under review

சித்திர மடல்

From Tamil Wiki
Revision as of 11:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சித்திர மடல் (பொ.யு. 15-ம் நூற்றாண்டு) வளமடல் என்னும் வகைமையைச் சார்ந்த சிற்றிலக்கியம். தெய்வங்கள் பெருமான் என்னும் மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.

ஆசிரியர்

சித்திர மடலை இயற்றியவர் காளமேகப் புலவர். இயற்பெயர் வரதன். ஆசுகவி. சிலேடைப் பாடல்கள் பல புனைந்தவர். திருமலைராயன் என்ற அரசனின் அவைப்புலவராக இருந்தார்.

நூல் அமைப்பு

தலைவியை அடைய முடியாத நிலையில் கடைசி முயற்சியாக மடலேறும் மரபு சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. மடலேறும் தலைவன் தலைவியின் சித்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு பனைமடலால் செய்த குதிரைமேல் ஊர்ந்து செல்லும் வழக்கம் இருந்தது. இந்நூலில் தலைவியின் அடி முதல் முடி வரை அழகைக் கூறி அதை சித்திர மடலாக வரைவேன் என்று தலைவன் கூறும் பகுதியே முக்கியத்துவம் பெறுகிறது. சித்திரமடல் வரைவதே சிறப்புச் செய்கையாக அமைவதால் இந்நூல் 'சித்திர மடல்' னப் பெயர் பெற்றது. எருக்கு, எலும்பு முதலியவற்றால் சிவபெருமானைப்போல் மாலை அணிவது அடுத்த செய்கையாக அமைகிறது. போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனின் எலும்பை மாலையாக அணிவது சிறப்பாகக் கருதப்பட்டது.

சித்திர மடல் சோழநாட்டின் பாவை என்னும் ஊரில் வாழ்ந்த தெய்வங்கள் பெருமான் என்ற வள்ளலைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.

சீரார் தென் பாவைத் தெய்வங்கள் பெரு மான்மீதில்
பாராய்ந்து சித்ரமடல் பாடவே-ஏரான
கொம்பன் உமையாள் குமாரன் உடன்பிறந்த
கம்பமத யானைமுகன் காப்பு

என்ற காப்புசெய்யுள் மூலம் இதை அறியலாம்.

சித்திரமடல் 174 கண்ணிப்பாக்களால் ஆனது, தலைவியின் அழகையும், தன் பிரிவாற்றாமையையும் கூறி, அவள் உருவை சித்திரமாக எழுதி, எலும்பு மாலையணிந்து அவள் கிடைக்கும்வரை மடலூர்வேன் அனத் தலைவன் கூறுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

பாடல் நடை

சித்திரமடல் உண்டாக்கல்

துப்பாலை வண்ன இதழ் துப்பாளை சண்பகப்பூ
வைப்பாளை மைக்குழலில் வைப்பாளைத் -தப்பாமல் (163)
கேவித்த பாதாதி கேசத்தையும் எழுதி
ஊவிக்கும் சித்திரமடல் உண்டாக்கி (164)

மடலூர்வேன்

பின்னுமுன்னும் நாகம் பிடித்துக் கடித்திடினும்
அன்னிலையில் சற்றும் அசையாமல்-சென்னி
தியங்காமல், தூங்காமல் செவ்வி நலியாமல்
மயங்காமல் ஊர்வேன் மடல்

உசாத்துணை

காளமேகப்புலவரின் சித்திர மடல், தமிழ் இணைய கலைக் களஞ்சியம்


✅Finalised Page