அணில் அண்ணா
- அணில் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அணில் (பெயர் பட்டியல்)
To read the article in English: Anil Anna.
அணில் அண்ணா (புவிவேந்தன்) தமிழில் வெளிவந்த அணில், அணில் மாமா, அணில் காமிக்ஸ் இதழ்களின் நிறுவனர், ஆசிரியர். அணில் அண்ணா என்ற பெயரில் அணில் இதழில் கதைகள் எழுதினார். குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.
வாழ்க்கை
அணில் அண்ணா என்ற பெயரில் எழுதிய புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் விநாயகம். ஜோக்கர் மணி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். இளமையில் கதைகள் எழுதத் தொடங்கினார். மளிகைக் கடை நடத்திக்கொண்டிருந்தவர் சினிமாவுக்கு கதை எழுதவேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்குச் சென்றார். அங்கே பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டே சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். அணில் பத்திரிகையை 1968-ல் தொடங்கினார். 1985 வரை சென்னையிலேயே அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரிக்கு வந்து அணில் அச்சகம் என்ற ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கி அதில் அணிலை அச்சிட்டு 1992 வரை நடத்தினார்.
பின்னாளில் புதுச்சேரி உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும், புதுச்சேரி கூட்டுறவு வீடு கட்டும் சங்க இயக்குநராகவும், புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளராகவும் பதவி வகித்த புவிவேந்தன், அ.தி.மு.க.வின் புதுச்சேரி மாநில இணைச் செயலாளராகவும் இருந்தார். மாலைபூமி என்ற நாளிதழையும், ஓம் விநாயக விஜயம் என்ற ஆன்மீக மாத இதழையும் நடத்தினார். அணில் பதிப்பகத்தின் சார்பில் சோதிட நூல்களை பிரசுரித்துள்ளார்.
வீரப் பிரதாபன்
அணில் அண்ணாவின் புகழ்பெற்ற சாகசக் கதாபாத்திரம் வீரப்பிரதாபன். அந்தத்தொடரில் 60 கதைகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. வீரப்பிரதாபன் யார் கண்ணுக்கும் தெரியாத மின்னல் அம்பு (மழை பெய்தால் மட்டும் தெரியும்), பறக்கும் அரக்கியின் ரத்தம் அடங்கிய சிமிழ், மாய மாணிக்க கல் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டவர். கட்டைவிரல் அளவு உள்ள மாயாஜாலக் குள்ளன் அவருடன் இருப்பார். ஒரு காலத்தில் வீரப்பிரதாபன் கதைகள் மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை ஆகின.
இதழ்கள்
- அணில்
- அணில் மாமா
- அணில் காமிக்ஸ்
மறைவு
அணில் அண்ணா புவிவேந்தன் ஜனவரி 14, 2009-ல் புதுச்சேரியில் காலமானார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:47 IST