under review

அரு. கோபாலன்

From Tamil Wiki
அரு. கோபாலன் (அருகோ)

அரு. கோபாலன் (நவம்பர் 21, 1937 - டிசம்பர் 23, 2025) (அருகோ). தமிழ்த் தேசிய அரசியல் செயல்பாட்டாளர். தமிழியக்க இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டார். தமிழறிஞர் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

அரு. கோபாலன் நவம்பர் 21, 1937-ல் தமிழ்நாட்டில் சங்கரன்கோவிலில் அருணாசலம் - கோமதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.

தனிவாழ்க்கை

அரு. கோபாலனின் மனைவி கல்யாணி, மகன் தமிழ்க்குமரன்.

அரசியல்வாழ்க்கை

அரு. கோபாலன் தொடக்கம் முதலே தனித்தமிழ்நாடு இயக்கம், தமிழியக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட அரசியல்வாதியாகச் செயல்பட்டார்.

நாம் தமிழர்

அரு. கோபாலன் 1958ஆம் ஆண்டில் சி.பா.ஆதித்தனார் 'நாம் தமிழர்' இயக்கத்தை தோற்றுவித்த போது, அவருடன் இணைந்து பணியாற்றினார். சி.பா.ஆதித்தனார் அரு.கோ. என்று கோபாலனை அழைத்தார். "அருகோ" என்ற பெயர் அவருக்கு நிலைபெற்றது.

ஈழ ஆதரவு

1982 ஆம் ஆண்டில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், தணிகைகோ இரசீத் ஆகியோரோடு இலங்கைக்குச் சென்றார். ஈழத்தலைவர்கள் இராசு சுந்தரம், டேவிட் ஆகியோர் மூலம் தமிழீழப் பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.1984-ம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவர் மருத்துவர் வின்ஸ்டன் பஞ்சாட்சரம் தமிழீழ மாநாடு நடத்தினார். பழ. நெடுமாறன், வா.மு.சேதுராமன், தங்கபாலு, மதுரை ஆதீனம் ஆகியோருடன் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

ஈழத்தமிழ் ஆதரவுக்காகவும், தமிழ்த்தேசியச் செயல்பாட்டுக்காகவும் பன்னாட்டு தமிழ் நடுவம் என்னும் அமைப்பை வா.மு.சேதுராமனுடன் இணைந்து உருவாக்கினார்.

இதழியல்

அரு. சி.பா.ஆதித்தனார் தொடங்கிய தமிழ்க்கொடி என்ற இதழின் ஆசிரியராக கோபாலன் பணியாற்றினார். 'எழு கதிர்' எனும் தமிழிய இதழையும் நடத்தி வந்தார்.

விருதுகள்

  • தினத்தந்தி சார்பில் 'சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது' (2016)

பங்களிப்பு

தனித்தமிழக அரசியல், தமிழியக்க அரசியல் ஆகியவற்றை முன்வைத்து செயல்பட்டவர் அரு.கோபாலன்.

மறைவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோபாலன் டிசம்பர் 23, 2025-ல் மறைந்தார்.

நூல்கள்

கோபாலன் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

கட்டுரை
  • ஈழம், தமிழினம், இந்தியா
  • தமிழகத்தை விட சிறிய தனித்து வாழும் நாடுகள்
  • முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம்: உடன்பாடும் உண்மைப்பாடும்
கவிதை
  • நீரில் பூத்த நெருப்பு மலர்கள்
சிறுகதை
  • கண் அவன்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2026, 17:00:34 IST