under review

அம்பலவாண நாவலர்

From Tamil Wiki
அம்பலவாண நாவலர்

அம்பலவாண நாவலர் (பொ.யு. 1855 - 1932) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர், எழுத்தாளர், ஆன்மீகவாதி, ஆசிரியர். திருஞானசம்பந்தர் மடாலயம், ஆறுமுகநாவலர் சந்தான ஞான சம்பந்த சுவாமி ஆதீனம் ஆகிய இரு மடாலயங்களை நிறுவியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அம்பலவாண நாவலர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சித்தங்கேணியில் ஆறுமுகப்பிள்ளை, சுந்தரவல்லி இணையருக்கு 1855-ல் பிறந்தார். மட்டுவில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களையும், நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதரிடம் சமஸ்கிருதத்தையும், சுழிபுரம் கனகரத்தின முதலியாரிடம் ஆங்கிலத்தையும் கற்றார்.

அம்பலவாணர் சிலை (நன்றி: நுதல்வன் செய்தி)

ஆன்மீக வாழ்க்கை

மதுரைத் திருஞானசம்பந்தர் மடத்து மகாசந்நிதானத்திடம் மந்திர காசாயம் பெற்று ”நைட்டிகப் பிரமச்சரிய மாதுல்ய மகா சந்நியாசியாக” ஆனார். சைவ சமய விரிவுரைகள் நிகழ்த்தினார். வலிகாமம் மேற்குப்பகுதி மணியகாரராய் இருந்த வட்டுக்கோட்டை இளந்தழைய சிங்கமாப்பாண ரகுநாத முதலியார் அம்பலவாண நாவலரின் விரிவுரைகளின் சிறப்பைக்கண்டு ஊக்கப்படுத்தினார்.

வாணிகம் செய்வதற்காக யாழ்ப் பாணத்துக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் பெரிய சொக்கலிங்கச் செட்டியார், சின்னச் சொக்கலிங்கச் செட்டியார் ஆகிய இருவரும் இவரது கல்வியறிவினையும் விரிவுரை சிறப்பையும் கண்டு, விரிவுரைகள் செய்விப்பதற்காக திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர். அம்பலவாண நாவலர் நெல்லையப்பர்-காந்திமதி திருக்கோயிலில் சமயவிரிவுரை ஆற்றினர். அவ்விரிவுரை முடிந்ததும் அங்குள்ள செல்வர்களால் இவருக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. ஓராண்டு காலம் வரை அங்கே தங்கியிருந்து ”திருவாதவூரர் புராண விரிவுரை” செய்தார்.

இந்தியாவிலுள்ள திருக்கோயில்களை தரிசித்தார். திருவாவடுதுறைக்குச் சென்றபோது அங்குள்ள மடத்துக்குச் சென்று, திருப்பெருந்திரு அம்பலவாண தேசிகரை சந்தித்தார். இவருடைய கல்வியறிவையும் விரிவுரை வன்மையையும் கண்ட தேசிகரவர்கள் இவருக்கு "நாவலர்" என்னும் பட்டப் பெயரினைச் சூட்டி, பொன்னாடையும் போர்த்தினார். இரண்டு ஆண்டுகள் வரை அவர் தேவகோட்டையிலே தங்கியிருந்து, ”பெரியபுராண விரிவுரைகள்” செய்தார். அவ்விரிவுரை முடிவடைந்ததும் பன்னீராயிரம் ரூபாய் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது

ஆறுமுக நாவலரை தன் சற்குருவாக வழிபட்டார். அவரின் பதாகைகளை சிரசின் மேல் வைத்து அங்கப்பிரதிட்டையாக மயானம் அடைந்து இறுதி அஞ்சலி செய்தார். ஆறுமுக நாவலர் மீது “சற்குரு மணிமாலை” பாடினார்.

மடாலயங்கள்

திருஞானசம்பந்தர் மடாலயம்

நெல்லையப்பர்-காந்திமதி திருக்கோயில் வீதியில், திருஞானசம்பந்தர் மடாலயம்" என்னும் பெயருடன் மடத்தினை அம்பலவாண நாவலர் ஆரம்பித்தார். கண்டனுரர், காரைக்குடி, தேவகோட்டை, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்த செல்வர்கள் இவரை ஆதரித்தனர்.

ஆறுமுகநாவலர் சந்தான ஞான சம்பந்த சுவாமி ஆதீனம்

சிதம்பரத்தில் "ஆறுமுகநாவலர் சந்தான ஞான சம்பந்த சுவாமி ஆதீனம்" என ஒரு மடத்தையும் இவர் அமைத்தார். இவர், தமது முதுமைப் பருவத்தினை அம்மடத்திலேயே கழித்தார் என நம்பப்படுகிறது.

அம்பலவாண நாவலர்

ஆசிரியப்பணி

வட்டுக் கோட்டையிலே பாதிரிமாரால் நிறுவப்பட்டிருந்த பாடசாலைகளில் சைவப் பிள்ளைகள் சென்று கல்வி கற்பதைத் தடுக்கும் வகையில், சைவத் தமிழ்ப் பாடசாலையை அமைத்து ஆசிரியராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் ஸ்தாபகர் ஆகவும் பொறுப்பிலிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அம்பலவாண நாவலர் 'சற்குருமணிமாலை', 'திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம்', 'அருணாசல மான்மியம்' ஆகிய நூல்களை எழுதினார். இவரது பெரியபுராண பாடியம், ஆரிய திராவிடப் பிரகாசிகை ஆகிய நூல்கள் அச்சாகவில்லை.

மறைவு

அம்பலவாண நாவலர் 1932-ல் காலமானார்.

இலக்கிய இடம்

அம்பலவாண நாவலர் சைவ மதத்தை மறுமலர்ச்சி அடையச்செய்த பேச்சாளராகவும், சைவ நூல்களுக்கு உரைகளும் சைவ விளக்கங்களும் எழுதிய ஆசிரியராகவும் மதிக்கப்படுகிறார். சிற்றிலக்கியங்களை இயற்றிய புலவராகவும் மதிப்பிடப்படுகிறார். ஆறுமுக நாவலரின் முதன்மை மாணாக்கர்களில் ஒருவர்

நூல் பட்டியல்

  • சற்குருமணிமாலை
  • திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம்
  • அருணாசல மான்மியம்
  • அகோர சிவாசாரியர் பத்ததி (நிர்மலமணி வியாக்கியானம்).
  • பிரும தருக்கஸ்தவம்
  • பெளஷ்கர சங்கிதா பாஷியம்
  • சிவத்துரோக கண்டனம்
  • திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம்
  • வேணுவன லிங்கோற்பவம்
  • திருச்சுழியற் புராணம்
  • நடன வாத்திய ரஞ்சனம்
  • சண்முக சடாட்சரப் பதிகம்.
பதிப்பிக்கப்படாத நூல்கள்
  • ஆரிய திராவிடப் பிரகாசிகை
  • சித்தாந்தப் பிரபோதம்
  • சைவ சந்நியாச பத்ததி
  • தக்ஷா தர்சம்
  • பெரிய புராணபாடியம் (பாடியப் பிரகாசிகை)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2022, 13:33:10 IST