under review

இளம்போதியார்

From Tamil Wiki
Revision as of 20:09, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இளம்போதியார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இளம்போதியாரரின் இயற்பெயர் போதியார். இவரின் இளமை காரணமாக இவர் இளம்போதியார் என வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் இந்தப் பெயரின் காரணமாக இவர் புத்த மதத்தை சார்ந்தவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இளம்போதியார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 72- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. காத்திருக்கும் தலைவனுக்கு தொடர்புக்கு வழியில்லை என்று உணர்த்தும் வகையில் தோழி தலைவியிடம் கூறுவதாக இந்தப்பாடல் அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

இப்பாடல் தோழி கூற்றாக அறியப்பட்டிருந்தாலும், நச்சினார்க்கினியர், 'உயிராக்காலத்து உயிர்த்தலும்'(தொல்-கள- 20) என்னும் விதிப்படி "தலைவி, தலைவனொடு தன்திறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனதாற்றாமையான் தன்னோடும் அவனோடும் பட்டன சிலமாற்றம் தோழிக்குக் கூறியது" எனத் தலைவி கூற்றாகக் கொண்டார்.

இளம்பூரணரும் தலைவி கூற்றாகவே கொண்டு இதனை "பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற இயல்பின் கண்ணும்" (தொல்-கள- 20) என 'அச்சத்தின் அகறல்' என்னும் துறைக்கு உதாரணமாகக் காட்டினார்.

பாடல் நடை

நற்றிணை 72

நெய்தல் திணை தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய் சொல்லியது.

பேணுப பேணார் பெரியோர்' என்பது

நாணு தக்கன்று அது காணுங்காலை;

உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்

நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது

அழிதக்கன்றால் தானே; கொண்கன்,

யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற்

பிரிதல் சூழான்மன்னே; இனியே

கானல் ஆயம் அறியினும், 'ஆனாது,

அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால்,

'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா

அஞ்சுவல்- தோழி!- என் நெஞ்சத்தானே!

(தோழி கூற்று: பெரியோர், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவர் என்பது நம் தலைவன் நடந்துகொள்வதைப் பார்த்தால் நாணவேண்டிய ஒன்றாக உள்ளது. உனக்கும் எனக்கும் உயிர் ஒன்று போன்ற நட்பு. அப்படி இருக்கும்போத உன்னிடம் நான் மறைப்பது எதற்காக? அவன் நடந்துகொள்வது பெரிதும் வருந்தத் தக்க செயல். நானோ தாய்க்குத் தெரிந்துவிடுமே என்று அஞ்சிக்கொண்டிருக்கிறேன். அவனோ என்னை விட்டுப் பிரியாமல் உன்னைத் தனக்குத் தரும்படி வேண்டிக் கொண்டிருக்கிறான். நம் கானல் விளையாட்டு நம் ஆயத் தோழிமாருக்குத் தெரிந்திருப்பது போலப் பேசுகிறான். இனி, அவன் நட்பில் உள்ள ஈரம் காய்ந்து உலர வேண்டியதுதான். இதனை எண்ணி என் நெஞ்சு படபடக்கிறது. )

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நற்றிணை 72 , தமிழ்த் துளி இணையதளம்

நற்றிணை 72 , தமிழ் சுரங்கம் இணையதளம்


✅Finalised Page