under review

பூமேடை ராமையா

From Tamil Wiki
Revision as of 10:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பூமேடை ராமையா (நன்றி: settaikkaran)

பூமேடை ராமையா (எஸ். ராமையா) (1924- 1996) காந்தியவாதி, சுதந்திரப்போராட்ட வீரர், சமூகப் போராளி, பேச்சாளர், இதழாளர். வள்ளலாரின் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். நாகர்கோயிலின் மனசாட்சி எனுமளவு அங்குள்ள மக்களின் அரசியல், சமூக நன்மைக்காக இறக்கும் வரை தனிமனிதப் போராட்டத்தை நிகழ்த்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பூமேடை ராமையா 1924-ல் குமரிமாவட்டத்தில் கொட்டாரம் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்றார். வள்ளலாரின் ஜோதி வழிபாட்டைப் பின்பற்றினார். வேறு மதநம்பிக்கைகள் இருந்ததில்லை. 'பூமேடை' என்பது அவர் தனக்குச் சூட்டிக்கொண்ட புனைபெயர். நாகர்கோயிலிலும் கொட்டாரத்திலும் பூர்வீகமாக சொத்துக்கள் வைத்திருந்த ராமையா பிள்ளை அவற்றை அரசியல் செயல்பாடுகளிலும், சமூகப் பணிகளிலும் இழந்தார்.

சுதந்திரப் போராட்டம்

பூமேடை ராமையா காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். சிறுவயதிலேயே இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். இருமுறை சிறைக்குச் சென்றார்.

அரசியல் வாழ்க்கை

பூமேடை ராமையா நகரசபைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்திலும் சுயேச்சையாகப் போட்டியிடுவார். அவரது சின்னம் ’யானை’. அவருக்காக யாராவது வைப்புத்தொகை(டெபாசிட்) கட்ட உதவுவார்கள். அவரது தேர்தல் பிரச்சாரம் வினோதமாக இருக்கும். தனது நிரந்தர வாகனமான சைக்கிளில் உட்கார்ந்து கொள்வார். தனது வாயில் ஒரு விசிலை ஊதிக்கொண்டே சைக்கிளை நாகர்கோவிலின் சந்து பொந்துகளெல்லாம் போவார்; ஒரு கையில் பொம்மை யானை ஒன்றை வைத்துக்கொண்டு, ஒரு கையால் சைக்கிளை ஓட்டிக்கொண்டே தெருவின் இரண்டு பக்கங்களிலும் தனது சின்னத்தை மாற்றி மாற்றிக் காட்டிக்கொண்டே போவார். எந்தத் தேர்தலிலும் பூமேடை வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றதில்லை.

சமூகப்பணி

பூமேடை ராமையா கட்சி அரசியலிலிருந்து விலகி இருந்தார். தனிமனிதராக சமூகப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றார். குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்திலும் பங்கேற்றார். தொடர்ச்சியாக நாகர்கோயிலில் அதிகார வர்க்கத்தின் ஊழல், பொறுப்பின்மை, கட்சி அரசியலின் கீழ்மைகள் ஆகியவற்றை பிரச்சராம் செய்துகொண்டே இருந்தார். அதற்கு அவர் கையாண்ட வழிமுறை தனிநபர் பொதுக்கூட்டம்.

தனிநபர் பொதுக்கூட்டம்

அவரே சொந்த செலவில் சுவரொட்டிகள் அச்சிட்டு நகரெங்கும் ஒட்டுவார். அவரே தன் பழைய சைக்கிளில் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி மேஜை, சிறிய ஒலிப்பெருக்கி கருவி , எரிவாயுவிளக்கு ஆகியவற்றுடன் நாகர்கோயிலில் உள்ள நகர்மன்ற திடல், அசிசி வளாக மைதானம், வஞ்சியாதித்தன் புதுத்தெரு, வடிவீஸ்வரம் தெரு போன்ற இடங்களுக்கு மாலை ஆறு மணியளவில் வருவார். தோராயமாக ஒருமணிநேரம் பேசுவார்.

பூமேடை ராமையாவின் பேச்சு நக்கலும் கிண்டலும் கோபமும் கலந்ததாக இருக்கும். திருக்குறளில் இருந்தும், வள்ளலாரின் படைப்புகளில் இருந்தும் நிறைய மேற்கோள்கள் காட்டுவார். தனிப்பட்டமுறையில் எவரையும் தாக்க மாட்டார். ஆபாசமோ விரசமோ இருக்காது. அவருக்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்தது. சுமார் இருநூறு பேர் வரை அவர் கூட்டங்களுக்கு வருவதுண்டு. நாற்பது ஆண்டுகள் வருடத்திற்கு நூறு கூட்டம் வீதம் போட்டிருக்கிறார்.

பாடல் நடை

ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப் பாருங்க
நாளை அடையாளம் நல்லாத் தெரியணும்
ஆளைப் பாருங்க..ஐயா..ஆளைப்பாருங்க!
டெல்லியிலே குதிரை மண்ணை அள்ளித் திங்குது!

இதழியல்

பூமேடை ராமையா தன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய ‘மெய்முரசு’ என்ற மாத இதழை நடத்தினார். இந்த இதழில் ராமையா பல அரசியல், சமூகக் கட்டுரைகள் எழுதினார்.

மதிப்பீடு

பூமேடை ராமையா பொதுவாக அரசியல்வாதிகளால் ஒரு வகையான கோமாளியாகவே சித்தரிக்கப்பட்டார். காந்தி தொப்பியுடன் கதர் அணிந்து அவர் நடமாடுவதே கிண்டலுக்குரியதாக காட்டப்பட்டது. அவருக்கு எவருமே பொறுப்பாக பதில் அளித்ததில்லை. அவர் அதற்காக கவலைப்பட்டதும் இல்லை. அவர் புறக்கணிக்கப்பட்டாலும் அவரது கூட்டங்களால் பல ஊழல்கள் வெளியே கொண்டுவரப்பட்டன. நாகர்கோயில் கடை ஊழியர்கள் சங்கம் அமைப்பதற்கும், நாகர்கோயில் துப்புரவு ஊழியர்களின் சங்கச் செயல்பாடுகளுக்கும் அவர் பெரிதும் காரணமாக அமைந்தார். அவர் நாகர்கோயிலின் மனசாட்சி என்ற எண்ணம் அவர் மறைந்த பின்னரே உருவாகியது. பூமேடை எவராலும் கௌரவிக்கப்படாமல், எவராலும் மதிக்கவும் படாமல் மறைந்தார்.

மறைவு

பூமேடை ராமையா 1996-ல் காலமானார்.

புனைவு

பூமேடை ராமையாவைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் உண்மை மனிதர்கள் பற்றிய புனைவுகள் எழுதிய 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் 'கோட்டி' என்ற சிறுகதையாக எழுதினார்.

இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page