under review

அம்ரிதா ப்ரீத்தம்

From Tamil Wiki
அம்ரிதா ப்ரீத்தம்
அம்ரிதா ப்ரீத்தம்

அம்ரிதா ப்ரீத்தம் (ஆகஸ்ட் 31, 1919 - அக்டோபர் 31, 2005) பஞ்சாபி, இந்தியில் எழுதிய எழுத்தாளர், கவிஞர், இதழியலாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர். 'பிஞ்சர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். 'காகஸ் தே கன்வாஸ்' நூலுக்காக ஞானபீட விருது பெற்றார். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளிலும் பஞ்சாபி பேசும் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவரின் காதல் கவிதைகள் பிரபலமானவை. இவரது கவிதைகள் பஞ்சாபின் சூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்தவையாகவும், மார்க்சியம், சமத்துவம் மற்றும் பெண்ணியவாதக் கருத்துக்களைக் கொண்டவையாகவும் அமைந்தன.

வாழ்க்கைக் குறிப்பு

அம்ரிதா ப்ரீத்தம் பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாபில் உள்ள குஞ்ஜ்ரன்வாலாவில் ராஜ் பீபி, கர்தார் சிங் ஹித்காரி இணையருக்கு ஆகஸ்ட் 31, 1919-ல் பிறந்தார். அப்பா பள்ளி ஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் இருந்தார். கவிதைகள் எழுதினார். தாயார் அம்ரிதாவின் பதினொராம் வயதில் இறந்தார்.

அம்ரிதா அதன்பின் தந்தையுடன் லாகூருக்குக் குடிபெயர்ந்தார். 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது லாகூரிலிருந்து இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்.

அம்ரிதா இம்ரோஜ்

தனிவாழ்க்கை

அம்ரிதாவுக்கு பதினாறு வயதில் (1935) சிறுவயதிலேயே மண உறுதிசெய்யப்பட்ட ப்ரீத்தம் சிங்குடன் திருமணமானது. லாகூர் அனார்கலி பஜாரில் ஆடை வியாபாரியின் மகனான ப்ரீதம் சிங் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர்களுக்கு இரு குழந்தைகள். மகள் கண்ட்லா, மகன் நவ்ராஜ் குவாத்ரா.

அம்ரிதா ப்ரீத்தம் இந்தியப் பிரிவினைக்கு முன் லாகூரில் உள்ள வானொலி நிலையத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். 1961-ம் ஆண்டு வரை டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலியின் பஞ்சாபி சேவையில் பணியாற்றினார். 1960-ல் ப்ரீத்தமிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

அம்ரிதா கவிஞர் சாஹிர் லூதியானவி மீது காதல் கொண்டார். இந்தக் காதல் கதை அவரது சுயசரிதையான 'ரசிதி டிக்கெட்' (Rasidi Ticket) நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சாஹிர் லூதியானவிக்காக அவர் எழுதிய சிறுகடித வடிவிலான கவிதைகளின் தொகுப்பு ‘சுனேஹ்ரே’ (Sunehre –messages) சாஹித்ய அகாதமி விருது பெற்றது. பெண் பாடகி சுதா மல்ஹோத்ரா சாஹிரின் வாழ்க்கையில் வந்தபின் அம்ருதாவுடனான அவரது உறவு முறிந்தது.

அதன்பின் அம்ரிதா கலைஞரும் எழுத்தாளருமான இந்தர்ஜித் இம்ரோஸ் என்பவருடன் காதலில் இருந்தார். தனது வாழ்க்கையின் கடைசி நாற்பது ஆண்டுகளை இம்ரோஸுடன் கழித்தார். இம்ரோஸ் அம்ரிதாவின் பெரும்பாலான புத்தக அட்டைகளை வடிவமைத்தார். தனது பல ஓவியங்களுக்கு அம்ரிதாவைப் பொருளாக்கினார். அவர்களது வாழ்க்கை 'அம்ரிதா இம்ரோஸ்: ஒரு காதல் கதை' (Amrita-Imroz: In the times of Love and Longing) என்ற புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தன் கணவரிடமிருந்து அம்ரிதா பிரிந்துவந்துவிட்டார் எனினும், இம்ரோஸ்-அம்ரிதா இடையேயான நட்பும் நெருக்கமும் அவர்களைத் திருமணம் வரை கொண்டுசெல்லவில்லை. இம்ரோஸ் தாங்களிருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில், நண்பர்களாய் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகம்

அம்ரிதா ப்ரீத்தம் தன் வாழ்வின் கடைசி வருடங்களில் ஷிர்டி பாபாவின் பக்தராக இருந்ததார். ஒரு அதிகாலையில் அகர்பத்தி புகையை பாபாவுக்குக் காட்டி கண்முடி தியானித்திருக்கையில் தான் தானாக இல்லாமல், அந்த வாசனைப்புகையாகவே மாறி பரவியிருந்ததாக உணர்ந்தார்.

அம்ரிதா சீக்கிய நம்பிக்கையின் போதகராக (பிரசாரக்) இருந்தார். பிற்கால வாழ்க்கையில் அவர் ஓஷோவின் பக்கம் திரும்பினார். 'ஏக் ஓங்கர் சத்னம்' உட்பட ஓஷோவின் பல புத்தகங்களுக்கு அறிமுகங்களை எழுதினார். ஆன்மீக கருப்பொருள்கள் மற்றும் கனவுகள் குறித்து எழுதத் தொடங்கினார்.

சமூகப்பணி

அம்ரிதா ப்ரீத்தம் சுதந்திரத்திற்குப் பிறகு சமூக ஆர்வலர் குரு ராதா கிஷன் டெல்லியில் முதல் ஜனதா நூலகம் (பொது நூலகம்) கொண்டு வர முன்முயற்சி எடுத்தபோது அதில் பங்கேற்றார். இதை பால்ராஜ் சஹானி மற்றும் அருணா ஆசஃப் அலி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த ஆய்வு மையமும் நூலகமும் இன்னும் டெல்லி மணிக்கூண்டு கோபுரத்தில் இயங்கி வருகின்றன.

இதழியல்

அம்ரிதா பஞ்சாபியில் 'நாகமணி' (Nagmani) என்ற மாத இலக்கியப் பத்திரிகையை இம்ரோஸுடன் சேர்ந்து 33 ஆண்டுகள் நடத்தினார். கவிதைகளுக்கான மாத இதழான(Poetry monthly) ஒன்றையும் நடத்தினார்.

அம்ரிதா ப்ரீத்தம்

இலக்கிய வாழ்க்கை

அம்ரிதா ப்ரீத்தம் பஞ்சாபி, இந்தி மொழிகளில் எழுதினார். அவரது பதினாறாவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பான 'அம்ரித் லெஹ்ரேன்' (அமிர்த அலைகள்) வெளிவந்தது. 1936-1946 காலகட்டத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அவர் ஒரு காதல் கவிஞராகத் தனது பயணத்தைத் தொடங்கினாலும், விரைவில் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். 1943-ல் வங்காளப் பஞ்சத்திற்குப் பிறகு போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை வெளிப்படையாக விமர்சித்த லோக் பீட் (மக்கள் வேதனை, 1944) தொகுப்பில் அதன் தாக்கம் காணப்பட்டது.

1947-ல் டேராடூனிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்தபோது, 'அஜ் ஆகான் வாரிஸ் ஷா னு' (நான் இன்று வாரிஸ் ஷாவிடம் கேட்கிறேன்) என முடியும்படியான கவிதையை எழுதினார். இக்கவிதை சூஃபி கவிஞரான வாரிஸ் ஷாவை நோக்கி எழுதப்பட்டது. இது பிரபலமடைந்தது. விவாகரத்துக்குப் பின் அவரது பணி மேலும் பெண்ணியத்தை நோக்கிச் சென்றது. அம்ரிதா ப்ரீத்தமின் பல படைப்புகள் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வைப் பற்றிப் பேசின.

தேசப்பிரிவினை பெண்களுக்கு இழைத்த கொடூரம்பற்றிய தாக்கத்தில் பஞ்சாபி மொழியில் அம்ரிதா 1950-ல் எழுதிய நாவல் ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு). இந்தியப் பிரிவினைபற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்பட்டது. 'பிஞ்சர்' என்ற பெயரிலேயே ஒரு ஹிந்தி படமாகவும் பின்னர் இது வெளிவந்தது. பிரிவினைக்குப் பிறகு அவர் இந்தியிலும் ஏராளமாக எழுதினார். 'கால் சேத்னா'(நேர உணர்வு) மற்றும் 'அகயாத் கா நிமந்திரன்' (தெரியாத அழைப்பு). 'காலா குலாப்' (கறுப்பு ரோஜா, 1968), 'ரசிதி டிக்கெட்'(1976) மற்றும் 'அக்ஷரோன் கே சாயே'(சொற்களின் நிழல்கள்) என்ற தலைப்பில் சுயசரிதைகளையும் வெளியிட்டார். அவரது பல படைப்புகள் ஆங்கிலம், பிரஞ்சு, டேனிஷ், ஜப்பானிய, மாண்டரின் மற்றும் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளில் இருந்து அவரது சுயசரிதை படைப்புகள் 'காலா குலாப் (Black rose)மற்றும் ரசிதி டிக்கெட் (Revenue stamp) உட்பட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இலக்கிய இடம்

அம்ரிதாவின் 'சுனேஹடே' என்ற நீண்ட கவிதைக்காக அவருக்கு 1956-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. பஞ்சாபியில் ஒரு படைப்புக்காக விருது வழங்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

“நிறைந்த புகழும் தன் வாழ்நாளிலேயே வெற்றியும் அடைந்தவர். இன்றைய பஞ்சாபி இலக்கியம் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே முதலில் முன்னிற்பது அவரது பெயராகத்தான் இருக்கும். அந்த பெயர் நமது பிரக்ஞையில் கொண்டு சேர்க்கும் நினைவுகள், பஞ்சாபின் இலக்கிய சரித்திரத்தையும், அரசியல் சரித்திரத்தையும், அந்த மண்ணின் பெண் பட்ட வேதனைகளையும், அதேசமயம் அந்தப் பெண் எல்லாவற்றையும் மீறி தலை நிமிர்ந்து நிற்பதையும் கொண்டு சேர்க்கும். அவரது கவிதையில் பஞ்சாபின் ஸூஃபி கவிஞர்களின், துறவிகளின் நிழல் படிந்திருப்பதையும் காணலாம். மார்க்சிய சமதர்மமும் வந்து போகும். எந்த தயக்கமுமற்ற, தன் தர்மங்களைத் தானே தீர்மானித்துக் கொண்ட ஒரு பெண்ணியவாதியையும் காணலாம்.” என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மதிப்பிட்டார்.

திரைப்படங்கள்

அம்ரிதாவின் படைப்புகளின் திரைவடிவம்
  • அம்ரிதா ப்ரீதமின் புத்தகங்களில் முதலில் படமாக்கப்பட்டது 'தர்தி சாகர் தே சிப்பியன்', 'காதம்பரி'(1975), அதைத் தொடர்ந்து 'உனா டி கஹானி', 'டாக்கு' (1976).
  • அவரது நாவலான 'பிஞ்சர்' (1950) பிரிவினைக் கலவரங்களின் கதையையும் அந்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் நெருக்கடியையும் விவரித்தது.
அம்ரிதாவைப் பற்றியவை
  • இயக்குனர் எம்.எஸ்.சத்யு 'ஏக் தி அமிர்தா' என்ற நாடகத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினார்.
  • 2007-ல் பாடலாசிரியர் குல்சாரால் வாசிக்கப்பட்ட அமிர்தா ப்ரீதம் கவிதைகளுடன், 'குல்சார் பாடிய அம்ரிதா' என்ற ஒலிவட்டு வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • 1956-ல் சாகித்ய அகாதெமி விருது ('சுனேஹடே' கவிதைத் தொகுப்புக்காக)
  • 1969-ல் பத்மஸ்ரீ விருது,
  • 1973-டெல்லி பல்கலைக்கழகம், ஜபல்பூர் பல்கலைக்கழகம் மற்றும் விஸ்வ பாரதி (1987) உட்பட பல பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்கள்
  • 1979-ல் பல்கேரியா குடியரசின் சர்வதேச வாப்சரோவ் விருது பெற்றார்.
  • 1979-ல் பல்கேரியா குடியரசின் சர்வதேச வாப்சரோவ் விருது
  • 1982-ல் ஞானபீட விருது('காகஸ் தே கேன்வாஸ்',Paper and Canvas)
  • 1986-92 ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • பஞ்சாப் ரத்தன் விருது
  • 1987-ல் பிரெஞ்சு அரசாங்கத்தால் அதிகாரி டென்ஸ், 'ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்' பட்டத்தையும் பெற்றார்.
  • 2004-ல் பத்ம விபூஷண் விருது
  • அவரது வாழ்நாளின் இறுதியில், பாகிஸ்தானின் பஞ்சாபி அகாதெமியால் அவருக்கு விருது வழங்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 31, 2019 அன்று, கூகுள் அவரது 100வது பிறந்தநாளை ஒரு டூடுலுடன் நினைவுகூர்ந்து கெளரவித்தது.

மறைவு

அம்ரிதா ப்ரீத்தம் அக்டோபர் 31, 2005-ல் தனது 86-வது வயதில் புது தில்லியில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட பின்னர் தூக்கத்தில் மறைந்தார்.

நூல் பட்டியல்

நாவல்கள்
  • பிஞ்சர்
  • மருத்துவர் தேவ்
  • கோரே ககாஸ், உஞ்சஸ் தின்
  • தர்தி, சாகர் அவுர் சீபியன்
  • ரங் கா பட்டா
  • டில்லி கி கலியான்
  • டெராஹ்வான் சுராஜ்
  • யாத்திரி
  • ஜிலாவதன் (1968)
  • ஹர்தட் கா ஜிந்தகினாமா
சுயசரிதைகள்
  • பிளாக் ரோஸ் (1968)
  • ரசிதி டிக்கெட் (1976)
  • வார்த்தைகளின் நிழல்கள் (2004)
சிறுகதைகள்
  • கஹானியன் ஜோ கஹானியன் நஹி
  • கஹானியோன் கே அங்கன் மே
  • மண்ணெண்ணெய் துர்நாற்றம்
கவிதைத் தொகுப்புகள்
  • அம்ரித் லெஹ்ரான் (1936)
  • ஜியுண்டா ஜிவான் (1939)
  • ட்ரெல் தோட் ஃபுல் (1942)
  • ஓ கீதன் வாலியா (1942)
  • பத்லாம் டி லாலி (1943)
  • சஞ்ச் டி லாலி (1943)
  • லோக் பீரா (மக்கள் வேதனை) (1944)
  • பதர் கீதே (தி பெபில்ஸ்) (1946)
  • பஞ்சாப் தி ஆவாஸ் (1952)
  • சுனேஹடே (செய்திகள்) (1955)
  • அசோகா செட்டி (1957)
  • கஸ்தூரி (1957)
  • நாகமணி (1964)
  • ஏக் சி அனிதா (1964)
  • சக் நம்பர் சட்டி (1964)
  • யுனிஞ்சா தின் (49 நாட்கள்) (1979)
  • காகஸ் தே கன்வாஸ் (1981)
  • சுனி ஹூயீ கவிதாயென்
  • ஏக் பாத்
மொழிபெயர்க்கப்பட்டவை
  • ராதையுமில்லை ருக்மணியுமில்லை (சரஸ்வதி ராம்நாத்) (தமிழ்)

உசாத்துணை


✅Finalised Page