கிச் சிறப்பித்தது.

விருதுகள்

  • சிறந்த நாடகக் கலைஞருக்கான விருது, 1974 (தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம்)
  • சிறந்த பொதுச் சேவையாளர் பாராட்டுப்பத்திரம் (கிழக்கு மலேசிய மக்கள் சமூகத் தொடர்புக்குழு. 1977,1978)
  • கலைக்காவலர் விருது, 1998 (மலேசிய இந்தியர் காங்கிரஸ்)
  • நாடகச் செம்மல் விருது (2012 துன் சாமிவேலுவிடமிருந்து)

இறப்பு

1997-ல் ஆ. குப்புசாமிக்கு தைராய்டு பிரச்சினையால் குரல்வளை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒருமாதம் சுயநினைவின்றி கோமாவில் இருந்து மீண்டபின் அவருக்குப் பேசும்திறன் வெகுவாகக் குறைந்தது. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார். நவம்பர் 27, 2000-ல் சிறுநீரகக்கோளாறினால் மரணமடைந்தார்.


✅Finalised Page