under review

அமலனாதிபிரான்

From Tamil Wiki

அமலனாதிபிரான் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம்பெறும் பத்து பாசுரங்களாலான பதிகம். திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டு அடி முதல் முடி வரை அரங்கனின் திருமேனியின் அழகை வர்ணிக்கிறது.

ஆசிரியர்

அமலனாதிபிரான் பதிகத்தை இயற்றியவர் திருப்பாணாழ்வார். தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) குலத்தில் பிறந்தவர். அரங்கனின் சன்னதிக்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தபோது (பார்க்க: திருப்பாணாழ்வார்) அரங்கனின் திருவுருவை அடி முதல் முடி வரை (பாதாதிகேச) வர்ணனையாக அமலனாதிபிரான் எனத் தொடங்கி பத்து பாசுரங்களால் பாடினார். அதன்பின் அரங்கனுடன் கலந்து மறைந்தார் என்று அவரது வரலாறு கூறுகிறது.

அமலனாதிபிரான் பாசுரங்கள் (எளிய பொருளுடன்)

அமலனாதிபிரான் எனத் தொடங்கும் பத்து பாசுரங்களாலான பதிகம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஒன்பதாம் பிரபந்தமாக இடம்பெறுகின்றன. அரங்கனின் திருவடி, பீதாம்பரம், உந்தி, அரைஞாண், திருமார்பு, கழுத்து, செவ்வாய், கண்கள், நீல மேனி என ஒவ்வொரு அவயத்தின் அழகையும் பாடியபின் பத்தாம் பாசுரத்தில் 'அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றைக் காணாவே' என முடிகின்றன.

திருமலை நம்பிகள் இயற்றிய பாயிரம்(தனியன்)

காட்டவே கண்ட பாதம் கமலநல் லாடை யுந்தி
தேட்டரு முதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபு குந்து
பாட்டினாற் கண்டு வாழும் பாணர்தாள் பரவி னோமே.

லோக சாரங்க முனிவராலே தன் தோளில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டு, அரங்கனின் சன்னதியில் தனியே புகுந்தவரும், பெரிய பெருமாள் காட்டிக் கொடுத்த திருவடித் தாமரைகள், அழகிய ஆடை, திருநாபி, திருவயிறு, திருமார்வு, கழுத்து, சிவந்த வாய், அன்றலர்ந்த தாமரை போன்ற கண்கள், திருமேனி ஆகியவற்றைக் கண்டவரும், எம்பெருமானைப் பாடுவதே வாழ்வாகக் கொண்டிருந்தவருமான திருப்பாணாழ்வார் திருவடிகளைக் கொண்டாடினோம்.

திருவடி

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

அடியவர்களுக்கு ஆதாரமாயிருக்கும் திருவடிகளின் அழகு தம்மை ஆட்கொண்டதை முதல் பாசுரத்தில் பேசுகிறார். தூயவன், உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். விண்ணவர்க்குத் தலைவன். மணம் நிறைந்த சோலைகள் சூழ் திருமலையிலே (திருப்பதி) தங்கி நான் கேட்கும் முன்பாகவே எனக்கு அருள் செய்தவன். உயர்ந்த மதில்களை உடைய திருவரங்கத்தில் கண்வளரும் அவன் திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்தது போலிருந்தது. (திருவடிகள் தானே வந்து ஆட்கொண்டன)

பீதாம்பரம்

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற,
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்த வெம்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான், அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே

ஆனந்தத்தோடு கூடிய மனத்தை உடையவன், அண்டங்களைக் கடந்துசெல்லும் உயர்ந்த திருமுடி உடையவன், அசுரர்களைக் கொடிய அம்புகளால் உயிர் வாங்கிய இராமபிரான், மணம்பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவரங்கத்தில் கண் வளர்ந்து அருள்பவன், அப்பெருமானின் திருவரையில் சார்த்திய பீதாம்பரத்தின் மேல் என்சிந்தை சென்றது.

நாபிக்கமலம் (உந்தி)

மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

பெண்குரங்குகள் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவியபடி இருக்கும், தேவர்கள் பூக்களைக் கொண்டு ஆராதனை செய்துகொண்டேயிருக்கும் திருமலையில் அருள் செய்கின்ற, அரங்கத்தில் திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொள்கிற பெருமானுடைய பட்டாடை செவ்வானம் போன்ற நிறமுடையது. பிரமனைப் படைத்த அழகிய நாபிக்கமலம் செந்நிறப் பீதாம்பரம் இவற்றின்மேல் என் உயிர் படிந்துவிட்டது.

உதரபந்தம் (அரைஞாண் கயிறு)

சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

மதில்களால் சூழப்பட்ட இலங்கையின் அரசனான இராவணனின் தலைகள் பத்தையும் உதிரும்படியாகக் கணைதொடுத்தவன், காயாம்பூ வண்ணன், வண்டுகள் இசை பாட, மயில்கள் ஆடும் திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கன் அரையை அலங்கரித்த அரை ஞாண் கயிறு என் மனத்தினுள் நிலைத்து உலாவுகின்றதே!

திருஆர மார்பழகு

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

அரங்கன் என்னுடைய வலிய பாபங்களை என்னிடமிருந்து தொலைத்து, என்னைத் தன் அன்பனாக்கி வைத்ததோடல்லாமல் என் மனத்தில் வந்து புகுந்துவிட்டான். என்னுள் இவன் புக நான் என்ன தவம் செய்தேன்? திருமகளும், கௌஸ்துபமும் முத்தாரமும் வீற்றிருக்கும் அந்தத் திருமார்பு என்னை ஆட்கொண்டு விட்டதே!

திருக்கழுத்து

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

சிவனின் பாபத்தை நீக்கிய பெருமான், வண்டுகள் வாழும் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்தில் பள்ளி கொண்டவன், அண்டங்களையும், ஏழு குலமலைகளையும் பிரளயத்தில் உண்டு விழுங்கிய திருக்கழுத்து என்னை உய்யக் கொண்டதே!

செவ்வாய்

கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

சங்கையும் சக்கரத்தையும் தனது திருக்கைகளில் தரித்தவன், நீண்ட மலை போன்ற மேனியுடையவன், துளப மாலைகள் அணிந்தவன், அரவணை மேல் பள்ளி கொண்டவன், அந்த மாயனின் சிவந்த திருவாய், ஐயோ! அதன் அழகை என்னென்று சொல்வேன்! அந்தச் சிவந்த வாய்என் சிந்தையைக் கொள்ளை கொண்டுவிட்டதே!

கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

இரணியனின் உடல் கீண்ட நரசிங்கன், பிரமன் முதலிய தேவர்களுக்கும் அணுகவும் அரியவன், முதலில் தோன்றி முதல் காரணமான ஆதிப்பரம்பொருள், அரங்கமாநகரில் கண்வளரும் அழகிய மணவாளன், அவனுடைய திருமுகத்தில் கறுத்து, விசாலமாகப் பரந்து, ஒளிவீசும், செவ்வரியோடிய, காதளவோடிய கண்கள் என்னை அவனிடம் பித்தேறும்படி செய்துவிட்டனவே!

நீலமேனி

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே

பிரளய காலத்தில் ஆலிலையில் பாலகனாய்ப் பள்ளிகொண்டவன், ஏழு உலகங்களையும் தன் திருவயிற்றிலே அடக்கியவன். திருவரங்கத்தில் அரவணைமேல் பள்ளிகொண்டவன், அவனுடைய இரத்தின ஆரமும், முத்து மாலையும் எல்லைகாண முடியாத அந்த நீலமேனி அழகும், ஐயோ! அதை எப்படிச் சொல்வேன்! என் நெஞ்சம் முழுவதும் நிறைந்து விட்டதே!

அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றைக் காணாவே

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், என் உள்ளம் கவர் கள்வன், அண்டங்களுக்கெல்லாம் தலைவன், திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன், ஆரா அமுதன், அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் காணமாட்டா.

'அரங்கனைக் கண்ட கண்களால் மற்றொன்றைக் காண மாட்டேன்' என்று அரங்கனோடு கலந்து மறைந்தார் திருப்பாணாழ்வார்.

சிறப்புகள்

திருமாலின் அர்ச்சாவதாரத்தின் (கோவிலில் குடிகொண்ட உருவத்தின்) சிறப்பை மட்டுமே முழுமுதலாகத் தன் பாடுபொருளாகக் கொண்டது அமலனாதிபிரான்.

இராமானுச நூற்றந்தாதிக்கான உரையில் மணவாள மாமுனிகள் " அமலனாதிபிரான் என்னும் பிரபந்தம் எம்பெருமானின் இயல்பு, வடிவம், குணம், செல்வங்கள் (லீலாவிபூதி, நித்யவிபூதி) இவற்றை உள்ளபடியே தெரிவிப்பதால் வந்த சீர்மையை உடையது. ரிக் யஜுர், சாம, அதர்வண வேதங்களின் இனிய பொருளைச் சொல்வது" என்று குறிப்பிடுகிறார்.

மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவில் ஐந்தாம் நாள் திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பாசுரங்கள் அரையர் சேவையில் இடம்பெறுகின்றன.

திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் உரை (வியாக்யானம்) எழுதியுள்ளனர். பத்து பாடல்களுக்கு மூவர் உரை எழுதியுள்ளமையாலும் இதன் சிறப்பு புலப்படும். வேதாந்த தேசிகர் தான் வடமொழியில் இயற்றிய, பெரிய பெருமாளின் அழகை முடி முதல் அடி வரை (கேசாதிபாத வர்ணனை)' வர்ணிக்கும் 'பகவத் த்யான சோபான' த்திற்கான முன்னோடி அமலனாதிபிரான் பதிகமே எனக் குறிப்பிடுகிறார்.

உரை

திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானுக்கு, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதாந்த தேசிகர் மூவரும் உரை (வியாக்யானம்) எழுதியுள்ளனர்.

உசாத்துணை


✅Finalised Page