அழகப்பா அழகப்பன்
- அழகப்பன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அழகப்பன் (பெயர் பட்டியல்)
அழகப்பா அழகப்பன் (டாக்டர் அழகப்பா அழகப்பன்; அழகப்ப. அழகப்பன்; யூ.என். அழகப்பன்; ஆல்ஜி) (டிசம்பர் 03, 1925 - அக்டோபர் 24, 2014) ஐ.நா. சபையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். ஐ.நா.வின் ஆராய்ச்சிப் பிரிவில், பொறுப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அமெரிக்காவின் முதல் இந்து ஆலயமான நியூயார்க் வல்லப மகா கணபதி ஆலயத்தை நிறுவினார். சென்னை பெசண்ட் நகரில் அறுபடை முருகனுக்கு ஆலயம் எழுப்பினார். குன்றக்குடியை அடுத்த மயிலாடும்பாறையில், முருகபெருமானின் ஜோதி சொரூப வேலுக்கு ஓர் ஆலயத்தையும், ஞான சரஸ்வதிக்கு ஓர் ஆலயத்தையும் அமைத்தார்.
பிறப்பு, கல்வி
அழகப்பா அழகப்பன், டிசம்பர் 03, 1925 அன்று, இன்றைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த (அன்றைய ராமநாதபுரம்) கானாடுகாத்தானில், சா.வெ.அரு.அழ. அழகப்பச் செட்டியார் - மீனாட்சி ஆச்சி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் உயர்நிலைக் கல்வி கற்றார். சாந்திநிகேதனில் மேல்நிலைக் கல்வி கற்றார். தியோசபிகல் சொசைட்டியில் படித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானம் பயின்று பட்டம் பெற்றார். பல்கலைக்கழக அளவிலும் மாநில அளவிலும் முதன் மாணவனாக வந்து அரசின் உதவித் தொகை பெற்றார். வள்ளல் அழகப்பர் உதவியால் இங்கிலாந்துக்குச் சென்று சட்டம் பயின்று 'பாரிஸ்டர் ஆஃப் லா' பட்டம் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
அழகப்பா அழகப்பன், துளசிதாஸ் கிலால் சந்த் நிறுவனத்தில் ஆய்வு அதிகாரியாகப் பணிபுரிந்தார். ஐ.நா.வின். பாங்காக் கிளையில் மேலாளராக ஏழு வருடம் பணியாற்றினார். பின் நியுயார்க்கில், ஐ.நா. இயக்குநரின் சிறப்பு உதவியாளர் (Special Assistant to the Director), கண்காணிப்பாளரின் சிறப்பு உதவியாளர் (Special Assistant to the Commissioner), நீர் வளத்துறையின் செயல் தலைவர் (Acting chief of Water resourcement), நீர்வளத்துறயின் முதன்மைத் தலைவர் (chief of Water resourcement chairman), நீர்வளத்துறையின் பொறுப்பு இயக்குநர் (Director in charge of Water resourcement) எனப் பல படி நிலைகளில் பணிபுரிந்தார். ஆராய்ச்சி பிரிவின் பொறுப்பு இயக்குநராகப் (Research Division Director in charge) பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார். உலக அளவில் பல சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார்.
அழகப்பா அழகப்பன் மணமானவர். மனைவி: விசாலாட்சி. இவர்களுக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். மூத்த மகன் டாக்டர் குமார் அழகப்பன் அமெரிக்காவில் அவசரகால மருத்துவத்துறையில் முன்னணி மருத்துவர். இரண்டாவது மகன் அருண் அழகப்பன் கல்வியாளர். அட்வாண்டேஜ் டெஸ்டிங்கின் நிறுவனர். மூன்றாவது மகன் வைரம் அழகப்பன் அட்வாண்டேஜ் டெஸ்டிங் நிர்வாகத் தலைவர். மகள் மீனா, சட்டம் பயின்றவர்.
இதழியல்
அழகப்பா அழகப்பன், ஹிந்து இதழில் சில காலம் பணியாற்றினார். பின் பாம்பேயில் (இன்றைய மும்பை) சர்தார் வல்லபபாய் படேல் ஆரம்பித்த 'பாரத்' இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்
இலக்கிய வாழ்க்கை
அழகப்பா அழகப்பன், சமயம் சார்ந்தும், முருகன் சார்ந்தும் சில கட்டுரைகளை எழுதினார். 'வாழ்க்கைப் பயணமும் அதற்கு அப்பாலும்' என்ற நூலை எழுதினார். மாநாடுகளில் கலந்துகொண்டு கட்டுரை வாசித்தார். 'முருகனின் சகோதரி ஜோதி' (Swarupa Vel: Skanda's Sister Jyoti) என்ற தலைப்பில் அவர் சமர்ப்பித்த கட்டுரை குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. அதில், 'பார்வதி தேவி முருகனுக்கு அளித்த வேல் 'ஜோதி' வடிவமாகும். சக்தியின் அம்சமான அது முருகனின் சகோதரியாகக் கருதத்தக்கது. பழமுதிர்ச்சோலையில் வேல் ஆக உள்ள 'ஜோதி', 'ராக்காயி' என்ற பெயரில் வழிபடப்படுகிறாள்' என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலயப் பணிகள்
அமெரிக்காவில், முதலில் கட்டப்பட்ட இந்துக் கோயில் என்ற பெருமையை நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள மஹாவல்லப கணபதி திருக்கோயில் பெற்றது. காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதியின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் 1977-ல் இதனைக் கட்டியவர் அழகப்பா அழகப்பன். ஜூலை 04, 1977-ல், பன்றிமலை சாமிகளின் தலைமையில் இவ்வாலயக் கும்பாபிஷேகம் நடந்தது நியூயார்க்கில் ஃபிளஷ்ஷிங் பகுதியில் விலைக்கு வந்த, பழைய சர்ச் கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கி அங்கே கட்டப்பட்டதே மகா வல்லப கணபதி ஆலயம்.
தொடர்ந்து அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம், ஹூஸ்டன் மீனாட்சி ஆலயம் போன்ற பல இந்துக்கோயில்கள் உருவாக அழகப்பா அழகப்பன் காரணமானார். காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதியின் ஆசியுடன், சென்னை பெசன்ட் நகரில் அறுபடை வீடு ஆலயத்தை நிர்மாணித்தார். குன்றக்குடி மயிலாடும்பாறையில் சக்தி சொரூப ஜோதி வேல் ஆலயத்தையும், ஞான சரஸ்வதி ஆலயத்தையும் அமைத்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
அழகப்பா அழகப்பன், வட அமெரிக்க இந்து ஆலயக் குழுமத்தின் செயலாளர் ஆகப் பணியாற்றினார். சி.என். அண்ணாத்துரை அமெரிக்காவிற்கு வருகை தந்தபோது அவருக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு உரைகளுக்கும், சந்திப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்தார்.
மறைவு
அழகப்பா அழகப்பன், அக்டோபர் 24, 2014 அன்று, தனது 89-ம் வயதில், அமெரிக்காவில் காலமானார்.
மதிப்பீடு
அழகப்பா அழகப்பன், ஐக்கிய நாடுகள் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அமெரிக்காவில் முதல் ஆலயத்தை நிர்மாணித்தார். சென்னை பெசன்ட் நகரில் அறுபடை வீடு ஆலயம் அமைத்தார். பல்வேறு சமூக, ஆன்மிக, சமயப் பணிகளை மேற்கொண்டார். அழகப்பா அழகப்பன் தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த பல்துறைச் சாதனையாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- தென்றல் இதழ் நேர்காணல்
- நமது நகரத்தார் தளம் நேர்காணல்
- ஞானசரஸ்வதி ஆலயம், ரமணன்ஸ் தளம்
- அறுபடை முருகன் ஆலயம், ரமணன்ஸ் தளம்
- அழகப்பா அழகப்பன் அஞ்சலி, நியூயார்க் டைம்ஸ்
- அழகப்பா அழகப்பன் அஞ்சலிக் குறிப்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2026, 20:59:03 IST