under review

பன்றிமலை சாமி

From Tamil Wiki
பன்றிமலை சாமி

பன்றிமலை சாமி (ராமசாமி; பன்றிமலை சாமிகள்; பன்றிமலை சுவாமி; பன்றிமலை சுவாமிகள்) (1906 - டிசம்பர் 11, 1986) தமிழ்நாட்டின் ஆன்மிக ஞானிகளுள் ஒருவர். சித்த புருஷர். பல்வேறு சித்தாற்றல்களைச் செய்தவராக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ராமசாமி என்னும் இயற்பெயரை உடைய பன்றிமலை சாமிகள், 1906-ம் ஆண்டில், சித்திரை மாதத்துப் பரணி நட்சத்திரத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றிமலையில், ஆறுமுகம் பிள்ளை-அங்கம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். பாதங்களில் சங்கு, சக்கரம், முருகனுக்குரிய வேல் போன்ற குறியீடுகள் - ரேகை அமைப்புகள் காணப்பட்டதால் தெய்வீகக் குழந்தையாக மதிக்கப்பட்டதாகவும், பள்ளிப்பருவத்திலேயே பிறருடைய நோய்களைத் தீர்க்கும் ஆற்றலைக் கைவரப் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது..

பன்றிமலை சுவாமி

ஆன்மிக வாழ்க்கை

பன்றிமலை சாமிகள் சிறுவனாக இருந்தபோதே ஆன்மிகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். முருக பக்தராக விளங்கினார். தந்தையுடன் பழனிக்குச் சென்று பழனி முருகனை வழிபடுவது அவரது வழக்கமாக இருந்தது.

தொன்மம்

பன்றிமலை சுவாமிகளின் சித்தாற்றல் பற்றிய பின்வரும் தொன்மக்கதை நிலவுகிறது:

பன்றிமலை சாமி சிறுவனாக இருந்த காலக்கட்டத்தில், ஒருமுறை பாலசமுத்திரத்தில் இருந்த விநாயகர் கோவில் அருகே குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது சாமியார் ஒருவரால் ஆட்கொள்ளப்பட்டார். அச்சாமியார், பாலகனாக இருந்த பன்றிமலை சாமியின் உடல் முழுவதும் திருநீற்றை அள்ளிப் பூசிப் பின் நாக்கிலும் தூவினார். நாவில் தன் கை வேலால் சில மந்திரங்களை எழுதினார். தலை மீது தன் கையை வைத்து ஆசிர்வதித்துப் பின் விடைபெற்றுச் சென்றார் என்பது தொன்மம்.

பன்றிமலை சாமியில் உடலில் ஏதோ மின்சாரம் பாய்வது போல் இருந்தது. தன்னுணர்வை இழந்தார். அதன் பின்னே அவருக்குப் பல்வேறு சித்தாற்றல்கள் கைவசப்பட்டன. கைப்பட்ட மணற் துகள்கள் கற்கண்டாயின. பொடிக் கற்களைக் கையில் வைத்து மூடித் திறந்தால் அவை மிட்டாய்களாயின. நோயுற்ற குழந்தைகள் அவர் பார்வையில் பட்டால், அவர் கையால் திருநீறு அளித்தால் குணமாகினர். அவர் சொல்லும் வாக்குப் பலித்தது என்று கூறப்படுகிறது.

குரு உபதேசம்

ஒருமுறை தனது நண்பர்களுடன் பழனி மலையில் ஏறிக் கொண்டிருந்தார் பன்றிமலை சாமி. அப்போது அங்கிருந்த சட்டிச் சாமியார் என்பவரால் ஈர்க்கப்பட்டார். உள்ளுணர்வு உந்த அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார். சிறுவனாக இருந்த பன்றிமலை சாமியை அணைத்து, ஆசிர்வதித்த சட்டிச் சாமியார், விநாயகர் ஆலயத்திற்கு எதிரே இருந்த மயில் மண்டபத்துக்கு அவரை அழைத்துச் சென்றார். தனது அருகில் அமர்த்திக் கொண்டவர், அவரது காதில் சில ரகசிய மந்திரங்களை ஓதினார். பின் அவரிடம் ஒரு பானையைக் கொடுத்து, "இந்தப் பானையை பூஜையில் வைத்து நான் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை 108 நாட்கள் விடாமல் தினமும் சொல்லிவா" என்று கூறி ஆசிர்வதித்தார்.

அந்தச் சாமியாரின் போதனையே பன்றிமலைசாமிக்கு குரு உபதேசமானது. சாமியார் சொல்லியபடி தினந்தோறும் பூஜை செய்து வந்தார். பூஜையின் முடிவில் அன்னை பராசக்தி மற்றும் ஸ்ரீ முருகப்பெருமானின் அருட்காட்சி அவருக்குக் கிடைத்தது என்று கூறப்படுகிறது.

பன்றிமலை சாமிகள் ஆசிரமம், சென்னை
தீட்சை

ஒரு சமயம், ஆச்சாண்டார் மலைப் பரதேசி என்ற சித்தபுருஷரைச் சந்தித்தார் பன்றிமலை சாமி. அவர், பன்றிமலை சாமிக்கு தீட்சை அளித்துத் தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார். குருவும் சீடருமாகப் புறப்பட்டு இந்தியா முழுவதும் சுற்றிவந்தனர். பல புண்ணியத் தலங்களையும், மகான்களையும் தரிசித்தனர். புனித நதிகளில் நீராடினர். பின் தமிழகம் திரும்பினர்.

இல்லற வாழ்க்கை

பன்றிமலை சாமிகள் ஆன்மிகவாதியாகப் பரிணமித்திருந்தாலும் குடும்ப நியதிப்படி இல்லற வாழ்க்கையை ஏற்றார். பாப்பாத்தி அம்மாள் என்பவருடன் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. நாளடைவில் அவர்களுக்கிடையே இருந்த கணவன் - மனைவி பந்தம், குரு - சிஷ்ய உறவானது. சாமிகளின் தலையாய சீடராகப் பாப்பாத்தி அம்மாள் ஆயினார்.

பன்றிமலை சாமிகள், கன்னிவாடி ஜமீனில் கணக்குப் பிள்ளையாகச் சில காலம் பணியாற்றினார். பின்னர் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணி செய்தார். பின் பன்றிமலை பஞ்சாயத்தின் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொறுப்புக்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்தார். தனது ஆன்மிக, சமயப் பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அதனால் மக்களால் அன்போடு பன்றிமலை சாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

அற்புதங்கள்

பன்றிமலை சாமிகள் தம்மை நம்பிய அடியோரின் வாழ்வின் பல்வேறு அற்புதங்களைச் செய்தார் என்பது தொன்மம். பன்றிமலை சாமிகள் கண் பட்டால் நோய் நீங்கியது. உடல் குணமானது. நாள்பட்ட பல்வேறு உடல் சிக்கல்கள் தீர்ந்தன. என்றும் அதனால் அவரைத் தேடி மக்கள் வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

பன்றிமலை சாமி உருவச் சிலை

ஆன்மிகப் பணிகள்

'மக்கள் சேவையே கடவுள் சேவை' என்று அறிவித்த சாமிகள், மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் மன நிம்மதி பெறலாம் என்றும், மகிழ்ச்சியோடு வாழலாம் என்றும் தம்மை நாடி வந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். சில காலம் திண்டுக்கல்லில் வசித்த சாமிகள், பின்னர் தனது பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னை, நுங்கம்பாக்கத்தில் வந்து வசித்தார். அங்கும் தனது சித்தாற்றல்களைத் தொடர்ந்து பலரது துயர் போக்கினார். ஆனால் மக்கள் தன்னைதெய்வமாகக் கொண்டாடுவதை சாமிகள் விரும்பவில்லை. "நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். நான் முருகனின் பக்தன். முருகனின் சேவகன். நான் கடவுள் அல்ல. மக்கள் நலனுக்காக இறைவனிடம் மன்றாடும் ஒரு சாதாரண மக்கள் சேவகன்தான் நான்" என்று அறிவித்தார்.

பூடான் மன்னர் மற்றும் மதகுரு லாமாக்களின் வேண்டுகோளுக்கிணங்க நேபாளம் சென்ற சாமிகள், அம்மக்களது அன்பைப் பெற்றார். பழனிக்கு அருகே உள்ள தாண்டிக்குடி ஆலயத்தில் முருகனை எழுந்தருளச் செய்தார். மொரீஷியஸ் தீவிற்கும் தென் ஆப்ரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும், நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்காகவும், மாரியம்மன் கோவில் அமைப்பதற்காகவும் சென்று கலந்துகொண்டார்.

பன்றிமலை சாமிகளின் ஆலோசனைப்படியே, அவர் அனுப்பி வைத்த யந்திரங்களைக் கொண்டே நியூயார்க்கின் முதல் இந்து ஆலயமான வல்லப மகாகணபதி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. ஆலயக் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ பன்றிமலை சுவாமிகளே அமெரிக்காவுக்குச் சென்று நடத்தி வைத்தார். பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயில் பன்றிமலை சாமிகளின் அருளாசியால் உருவானது. ஹூஸ்டன் பாலாஜி ஆலயத்திற்கும் மற்றும் ஃப்ளோரிடாவில் உள்ள சக்தி ஆலயத்திற்கும் அடிக்கல் நாட்டினார். லண்டன் மாநகரின் புகழ்பெற்ற முருகன் ஆலயக் கும்பாபிஷேக நிகழ்வில் பன்றிமலை சாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பன்றிமலை சாமி சமாதி, சென்னை

மகாசமாதி

பன்றிமலை சாமிகள், தான் இறக்கும் தேதியை முன்னறிவித்து அதன்படி, 1986-ம் ஆண்டு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி திதியன்று (டிசம்பர் 11, 1986), சென்னையில் உள்ள தனது ஆசிரமத்தில் மகாசமாதி அடைந்தார்.

நினைவாலயம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் பன்றிமலை சாமிகளின் மகாசமாதியுடன் கூடிய நினைவாலயம் அமைந்துள்ளது. பன்றிமலை சாமிகளின் குருபூஜை விழா அங்கு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று இடம்

சாதாரண குடிமகனாகப் பிறந்து தியான, தவ, யோக நெறிகளைப் பின்பற்றி ஆன்மிக ஞானியாக முகிழ்த்தவர் பன்றிமலை சாமிகள். பல்வேறு ஆலயக் கும்பாபிஷேகப் பணிகளை மேற்கொண்டார். மக்கள் பலருக்கு ஆன்மிக வழிகாட்டியாகச் செயல்பட்டார். பல்வேறு அற்புதங்களைச் செய்ததாகவும், தமது சித்தாற்றலால் அடியவர்கள் பலரது நோய்கள், சிக்கல்களை நீக்கி அவர்களது வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்கியதாகவும் நம்பப்படுகிறது. தமிழ்நாட்டின் சித்தபுருஷர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2026, 11:20:30 IST