under review

திவாகர நிகண்டு

From Tamil Wiki
Revision as of 19:12, 6 January 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Divakara Nigandu. ‎

சேந்தன் திவாகரம்

தமிழில் தோன்றிய முதல் நிகண்டு நூலாகக் கருதப்படுவது ‘திவாகரம்’ என்னும் திவாகர நிகண்டு. இது திவாகர முனிவரால் தொகுக்கப்பட்டது. இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு. எட்டாம் நூற்றாண்டு என்ற கருத்தும் உண்டு. இந்த நூலில் தொல்காப்பியர் காலம்முதல் ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு வரை உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

பதிப்பு, வெளியீடு

இதை முதன் முதலில், 1839-ல், பழைய ஏட்டுச்‌ சுவடிகளிலிருந்து பதிப்பித்தவர் தாண்டவராய முதலியார். அவர் முதல் பத்து தொகுதிகளை மட்டுமே பதிப்பித்தார். 1840-ல், எஞ்சிய இரண்டு தொகுதிகளையும்‌ சேர்த்து இராமசாமிப் பிள்ளை என்பவர் முழு நூலாகப் பதிப்பித்தார். அதன்‌ பின்னர்‌ பலர்‌ திவாகரத்தை முழுமையாகவும்‌ சிறு சிறு பிரிவுகளாகவும்‌ பதிப்பித்துள்ளனர்‌. ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ ஆராய்ச்சிப் பதிப்பாக இந்த நூலை வெளியிட்டுள்ளது. 2004-ல், ‘சாந்தி சாதனா’ பதிப்பகம், ஆய்வுப் பதிப்பாக, திவாகரம், பிங்கலம் சூடாமணி மூன்றையும் தொகுத்து ஒரே பதிப்பாக வெளியிட்டுள்ளது. பூவிருந்தவல்லி பார்த்தசாரதி நாயகர், திருமழிசை முத்துசாமி முதலியார் (1886), கொ. லோகநாத முதலியார் (1917) முதலியோரும் திவாகரத்தைப் பதிப்பித்துள்ளனர்.

ஆசிரியர் குறிப்பு

இந்த நூலுக்கு ‘சேந்தன் திவாகரம்’ என்ற பெயரும் உண்டு. இந்த நூலை இயற்றியவர் திவாகரர் என்னும் ‘திவாகர முனிவர்’ என்றும், அதற்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்தவர் சேந்தனார் என்றும், அதனாலேயே இந்நூலுக்கு ‘சேந்தன் திவாகரம்’ என்ற பெயர் வந்தது என்றும் குறிப்புகள் உள்ளன. இவர் சமண சமயம் சேர்ந்தவர் என்றும், விநாயகர் வணக்கம் கூறுவதால் சைவ சமயத்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

உள்ளடக்கம்

’ஆதி திவாகரம்’ என்றும் இந்த நூல் அழைக்கப்படுகிறது. திவாகரம் 2518 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. இந்நூலில் 9500 சொற்களும் 384 ஒருபொருட்பன்மொழிச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. பாட பேதங்களால் வேறு வேறு பதிப்புகளில் இந்த எண்ணிக்கையில் மாற்றங்களும் காணப்படுகின்றன. அ.சதாசிவம்பிள்ளை இந்நூலில் இரண்டாயிரத்து இருநூற்று எண்பத்தி ஆறு சூத்திரங்கள் உள்ளன என்றார்.

பிரிவுகள் (12)

  • தெய்வப் பெயர்த் தொகுதி
  • மக்கட் பெயர்த் தொகுதி
  • விலங்கின் பெயர்த் தொகுதி
  • மரப் பெயர்த் தொகுதி
  • இடப் பெயர்த் தொகுதி
  • பல்பொருட் பெயர்த் தொகுதி
  • செயற்கைவடிவப் பெயர்த் தொகுதி
  • பண்புபற்றிய பெயர்த் தொகுதி
  • செயல்பற்றிய பெயர்த் தொகுதி
  • ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
  • ஒருசொற்பல்பொருட் பெயர்த் தொகுதி
  • பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி

உசாத்துணை


✅Finalised Page