அவிநாசி லிங்கேஸ்வரர் கருணாம்பிகை ஆலயம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கருணாம்பிகை ஆலயம் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சைவ ஆலயம். தேவார பாடல் பெற்ற கொங்குநாட்டு ஏழு தலங்களில் ஒன்று.
ஆலய அறிமுகம்
அவிநாசி லிங்கேஸ்வரர் கருணாம்பிகை ஆலயம் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள சைவ ஆலயம். தேவார பாடல் பெற்ற கொங்குநாட்டு ஏழு தலங்களில் ஒன்று. முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட இடம் என்பது தொன்மம். இறைவன் அவிநாசியப்பர். தாயார் கருணாம்பிகை. இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது.
இடம்
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ளது. திருப்பூரில் இருந்து 14 கி.மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற கொங்குநாட்டு தலங்களில் மற்றொரு தலமான திருமுருகன்பூண்டி இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
கோயில் பெயர்
சுந்தரர் பாடிய தேவார பதிகத்தில் ஊரின் பெயர் திருப்புக்கொளியூர் என்றும், ஆலயத்தின் பெயர் அவிநாசி என்றும் வழங்கப்படுகிறது. திருப்புக்கொளியூர் என்பது ஆலயத்திற்கு தெற்கே அமைந்த ஊர் என்றும், அது மறைந்து ஆலயத்திற்கு வடக்கே உருவான ஊர் அவிநாசி என்றும் சொல்லப்படுகிறது. கல்வெட்டுக்களில் ஊர் புக்குளியூர் என்றும், ஆலயம் ஆவிநாசியாளுடைய நாயனார் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது. அவிநாசி பகுதி வடபரிசாரநாடு, வடபரிசாரகநாடு என குறிப்பிடப்படுகிறது.
இன்று பொதுவழக்கில் பெரியகோவில், அவிநாசி கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், கருணையாத்தா கோயில் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறது.
கோயில் வரலாறு
ஆலய வளாகத்தில் அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன், நடராஜர் ஆகியோருக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன. கல்யாண மண்டபம் உள்ளது. இந்திய தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் இருந்த ஆலயம் 1970-ல் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது.
அவிநாசியப்பர் ஆலயம் பற்றிய முதல் குறிப்பு சுந்தரர் பாடிய தேவார பதிகத்தில் கிடைக்கிறது. தற்போதுள்ள அவிநாசியப்பர் ஆலயம், கருணாம்பிகை ஆலயம், ராஜகோபுரம் ஆகியவை அவற்றின் அமைப்பின் படி கொங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ஆலயம் எப்போது மற்றும் யாரால் கட்டப்பட்டது பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. கல்வெட்டுகள் வழியாக சில தகவல்கள் அறியப்படுகின்றன.
அவிநாசி ஆலயவளாகத்தில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை பதிப்பிக்கப்பட்டவற்றில் கொங்கு சோழன் உத்தமசோழ விரநாராயணன் ஆட்சியாண்டில் பொ.யு. 1140-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டே (SII XXVI No.198) காலவரிசைப்படி முதலாமானது. இது கருணாம்பிகை ஆலய மகாமண்டப தெற்கு சுவரில் உள்ளது. அவிநாசியப்பர் ஆலயத்தில் கொங்கு சோழன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பொ.யு. 1160-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு (கோ.மா.க.தொ.1.எண்.776/2003) காலவரிசைப்படி முதலாமானது. கல்யாண மண்டத்தில் சுந்தரபாண்டியன் காலத்தில் இருந்து கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன.
அவிநாசியப்பர் ஆலயத்தின் இஷபமண்டபம் கட்டப்பட்டது பற்றி அங்குள்ள பொ.யு. 1184- ஐ சேர்ந்த மூன்றாம் வீரசோழன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது (SII XXVI No.191). சண்டேஸ்வர நாயனாரை பொ.யு. 1346-ல் திருமடை விளாகத்தில் வசிக்கும் தபசியான முதலி முத்தின் சிவிகை பெற்றான் என்பவர் பிரதிஷ்டை செய்துள்ளார் (ARIE 1986-87 No.355, கோ.மா.க.தொ.1.எண்.787/2003). அவிநாசியப்பர் சந்நிதி முன்னுள்ள ஒரு தூணில் வாணாதரைய வடமலையப்பர் என்பவர் அம்மண்டபத்தை கட்டினார் என்று குறிப்புள்ளது (SII XXVI No.188), இதற்கு அருகிலுள்ள தூணிலும் இவர் பெயர் உள்ளது, ஆனால் காலம் கிடைக்கவில்லை.
ராஜகோபுரத்தை அடுத்துள்ள கொடிக்கம்ப மண்டபத்தை பொ.யு. 1648-ல் நாலூர் பற்று நாட்டு கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளர் பிள்ளந்தை குலத்து பெரிய காழியப்ப கவுண்டர் மற்றும் சின்ன காழியப்ப கவுண்டர் ஆகியோர் உபயம் அளித்துள்ளர் (ARIE 1986-87 No.348, கோ.மா.க.தொ.1.எண்.795/2003).
மண்டபங்கள், கோபுரம், பிரகார சுவர்கள், தரைதளம், தெப்பக்குளம் ஆகியவற்றில் சங்கரய்யா என்பவர் பொ.யு. 1756-ல் புணரமைப்பு செய்துள்ளார் (SII XXVI No.213). இவர் அவிநாசியப்பர் ஆலய பிரகாரத்தின் தென்கிழக்கில் சம்ஹாரேஸ்வரர் என்று அழைக்கப்படும் பஞ்சலிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். சங்கரய்யா என்பவர் மைசூர் அரசர் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் கோயம்புத்தூர் பகுதியின் கூரிகாரர் (அதிகாரி) மற்றும் இந்த பகுதியின் அரச பிரதிநிதியான தளாவாய் தேவராஜய்யா என்பவரின் காரியகர்த்தர்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அவிநாசி குளக்கரையில் ஆலயம் இருந்தது பற்றி பொ.யு. 1296-ஐ சேர்ந்த சுந்தர பாண்டியன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது (SII XXVI No.193).
20 மற்றும் 21-ம் நூற்றாண்டுகளில் ஆலயத்தில் பணிகள் நடைபெற்றுள்ளன. திருக்கல்யாண மண்டபத்தின் தெற்கே அமைந்துள்ள ஆறுமுகன் சந்நிதி, கருணாம்பிகை ஆலயத்தின் முன் உள்ள ஐந்து நிலை கோபுரம், அதையொட்டி வடக்குப்பக்கம் உள்ள மண்டபம் ஆகியவை 1980-ல் கட்டப்பட்டன. பழைய ராஜகோபுரம் 19-ஆம் நூற்றாண்டில் இடி தாக்கியதில் சிதிலமடைந்ததால், தற்போதிருக்கும் ராஜகோபுரம் 1974-ம் ஆண்டு கட்டப்படத் துவங்கி 1980-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆலயத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள தெற்கு மற்றும் மேற்கு மண்டபமும், வடமேற்கில் உள்ள பாலதண்டயுதபாணி சந்நிதியும் 2024-ல் குடமுழுக்கின் போது கட்டப்பட்டன.
கோயில் தெய்வங்கள்
இறைவன் புக்கொளியூர்நாதன், அவிநாசிலிங்கேஸ்வரர், அவிநாசியப்பர், அவிநாசி ஈஸ்வரன், பெருங்கேடிலியப்பர் என அழைக்கப்படுகிறார். திருப்பதிகத்தில் சுந்தரர் இறைவனை 'புக்கொளி யூரவி நாசியே' என அழைக்கிறார். கல்வெட்டுக்களில் அவிநாசியாளுடையார், அவிநாசியுடைய மகாதேவர், அவிநாசியாளுடையநாயனார், அவிநாசியாண்டார், அவிநாசிலிங்கன் என பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1497 - 1508-ம் ஆண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளில் இறைவன் தக்ஷிணவாரணாசி அவிநாசி லிங்கன் என குறிப்பிடப்படுகிறார்.
தாயார் கருணாம்பிகை, பெருங்கருணாம்பிகை, பெருங்கருணைநாயகி, கருணாலயச்செல்வி என அழைக்கப்படுகிறார். கல்வெட்டுக்களில் திருக்காமகோட்டத்து நாச்சியார் பெருங்கருணைச் செல்வியார், பிரஹத் கருணாம்பிகை என குறிப்பிடப்பட்டுள்ளன. மக்கள் பொதுவழக்கில் இந்த ஆலயத்தை 'கருணையாத்தா கோவில்' என குறிப்பிடுகிறார்கள்.
நடராஜருக்கு தனி ஆலயம் உள்ளது. ஆறுமுகன், பாலதண்டபானி, சூரியன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், பாதிரிமரத்தம்மன், வீரபத்ரர், காலபைரவர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
தொன்மங்கள், தலபுராணங்கள் & ஆகமம்
திருப்புக்கொளியூர்
இறைவன் ஆடிய ஊழித்தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொண்ட அழிவில்லாத இடம் இது. பிறகு தேவர்களுக்கு இறைவன் அருளினார். தேவர்கள் புகுந்து ஒளிந்து கொண்ட இடம் என்பதால் இந்த ஊர் திருப்புக்கொளியூர் என்றும், அழியாத இடம் என்பதால் ஆலயத்திற்கு அவிநாசி என்றும், இறைவனுக்கு அவிநாசியப்பர், அவிநாசிலிங்கேஸ்வரர் என்றும் பெயர்கள் என்பது தொன்மம்.
முதலைவாய்ப் பிள்ளை
திருவாருரில் இருந்து சேரநாடு செல்லும் வழியில் சுந்தரர் திருப்புக்கொளியூர் வந்து, முதலையுண்ட பாலகனை பதிகம் பாடி மீட்கிறார். பின் இறைவனை போற்றிப்பாடி வணங்கி சேரநாடு செல்கிறார். இதனை நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தின் வெள்ளானைச் சருக்கத்தில் இந்த நிகழ்வை விவரிகிறார். இளையான் கவிராயர் அவிநாசிப் புராணத்தின் சுந்தரச் சருக்கத்தில் விரிவாக கூறுகிறார்.
குடவாயில் பாலசுப்ரமணியன் 'முதலை வாயில் மதலை' என்ற கட்டுரையில் இதை சுருக்கமாக கூறுகிறார்: "சுந்தரர் திருப்புக்கொளியூர் அவிநாசியில் அந்தணர் வாழும் வீதியின் மருங்கு வந்தபோது ஒரு வீட்டில் மங்கலவொலியும் அதன் எதிர்வீட்டில் அழுகையொலியும் எழுந்தன. அந்நிலையில் சுந்தரர் அங்குள்ள மறையோர்களை நோக்கி "இரண்டும் உடன் நிகழ்வது ஏன்?" என வினவினார். ஐந்து வயது உடைய சிறுவர் இருவர் அங்குள்ள மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்க, பிழைத்த மற்றொருவனுக்கு இப்போது இவ்வீட்டில் உபநயனம் (பூணூல் கல்யாணம்) நிகழ்கின்றது, அவ்வீட்டில் பிள்ளையை இழந்தவரது அழுகுரல் கேட்கிறது என அங்குள்ளோர் கூறினர். அது கேட்ட சுந்தரர் உளம் வருந்தி நிற்கும்போது மைந்தனை இழந்த மறையோனும் மனைவியும் ஆரூரர் வருகையறிந்து தம் துயர் மறந்து முகமலர்ந்து அவரை எதிர்வந்து வணங்கி நின்றனர். அவர்கள் அன்பின் திறம் கண்டு உளமிரங்கிய சுந்தரர், அவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் மீட்டுக் கொடுத்த பின்பே அவிநாசி இறைவனை வணங்குவேன் என்று கூறி, முதலை விழுங்கிய மடு எதுவெனக் கேட்டு அறிந்து அதன் கரைக்கு சென்றார். அங்கு நின்றவாறு "எற்றான் மறக்கேன்" எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடலானார். அப்பதிகத்தின் நான்காம் பாடலைப் பாடும்போது, 'புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே" என்று ஈசனிடம் வேண்டுகோள் வைத்தார். உடன் யமன் மடுவிலுள்ள முதலையின் வயிற்றிலே முன் வழுங்கப்பட்டிருந்த புதல்வனின் உடம்பில் உயிரைக் கொண்டுவந்து புகுத்தினான். முதலை மடு நீரிலிருந்து வெளிப்பட்டு கரையில் வந்து மைந்தனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவி எடுத்துக்கொண்டார். மறையோன் சுந்தரரின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினான். முதலை வாயினின்று வெளிப்பட்ட அந்த சிறுவனை சுந்தரர் அவிநாசி திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று அவிநாசி பெருமானைத் தொழுது போற்றி பின்பு வேதியரது வீட்டிற்கு அழைத்துச் சென்று மங்கல வாத்தியம் முழங்க அவனுக்கு உபநயனஞ் செய்தார்"
மேலும் அக்கட்டுரையில் "ஐந்து வயதில் முதலையால் விழுங்கப்பெற்ற சிறுவனை பதிகம் பாடி சுந்தரர் முதலை வாயினின்று மீட்ட போது அவனுக்கு ஏழு வயது இருக்க வேண்டும். அதே வயதுடந்தான் யமன் அச்சிறுவனுக்கு உயிர் தந்து முதலை வாயினின்று வெளிவரச் செய்தான் என்பதை சேக்கிழார் 'திரைப்பாய் புனலின் முதலை வயிற்றுடலிற் சென்ற ஆண்டுகளும் தரைப்பால் வளர்ந்ததென நிறம்ப முதலை வாயில் தருவித்தான்' என்று கூறுகிறார்" என குடவாயில் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
அவிநாசிப் புராணம்
இளையான் கவிராயர் இயற்றிய அவிநாசிப் புராணத்தின் 12 சருக்கங்களும் முறையே ஒவ்வொரு புராணத்தை சொல்கின்றன
- சிவன் அக்னித்தாண்டவம் ஆடும்போது உமை பிரணவ வடிவாகி சிவனை பிரிந்திருந்ததால் அவிநாசியில் மாமரத்தில் அடியில் அமர்ந்து தவம் செய்து சிவனின் வலப்பாகம் பெற்றார். இதனால் காசியிலுள்ள சிவலிங்கத்தின் ஒரு கிளை இங்கு லிங்கமாக முலைத்தது, கங்கை இங்கு காசிக்கிணறாக தோன்றியது, உமை கருணாம்பிகையாக சிவனின் வலப்பக்க கருவறையில் வீற்றார் என தலவுற்பத்திச் சருக்கம் கூறுகிறது.
- பிரமதேவன் வழிபட்டு பேறுபெருதல்
- ஐயராவதம் பூஜித்து தன் பதவி அடைதல்
- தாரகை பூஜித்து புத்திரப்பேறு பெறுதல்
- நாககன்னி பூஜித்து நற்பேறு அடைதல்
- வியாதன் என்ற வேடன் பால் அபிஷேகம் செய்து புத்திரப்பேறும் முக்தியும் அடைதல்
- சங்க கன்னன் என்ற வேடன் நற்கதி பெறுதல்
- தெய்வ அரம்பை தன் சாபம் நீங்கி இந்திரலோகம் அடைதல்
- காகம் முக்தி பெறுதல்
- எஞ்ஞகுத்தன் என்ற செட்டி முக்தி பெறுதல்
- தருமசேன மன்னன் புத்திரப்பேறு பெற்றுச் சிவகதி அடைதல்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புக்கொளியூர் வருகையும் முதலைவாய்ப் பிள்ளையை அழைத்தலும்
தொடர்புள்ள விழாக்கள்
சித்திரை மாதம் 12 அல்லது 13 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் முக்கிய திருவிழா. சித்திரை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம் நிகழ்த்தப்பட்டு, பூர நட்சத்திரத்தில் தேர் பவனி நடைபெறும். ஐந்தாம் நாள் இரவு 63 நாயன்மார்களும் இறைவன், இறைவி, திருமால், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருமேனிகளும் தேர்வீதியில் உலா வருதல் நிகழ்த்தப்படும். விழாவின் இறுதி நாள் இரவு இறைவன் இறைவியின் திருமேனிகள் ஆலய குளத்தில் தெப்பத்தில் உலா வருதல் நிகழ்த்தப்படும்.
மார்கழி மாதம் நிகழும் திருவாதிரை, ஐப்பசி மாதம் நிகழும் அன்னாபிஷேகம், கார்த்திகை மாதம் திங்கள் கிழமைகள், மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை முக்கிய நிகழ்வுகள்.
ஆலய அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயவளாகத்தில் அவிநாசியப்பர் மற்றும் கருணாம்பிகை அம்மனுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது. முதல் பிரகாரம் அவிநாசியப்பர் பிரகாரம். இரண்டாம் பிரகாரத்தில் கருணாம்பிகை ஆலயம், கல்யாண மண்டபம், நடராஜர் ஆலயம் ஆகியவை உள்ளன.
ராஜகோபுரம் ஏழுநிலைகள் உடையது. ராஜகோபுரத்தின் முன்புறம் 30 கற்த்தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. ராஜகோபுரத்தின் முன் தெற்குபக்கமாக விநாயகர் சந்நிதியும் 8 தூண்கள் கொண்ட மண்டபமும் உள்ளது. ஆலயத்தின் முன்புறம் சிறிய மண்டபத்துடன் கூடிய தீபஸ்தம்பம் உள்ளது.
ராஜ கோபுரத்தை அடுத்துள்ள முன்மண்டபத்தில் (கொடிக்கம்ப மண்டபம்) பலிபீடம், கொடிக்கம்பம், ரிஷபம் ஆகியவை உள்ளன. முன்மண்டபத்தில் 16 தூண்கள் உள்ளன. 6 தூண்களில் தெய்வங்கள் மற்றும் பிற்காலத்தில் ஆலயத்தை திருப்பணி செய்த ஆட்சியாளர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றிலும் மற்ற தூண்களிலும் குறுஞ்சிற்பங்கள் பல உள்ளன.
அவிநாசியப்பர் ஆலய பிரகாரத்தின் நுழைவில் பிரகார மண்டபம் உள்ளது. அங்கு துவாரபாலகர்கள் உள்ளனர். பிரகார மண்டபத்தின் முன்வரிசையில் 18 தூண்கள் உள்ளன. அவிநாசியப்பர் ஆலயம் மகாமண்டபம், அந்தராளம், கருவறை ஆகியற்றுடன் அமைந்துள்ளது. பிரகாரத்தின் தெற்கில் தட்சினாமூர்த்திக்கும், வடமேற்கில் முருகனுக்கும், வடகிழக்கில் கால பைரவருக்கும், வடக்கே சண்டிகேஸ்வரருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்டத்தின் மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கே பிரம்மாவும் உள்ளனர். துர்கை சிலை தனியாக வடக்குப்பக்கம் வைக்கப்பட்டுள்ளது. காசிக்கிணறு என அழைக்கப்படும் தீர்த்தக்கிணறு இந்த பிரகாரத்தின் வடக்கில் அமைந்துள்ளது. திருச்சுற்று மண்படம் உள்ளது. அதன் தெற்கில் அறுபத்துமூன்று நாயன்மார்கள் மற்றும் சப்தமாதர்களின் சிலைகள் உள்ளன. மேற்கில் ஆறு லிங்கங்களும் கஜலக்ஷ்மியும் உள்ளனர்.
இரண்டாவது பிரகாரத்தில் ராஜகோபுரத்தை அடுத்து தெற்கு பக்கத்தில் சூரியனின் சந்நிதி அமைந்துள்ளது. அவிநாசியப்பர் பிரகார வளாகத்தை அடுத்து தெற்கு பக்கம் திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இதில் 26 தூண்கள் உள்ளன. இதில் இரு தூண்கள் பிற்காலத்தில் மேல்தளத்தை நன்கு தாங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளவை. இந்த மண்டபத்தில் உள்ள அறையில் ஆலயத்தின் செப்புத்திருமேனிகளும் உற்சவ மூர்த்திகளும் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் தெற்கு பக்கமாக வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகன் சந்நிதி உள்ளது.
அடுத்து, கருணாம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. தாயார் ஆலயத்தின் முன்னுள்ள கோபுரம் ஐந்து நிலை உடையது. கொடிமரம், பலிபீடம், முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவை அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் 16 தூண்கள் உள்ளன. இவற்றில் 8 தூண்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இவற்றிலும் மற்ற தூண்களிலும் குறுஞ்சிற்பங்கள் உள்ளன். கோஷ்டங்களில் விநாயகர், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, துர்கை சிலைகள் உள்ளன. வடக்கில் சண்டிகேஸ்வரி தனி சந்நிதியில் அமைந்துள்ளார்.
ஆலயத்தின் வடக்கு பக்கமாக நடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. இதன் முன்மண்டபத்தில் ஏழு தூண்கள் உள்ளன.
ராஜகோபுரத்தின் வடக்கு பக்கம் நவகிரகங்களுக்கும் சனீஸ்வரனுக்கும் சிறிய சந்நிதிகள் உள்ளன, இவை பிற்காலத்தில் அமைக்கப்பட்டவை. ஆலயத்தின் தென்மேற்கில் விநாயகர் சந்நிதி உள்ளது. வடமேற்கில் பாலதண்டாயுதபாணி சந்நிதி உள்ளது, இது 2024-ல் கட்டப்பட்டது.
ஆலயத்திற்கு வெளியே ராஜகோபுரத்திற்கும் தாயார் கோபுரத்திற்கும் இடையில் பாதிரிமரத்தம்மன் சந்நிதியும் வீரபத்ரர் சந்நிதியும் உள்ளன. பாதிரிமரத்தம்மன் சந்நிதியில் தலவிருட்சமான பாதிரிமரம் உள்ளது. பட்டுப்போன பழைய மரத்தின் நடுபாகம் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வெளியே தெப்பக்குளமும் அதன் நடுவே சிறிய மண்டபமும் அமைந்துள்ளது.
ஆலயம் நள்ளாறு என அழைக்கப்படும் சிறிய ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது நொய்யலின் துணை ஆறு. தற்போது நீர் வரத்து மிக அரிதாகவே உள்ளது.
கட்டிடக் கலை
அவிநாசி ஆலய வளாகம் திராவிட பாணியில் அமைந்த ஆலயங்களையும் சந்நிதிகளையும் கொண்டுள்ளது.
ராஜகோபுரம்
ஆலயத்தின் ராஜககோபுரம் உபபீடம், அதிஷ்டானம், பித்தி, பிரஸ்தாரப்பகுதி ஆகியவையும் அதற்கு மேலே ஏழுநிலைகளும் கொண்டது. உபபீடத்தில் உபானம், மகாபத்மம், விருத்த குமுதம், கண்டம், பட்டிகை, கண்டம், கபோதம், யாளவரி ஆகிய உறுப்புகள் உள்ளன. வர்க்க பேதத்துடன் கூடிய பாதபந்த உபபீடம். கபோதத்தில் கீர்த்தி முகத்துடன் கூடிய நாசிகைகள் உள்ளன, அவற்றில் கொடி வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அதிஷ்டானத்தில் உபானம், பத்மம், ஜகதி, விருத்த குமுதம், கண்டம், கபோதம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இது வர்க்க பேதத்துடன் கூடிய பாதபந்த அதிஷ்டானம்.
பித்தி பகுதியில் அரைத்தூண்கள், கோஷ்டங்கள், கும்பபஞ்சரம் ஆகியவை உள்ளன. பிரஸ்தாரப்பகுதி கபோதத்துடன் அமைந்துள்ளது. கும்பபஞ்சர்த்தின் மீதுள்ள ஆமலகத்திற்கு மேலேயும், கோஷ்டங்களுக்கு மேலேயும் நாகர விமானத்துடன் கூடிய சத்வர்க்க அமைப்பு உள்ளது.
முன்மண்டபம்
முன்மண்டபத்தின் தூண்கள் புஷ்பபோதிகையுடன் உள்ளன.
அவிநாசியப்பர் ஆலயம்
அவிநாசியப்பர் ஆலய வளாகத்தின் நுழைவுவாயிலின் மேல்பகுதியில் கொடுங்கை உள்ளது. அதற்கு மேலே சத்வர்க்க அமைப்பு உள்ளது, இதில் நடுவில் சாலாகார விமானமும், இருபக்கங்களில் நாகர விமானங்களும் உள்ளன. சாலாகார விமானத்தில் 3 நாசிகைகளும், நாகர விமானங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நாசிகையும் உள்ளன. அவைகளின் கூடுப்பகுதியில் அல்பவிமானம் (சிறிய விமானம்) உள்ளது. அவற்றின் கீழே யாளவரி உள்ளது. கொடுங்கையின் நடுவே வட்டக்கருக்கு உள்ளது. அவிநாசியப்பர் ஆலய வளாகத்தின் நுழைவுவாயிலின் இருபுறமும் துவாரபாலர்கள் சிற்பங்களுக்கு கீழே ஜகதி, சிலம்பு குமுதம், கண்டம், பட்டிகையுடன் கூடிய அதிஷ்டானம் உள்ளது.
நுழைவாயிலை அடுத்துள்ள பிரகார மண்டபத்தின் தூண்கள் புஷ்பபோதிகையுடன் உள்ளன. அவிநாசியப்பர் ஆலய அதிஷ்டானத்தில் ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புகள் கொண்டது. உபானம் மண்ணில் புதைந்திருக்கலாம். இது பாதபந்த வகையை சார்ந்தது.
பித்தி பகுதியில் அரைத்தூண்களும் மகாநாசிகையுடன் கூடிய கோஷ்டங்களும் உள்ளன. பிரஸ்தாரப்பகுதியில் கபோதத்திற்கு கீழே பூதகணங்கள், இசை மீட்பவர்கள், ஆடல் நிகழ்த்துபவர்கள், இறைவனை வணங்குபவர்கள் உள்ளனர். மேற்கு பகுதியில் உமை லிங்கத்தை பூஜிக்கும் காட்சி உள்ளது. மேலே யாளவரி உள்ளது, கபோதத்தில் நாசிகைகள் உள்ளன. அந்த நாசிகைகளில் கூடு பகுதியில் விரிந்த பத்மங்களும் கீர்த்தி முகமும் பொரிக்கப்பட்டுள்ளன.
கருணாம்பிகை ஆலயம்
அதிஷ்டானத்தில் உபானம், பத்மம், ஜகதி, விருத்த குமுதம், பட்டிகை ஆகியவை உள்ளன. ஜகதிக்கு மேலும், குமுதம் மற்றும் பட்டிகை ஆகியவற்றிற்கு மேலும் கீலும் பத்மம் உள்ளது. இது அம்போஜசேகர அதிஷ்டானம்.
பித்தியில் அரைத்தூண்களும் கோஷ்டங்களும் உள்ளன. பிரஸ்தாரப்பகுதியில் கபோதத்திற்கு கீழே முதலையுண்ட பாலகனை சுந்தரர் மீட்கும் அவிநாசி தலபுரணம், பூதகணங்கள், இசை மீட்பவர்கள், ஆடல் நிகழ்த்துபவர்கள், இறைவனை வணங்குபவர்கள் செதுக்கப்பட்டுள்ளனர். மேற்கு பகுதியில் சிறுதொண்ட நாயனார் புராணம் செதுக்கப்பட்டுள்ளது. கபோதத்திற்கு மேலே யாளவரி உள்ளது. அம்பாள் ஆலய முன்மண்டபத்தின் தூண்கள் புஷ்பபோதிகையுடன் உள்ளன.
நடராஜர் ஆலயம்
அதிஷ்டானத்தில் மகாபத்மம், சிலம்பு குமுதம், கண்டம், கபோதம், யாளம் ஆகிய உறுப்புகள் உள்ளன. கபோதத்தில் நாசிகைகள் உள்ளன. நாசிகளைகளின் கூடு பகுதியில் இறைவடிவங்கள், குறுஞ்சிற்பங்கள், மலர்கள் செதுக்கப்பட்டுள்ளன. உபானம் மண்ணில் புதைந்திருக்கலாம். இது பிரதிபந்த அதிஷ்டான வகையை சார்ந்தது.
பித்தியில் அரைத்தூண்களும், 3 கோஸ்டங்களும் உள்ளன. கோஸ்டங்களின் மேல்பகுதி கொடுங்கையுடன் கூடிய சத்வர்க்க அமைப்புடன் உள்ளது. சத்வர்க்க அமைப்பில் ஒரு சாலாகார விமானமும், அவை ஒவ்வொன்றிலும் ஒரு நாசிகையும் உள்ளன. அவற்றில் இரண்டு நாசிகைகளில் கூடுப்பகுதியில் அல்ப விமானமும், ஒரு நாசிகையில் கிருஷ்ணனின் சிற்பமும் உள்ளன. ஒவ்வொரு கொடுங்கையிலும் இரு நாசிகளும், அவற்றின் கூடு பகுதியில் அல்ப விமானமும் உள்ளன. பித்தியின் மேற்கு பக்க கோஸ்டத்தில் கல்லில் செதுக்கிய சாளரம் அமைந்துள்ளது.
நடராஜர் ஆலய முன்மண்டபத்தில் உள்ள தூண்கள் புஷ்பபோதிகையை கொண்டுள்ளன. தூண்களில் அடிப்பகுதியில் நான்கு புறமும் சத்வர்க்க அமைப்பு உள்ளது. அவற்றின் உள்ளே நுண்ணிய அளவில் இறை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருக்கல்யாண மண்டபம்
அதிஷ்டானம் உபபீடத்துடன் அமைந்துள்ளது. உபபீடத்தில் கபோதம் உள்ளது. அதற்கு கீழேயுள்ள பகுதிகள் மண்ணில் புதைந்துள்ளன. அதிஷ்டானத்தில் உபானம், மகாபத்மம், விருத்த குமுதம், கண்டம், கபோதம், யாளம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இங்குள்ள தூண்கள் சாதாபோகை அமைப்புடன் உள்ளன.
விமானங்கள்
- அவிநாசியப்பர் கருவறை - கண்டம் நாற்கரமாக உள்ளத, இது இரண்டு தளங்கள் கொண்டது. கிரீவமும் சிகரமும் வட்டமாக உள்ளண. வேசர விமானம். கண்டம் மற்றும் கிரீவத்தில் நான்கு திசைகளிலும் மூன்றடுக்குகளில் சுதைச்சிற்பங்கள் உள்ளன. கிழக்கில் முறையே கீலிருந்து மேலாக உமாசகிதர் மற்றும் சுகாசனத்தில் அமர்ந்த சிவன் இருதளங்களிலும் உள்ளனர். தெற்கில் நடராஜர் மற்றும் தக்சிணாமூர்த்தி இருதளங்களிலும் உள்ளனர். மேற்கில் நரசிம்மர், பரவாசுதேவர், விஷ்ணு உள்ளனர். வடக்கில் மூன்று தளங்களில் பிரம்மா பத்மத்தின் மீது வீற்றுள்ளார்.
- ஆறுமுகன் சந்நிதி - ஆறு பக்கம் கொண்ட திராவிட விமானம்
- கருணாம்பிகை அம்பாள் கருவறை - நான்கு பக்கம் கொண்ட நாகர விமானம். மூன்று தளங்கள் கொண்டு. தேவியர் சுதைச்சிற்பங்கள் உள்ளன.
- நடராஜர் ஆலயம் - சாலாகார விமானம்
சிற்பங்கள் பட்டியல்
ஆலயத்தின் முதன்மை கல்சிற்பங்கள் முன்மண்டபத்திலுள்ள ஊர்த்துவதாண்டவர், காளி, வீரபத்ரர் சிற்பங்கள். இவை பதினேழாம் நூற்றாண்ட சேர்ந்தவை. உற்சவமூர்த்தமான சோமஸ்கந்தர் முதன்மை செப்புத்திருமேனி.
ராஜகோபுரத்தின் உபபீடம் மற்றும் உள்பகுதியில் உள்ள சிற்பங்கள்
கிழக்கு பகுதியில் இரு பக்கமும் நர்த்தன கணபதி சிற்பங்கள் உள்ளன. ராஜகோபுரத்தின் உட்பகுதியில் முன் நெடுந்தூணில் துவாரபாலகர்கள் உள்ளனர். பின் நெடுந்தூணில் மேற்கு நோக்கியவாறு தெற்கே மாணிக்கவாசர் சிற்பமும், வடக்கே சுந்தரர் சிற்பமும் உள்ளன. மேற்கு பகுதியில் தெற்கே சூரியன் சிற்பமும் வடக்கே விஷ்ணு சிற்பமும் உள்ளன. உட்பகுதியில் பூதகணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோபுர சுதை சிற்பங்கள்
ராஜகோபுரத்தில் 172 சுதைச்சிற்பங்களும், கருணம்பிகை அம்பாள் கோபுரத்தில் 145 சுதைச்சிற்பங்களும் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை பதிவுசெய்துள்ளது.
முன்மண்டப சிற்பங்கள்
ராஜகோபுரத்தை அடுத்துள்ள முன்மண்டபத்தின் ஆறு தூண்களில் தோராயமாக 9 முதல் 10 அடி வரை உள்ள ஆறு சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஊர்த்துவ தாண்டவர்: தலையில் ஜடாமகுடமும், அதில் பத்ர பூரிமமும் உள்ளது. 16 கரங்கள் கொண்டுள்ளார். முன் இரு கரங்களும் கீழே - இடக்கரம் கங்காளத்தை ஏந்தியும், வலக்கரம் கங்காளத்தை இசைத்துகொண்டும் உள்ளது. அடுத்த இரு கரங்களும் தலைக்கு மேலே உள்ளன, இதில் இடக்கரம் மகுடத்தில் உள்ள எருக்கம் பூவை பிடித்துள்ளது. அடுத்து மேலிருந்து கீழ் வரை ஆறு இணைகரங்கள் உள்ளன. அவை முறையே இடம் வலம் என மான் - மழு, சூலம் - டமருகம், சக்தி - வஜ்ரம், பாசம் - அங்குசம், வில் - அம்பு, கேடயம் - கட்கம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. கரங்களில் தோள் மாலை, கடக வளை, மணிவளை, பரியகம், விரல்களில் மோதிரங்களும் அணிந்துள்ளார். உடலில் கண்டிகை, சரப்பளி, உதர பந்தம், மணியாரம் அணிந்துள்ளார். இடையில் அரைபட்டிகை, குறங்கு செறி அணிந்துள்ளார். மரவுரியாடை அணிந்துள்ளார். பாதங்களில் காற் சதங்கை, சிலம்பு அணிந்துள்ளார். கீழே நந்திதேவர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உள்ளனர்.
காளி: சுடர் முடியும், ஜடா மகுடமும் அதில் பூரிமமும் உள்ளன. எட்டு கரங்கள் கொண்டுள்ளார். முன் இரு கரங்களும் தியான ஹஸ்தத்தில் உள்ளன. மேல் இரு கரங்களில் இடக்கரம் டமருகத்தையும், வலக்கரம் சூலத்தையும் ஏந்தியுள்ளன. மீதி நான்கு கரங்களும் டோல ஹஸ்தத்தில் உள்ளன. கரங்களில் தோள் மாலை, கடக வளை, மணிவளை, பரியகம், விரல்களில் மோதிரங்களும் அணிந்துள்ளார். உடலில் கண்டிகை, சப்பளி, மணியாரம், அணிகளுடைய மார்புக்கச்சை, அணிகளுடைய உத்தரியம் அணிந்துள்ளார். இடையில் மேகலை, குறங்கு செறி அணிந்துள்ளார். பட்டாடை அணிந்துள்ளார். பாதங்களில் காற் சதங்கை, சிலம்பு அணிந்துள்ளார்.
வீரபத்ரர்: ஜடா மகுடம் அணிந்துள்ளார். நான்கு கரங்கள் கொண்டுள்ளார். முன் இரு கரங்களில், இடக்கரம் கேடயத்தை ஏந்தியும், வலக்கரம் கட்கத்தை ஏந்தியும் உள்ளது. கட்கம் சூரனை குத்தியுள்ளது. பின் இரு கரங்களில், இடக்கரம் வில்லையும், வலக்கரம் அம்பையும் ஏந்தியுள்ளது. கரங்களில் தோள் மாலை, வாகுமாலை, கடக வளை, மணிவளை, பரியகம், விரல்களில் மோதிரங்களும் அணிந்துள்ளார். உடலில் கண்டிகை, சரப்பளி, உதர பந்தம், மணியாரம் அணிந்துள்ளார். முழங்கால் வரை தொங்கும் எருக்குமாலை அணிந்துள்ளார், அதன் நடுவே மூன்று தலைகள் உள்ளன. இடையில் அரைபட்டிகை, குறங்கு செறி அணிந்துள்ளார். மரவுரியாடை அணிந்துள்ளார். பாதங்களில் காற் சதங்கை, சிலம்பு, பாதக்குறடு அணிந்துள்ளார்
பிற்காலத்தில் ஆலயத்தை திருப்பணி செய்த ஆட்சியாளர்களின் சிற்பங்கள் மூன்றும் அஞ்சலி ஹஸ்தம் காட்டி நின்றுள்ளன. தூண்களில் புலி வாகனம் மீது அமர்ந்த ஐயப்பன், மோகினி, மயில் வாகனம் மீது அமர்ந்த முருகன், பிக்ஷாடனர் போன்ற பல இறைவடிவங்கள் குறுச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுரத்திற்கு அருகில் தெற்கு தூணின் கீழ்ப்பகுதியில் நவகண்ட சிற்பம் உள்ளது.
அவிநாசியப்பர் வளாகத்தின் நுழைவுவாயிலின் இருபுறமும் துவாரபாலர்களின் சிற்பங்கள் உள்ளன. கதையை ஊன்றி ஒரு கரத்தை அதன் மீது பல்லவ ஹஸ்தமாகவும், மறுகரம் தர்ஜனீ ஹஸ்தமாகவும் உள்ளன. ஒரு பாதம் கதையின் மீதுள்ளது
அவிநாசியப்பர் பிரகார சிற்பங்கள்
துவாரபாலகர்கள்: முகமண்ட வாயிலின் இடமும் வலமும் தோராயமாக 8 முதல் 9 அடி உயரம் உடைய துவாரபாலர்களின் முழு சிற்பங்கள் உள்ளன. இரண்டு அடி உயரம் கொண்ட பீடத்தில் பத்மத்தின் மீது துவார பாலகர்கள் நின்றுள்ளனர். பீடங்களில் பூதகணம் செதுக்கப்பட்டுள்ளன. இருவரும் கதையை ஊன்றியுள்ளனர். வயிலின் இடப்புறம் உள்ள துவாரபாலர் மான் - மலு ஏந்தியும், வலப்புறம் இருப்பவர் சூலம் - டமருகம் ஏந்தியும் உள்ளனர். கதையை ஊன்றி ஒரு கரத்தை அதன் மீது பல்லவ ஹஸ்தமாகவும், மறுகரம் தர்ஜனீ ஹஸ்தமாகவும் உள்ளன. ஒரு பாதம் கதையின் மீதுள்ளது. கதைக்கு பின் சிம்மம் உள்ளது. மகுடம் ஜடா மகுடமாக உள்ளது, அதில் சூசிமுகம் உள்ளது. கரங்களில் தோள் மாலை, கடக வளை, மணிவளை, பரியகம், விரல்களில் மோதிரங்களும் அணிந்துள்ளார். உடலில் கண்டிகை, சரப்பளி, உதர பந்தம், மணியாரம் அணிந்துள்ளார். பாதங்களில் காற் சதங்கை, சிலம்பு அணிந்துள்ளார்
தட்சினாமூர்த்தி: தென்புறம் தட்சினாமூர்த்தி புடைப்புச்சிற்பமாக உள்ளார். நான்கு கரங்கள் கொண்டுள்ளார். மேல் இரு கரங்களில், இடக்கரத்தில் நாகமும் வலக்கரத்தில் அக்ஷரமாலையும் ஏந்தியுள்ளார். கீழ் இரு கரங்களில் இடக்கரத்தில் ஏடும் வலக்கரத்தில் வியாக்கியான ஹஸ்தம் காட்டியும் உள்ளார்.
முருகன்: வடமேற்கில் உள்ள ஸ்கந்தன் முழு சிற்பமாக உள்ளார். முன் இடக்கரம் இடைமீது வைத்து ஊரு ஹஸ்தமாக உள்ளது. பின் இருகரங்களில், இடக்கரம் கடக ஹஸ்தத்தில் அக்கமாலையும், வலக்கரம் கர்த்தரீ முக ஹஸ்தத்தில் சக்தியையும் ஏந்தியுள்ளன.
கால பைரவர்: புடைப்புச்சிற்பமாக உள்ளார். சுடர் முடி அணிந்து, நான்கு கரங்கள் கொண்டுள்ளர். முன் இருகரங்களில், இடக்கரம் கபாலத்தையும், வலக்கரம் சூலத்தையும் ஏந்தியுள்ளன. பின் இரு கரங்களில், இடக்கரம் மணியையும், வலக்கரம் பாசத்தையும் கொண்டுள்ளன. அவரின் வாகனம் நாய் பின்னால் செதுக்கப்பட்டுள்ளது.
சண்டிகேஸ்வரர் மழு ஏந்தி அமர்ந்துள்ளார். கோஸ்டத்தில் உள்ள பிரம்மா சிலை பிற்காலத்தையது.
கருணாம்பிகை ஆலய சிற்பங்கள்
கருணாம்பிகை அம்பாள் நின்ற கோலத்தில் உள்ளார். மேல் இரு கரங்களில் மலர்களும், முன் இரு கரங்களில் அபயமும் வரதமும் காட்டியுள்ளார். திருவாசி கல்லில் அமைந்துள்ளது.
முன்மண்டப சிற்பங்கள்: இங்குள்ள தூண்கள் ஆறில் தோராயமாக 2 முதல் 3 அடி உயரத்தில் ஆறு சிற்பங்கள் உள்ளன. இடப்பக்க தூண்களில் அஞ்சலி ஹஸ்தம் காட்டி நிற்கும் இணையர், மோகினி அவதாரத்தில் விஷ்ணு, குறவன் சிற்பங்கள் உள்ளன. வலப்பக்க தூண்களில் நாகதேவி, ராமர், குறத்தி சிற்பங்கள் உள்ளன. தூண்களில் குறுஞ்சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன.
கோஷ்ட சிற்பங்கள்: விநாயகர், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, துர்க்கை. ஞான சக்தி சிலை பிற்காலத்தையது.
சிறுதொண்ட நாயனார் புராணக்காட்சி
கருணாம்பிகை ஆலய பிரஸ்தாரத்தின் மேற்கு பகுதியில் முழுக்க சிறுதொண்ட நாயனார் புராணக்காட்சி செதுக்கப்பட்டுள்ளது. காட்சி வடக்கில் இருந்து தெற்காக செல்கிறது. முதல் காட்சியில் பைரவராக அமர்ந்துள்ள சிவனை சிறுதொண்டர் வணங்கி நிற்கிறார். அடுத்த காட்சியில் சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கை தன் மகன் ஐந்து வயது மகன் சீராளனை அழைக்கிறார். சிறுதொண்டர் சீராளனை கத்தியால் அரிகிறார். சந்தனத்தாதி உணவு சமைக்கிறாள். அடுத்து, திருவெண்காட்டு நங்கை உணவு கொண்டுவருகிறாள். அடுத்த காட்சியில் பைரவர் அமர்ந்துள்ளார், அவர் முன்னுள்ள உணவுப்பலகை மீது உணவு உள்ளது, அடுத்து அமர்ந்துள்ள சிறுதொண்டர் உணவை எடுத்து அருந்தவிருக்கிறார். அடுத்து, திருவெண்காட்டு நங்கை தன் மகனை அழைக்கிறார், மகன் சீராளன் ஓடி வருகிறான். இறுதி காட்சியில், சீராளன் விழுந்து வணங்குகிறார், சிறுதொண்டர் வியப்பில் அமர்ந்துள்ளார், உணவு மேசையின் மீது சமைத்து வைக்கப்பட்ட உணவு அங்கு இல்லை, அடுத்ததாக சிவன் அமர்ந்துள்ளார்.
பிற சிற்பங்கள்
நடராஜர் ஆலய தூண்களில் கஜசம்ஹாரர், உமாசகிதர், அர்த்தநாரி ரிஷபாந்திகர், லக்ஷ்மி போன்ற இறை வடிவங்கள் குறுஞ்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
தீபஸ்தம்பத்தின் மேற்கு பக்கத்தில் அவிநாசியப்பரை நோக்கியவாறு சுந்தரர் மீசையுடன் உள்ள புடைப்புச்சிற்பம் உள்ளது. அவரின் முன்பு இருபக்கமும் முதலையின் பிளந்த வாயில் இருந்து வணங்கியவாறு வெளிவரும் மதலை சிற்பங்கள் உள்ளன. இவை முறையே அந்தணச் சிறுவனை முதலை விழுங்கும் நிலையையும், பிறகு சுந்தரர் பதிகம் பாட முதலை அச்சிறுவனை உமிழும் நிலையையும் குறிக்கலாம் என முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
செப்புத்திருமேனிகள்
நடராஜர் சந்நிதியில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் செப்புத்திருமேனிகளாக உள்ளனர். ஆலயத்தின் உற்சவ மூர்த்தமாக சோமஸ்கந்தர் செப்புத்திருமேனி உள்ளது. விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்பாள், பைரவர், பிக்ஷாடனர், 63 நாயன்மார்கள் செப்புத்திருமேனிகளும் உள்ளன. மாணிக்கவாசகரின் 16-ஆம் நூற்றாண்டு செப்புத்திருமேனி உள்ளது.
மற்ற கலை வடிவங்கள்
தேர்கள்
சித்திரை மாதத்தில் ஆலயத்தின் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தியாகிய சோமஸ்கந்தரின் தேர் முக்கியமானது, பெரிய தேர் என அழைக்கப்படுகிறது. இதைவிட உயரம் குறைந்தது தாயாரின் தேர், இது சிறிய தேர் என அழைக்கப்படுகிறது. விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய இறைவடிவங்களுக்கும் சிறிய அளவிளான தேர்கள் உள்ளன.
சிவன் மற்றும் தாயாருக்காக ஆலயத்தில் இருந்த பழைய தேர்கள் 1968-ல் புணரமைப்பு செய்யப்பட்டன. இதை செய்தவர் மாலைகண்டான் லக்ஷ்மணாச்சாரியார் என அறிய முடிகிறது. பழைய தேர்கள் இரண்டும் 1990-ஆம் ஆண்டில் எரிந்துவிட்டன. இவற்றின் சிறு பாகங்கள் சில கோவை அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு உள்ளன.
மக்கள் பங்களிப்பிலும் சிரவை ஆதீன பங்களிப்பிலும் உருவான புதிய தேர்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. 1993-ல் சிவனின் தேரும், 1994-ல் தாயாரின் தேரும் வெள்ளோட்டம் விடப்பட்டன.
தாராசுரம் ஆலயத்தில் அவிநாசி சிற்பக் காட்சி
12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜன் ஆட்சியில் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வார ஆலயத்தில் பெரியபுராண சிற்ப வரிசையின் நிறைவுப்பகுதி ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் உள்ளது. இதில் 83 முதல் 89 வரையுள்ள சிற்பக்காட்சிகள் சுந்தரரின் வரலாறை சித்தரிக்கின்றன. இதில் 89-ஆம் சிற்பக்காட்சி சுந்தரர் அவிநாசியில் முதலையுண்ட பாலகனை மீட்ட கதையை காட்டுகிறது. இந்த சிற்பக்காட்சி ஒன்றரை அடி நீளமும், ஆறு அங்குல உயரமும் உடையது. இதன் மீது 'அவிநாசியாண்டார் முதலை வாய்ப்பிள்ளை' என்ற சோழர்காலக் கல்வெட்டுக் குறிப்பு காணப்படுகிறது.
இந்த சிற்பக்காட்சியின் இடதுபக்கம் அவிநாசி ஆலயம் ஏகதல விமானத்துடன் காட்டப்பட்டுள்ளது. அடுத்து தாமரை இலைகளோடு உள்ள மடுவிலிருந்து முதலை வெளிப்படுகிறது. முதலை வாயில் இருந்து மைந்தன் வெளிவருகிறான். அன்னை ஓடிச்சென்று கையை பற்றி அச்சிறுவனை தழுவச்செல்கிறாள். அடுத்து சிறுவனின் தந்தை கரங்களை தலைமேல் கூப்பி சுந்தரரை நோக்கி தொழுது நிற்கிறார். அடுத்து நெஞ்சில் கரங்களை குவித்து புன்னகையுடன் இறைவனை பாடியவாறு சுந்தரர் நிற்கிறார். சுந்தரருக்கு வலப்பக்கம் நிற்கும் சிறுவன் முதலை வாயில் இருந்து வெளிவரும் சிறுவனை விட சற்று வளர்ந்த நிலையில் பூணூல் அணிந்து, கையை உயர்த்தி போற்றி நிற்கிறான். முதலைவாய் வெளிப்பட்ட சிறுவனுக்கு சுந்தரரே முன்னின்று உபநனயம் செய்வித்ததால், சுந்தரருக்கு வலப்பக்கம் இருக்கும் சிறுவன் அவனே என்றும், சுந்தரர் அவனை அழைத்துகொண்டு அவிநாசியப்பரை வணங்கச்செல்லும் காட்சி என்றும் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் குறிப்பிடுகிறார்
இலக்கியம்
சுந்தரரின் திருப்புக்கொளியூர் பதிகம்
சுந்தரர் சேரநாடு செல்லும் வழியில் திருப்புக்கொளியூர் வந்தபோது முதலையுண்ட பாலகனை 'எற்றான் மறக்கேன்' என துவங்கும் பதிகம் பாடி மீட்டார் என்பது புராணம். இப்பதிகம் ஏழாம் திருமுறையின் 92-ஆம் பதிகமாக உள்ளது. 10 பாடல்கள் கொண்டது. நான்கம் பாடலில் முதலையுண்ட பாலகனை திருப்பித்தர இறைவனிடம் கட்டளையிடுகிறார் - 'புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே' என்கிறார். ஐந்தாம் பாடல் முதல் பத்தாம் பாடல் வரை இறைவனை போற்றி பாடப்பட்ட பாடல்கள்.
பாடல் 4:
உரைப்பார் உரைஉகந் துள்கவல்
லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்
அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி
யூரவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை
தரச்சொல்லு காலனையே
- சுந்தரர் திருப்புக்கொளியூர் பதிகம்[1]
- அருணை வடிவேலு முதலியார் உரை[2]
திருத்தொண்டர் திருவந்தாதி
பதினோராம் திருமுறையின் 34-ஆம் தொகுதியான திருத்தொண்டர் திருவந்தாதியின் 64-ஆம் பாடலில் சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசி தலத்தில் நிகழ்த்திய அதிசயம் பற்றி பாடுகிறார் நம்பியாண்டார் நம்பி - 'கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்'. அருகேயுள்ள திருமுருகண்பூண்டியில் நிகழ்த்தியது பற்றி அடுத்த வரியில் குறிப்பிடுகிறார்.
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிர்அன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவிஅவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தான் அவனென்பர் வன்தொண்ட
னாகின்ற மாதவனே.
- அருணை வடிவேலு முதலியார் உரை[3]
பெரியபுராணம் வெள்ளாணைச் சருக்கம்
திருத்தொண்டர் புராணத்தின் 78-ஆம் பகுதியான வெள்ளாணை சருக்கத்தில் சேக்கிழார் 5-ஆம் பாடல் முதல் 14-ஆம் பாடல் வரை சுந்தரர் அவிநாசியில் நிகழ்த்திய அற்புதம் பற்றி விவரிக்கிறார்.
சுந்தரர் திருவாரூரில் இருந்து சேரமான் பெருமாளை சந்திக்க சேரநாடு செல்லும் வழியில் அவிநாசியை அடைந்து, அங்கு அற்புதம் நிகழ்த்தி, சேரமான் பெருமாளுடன் கைலாயம் செல்லும் புராணத்தை சேக்கிழார் வெள்ளாணைச் சருக்கத்தில் விவரிக்கிறார். திருப்புக்கொளியூர் வந்த சுந்தரர் மறையோர் வாழும் வீதியில் செல்கையில் ஒரு இல்லத்தில் ஐந்து வயது மைந்தனை சில ஆண்டுகள் முன் முதலை உண்டதை அறிகிறார். மைந்தன இழந்த பெற்றோரிடன் மைந்தனை மீட்டிய பிறகே எந்தை பெருமானின் கழல் பணிவேன் என்கிறார்
பாடல் 9:
மைந்தன் தன்னை இழந்த துயர்
மறந்து நான் வந்து அணைந்ததற்கே
சிந்தை மகிழ்ந்தார் மறையோனும்
மனைவி தானும் சிறுவனையான்
அந்த முதலையின் வாய் நின்றும்
அழைத்துக் கொடுத்தே அவிநாசி
எந்தை பெருமான் கழல் பணிவேன்
என்றார் சென்றார் இடர் களைவார்.
புதல்வனை விழுங்கிய முதலை இருந்த மடு எங்கே என கேட்டு, மடுவை அடைந்து திருப்பதிகம் பாடுகிறார். அப்பதிகத்தில் 'உரைப்பார் உரை' என்று துவங்கிய பாடல் முடியும் முன்பே, முதலை வந்து இரண்டாண்டுகளுக்கு முன் விழுங்கிய ஐந்து வயது மைந்தனை ஏழு வயதுடைய மைந்தனாக உமிழ்ந்தது.
பாடல் 11:
உரைப்பார் உரை என்று எடுத்த
திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த
வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து
மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து
திரைப்பாய் புனலின் முதலைவயிற்று
உடலில்சென்ற ஆண்டுகளும்
தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப
முதலை வாயில் தருவித்தான்.
கரையில் வந்து உமிழ்ந்த மைந்தனை அவன் அன்னை ஓடிச்சென்று பற்றி சுந்தரரின் பாதங்களில் விழுந்து வணக்கினாள். இதைக்கண்ட தேவர்கள் வானில் பூமழை பொழிந்தனர் என சேக்கிழார் விவரிக்கிறார்.
திருப்புகழ்
அருணகிரிநாதர் அவிநாசியப்பர் ஆலயத்தில் உள்ள முருகன் குறித்து திருப்புகழில் பாடல் எண் 943 முதல் 948 வரையான 6 பாடல்களை பாடியுள்ளார்.
பாடல்: 943
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.
பாடல்கள் - முழு வரிசை
நால்வர் நான்மணிமலை
17-ஆம் நூற்றாண்டில் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நால்வர் நான்மணிமாலையில் சுந்தரரை போற்றும் 11-ஆம் பாடலில் சுந்தரர் அவிநாசியில் நிகழ்த்திய அற்புதம் பற்றி பாடுகிறார்:
வாங்குசிலை புரையுமுட லெனுங்குளத்தின் மூல
மலமெனமோர் வெங்கரவின் பகுவாயி னின்றுந்
தீங்கிலுயி ரெனும்பனவக் குலமகனை யாதி
திரோதாயி யென்னுமொரு வெந்திறற்கூற் றுவனால்
ஓங்குறுநா தாந்தமெனப் பெயரியவக் கரையி
லுமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய்
கோங்கமுகை கவற்றுமிள முலைப்பரவை மகிழக்
குண்டையூர் நென்மலைமுற் கொண்டவருட் கடலே.
கொங்குமண்டல சதகம்
கொங்குமண்டல சதகங்கள் மூன்று உள்ளன. கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றியுள்ளனர். இவற்றில் கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்குமண்டல சதகமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மூவரும் அவிநாசித் தலம் பற்றி பாடியுள்ளனர்.
கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தின் 16-ஆம் பாடல் அவிநாசி பற்றியது. இவர் விஜயமங்கலத்தில் வாழ்ந்தவர் என்றும், இந்நூல் 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்றும் கருதப்படுகிறது.
பூவென்ற சீரடி யாரூர்ப் பரவைதன் போகங்கொளும்
பாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர்குளத்தில்
ஆவென்ற வாயின் முதலைகொள் பிள்ளையை யன்றுகொண்டு
வாவென் றழைத்த வவிநாசி சூழ்கொங்கு மண்டலமே.
வாலசுந்தரக் கவிராயர் இயற்றிய சதகத்தில் உள்ள 12,13,16,17,18,19-ஆம் பாடல்களும், கம்பநாதசாமி இயற்றிய சதகத்தில் உள்ள 11-ஆம் பாடலும் அவிநாசித்தலம் பற்றியவை.
அவிநாசிப் புராணம்
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப்படும் இளையான் கவிராயர் என்பவர் 1021 செய்யுட்களுடன் அவிநாசிப் புராணம் நூலை இயற்றியுள்ளார். இதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் கும்பகோணம் குழந்தைவேற் பிள்ளை ஆகியோர் பொழிப்புரை எழுதி 1955-ஆம் ஆண்டு எஸ்.கே.இராமலிங்கம் செட்டியார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. இளையான் கவிராயர் தாராபுரம் பகுதியில் வாழ்ந்தார் என்றும், அப்பாமோசர் புராணம், வாகீசர் புராணம், திருப்பேரூர் புராணம், திருப்பாங்கிரிப் புராணம், பழனிநகர்ப் புராணம், கருவூர்த்தலப்புராணம் ஆகிய நூல்களை இயற்றினார் என்றும் 1955-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவிநாசிப் புராணம் 19-ஆம் நூற்றாண்டில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என கோ.ம. இராமச்சந்திரன் செட்டியார் கொங்கு நாட்டு வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலில் கடவுள் வாழ்த்து பகுதியும், 12 சருக்கங்களும் உள்ளன. கடவுள் வாழ்த்து பகுதியில் உள்ள அவிநாசிநாதர் பாடல்
பருவவிநா சித்திரநேர் பாவகமார்
பூவிகமின் பயலும் வீதி
உருவவிநா சிக்குரிய வெண்சிறுதேர்
எனும் உலவை உலவு முன்றில்
மருவவுநா சிப்பவன மாதவர்தா
ரணைபிரியா மாட கூடத்
திரு அவிநாசியப்பரமர் செங்கமலப்
பொற்பாதம் சென்னி சேர்ப்போம்
- அவிநாசிப் புராணம்[14]
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டவை
- அவிநாசித் தல புராணம், இளையான் கவிராயர்[14]
- சி.கே.சுப்பிரமணிய முதலியார் 'பெருங்கருணாம்பிகை பிள்ளைத்தமிழ்' பாடியுள்ளார்: [15][16]
- 'சிரவை கந்தசாமி சுவாமிகள்' அவிநாசியப்பர் பதிகம், பெருங்கருணாம்பிகை அம்மன் பதிகம், கருணாம்பிகை மாலை, கருணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகைத் திருப்புகழ்ப் பஞ்சகம் என ஐந்து சிற்றிலக்கியங்களும், விநாயகர் மற்றும் முருகன் பற்றிய இரண்டு பாக்களும் இயற்றியுள்ளார். இவை மொத்தமும் அவிநாசி பிரபந்தத் திரட்டு என்ற நூலாக 1927-ல் வெளிவந்துள்ளது. இது பற்றி சிரவையாதீனப் பதிப்புகள் நூலில் பக்கம் 32-ல் குறிப்பு உள்ளது[17]
- கோவை வித்துவான் கந்தசாமி முதலியார் 'பெருங்கருணாம்பிகை பதிகம்' பாடியுள்ளார்[18]
- நெகமம் வித்துவான் முத்துநாகப்பமுதலியார் 'அவிநாசிநாதர் பதிகம்' பாடியுள்ளார்[19]
- வாசுதேவநல்லூர் கருணைதாசர் என்பவர் அவிநாசிக் கருணையந்தாதி, அவிநாசிக் கருணாகர மாலை பாடியுள்ளார்
- இராமநாத நாயுடு சாவற்கட்டுபாளையம் என்பவர் அவிநாசிநாதர் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார்
- உறையூர் மு.ஆ. அருணாசல முதலியார் என்பவர் அவிநாசிநாதர் மற்றும் பெருங்கருணாம்பிகை துதிபாடல்களை பாடியுள்ளார்
பிற பாடல்களில் அவிநாசி என்ற சொல்
திருவாசம் ஆனந்தமாலையின் ஏழாம் பாடலான 'நரியைக் குதிரைப் பரியாக்கி'-யில் 'அரிய பொருளே அவிநாசி அப்பா' என மாணிக்கவாசர் குறிப்பிடுகிறார். இதில் அவிநாசி என்பது 'நாசமில்லாதது, பதிப்பொருள் நித்தியமானது' என பொருளில் உள்ளது என்றும், அவிநாசித்தல இறைவனை குறிப்பிடவில்லை என்றும் டாக்டர் ப.சரவணன் திருவாசம் உரையில் குறிப்பிடுகிறார்.
ஆறாம் திருமுறையின் கருமணிபோற் கண்டத்தில் உள்ள ஏழாம் பாடலில் 'அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்' என அப்பர் பாடுகிறார். இதில் அவிநாசி என்பதற்கு 'அழிவில்லாதவன்' என்று பொருள் என அருணை வடிவேலு முதலியார் தனது உரையில் குறிப்பிடுகிறார். (அருணை வடிவேலு முதலியார் உரை[20])
பண்பாட்டு முக்கியத்துவம்
கொங்கு பகுதியில் சுந்தரர் வருகை புரிந்து பாடிய இரு தலங்களில் ஒன்று அவிநாசி. திருப்பூர் வட்டத்தின் முதன்மை சைவ ஆலயமாக உள்ளது. கொங்கு பகுதியிலுள்ள தேர்களில் பெரியது அவிநாசி தேர். இங்கு நடைபெறும் பிரம்மோற்சவமும், அதில் நிகழும் தேரோட்டமும், 63 நாயன்மார்களின் திருவீதி உலாவும் இப்பகுதியின் முக்கிய திருவிழாவாக உள்ளன. கொங்கு சோழர்கள் மற்றும் அவர்கள் காலகட்ட வரலாற்று தகவல்கள் அவிநாசி ஆலய கல்வெட்டுகளில் கிடைத்துள்ளன.
கல்வெட்டுகள்
தொல்லியல் துறை வெளியீடுகள்
- Annual Report on Indian Epigraphy (ARIE) 1906-1910, ASI: 1909-ல் படிக்கப்பட்ட கல்வெட்டுகள், வரிசை எண்கள் 170 முதல் 201 வரை
- Annual Report on Indian Epigraphy (ARIE) 1963-1964, ASI: கல்வெட்டு வரிசை எண் 202. இது அவிநாசி ஆலயத்தில் உள்ள மாணிக்கவாசகர் செப்புத்திருமேனியின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி.
- Annual Report on Indian Epigraphy (ARIE) 1986-1987, ASI: கல்வெட்டு வரிசை எண்கள் 346 முதல் 357 வரை. இதில் பிழையாக உள்ள தகவல்கள் கோவை மாவட்ட கல்வெட்டுகள் தொகுப்பு 1-ல் திருத்தப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
- South Indian Inscription (SII) Volume XXVI, 1990, ASI: கல்வெட்டு வரிசை எண்கள் 181 முதல் 213 வரை. இதில் Annual Report on Indian Epigraphy 1909-ல் வெளியான கல்வெட்டுச்சுருக்க குறிப்புகளின் முழு விரிவான செய்திகள் உள்ளன. புதிய கல்வெட்டு செய்திகள் இடம்பெறவில்லை.
- கோவை மாவட்டக் கல்வெட்டுக்கள் - தொகுதி 1 (கோ.மா.க.தொ.1), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2009: கல்வெட்டு தொடர் எண்கள் 775/2003 முதல் 797/2003 வரை. இதில் Annual Report on Indian Epigraphy 1963-1964-ல் வெளியான மாணிக்கவாசகர் செப்புத்திருமேனியின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி முழுமையாக இடம்பெற்றுள்ளது.
பிற வெளியீடுகள்
- ஆவணம் இதழ் 7, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1996. கட்டுரை எண் 12 - சிவப்பிராமணக்காணி பற்றிய அவிநாசிக் கல்வெட்டு, மா. கணேசன்
- கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள்: கோயம்புத்தூர் மாவட்டம். பாரதியார் பல்கலைக்கழகம் 2003. இது அவிநாசியைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் மா.கணேசன் மற்றும் இரா.ஜெகதீசன் ஆகியோரால் படிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 23 கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இவை திருத்தப்பட்டு குறிப்புரையுடன் 2009-ல் வெளியான கோ.மா.க.தொ.1-ல் இடம் பெற்றுள்ளன.
2000-க்கு பிறகு வெளிப்பட்ட கல்வெட்டுக்கள்
- 2008-ஆம் ஆண்டு குடமுழுக்கு பணியில் புதிய கல்வெட்டுக்கள் வெளிப்பட்டன
- 2024-ஆம் ஆண்டு குடமுழுக்கு பணியில் கருணாம்பிகை ஆலய அதிஷ்ட்டானத்தின் உபானம், ஜகதி, குமுதம் ஆகியவை வெளிப்பட்டன. ஜகதி மற்றும் உபானம் முழுக்க கல்வெட்டுக்கள் உள்ளன.
இன்னும் கல்வெட்டுக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. கருணாம்பிகை ஆலயத்தின் முன்மண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகியவற்றின் வடக்கு அதிஷ்டானம் 1980-ல் கட்டப்பட்ட ஆறுமுகன் ஆலயத்தின் தளத்தால் மூடப்பட்டுள்ளது. இங்கும் கல்வெட்டுக்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
முக்கிய வரலாற்று தகவல்கள்
- SII XXVI No.198 - பொ.யு.1140. இதுவரை பதிப்பிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உத்தமசோழ விரநாராயணன் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு காலவரிசைப்படி முதலாமானது. இது கருணாம்பிகை ஆலய மகாமண்டப தெற்கு சுவரில் உள்ளது. இது தனவாசி என்ற வீரசோழநல்லூரை தேவதானமாக அளித்தது பற்றியது.
- கோ.மா.க.தொ.1.எண்.776/2003 - அவிநாசியப்பர் கோவில் வடக்குச் சுவர் குமுதவரியில் தீர்த்த குழிக்கு மேற்கில் உள்ள கல்வெட்டு, அரசன் முதல் குலோத்துங்கன், பொ.யு.1160: அவிநாசி ஈஸ்வரர் கோவில் அர்த்தசாம பூசைக்கு பாலமுது அளிக்கவும் விளக்கு ஒன்று வைக்கவும் அரசனே முப்பது பசுக்களை அளித்துள்ளான். கொங்குநாட்டில் கோவிலுக்கு அரசனால் பசுக்கள் அளிக்கப்பெற்றமை பற்றிக் கூறும் கல்வெட்டு இது ஒன்றே.
- கோ.மா.க.தொ.1.எண்.778/2003 - கருணாம்பிகை கோவில் மகாமண்டப வடக்குச்சுவர், அரசன் வீரராஜேந்திரன், பொ.யு.1222: அரசன் வடபரிசார நாட்டு பார்ப்பார் சான்றார்க்கு வரிசைகள் அளித்தமை பற்றி கூறுகிறது. இந்த வரிசைகள் கருவூலத்தில் பொன் வைத்த பின்பே அளிக்கப்பெற்றுள்ளன. இதை 'இவர்கள் நம் சரக்குக்குப் பொருள் வைத்தமையில் இவர்களுக்கு நாம் குடுத்த வரிசையாவது' எனக்கூறி, வரிசைகளை பட்டியலிடுகின்றன. பல்லக்கேறல், குதிரைசவாரி செய்தல், அரசவையில் வீற்றிருத்தல், சீனக்குடை பிடித்துக்கொள்ளுதல், படைகள் சூழ அரசன் உலா வரும்போது பொன்னாரம் பூண்டு உடன்வருதல், பச்சைப்பட்டு போர்த்திக்கொள்ளல், தன் வீட்டு திருமணத்தின் போது மணமக்கள் பல்லக்கில் (கட்டணங்கட்டி யேறி) ஊர்வலம் செய்தல் ஆகியன சிறப்பு வரிசைகளாக கூறப்பட்டுள்ளன. இங்கு சீனக்குடை (பட்டுக்குடை) பிடித்துக்கொள்ள உரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது.
- கோ.மா.க.தொ.1.எண்.781/2003, ஆவணம் இதழ் 7 1996 எண்.12 - கருணாம்பிகை கோவில் மகாமண்டபம் வடக்கு உபபீடம், அரசன் வீரராசேந்திரன், பொ.யு,1247: சிவபிராமணன் அவிநாசியான சீகாழியானும் அவிநாசி சாந்தாரைக் காப்பானும் இவர்கள் பாட்டன்மாரும் தந்தையும் கோயில் உபையம் (இறைவனுக்கு பூசை செய்யும் கடமை) முறையாக நடைபெறாததாலும், இவர்கள் காணியுரிமை (பூசையுரிமை) பெற்ற காலத்தில் கோயிற் பண்டாரத்திலிருந்த திரு ஆபரணங்களின் பொன்னும் அச்சும் கெட்டுப் போகவே அதனைத் திருப்பிச் செலுத்தமாட்டாமையாலும், கோயிற் பண்டாரத்திலிருந்து கடனாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தமாட்டமையாலும் இவர்களை ஈடுகட்ட வேண்டி தங்களுடைய கோயிற் காணியுரிமையைத் தண்டரேசுப் பெருவிலையாக (ஏலம் விடுவதற்கு) எழுதிக் கொடுத்தனர். அவ்வாறு ஏலத்தில் இவ்வுரிமை விற்கப்பட்டபோது வேறு சிவபிராமணர் அதனை வாங்கி புதிய காணியாளராக ஆயினர். இந்த மாற்றத்திற்கு அரசன் தன் சம்மதத்தை ஓலை மூலம் அறிவித்ததாக குறிக்கப்படுகிறது.
- SII XXVI 1990 No.195 - கருணாம்பிகை கோவில் வடக்கு சுவர், அரசன் வீரபாண்டியத்தேவன், பொ.யு.1274: வடபரிசார நாட்டின் வெள்ளாநாடு மற்றும் பூலுவநாடு ஆகிய இரண்டும் அதே வடபரிசார நாட்டிலுள்ள செவூர் என்ற செம்பியன்கிழாநடிநல்லூரில் இரண்டு வெள்ளாள குடியையும் இரண்டு பூலுவ குடியையும் நீக்குவது பற்றி குறிப்பிடுகிறது. இந்த நான்கு குடிகளும் கோவில் சார்ந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று ARIE 1909 குறிப்பிடுகிறது. இந்த நான்கு குடிகளும் கிராமத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என SII XXVI 1990 No.195 குறிப்பிடுகிறது. எனினும் நீக்கப்படுவதற்கான காரணம் கல்வெட்டில் தெரிவிக்கப்படவில்லை. கல்வெட்டில் கீழே இதற்கு சான்றாக பலருடைய கையொப்பம் குறிப்பிடப்பட்டுள்ளது. (வடபரிசார நாட்டில் இருந்த வெள்ளாளர் சபை வெள்ளாநாடு, பூலுவர் சபை பூலுவநாடு. இவை தம் ஆளுகைக்குட்பட்ட குடிகளின் வரிகளை கோயிலுக்கு அளிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர். மேலும் வடபரிசார நாட்டு ஊர்களில் வெள்ளானூர் மற்றும் பூலுவனூர் என்ற ஊர் சபைகள் இருந்தது என கோ.மா.க.தொ.1 குறிப்பிடுகிறது.)
- SII XXVI No.193 - கருணாம்பிகை கோவில் மேற்கு சுவர், அரசன் சுந்தர பாண்டியத்தேவன், பொ.யு.1296: பாண்டி மண்டலத்து கரைவழிநாட்டு அறனையூரான சிவல்லபுரத்து வியாபாரி பெருமாள் அழகியநாயனான் என்ற அழகிய பாண்டியதேவர் புக்குளியூர் குளக்கரையில் எழுந்தருளியுள்ள சுந்தரநார்க்கு அமுதுபடிக்கும் பலவிஞ்சனத்துக்கும் பணம் அளித்துள்ளதை குறிப்பிடுகிறது. மேலும் சோழவளநாட்டில் உள்ள கஞ்சப்பள்ளி என்கிற குலோத்துங்கசோழ சதுர்வேதிமங்கலத்தின் சபையார் மற்றும் ஊரார் ஆகியோர் பணம் அளிக்காததால் (விவரம் அழிந்துள்ளது) மேலே சொல்லப்பட்டுள்ள நன்கொடை அவசியமானது என்றும், சபையார் மற்றும் ஊரார் ஆகியோர் அந்த நன்கொடை எதற்காக வழங்கப்படுகிறதோ அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- SII XXVI No.193 - கருணாம்பிகை கோவில் மேற்கு சுவர், அரசன் சுந்தர பாண்டியன், பொ.யு.1297: ஒரு தெய்வச்சிலை (பெயர் அழிந்துள்ளது) எடுப்பதற்கு பாண்டி மண்டலத்து மாடக்குளக்கீழ் மதுரையை சேர்ந்த ஒருவர் (பெயர் அழிந்துள்ளது) பணம் அளித்துள்ளார். 45 பணம் அளித்துள்ளார். 35 பணம் அமுது செய்யவும், 10 பணம் சிலைக்கும் அளித்துள்ளார்.
- பொ.யு 13-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 14-ஆம் நூற்றாண்டின் துவக்கம்: போசளர் கால கல்வெட்டுக்கள் அவிநாசியில் 3 கிடைத்துள்ளன. இவற்றில் இரண்டு கல்வெட்டுகளில் அரசன் வீரவள்ளானின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் அரசன் பெயர் இல்லை. இவரது தண்ட நாயக்கர்கள் சிதகர தண்ட நாயக்கன், இராகுத்தராய கேட்டைய தண்டநாயக்கன், மாதப்ப தண்ட நாயக்கன். ஆகியோர் சுதந்திரமான ஆணைகளை அளித்துள்ளனர். வீரவள்ளாளன் கல்வெட்டுக்கள் சமயம், சமூகம், பொருளியல், நிர்வாகம் ஆகியவற்றை பற்றி பல அரிய செய்திகளை தருகின்றன என கோ.மா.க.தொ.1 குறிப்பிடுகிறது. கல்வெட்டு எண்கள்: SII XXVI No.201, கோ.மா.க.தொ.1.எண்.793/2003, 794/2003.
- கோ.மா.க.தொ.1.எண்.782/2003 - கருணாம்பிகை கோவில் மகாமண்டப வடக்குச்சுவர், அரசன் பெயர் கிடைக்கவில்லை, பொ.யு.1350, இக்கல்வெட்டு பற்றி கோ.மா.க.தொ.1-ன் குறிப்புரை இது: இக்கல்வெட்டு நிலம், நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை அறிந்துகொள்ள பல செய்திகளை கொண்டுள்ளது. சோழபடலத்து ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ கற்பகச்சேரியைச் சேர்ந்த சிரிரங்கநாதபட்டன் என்பவன் அவிநாசி ஈஸ்வரன் கோவிலில் சிறுகாலை சந்தி (வைகறை)க்கு நிலக்கொடை அளித்துள்ளான். நிலம் கரைவழிநாடு, பேரூர் நாடு ஆகிய பகுதிகளில் இருந்த தன்னுடைய சொந்த நிலங்களிலிருந்து தரப்பெற்றுள்ளது. எல்லை கூறும்போது தோட்டம், கவரு (கவறு) செவ்வை ஆகிய சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப் பெற்றுள்ளன. கவரு என்பது கண்ணாறு என்று கொள்ளலாம். செவ்வை, நீர் செல்லும் சிறு கால்வாய் ஆகலாம்.
- கோ.மா.க.தொ.1.எண்.797/2003 - மாணிக்கவாசகர் செப்புத்திருமேனியின் பீடம்: 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. நந்திநாகரி எழுத்துருவில் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. விஜயநகர அரசு மன்னன் மகாராயர். கோதாவர் தேவி என்பவள் மகாராயருடைய மகள் ஸ்ரீபுவனேஸ்வரி தேவியின் திருமணத்தின் போது அமுதுபடி செய்ய ஏற்பாடு செய்த செய்தியை கூறுகின்றது. திருமேனிப் பீடத்தில் மேலும் நான்குவரி உள்ளது, படிக்க இயலவில்லை.
- SII XXVI No.194 - கருணாம்பிகை கோவில் மேற்கு சுவர், அரசன் பெயர் மற்றும் காலம் கிடைக்கவில்லை: ஆதி சண்டேஸ்வரரின் பெயரால் இத்தலத்தின் தேவரடியார்கள் நாகபாசநங்கை, சாந்தாள், ஏழுகரைநாட்டு நங்கை, நாச்சி, ஆளுடையநாச்சி, வளத்தாள், இராகுத்தராய நங்கை ஆகியோருக்கு திருவநந்திக்காப்பு எடுப்பதற்கு ஓலை கொடுத்தது பற்றி குறிப்பிடுகிறது.
- SII XXVI No.200 - கருணாம்பிகை ஆலய மகாமண்டபம் தெற்கு சுவர், அரசன் பெயர் மற்றும் காலம் கிடைக்கவில்லை: ஆதி சண்டிகேஸ்வரரின் ஆணையில் திருமருதந்துறை உடையான் நாயகப்பிள்ளை அழகியசெம ஆசாரி மற்றும் உடையான் உடையானான எழுகரைநாட்டு ஆசாரி ஆகியோருக்கு ஆலயத்தின் புணரமைப்பு பணிக்காக தச்சாசாரியக்காணி வழங்கியது பற்றி குறிப்பிடுகிறது.
தேவதானம் பற்றிய தகவல்கள்
- SII XXVI No.198 - கருணாம்பிகை கோவில் மகாமண்டபம் தெற்கு சுவர், அரசன் வீர நாராயணன், பொ.யு.1140: இதுவரை பதிப்பிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இக்கல்வெட்டு காலவரிசைப்படி முதலாமானது. இந்த கல்வெட்டின் காலம் அரசர் வீரநாராயணின் ஆட்சியாண்டாக இருந்தாலும் இக்கல்வெட்டு அரசர் ராஜகேசரியின் பெயரில் உள்ளது. கிட்பாநாட்டிலுள்ள தனவாசி என்ற வீரசோழநல்லூரை திருக்காமக்கோட்டத்து நாச்சியார் பெருங்கருணைச்செல்வியாருக்கு தேவதானமாக மாதேவாண்டார் என்பவரின் கையில் அளித்தது பற்றியது. மேலும் அந்த ஊரின் வரிவசூல், அதை ஆலயத்திற்கு அளந்து வளங்குவது பற்றியும் குறிப்பிடுகிறது.
- கோ.மா.க.தொ.1.எண்.775/2003 - கருணாம்பிகை கோவில் வடக்குச்சுவர் மடிப்பு, அரசன் முதல் குலோத்துங்கன், பொ.யு.1152: வடபரிசாரநாட்டு ஆலத்தூரான அழகியசோழ நல்லூரை அவிநாசி ஈஸ்வரர் ஆலயத்திற்கு தேவதானமாக அளித்தது பற்றியது.
- SII XXVI No.186 - அவிநாசியப்பர் கோவில் வடக்குச்சுவர், அரசன் வீரராசேந்திரன், பொ.யு.1227: பப்பாரன்பூண்டி என்கிற வீரராஜேந்திரநல்லூரை கோவிலுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்டது பற்றியது.
- SII XXVI No.197 - கருணாம்பிகை கோவில் மகாமண்டபம் தெற்கு சுவர், அரசன் வீரபாண்டியத்தேவன், பொ.யு.1275: ஆதி சண்டிகேஸ்வரரின் ஆணையில் வடபரிசாரநாட்டில் செவூரான செம்பியன்கிழானடிநல்லூர் வீரபாண்டியத்தேவரின் 8-ஆம் ஆட்சியாண்டில் அவிநாசி ஆலயத்திற்கு தேவதானமாக வளங்கப்படுகிறது. எனினும் இந்த கிராமம் ஊர் மற்றும் ஊராளிகளுக்கு உரிமைப்பட்டது. வீரபாண்டியத்தேவரின் 10-ஆம் ஆட்சியாண்டில் இருந்து நெல், வரி, 10 அச்சு பணம் ஆகியவை ஆலயத்திற்கு வழங்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
- SII XXVI No.201 - கருணாம்பிகை கோவில் மகாமண்டபம் தெற்கு சுவர், அரசன் வீர வள்ளாளத்தேவன், பொ.யு.1282: இம்மடி இராகுத்தராயன் பெருமாள் தண்ணாயக்கரின் குமாரன் மாதப்ப தண்ணாயக்கன் தென்பளி நத்தமான சிதகரகண்டநல்லூரை தேவதானமாக கொடுத்ததை குறிப்பிடுகிறது. இது வைகாசி விசாக திருவிழா மற்றும் ஆலய புணரமைப்பு பணிக்காக நிறுவப்பட்ட இம்மடி இராகுத்தராயன் சந்திக்கு உணவு மற்றும் இதர தேவைகளுக்காக அளிக்கப்பட்டது என குறிப்பிடுகிறது.
- கோ.மா.க.தொ.1.எண்.793/2003 - கல்யாண மண்டபம் வடக்கு ஆதிஷ்ட்டானம், அரசன் பெயர் இல்லை, போசளர் காலம், பொ.யு.14-ஆம் நூற்றாண்டின் துவக்கம்: தானமாக அளித்த ஊரின் பெயர் இல்லை. அந்த ஊர் சிதகரகண்ட சந்திக்கும் சிதகரகண்ட திருநாளுக்கும் சேவைக்காக அளிக்கப்பட்டுள்ளது. கோ.மா.க.தொ.1 -ன் குறிப்புரை: இக்கல்வெட்டு போசளர் கல்வெட்டாக இருப்பினும் கொங்குச் சோழர், கொங்கு பாண்டியர் வரி நிர்வாகத்தை சுட்டுகிறது. இக்கல்வெட்டில் கூறப்பெறும் கரைவழிநாடு நீர்வளம் மிக்க பகுதி, அதனால் அப்பகுதியிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள அவிநாசி கோயிலுக்கு நிலம் அளிக்கப்பெற்றுள்ளது. போசளர் ஆட்சியின் இறுதி நாள்களில் தண்ட நாயக்கர்களே செல்வாக்கு பெற்றிருந்ததை இக்கல்வெட்டு உறுதிபடுத்துகிறது.
- SII XXVI No.208 - கருணாம்பிகை கோவில் மகாமண்டபம் தெற்கு சுவர், அரசன் பெயர் இல்லை, பட்டப்பெயர் கோனேரின்மைகொண்டான் உள்ளது, காலம் கிடைக்கவில்லை: நல்லூர்க்காநாட்டில் வாளைப்பாடி என்ற கிராமத்தை அவினிவெந்தராமன் சந்திக்கும் திருநாளுக்கும் உணவு வழங்க, ஆலயத்தை புணரமைப்பு செய்ய, மற்றும் இதர சேவைகளுக்காக தேவதானமாக வழங்கப்பட்டது பற்றியது.
தொடர்புள்ள ஆளுமைகள் & ஆய்வுகள்
கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரசர்கள்
அவிநாசி ஆலயத்தில் கொங்குச்சோழர், கொங்குப்பாண்டியர், போசள அரசர் வீரவள்ளார், மைசூர் அரசர் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் ஆகிய அரசர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வட்டுகளில் வரும் சோழ அரசர்களின் பெயர்கள் கொங்குச்சோழ அரசர்களுடையவை. பாண்டியர்களில் 'சடாவர்மன் வீரபாண்டியன் மதுரை பாண்டிய மரபை சேர்ந்தவனாக இருக்கலாம், பிறபாண்டிய மன்னர்கள் கொங்குப் பாண்டியர்கள் என்று கொள்வதில் தவறில்லை' என கோ.மா.க.தொ.1 முன்னுரையில் குறிப்பிடுகிறது.
அவிநாசி ஆலய கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரசர்களின் பெயர்கள் காலவரிசைப்படி மற்றும் அவர்களின் ஆட்சியாண்டு:
- கொங்குச் சோழர்கள்
- உத்தமசோழ வீர நாராயணன், 1138-1149
- முதல் குலோத்துங்கன், 1149-1168. இவர் ராஜகேசரி குலோத்துங்கன் என்றும், கோனேரின்மைகொண்டான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்
- மூன்றாம்வீரசோழன், 1168-1196
- ராஜசேகர குலோத்துங்கன், 1196-1207
- வீரராசேந்திரதேவன்,1207-1256. இவர் கோனேரின்மைகொண்டான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
- மூன்றாம்விக்ரம சோழன், 1273-1305
- கொங்குப் பாண்டியர்கள்
- வீரபாண்டியன்,1265-1285. இவர் ராஜகேசரிவர்மன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
- சுந்தரபாண்டியன், 1285-1300
- போசளர்
- மூன்றாம் வீர வள்ளாளன், பொ.யு 13-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 14-ஆம் நூற்றாண்டின் துவக்கம்.
- பிற ஆட்சியாளர்கள்
- வீர நஞ்சராய உடையார், 1489-1500
- வீர சிக்கராய உடையார், 1500-1512. இவர் வீர நஞ்சராய உடையாரின் மகன்
- மைசூர் அரசர்
- இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார், 1734-1766
முக்கிய ஆய்வாளர்கள்
கொங்கு நாட்டு வரலாறு (அண்ணாமலை பல்கலைக்கழகம், 1954) என்ற நூலை எழுதிய கோ.ம.இராமச்சந்திரன் செட்டியர் மற்றும் The Kongu Country (Madras University, 1956) என்ற நூலை எழுதிய M.ஆரோக்கியசாமி ஆகியோர் அவிநாசி ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளை சான்றுகளாக கொண்டுள்ளனர். குடவாயில் பாலசுப்ரமணியன் அவிநாசி ஆலயம் தொடர்பான முக்கியமான குறிப்புகளை எழுதியுள்ளார்.
அவிநாசியை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் மா.கணேசன் அவிநாசி ஆலய கல்வெட்டுகளை படியெடுத்து வெளியிட்டதில் முக்கியமானவர்.
அருகே அமைந்துள்ள முக்கிய ஆலயங்கள்
- சுந்தரர் ஆலயம் - இது அவிநாசியப்பர் ஆலய வளாகத்தின் தெற்கே உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது
- கரிவரதராஜ பெருமாள் ஆலயம் - இது வடக்கே நுழைவுப்பகுதியில் அமைந்துள்ளது
- காசிவிஸ்வநாதர் ஆலயம் - இது வடக்கே 200மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிழக்காக அமைந்த இந்த ஆலயத்தின் முகமண்டபத்தில் வடக்குபக்கம் காசிவிசாலட்சி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
உசாத்துணை
- கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம். (கட்டுரை: முதலை வாயில் மதலை)
அடிக்குறிப்புகள்
- ↑ 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன், shaivam.org ஏழாம் திருமுறை
- ↑ 92. திருப்புக்கொளியூர் அவினாசி, தமிழ் இணையக் கல்விக்கழகம்
- ↑ திருத்தொண்டர் திருவந்தாதி அருணை வடிவேலு முதலியார் உரை, தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ 12.078 - வெள்ளானைச் சருக்கம், சைவம்.ஆர்க் பன்னிரெண்டாம் திருமுறை பெரியபுராணம்
- ↑ வெள்ளானைச் சருக்கம், தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ திருப்புகழ் 943 இறவாமற் பிறவாமல் (அவிநாசி), கௌமாரம்.காம்
- ↑ திருப்புகழ் 944 பந்தப்பொற் பார, கௌமாரம்.காம்
- ↑ திருப்புகழ் 945 மனத்திரைந்தெழு (அவிநாசி), கௌமாரம்.காம்
- ↑ திருப்புகழ் 946 பக்குவ ஆசார (திருப்புக்கொளியூர்), கௌமாரம்.காம்,
- ↑ https://www.kaumaram.com/thiru/nnt0947_u.html
- ↑ https://www.kaumaram.com/thiru/nnt0948_u.html
- ↑ கொங்கு மண்டல சதகங்கள், தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ கொங்கு மண்டல சதகம், தமிழ் இணைய மின் நூலகம்
- ↑ 14.0 14.1 அவிநாசித் தலபுராணம் , இளையான் கவிராயர் (என்ற) சுப்பிரமணியன்,1800; பொழிப்புரை: த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறை ஆதீனம் & குழந்தைவேற் பிள்ளை, கும்பகோணம், 1955
- ↑ கோயமுத்தூர் சுப்பிரமணிய முதலியார் இயற்றிய திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ், 1926, புரொஜெக்ட் மதுரை
- ↑ https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007924_திருப்புக்கொளியூர்_அவிநாசிப்__பெருங்கருணையம்மை_பிள்ளைத்தமிழ்.pdf
- ↑ www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005956_சிரவையாதீனப்_பதிப்புகள்.pdf
- ↑ www.projectmadurai.org/pm_etexts/pdf/pm1048.pdf
- ↑ அவிநாசிநாதர் பதிகம் - அவிநாசித் தல புராணம் 1955 திருவாவடுதுறை ஆதீனம் பதிப்பில் உள்ள செய்யுள்
- ↑ அருணை முதலியார் உரை, தமிழ் இணையக் கல்விக் கழகம்
வெளி இணைப்புகள்
- அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலயத்துறை
- அருள்மிகு அவிநாசியப்பர் கோயில், தினமலர்
- அவிநாசியப்பர் திருக்கோயில், kaumaram.info
- தமிழகத்திலிருந்து சீனாவுக்கு வணிகத் தொடர்பு: அவினாசி கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு, தினமலர் 2010
- அவிநாசியப்பர் கோயில், வேலுதரன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2025, 17:20:14 IST