under review

அருணோதயம் (இதழ்)

From Tamil Wiki
அருணோதயம் இதழ் (படம் காபிரைட்: பிரிட்டிஷ் நூலக இணையதளம்)

அருணோதயம் (1863) கிறிஸ்தவ மாத இதழ். தரங்கம்பாடி லுத்தரன் திருச்சபை சார்பாக வெளிவந்தது. அக்டோபர் 2015-ல் நின்று போனது.

வெளியீடு

’தரங்கன்பாடி மிசியோன் பத்திரிகை’ என்ற தலைப்பில் வெளியான அருணோதயம் இதழ், லுத்தரன் திருச்சபை சார்பில், ஜூலை 1863-ல், தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது. தரங்கம்பாடி மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.

பிற்காலத்தில், ஏ. ஞானப்பிரகாசம் அவர்களால், சென்னை வேப்பேரி மிஷன் அச்சுக்கூடத்திலிருந்து அச்சிடப்பட்டு வெளியானது. தொடக்க காலங்களில் ஞா. சாமுவேல் இதன் ஆசிரியராக இருந்தார். பிற்காலத்தில் அவரது மகன் ரெவரண்ட் ஞானமாணிக்கம் ஆசிரியராகப் பணியாற்றினார். ரெவரண்ட் ராஜரிகம், ஜி.டி.வில்லியம்ஸ், A. ஜான் ஐயர் உள்ளிட்ட பலரும் இதழின் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

150 ஆண்டுகளாக வெளிவந்த அருணோதயம் இதழ் 2015-ல் நின்று போனது.

உள்ளடக்கம்

அருணோதயம் இதழ் 48 பக்கங்களில் வெளியானது. கால மாற்றத்திற்கேற்ப இதழின் வடிவமைப்பிலும், பக்க எண்ணிகையிலும் மாற்றம் பெற்றது. இதழின் முதல் பக்கத்தில் ‘தரங்கன்பாடி மிசியோனின் பத்திரிகை’ என்ற குறிப்பு இடம் பெற்றது. அதன் கீழ் விவிலியத்தின் கருத்து விளக்கங்கள் இடம் பெற்றன. சீகன்பால்கு, பெப்ரீசியஸ் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகள் வெளியாகின. கார்த்தாகோவின் கண்காணியான சீப்பிரியானின் சரித்திரம் வெளியானது.

பிற்காலத்தில் கிறிஸ்தவ நூல்கள் பற்றிய புத்தக மதிப்புரைகள், திருச்சபைச் செய்திகள், கிறிஸ்தவத் திருவிழாக்கள் பற்றிய செய்திகள் வெளியாகின. பத்திராதிபர் குறிப்புகள், சொற்பொழிவுகள் குறித்த தகவல்கள், ஜெர்மன் போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்படும் விதம் போன்ற செய்திகள் இடம் பெற்றன. மிஷனரி வரலாற்றுடன் கிறிஸ்தவம் சார்ந்த கவிதை, சிறுகதை, கட்டுரைகளும் பிற்கால இதழ்களில் இடம்பெற்றன.

தின தியானம், கவிதைகள், உலகச் செய்திகள், பேராயர் கலந்து கொண்ட நிகழ்வுகள், துணுக்குகள், பேராயரின் 'மனம் திறந்து பேசுகிறேன்' பகுதி, திருச்சபையின் மக்களுக்கு ஆன்மீக செய்தி, கிறிஸ்தவ ஆன்மீகப் பெரியோர்கள் பற்றிய தகவல்கள், வழிகாட்டுதல்கள் எனப் பல பகுதிகளுடன் அருணோதயம் இதழ் வெளிவந்தது.

இதழ் நிறுத்தம்

150 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவந்த அருணோதயம் இதழ், 2014-ல், ஆறு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. அக்டோபர் 2015-ல் மூன்று இதழ்கள் மட்டுமே வெளியானது. பின் நின்று போனது.

மதிப்பீடு

தமிழின் தொடக்கக் காலக் கிறித்தவ இதழ்களில் ஒன்று அருணோதயம். சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்ந்த பல செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. காலமாற்றத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வெளிவந்தது. தமிழகத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவப் பிரிவை வளர்த்தெடுக்க முக்கியமான பங்களிப்பை அளித்த முதன்மையான இதழாக அருணோதயம் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page