under review

அனந்தாயி கதை

From Tamil Wiki
அனந்தாயி அம்மன்(சந்தனமாரி அம்மன்) கோயில் ஸ்ரீவைகுண்டம்
Anandhaayi1.jpg

அனந்தாயி கதை தென் தமிழகத்தில் வழங்கும் நாட்டார் வாய்மொழிக் கதைகளில் ஒன்று. அனந்தாயி சிறுதெய்வமாக வழிபடப்படுகிறார். இக்கதையின் ஆதார நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ’வெள்ளமாரி அம்மன்’ என்ற பெயரில் அனந்தாயியை வழிபடுகின்றனர். கதைகளின்படி பிள்ளையின் சர்ப்ப சாபத்தின் பொருட்டு கீரிப்பிள்ளையைக் கொன்று அதன் காரணமாக கணவனை இழந்து, சுற்றத்தாரால் துரத்திவிடப்பட்டு மணியக்காரனால் ஏமாற்றப்பட்டவள். ஸ்ரீவைகுண்டத்தில் சிவனை வேண்டி ஆற்றில் குதித்து தெய்வமானவள். இக்கதைக்கு வேறுவடிவங்களும் உண்டு.

அனந்தாயி கதை

(நன்றி அவள் விகடன்)

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள் அனந்தாயி. அவ்வூரில் அறுபது பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவனாக அரிகிருஷ்ணன் இருந்தான். அவன் அனந்தாயியை மணந்து இன்பமுடன் வாழ்ந்தான்.

மணம் முடிந்த பின்னும் இருவருக்கும் பல நாட்களாக குழந்தையில்லாமல் இருந்தது. அதனால் கவலையுற்ற அனந்தாயி சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அனந்தாயியின் தவத்திற்கு இரங்கினார். அனந்தாயி அடுத்த மூன்றாம் மாதத்தில் கர்ப்பமுற்றாள்.

அனந்தாயி பிரசவ வலி கொண்ட போது மருத்துவச்சியை அழைத்து வரச் சொல்லி அரிகிருஷ்ணனிடம் கூறினர். அனந்தாயியின் தோழி, ’வள்ளியூரில் மணிமாலை பிள்ளை என்பவள் இருக்கிறாள். அவள் எல்லா மருத்துவமும் கற்றவள். அவளை அழைத்து வாருங்கள்’ என்றாள்.

அரிகிருஷ்ணன் மருத்துவச்சியை அழைக்க அழகப்பன் என்னும் ஒட்டனை அனுப்பினான். ஒட்டன் வள்ளியூருக்குச் சென்று மருத்துவச்சியை அழைத்து வந்தான். மருத்துவச்சி அனந்தாயியைக் கண்டதும், நான் வரும்போது நல்ல சகுனங்களைக் கண்டேன். நீ அஞ்சாதே , உனக்கு நல்லது நடக்கும்’ என்றாள்.

மருத்துவச்சி தான் சாஸ்திரத்தில் கற்றறிந்த வைத்தியத்தைச் செய்தாள். அனந்தாயியின் உடம்பில் எண்ணெய் தேய்த்தாள். அனந்தாயி 'அடிவயிறு நோகுது' என ஓங்காரமிட்டாள். அனந்தாயி வலி பொறுக்காமல் சத்தமிட்ட சில நொடிகளில் பெண் மகவொன்றை பெற்றாள். அரிகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் எல்லோருக்கும் சர்க்கரை வழங்கினான். மருத்துவச்சிக்கு பரிசுகள் கொடுத்தான். உறவுப் பெண்கள் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டினர்.

அரிகிருஷ்ணன் குழந்தைக்குக் கிருஷ்ணத்தம்மை எனப் பெயரிட்டான். குழந்தையின் ஜாதகம் கணித்த ஜோதிடர், "குழந்தைக்கு சர்ப்பதோஷம் இருக்கிறது. இது லேசில் விடாது. இதைப் போக்க உபாயம் ஒன்றுண்டு. இந்தப்பிள்ளை வளரும் வீட்டில் ஒரு கீரிப்பிள்ளை வளர்த்தால் போதும்" என்றார். அரிகிருஷ்ணன் ஜோதிடர் கேட்டதைக் கொடுத்துவிட்டு கீரியைப் பிடிக்க நண்பர்களுடன் மலைக்குச் சென்றான்.

அனந்தாயி கணவன் பிடித்து வந்த கீரியைக் கவனமுடன் வளர்த்தாள். கீரி கிருஷ்ணத்தம்மையுடன் அவள் வீட்டில் ஒரு குழந்தையாகவே வளர்ந்தது. ஒருநாள் அனந்தாயி கீரிக்குக் கீரை பறிக்கக் காட்டுக்குச் சென்றாள். அந்நேரத்தில் வீட்டில் கிருஷ்ணத்தம்மை மட்டும் தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாகம் வீட்டினுள் நுழைந்தது. நாகம் கிருஷ்ணத்தம்மையை நோக்கிச் சென்றது. அதனைக் கண்ட கீரி நாகத்தின் மேல் பாய்ந்தது. அதனைக் கடித்து கண்டதுண்டமாக்கியது. முகத்தில் ரத்தத்துடன் நாகத்தைக் கொன்ற செய்தியை அனந்தாயியிடம் சொல்ல தோட்டத்திற்கு விரைந்தது.

முகத்தில் ரத்தத்துடன் கீரியை கண்ட அனந்தாயி அதிர்ச்சியுற்றாள். கீரி அவளருகில் சென்று வாட்டத்துடன் நின்றது. அதனைக் கண்டது அனந்தாயியின் கோவம் கூடியது தன் புதல்வியைக் கீரி கொன்றுவிட்டதாக எண்ணினாள். கீரியைத் தன் கையிலிருந்த கத்தியால் வெட்டினாள். வெறியுடன் காலால் மிதித்தாள். கண்டதுண்டம் ஆக்கினாள். பின் வீட்டிற்கு விரைந்தாள்.

அனந்தாயி வீட்டிற்கு வந்தபோது அவளது குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. அருகில் பாம்பு ஒன்று கொல்லப்பட்டு கிடந்தது. அனந்தாயிக்கு நடந்தது விளங்கியது. "பாவி நான் என்ன செய்துவிட்டேன்!" எனப் புலம்பினாள். அலைக்கழிந்தாள். மார்பில் அடித்துக்கொண்டு அழுதாள். விரைந்தோடிச் சென்று தன் தவறை கணவனிடம் சொன்னாள்.

அனந்தாயி, "அன்பரே நான் பெரும்பாவம் செய்துவிட்டேன். என் பாவம் தீர நான் தீர்த்தயாத்திரை செல்லவேண்டும்" என்றாள். அதைக்கேட்ட அரிகிருஷ்ணன், "கண்ணே நீ யாத்திரை செல்லவேண்டாம் ' கணவன் உயிருடன் இருக்கும்போது மனைவி யாத்திரை செல்வது வழக்கமில்லை. உனக்காக நானே யாத்திரை போகிறேன்" என்றான்.

அரிகிருஷ்ணன் அனந்தாயியிடம் சொல்லியபடி தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். அவனும் அவனது தோழர்கள் ஏழு பேரும் சென்றனர். நவரத்தினவிளை கடந்து மாமுனிவர்கள் வாழும் அருவிக்கரையை அடைந்தனர். பாபநாசத் தீர்த்தக்கரை வந்தனர். பரமனைத் தொழுதனர். பாவங்கள் தீர அகத்தியர் அருவியில் தீர்த்தமாடினர்.

"தெரியாமல் செய்த குற்றத்தைத் தெய்வமே பொறுப்பீர். தேறியே தீர்த்தமாடுகிறோம்" என்று சொல்லி தீர்த்தம் ஆடினர். பின் மனம் தெளிந்து கரை ஏறினர். பாபநாசத்தில் இருந்து வீடு திரும்ப உத்தேசித்து காட்டுவழி வீட்டிற்கு நடந்தனர். பாதி வழிக் காட்டில் இருட்டிவிட்டதால் அந்தணர்களைப் பார்த்து, "இனி எப்படி வழி நடப்பது? நடுக்காட்டில் இரவைக் கழித்துவிடுவோம்" என்றான் அரிகிருஷ்ணன். அனைவரும் அதற்கு இசைந்தனர்.

நண்பர்கள் எட்டு பேரும் மடத்தில் தங்கும் போது, காலன் கரும்பாம்பு வடிவம் கொண்டு வந்து அரிகிருஷ்ணனைத் தீண்டினான். அவன் தீண்டிய மறுகணமே அரிகிருஷ்ணன் இறந்தான்.

மறுநாள் உதயநேரத்தில் நண்பர்கள் காலைக்கடன்களை முடிக்க எழுந்தபோது அரிகிருஷ்ணன் அசையாமல் கிடந்தான். அவன் உறங்குவதாக எண்ணி அவனை எழுப்பாமல் அவர்கள் சென்றனர். திரும்பி வந்தபோதும் அவன் எழுந்திருக்காமல் இருப்பதைக்கண்ட நண்பர்களுக்குச் சந்தேகம் வந்தது. அவனைத் தட்டினர். அசைவில்லாமல் கிடந்த அரிகிருஷ்ணன் உடலில் நாடி பார்த்தனர். விஷயம் புரிந்தது. நடுக்காட்டிலிருந்து அவனை ஊருக்குக் கொண்டு செல்லவும் முடியாததால் அந்த இடத்திலேயே அவன் உடலை எரித்தனர்.

நண்பர்கள் அங்கிருந்து வேகமாக ஸ்ரீவைகுண்டம் விரைந்தனர். அனந்தாயியைக் கண்டு நடந்த விஷயத்தைச் சொன்னதும் அவள் விஷயம் கேட்டு உயிர் நடுங்கியவள்போல தரையில் விழுந்தாள். கல்லிலே முட்டினாள். மகளது முகத்தைப் பார்த்துக் கதறினாள். அரிகிருஷ்ணன் இறந்த செய்தியைக் கேட்டு அவளது உறவினர் ஒருவன் வந்து, "அரிகிருஷ்ணன் இறந்தபிறகு நீ இங்கே இருக்காதே. அவனது சொத்து சுகங்களில் உனக்கோ உன் மகளுக்கோ உரிமை கிடையாது. மாடு வயல் காடு எதுவும் உனக்குக் கிடையாது. நீ இந்த வீட்டைவிட்டுப் போய்விடு" என்றான்.

அதைக்கேட்ட அனந்தாயி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள மணியக்காரன் முத்தையனிடம் முறையிட்டாள். அந்த மணியக்காரன் அவளது வழக்கைக் கேட்டான். "எனக்கு ஈஸ்வரன் பெண்மதலை கொடுத்திருக்கிறான். நான் பொய்யான நீதி சொல்லமாட்டேன். கள்ள வழக்கு உரைக்கமாட்டேன். வயல் கரையும் வலிய வீடும் மாடும் அம்பலமும் ஆள் அடிமையும் பரிகரியும் உனக்கே சொந்தமாகவேண்டும்" என வழக்கைத் தீர்த்து வைத்தான்.

அன்று இரவு அனந்தாயியின் சொந்தக்காரன் மணியக்காரனின் வீட்டிற்குச் சென்றான். ஆயிரம் பணம் லஞ்சம் கொடுத்து எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குங்கள் என்றான். மணியக்காரனின் மனம் மாறியது. அடுத்தநாள் காலையில் அனந்தாயியை அழைத்து, "பெண்ணே நான் உன்னிடம் சொன்ன வழக்கு சரியானது அல்ல. உனக்குச் சொத்தில் உரிமை இல்லை. நீ வீட்டைவிட்டு வெளியே போகவேண்டும்" என்றான்.

மணியக்காரன் முத்தையன் திடீரென வழக்கை மாற்றி அவளுக்குப் பாதகமாகச் சொன்னதும் அனந்தாயி பரிதவித்தாள். நெடுக அழுதாள். "பாவி சண்டாளா கண்ணவிந்து போவாய்" எனச் சாபமிட்டாள். "மணியக்காரனே உன மகள் மணிமாலை என்னைப்போல் பரிதவிக்கவேண்டும். சுனை வெள்ளம் ஆறாகப் பாய்ந்து உன் வீட்டை அழிக்கவேணும். உன சீமையில் வெள்ளை எருக்கு முளைக்கவேண்டும். சிறுநெருஞ்சி படரவேண்டும்" எனச் சாபமிட்டு அழுதாள்.

மனமுடைந்த அனந்தாயி வேறு வழியில்லாமல் தன் உயிரைப் போக்க எத்தனித்தாள். காட்டுவழி நடந்தாள். "ஈஸ்வரனே எனக்கு விடுதலை தா" என வேண்டிக்கொண்டு சுனை அருகே சென்று நின்றாள். கணவனை நினைந்து அழுதாள். இந்நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் மணியக்காரன் முத்தையனின் மகளுக்குத் திருமணம் நடந்துகொண்டிருந்தது.

அனந்தாயியின் கண்ணீர் வடிந்து சுனையை நிறைத்தது. அவை பெருகி பெருகி கருமுகிலாய் வானை நிறைத்தது. வானிலிருந்து கருமேகம் நீராய் மண்ணில் பொழிந்தது. அனந்தாயியின் கண்ணீர் ஓயாமல் காட்டை நிறைத்தது. அனந்தாயி சுனையின் முன் நின்று, "மகாதேவா எங்களை அழைத்துக் கொள்" எனக் கூறி இடுப்பிலிருந்து தன் பிள்ளை கிருஷ்ணத்தம்மையுடன் சுனையில் விழுந்தாள்.

இருவரை பலிகொண்ட அந்தச் சுனை பொங்கிப் பெருக்கெடுத்து பெருவெள்ளமாகி காட்டை நிறைத்து ஓடியது. வெள்ளம் காட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வந்தது. மணியக்காரன் முத்தையனின் வீட்டில் நுழைந்தது. அவன் மகள் மணிமாலையையும் மாப்பிள்ளையையும் இழுத்துக்கொண்டு ஓடியது. கலியாணப் பந்தலின் காலைப் பிடுங்கி எறிந்தது. ஊர்க்காரர்களையும் அலைக்கழித்தது. அந்த வெள்ளத்துடன் அனந்தாயியும் அவள் மகளும் மிதந்து வந்தனர். இருவரின் பிணமும் மணியக்காரன் முத்தையன் வீட்டில் ஒதுங்கியது.

ஊர் மக்கள் வெள்ளத்தில் அலைபாய இறந்து மிதந்து வந்த அனந்தாயி முன் சிவன் தோன்றினார், "நீ வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரியம்மன் எனப் பெயர் பெறுவாய். நீ உன்னால் அருள் புரியவும் தண்டிக்கவும் வரங்கள் தரவும் முடியும்" என்றார். வெள்ளம் குறைந்தது ஸ்ரீவைகுண்டத்து மக்கள் அவளை தெய்வமாக்கி வழிபட்டனர். வெள்ளமாரி அம்மன், சந்தனமாரி அம்மன் என வேறு பெயர்களிலும் அனந்தாயி அம்மன் வழிபடப்படுகிறாள்.

கதைக்குறிப்பு

அனந்தாயி கதை இரண்டு வெவ்வேறு தொன்மங்கள் ஓர் உண்மைக்கதையுடன் இணைக்கப்பட்டு உருவானது எனப்படுகிறது. பார்ப்பனப் பெண் கீரிப்பிள்ளையை கொன்ற கதை மணிமேகலையிலும் அதற்கு முன் பல சமண- பௌத்த நூல்களிலும் உள்ளது. ஒரு பெண் தற்கொலை செய்துகொண்ட சுனை பெருகி வெள்ளம் வரும் கதையும் தஞ்சையிலும் பிற ஊர்களிலும் தொன்மமாக உள்ளது. அனந்தாயி கதை உண்மை நிகழ்வாக இருக்கலாம். பழைய கதைகளுடன் இணைத்து தொன்மக்கதையாக ஆக்கப்பட்டது. வில்லுப்பாட்டு வடிவில் பாடப்படுகிறது.

இலக்கியக் குறிப்பு

அனந்தாயி கதையில் தற்கொலைசெய்துகொள்ள கிணற்றில் ஒரு பெண் குதிக்க கிணறுபெருகி வெள்ளம் வரும் நிகழ்வை ஒட்டி லா.ச. ராமாமிர்தம் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்

வழிபாடு

அனந்தாயி ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளமாரியம்மனாக வழிபடபடுகிறாள். வேறு சில இடங்களில் இதே கதையுடன் சந்தனமாரியம்மன் என்றும் வழிபடப்படுகிறாள்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page