under review

ஆத்திசூடிப் புராணம்

From Tamil Wiki
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
ஆத்திசூடிப் புராணம்

ஆத்திசூடிப் புராணம் (ஆத்திசூடிப் புராணம் என்னும் கோபர்வத மாலை) (முதல் பதிப்பு: 1917) ஔவையாரின் ஆத்திசூடி நூலின் புராண விளக்கமாக இயற்றப்பட்ட நூல். இதனை இயற்றியவர் ஆறுமுகப்பாவலர்.

வெளியீடு

ஆத்திசூடிப் புராணம் என்னும் கோபர்வதமாலை நூல், மதுரை ஜில்லா செம்பூர் வித்வான் வீ. ஆறுமுகஞ்சேர்வையின் உரையுடன் 1917-ல், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. இதன் மறுபதிப்பு, 1938-ல் வெளியானது. இந்நூலின் ஆசிரியர், ஆறுமுகப்பாவலர்.

நூல் அமைப்பு

ஆத்திசூடிப் புராணத்தின் தொடக்கத்தில் விநாயகர் வாழ்த்து இடம்பெற்றது. தொடர்ந்து முருகன், முதுகுன்ற நாதர், நடேசர் ஆகியோர் மீதான வாழ்த்துச் செய்யுள்கள் இடம்பெற்றன. அவையடக்கம், பெரிய புராண வரலாறு என 11 பாடல்களைத் தொடர்ந்து 109 பாடல்களில் நூல் அமைந்துள்ளது.

உள்ளடக்கம்

ஆத்திசூடிப் புராணம், ஔவையார் இயற்றிய ஆத்திசூடியின் பாடல் விளக்கமாகவும், பாடல் வரிகளுக்கேற்ற பொருத்தமான பெரியபுராணம் போன்ற பல வரலாற்றுக் கதைகளின் விளக்கத் தொகுப்பாகவும் அமைந்தது. 'அறஞ்செய விரும்பு' தொடங்கி 'ஓதுவது வேதம்' வரையிலான பாடல்களுக்கு புராணக்கதைகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆத்திசூடி நூலில் இடம் பெற்ற 108-வது வரியான (இறுதி வரி) 'ஓரம் சொல்லேல்' என்பதற்குப் பதிலாக 'ஓதுவது வேதம்' என்ற இறுதி வரியும் அதற்கான கதை விளக்கமும் இடம்பெற்றது. 109-வது பாடலில் ஆக்கியோனின் பெயரான ஆறுமுகப்பாவலர் என்ற குறிப்பு இடம்பெற்றது.

ஒவ்வொரு பாடலும் இறுதியில்

"கங்கை கோகிரி மேவு
மாதிசத் தீசநா யகனே"
என்ற வரிகளுடன் நிறைவுற்றது.

பாடல்

அறஞ்செய விரும்பு - திருமால் சரித்திரம்

அறஞ்செய விரும்பு மாயனார் கஞ்ச
மாயிர மலரிலோர் மலர்தான்
குறைந்ததென் றெண்ணி விழியடி தரித்த
கொள்கையை மறப்பனோ கொடியேன்
இறைஞ்சிய மனித ரமரராக் கதரு
மேறியே பதம்பெறு கைலை
யறம்பெறு கங்கை கோகிரி மேவு
மாதிசத் தீசநா யகனே.

ஙப்போல் வளை - அரிவாட்டாய நாயனார் சரித்திரம்

ஙப்போல்வ ளைகண மங்கல நகரி
னம்பன்மாட் டன்பினாற் றாயர்
செப்புமா வடுவுங் கீரையு மமுதுஞ்
செலுத்தநீ யாண்டதை மறவேன்
கைப்பொருண் மிகுந்தோங் களகைய னன்ன
காவலர் பெருகிவாழ் கின்ற
வப்பதி கங்கை கோகிரி மேவு
மாதிசத் தீசநா யகனே.

வித்தை விரும்பு - சுவாகையென்னுந் தாசி கதை

வித்தை விரும்பும் வேசியாஞ் சுவாகை
மேதினி யில்விட புருடர்
செத்திடச் செய்யு நமன்றொழில் செய்யா
தீப்பிணி யா லுடல் வருந்தி
முத்தர்தம் செயலா லீசான கங்கை
மூழ்கிவீ டடைந்ததை மறவேன்
அத்துறை கங்கை கோகிரி மேவு
மாதிசத் தீசநா யகனே.

மதிப்பீடு

ஆத்திசூடிப் புராணம், ஔவையாரின் ஆத்திசூடிப் பாடல்களுக்கான புராண மற்றும் சமய வரலாற்றுக் கதைகளின் விளக்க நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jul-2024, 11:21:40 IST