first review completed

வை.மு.கோதைநாயகி அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 148: Line 148:
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]


{{Standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:34, 19 April 2022

வை.மு.கோதைநாயகி அம்மாள்

வை. மு. கோதைநாயகி அம்மாள் (டிசம்பர் 1, 1901 - பிப்ரவரி 20, 1960) தமிழில் நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதழாளர், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். பெண்களின் விடுதலைக்காகப் போராடிய தொடக்ககால பெண்ணியவாதி. 115 நாவல்களை தொடர்கதைகளாக எழுதினார். தன் கதைகளை வெளியிட ஜகன்மோகினி என்னும் இதழை நடத்தினார். பெண்கள் எழுதுவதற்காகவே நந்தவனம் என்னும் இதழை நடத்தினார்.

பிறப்பு, கல்வி

கோதைநாயகி டிசம்பர் 1, 1901-ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த காவல்துறை அதிகாரியான என்.எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். பிறந்த ஒரு வயதிலேயே தன் தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சிற்ற்றப்பா ஸ்ரீனிவாசாச்சாரியாரும் அவர் மனைவியான கனகம்மாளும் பாட்டி வேதவல்லி அம்மையாரும் அவரை வளர்த்தனர். பின்னாளில் வை.மு.கோதைநாயகி அம்மாள் தன் பாட்டிக்கு நன்றி சொல்லி 1944-ல் வெளிவந்த அமுதமொழி என்னும் நாவலை அவருக்குச் சமர்ப்பணம் செய்தார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் முறைசார் கல்வி கற்கவில்லை. தோழி பட்டம்மாள் அவருக்கு தமிழ் கற்க உதவினார். சிறிய தகப்பனார், திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். திருமணம் ஆனபின் தன் மாமியாரிடம் தெலுங்கு மொழியைக் கற்றார். கணவரிடமும் மாமனாரிடமும் தமிழ் ஆங்கிலம் இருமொழிகளையும் கற்றார்.

வை.மு.கோதைநாயகி குடும்பம்

தனிவாழ்க்கை

கோதைநாயகி, கணவர்

வை.மு.கோதைநாயகி அம்மாளை 1907-ல் ,அவருடைய ஐந்துவயதில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த வை.மு. சீனிவாச அய்யங்காரின் மூன்றாவது மகனான ஒன்பது வயது நிரம்பிய வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். கோதைநாயகியின் புகுந்த வீட்டினர் தீவிர வைணவ மரபின் வழிவந்தவர்கள். ‘வைத்தமாநிதி முடும்பை குடும்பம்’ என்ற பெயர் பெற்ற அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. என்ற எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டனர். வைத்தமாநிதி என்பது அக்குடும்பத்தினரின் குலதெய்வமான திருக்கோளூர் பெருமாளின் பெயர்.. முடும்பை என்பது பழைய விஜயநகர அரசில், இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ளஅவர்களின் பூர்வீக ஊர். கோதைநாயகிக்கும் திருமணத்துக்குப் பின்னர் ‘வை.மு.’ என்ற குடும்பப்பெயரை இணைத்து வை.மு. கோதைநாயகி என அழைத்தனர். வை.மு.கோதைநாயகி அம்மாள் தன் இந்திரமோகனா நாடகத்தை தந்தைக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அந்நாடகம் வெளிவருவதற்கு முன்னரே தந்தை மறைந்தார்.

வை.மு.கோதைநாயகி அம்மாளின் இலக்கிய வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் அவருடைய கணவரும் மாமமாரும் மாமியாரும் பெரிதும் உதவினர். வை.மு.கோதைநாயகிக்கு ஒரே மகன் ஸ்ரீனிவாசன். அவரும் கதைகள் எழுதிவந்தார். அவர் 1956-ல் வை.மு.கோதைநாயகி உயிருடன் இருக்கையிலேயே மறைந்தார்.

ஜகன்மோகினி

இலக்கியவாழ்க்கை

தமிழில் தன் தோழி பட்டம்மாளிடம் கதைகள் சொல்லிவந்தார். அவர் ஒரு நாடகத்தைச் சொல்ல அவர் தோழி பட்டம்மாள் எழுதினார். இந்திரமோகனா என்ற அந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் வழியாக அவர் மாமனார் நூலாக வெளியிட்டார். அந்நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. சி.ஆர். நமச்சிவாய முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற முன்னோடி எழுத்தாளர்களும், பண்டிதை விசாலாட்சி அம்மாள், வி.பாலாம்பாள் போன்ற முன்னோடிப் பெண் எழுத்தாளர்களும் வரவேற்று பாராட்டினர். பலமுறை அது மேடையேறியது. அந்த ஊக்கத்தால் அவர் தொடர்ந்து அருணோதயம், வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்களை எழுதினார்.அவை புகழ்பெற்று மேடைகளில் தொடர்ந்து நிகழ்ந்தன.

நாவல்களும் சிறுகதைகளும் அக்காலத்தில்தான் தமிழில் வரத்தொடங்கியிருந்தன. கோதைநாயகி அம்மாள் வைதேகி என்ற முதல் நாவலை 1925-ல் எழுதினார். இதை அக்கால புகழ்பெற்ற எழுத்தாளர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் திருத்தம் செய்து வெளியிட முன்வந்தார். வைதேகி அவர் நடத்திவந்த மனோரஞ்சனி இதழில் வெளியிட்டார். அதை திருத்த அவர் ஒரு நாவலுக்கு ஐம்பது ரூபாய் கேட்டதாகவும், நாவலை தானே எழுதியதாகச் சொல்லிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. வைதேகி மனோரஞ்சினி இதழில் பாதியில் நிறுத்தப்படவே வை.மு. கோதைநாயகி அம்மாள் தானே ஜகன்மோகினி என்னும் இதழை தொடங்கி அதில் வைதேகி நாவலை வெளியிட்டார்[1]. தொடர்ந்து அவ்வாண்டே பத்மசுந்தரம் என்னும் நாவலையும் எழுதினார். அவர் தான் நடத்திய இதழ்களில் மட்டுமே எழுதினார். 35 ஆண்டுக்காலத்தில் 115 நாவல்களை எழுதியிருக்கிறார். பத்மசுந்தரம் நாவல் 1930-லேயே மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

இதழியல்

அக்காலத்தில் நாவல்கள் அனைத்துமே தொடர்கதையாக வெளியிடப்பட்டன. அவற்றை வெளியிட ஆசிரியர்களே இதழ்களையும் நடத்திவந்தனர். வை.மு.கோதைநாயகி அம்மாள் வெளிவராமல் நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை விலை கொடுத்து வாங்கி 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளியிடத் தொடங்கினார். அவ்விதழ் கோதைநாயகி அம்மாள் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு வரை 35 ஆண்டுகள் வெளிவந்தது. ஜகன்மோகினி இதழில் வேறு எழுத்தாளர்களின் படைப்புக்களும் வெளியிடப்பட்டன. குறிப்பாக வை.மு.கோதைநாயகி அம்மாளை பார்த்து அதேபோல எழுதவந்த குமுதினி, குகப்பிரியை போன்ற பெண் எழுத்தாளர்கள் அதில் எழுதினர். 1937-ல் ஜகன்மோகினிக்காக அச்சகம் ஒன்றும் நடத்தப்பட்டது ஜகன்மோகினி பதிப்பகம் வை.மு.கோதைநாயகி அம்மாளின் படைப்புகளுடன் வேறு நூல்களையும் வெளியிட்டது. ஜகன்மோகினி இதழுடன் முழுக்க முழுக்க பெண்களே எழுதும் பெண்கள் இதழான நந்தவனம் வை.மு.கோதைநாயகி அம்மாளால் வெளியிடப்பட்டது.இரண்டாவது உலகப்போரின் போது வை.மு. கோதைநாயகி அம்மாள் செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோயில் என்னும் ஊரில் குடியேறினார். நாடு விடுதலை அடைந்தவுடன் மீண்டும் சென்னைக்கே ஜகன்மோகினி அலுவலகத்தையும் அச்சகத்தையும் கொண்டுவந்தார்.

அஞ்சலிச் செய்தி

அரசியல் வாழ்க்கை

வை.மு.கோதைநாயகி அம்மாள் தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். வைத்தமாநிதி குடும்பம் தியோசஃபிகல் சொசைட்டிக்கும் அன்னி பெசன்ட் அம்மையாருக்கும் நெருக்கமானது. வை.மு.கோதைநாயகி அம்மாள் தியோசஃபிகல் சொசைட்டியின் நிகழ்ச்சிகளிலும் அன்னிபெசண்டின் ஹோம்ரூல் இயக்கத்திலும் ஈடுபட்டார். அன்னி பெசண்ட் மூலமாகத் சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு ஏற்பட்டது. அம்புஜம் அம்மாளின் தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925-ஆம் ஆண்டு காந்தி வருகை தந்த போது வை.மு.கோதை நாயகி அம்மாள் காந்தியைச் சந்தித்தார். அதன்பின் உறுதியான காந்தியவாதியாக மாறி கதர் மட்டுமே அணிந்தார், நகைகள் அணிவதை தவிர்த்தார். அம்புஜம் அம்மையார், ருக்மணி இலட்சுமிபதி, வசுமதி இராமசாமி ஆகியவர்களுடன் இணைந்து கிராமநிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார்.

நந்தவனம்

1931-ல் காந்தி கள்ளுக்கடை மறியலை அறிவித்தபோது திருவல்லிக்கேணியில் (தற்போதைய பெசண்ட் ரோட்டில் திருமலாச்சாரிபள்ளி இருக்குமிடத்தின் அருகே) இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை வை.மு.கோதைநாயகி அம்மையாருக்கு விதிக்கபட்டது.

1932-ல் ‘லோதியன் கமிஷனுக்கு’ எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டும் அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். சிறையில் இருந்தபோது ‘சோதனையின் கொடுமை’, ‘உத்தமசீலன்’ ஆகிய நாவல்களை எழுதினார். வை.மு.கோதைநாயகி அம்மாள் சிறையில் இருந்த போது ஜகன்மோகினி இதழை அவர் கணவர் வை.மு.பார்த்த சாரதி தொடர்ந்து நடத்தினார். வை.மு.கோதைநாயகி அம்மாள் சத்தியமூர்த்தி, ராஜாஜி இருவருக்கும் அணுக்கமானவர். காங்கிரஸ் இயக்கத்தின் முக்கியமான மேடைப்பேச்சாளராகத் திகழந்தார்.

வை.மு.கோதைநாயகி அம்மாள் நினைவுநூல்

இசைவாழ்க்கை

வை.மு.கோதைநாயகி அம்மாள் கர்நாடக இசைப்பயிற்சி பெற்றவர். மேடைகளில் தேசபக்தி பாடல்களை பாடுவார். ஜகன்மோகினி இதழில் இசை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். டி.கே.பட்டம்மாள் போன்ற பிராமணப்பெண்கள் மேடைகளில் பாட வந்தபோது உருவான எதிர்ப்புகளை அடக்க தீவிரமாக எழுதினார். இசைப்பாடல்கள் (கீர்த்தனைகள்) எழுதியிருக்கிறார். அப்பாடல்கள் 'இசை மார்க்கம்' என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. (1930-ல் வை.மு.கோதைநாயகி அம்மாளின் வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார்). அதிலுள்ள அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள பாடல்கள் கர்நாடக இசைப் பாடகர்களால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன. சி.சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோதைநாயகி அம்மாள் கேட்டுக்கொண்டதற்காகவே ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டை எழுதினார் என்றும், வை.மு.கோதைநாயகி கேட்டுக்கொண்டதற்கேற்ப டி. கே. பட்டம்மாள் அந்தப் பாட்டை மேடைகளில் பாடி புகழ்பெறச்செய்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

திரைப்படத்துறை

வை.மு.கோதைநாயகி அம்மையார் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். 'அதிஷ்டம்' என்ற திரைப்படத்தில் தான் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் அரங்கில் திரையிடப்பட்டிருப்பதை அறிந்து அப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய அனுப்பினார். கோதைநாயகி அம்மாளின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவரது 'அனாதைப் பெண்' என்ற நாவலை ஜுபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. 'தயாநிதி' என்ற நாவல் சித்தி என்ற பெயரில் வெளிவந்தது ராஜமோகன் (1937), தியாகக்கொடி, நளினசேகரன், (1966) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. ‘சித்தி’ படத்துக்கான சிறந்த 'கதையாசிரியர் விருது' கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது. ஏ.கே.செட்டியார் இயக்கிய காந்தி ஆவணப்படத்தில் காட்சிகளை விளக்கி குரல்கொடுத்திருக்கிறார் கோதைநாயகி அம்மாள்.

கோதைநாயகி அம்மாள் பங்கெடுத்த படங்கள்

  • சித்தி (1937)
  • அனாதைப்பெண் (1939)
  • ராஜ்மோகன்
  • தியாகக்கொடி
  • நளினசேகரன் (1966)
வை.மு.கோதைநாயகி நாவல்

சமூகப்பணிகள்

வை.மு.கோதைநாயகி அம்மையார் மரமுமுறையில் பயின்ற மருத்துவத் தாதியாக பணியாற்றினார். குறிப்பாக குழந்தைப்பேறுக்கு உதவுவதை தொடர்ந்து செய்துவந்தார்.

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் காந்தி மறைந்த பின்பு 13-ஆம் நாள் அவரது சாம்பல் நாடெங்கும் கடலில் கரைக்கப்பட்டது. சென்னையில் நடந்த சாம்பல் கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வை.மு.கோதைநாயகி அமமையார் காந்தியின் நினைவாக மார்ச் மாதம் 2-ஆம் நாளன்று மகாத்மாஜி சேவா சங்கம் என்ற சங்கத்தைத் திருவல்லிக்கேணியில் தொடங்கினார். அதன் வழியாக சமூகசேவை செய்தார். வை.மு.கோதைநாயகி அம்மையாரின் தேசிய சேவையைப் பாராட்டிக் காங்கிரஸ் அரசாங்கம் அவருக்குச் செங்கல்பட்டுக்கு அருகே 3 ஏக்கர் நிலமும் மற்றொரு இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வழங்கிச் சிறப்பித்தது. அந்த நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாவேயிடம் வை.மு.கோதைநாயகி அம்மையார் வழங்கிவிட்டார்.

மறைவு

1956-ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் இறந்தார். அதனால் உளச்சோர்வுற்று உடல் நலிவுற்று பொதுப்பணிகளில் இருந்து ஒதுங்கி வாழ்ந்தார். காசநோய் கண்டு தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் பிப்ரவரி 20, 1960 அன்று மருத்துவமனையிலேயே இறந்தார்.

வை.மு.கோதைநாயகி நாவல்

விவாதங்கள்

கோதைநாயகி எழுதிய வைதேகி என்ற நாவலை வடுவூர் துரைசாமி ஐயங்கார் மனோரஞ்சினி இதழில் வெளியிட்டார். அது புகழ்பெறவே பொறாமை கொண்டு அதை தான் எழுதுவதாகச் சொல்லிக்கொண்டார். அதை வை.மு.கோதைநாயகி அம்மாள் எதிர்க்கவே நாவலை பாதியில் நிறுத்தி கைப்பிரதியையும் அழித்தார். வை.மு.கோதைநாயகி அம்மாள் அடம்பிடித்து மாமனாரை ஜகன்மோகினி இதழை வாங்கச் செய்து அதில் வைதேகியை வெளியிட்டு முழுமை செய்தார். இந்த நிகழ்வு வை.மு.கோதைநாயகி அம்மாள் பற்றி எழுதப்பட்ட பல குறிப்புகளில் காணப்படுகிறது.

நினைவுநூல்கள், வாழ்க்கை வரலாறுகள்

வை.மு.கோதைநாயகி அம்மாள் பற்றிய வாழ்க்கை வரலாற்றை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக இரா.பிரேமா எழுதியிருக்கிறார்

மதிப்பீடு

இலக்கிய அளவீடுகளின்படி வை.மு.கோதைநாயகி அம்மாளின் நாவல்கள் எவையும் பொருட்படுத்தப்படுவதில்லை. அவை பொதுவாசிப்புக்குரிய எளிமையான மர்மநாவல்கள், மிகையுணர்ச்சி கொண்ட குடும்ப நாவல்கள். அன்று உருவாகிவிட்டிருந்த நவீன இலக்கியம் சார்ந்த அறிமுகம் வை.மு.கோதைநாயகி அம்மாளுக்கு இருக்கவில்லை. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார் ஆகியோர் தமிழில் பொதுவாசிப்புக்குரிய வணிகக்கேளிக்கை எழுத்தின் முன்னோடிகள். அவர்களில் ஒருவரே வை.மு.கோதைநாயகி அம்மாள்.

ஆனால் தமிழில் பெண்விடுதலை கருத்துக்களை முன்வைத்தவர், பொதுவெளியில் பெண்களின் இடத்தை உருவாக்க பெருமுயற்சி எடுத்தவர் என்னும் வகையில் வை.மு.கோதைநாயகி அம்மாள் முன்னோடி. பெண் என்னும் நிலையிலேயே அரசியல், ஆன்மிகம் என அத்தனை தளங்களிலும் அழுத்தமான கருத்துக்களை துணிவுடன் முன்வைத்தவர். விடுதலைப்போரின் முன்னணி ஆளுமைகளில் ஒருவர் என்னும் வகையிலும் அவருடைய இடம் முக்கியமானது.

நூல்கள்

ஜகன்மோகினி இதழில் வெளிவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளின் சில படைப்புகள்

  1. வைதேகி (1925 - 4 பதிப்புகள்)
  2. பத்மசுந்தரன் (1926 - 3 பதிப்புகள்)
  3. சண்பகவிஜயம் (1927 - 2 பதிப்புகள்)
  4. ராதாமணி (1927 - 4 பதிப்புகள்)
  5. கௌரிமுகுந்தன் (1928 - 2 பதிப்புகள்)
  6. நவநீதகிருஷ்ணன் (1928 - 2 பதிப்புகள்)
  7. கோபாலரத்னம் (1929)
  8. சியாமளநாதன் (1930 - 2 பதிப்புகள்)
  9. சுகந்த புஷ்பம் (1930)
  10. ருக்மணிகாந்தன் (1930)
  11. வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)
  12. நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930)
  13. உத்தமசீலன் (1932 - 3 பதிப்புகள்)
  14. கதம்பமாலை (1932 - 2 பதிப்புகள்)
  15. பரிமள கேசவன் (1932 - 2 பதிப்புகள்)
  16. மூன்று வைரங்கள் (1932 -2 பதிப்புகள்)
  17. காதலின் கனி (1933 - 2 பதிப்புகள்)
  18. சோதனையின் கொடுமை (1933 - 2 பதிப்புகள்)
  19. படாடோபத்தின் பரிபவம் (1933 -2 பதிப்புகள் )
  20. சாருலோசனா (1933 - 3 பதிப்புகள்)
  21. தியாகக்கொடி (1934 - 2 பதிப்புகள்)
  22. புத்தியே புதையல் (1934 - 2 பதிப்புகள்)
  23. ஜயசஞ்சீவி (1934 - 4 பதிப்புகள்)
  24. அமிர்த தாரா (1935 - 4 பதிப்புகள்)
  25. ஆனந்தசாகர் (1935 -3 பதிப்புகள்)
  26. பட்டமோ பட்டம்(1935 - 2 பதிப்புகள்)
  27. பிச்சைக்காரக் குடும்பம் (1935 - 2 பதிப்புகள்)
  28. பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 - 2 பதிப்புகள்)
  29. அநாதைப் பெண் (1936 - 4 பதிப்புகள்)
  30. இன்பஜோதி (1936 - 2 பதிப்புகள்
  31. பிரேம பிரபா (1936 - 2 பதிப்புகள்)
  32. ராஜமோஹன் (1936 - 2 பதிப்புகள்)
  33. அன்பின் சிகரம் (1937 - 2 பதிப்புகள்)
  34. சந்திர மண்டலம் (1937 - 2 பதிப்புகள்)
  35. மாயப் பிரபஞ்சம் (1937 - 2 பதிப்புகள்)
  36. உளுத்த இதயம் (1938)
  37. மகிழ்ச்சி உதயம் (1938 - 4 பதிப்புகள்)
  38. மாலதி (1938 - 3 பதிப்புகள்)
  39. வத்ஸகுமார் (1938 )
  40. வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938)
  41. ஜீவியச்சுழல் (1938 -2 பதிப்புகள்)
  42. கலா நிலையம் (1941 - 4 பதிப்புகள்)
  43. க்ருபா மந்திர் (1934 - 4 பதிப்புகள்)
  44. மதுர கீதம் (1943 - 4 பதிப்புகள்)
  45. வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 - 3 பதிப்புகள்)
  46. அமுத மொழி (1944)
  47. பிரார்த்தனை (1945 )
  48. அபராதி (1946 - 2 பதிப்புகள்)
  49. தெய்வீக ஒளி (1947 - 2 பதிப்புகள்)
  50. புதுமைக் கோலம் (1947)
  51. தபால் வினோதம் (1945 - 2 பதிப்புகள்)
  52. கானகலா (1950)
  53. தூய உள்ளம் (1950)
  54. நியாய மழை (1950)
  55. ப்ரபஞ்ச லீலை (1950)
  56. ப்ரேமாஸ்ரமம் (1950)
  57. மனசாட்சி (1950)
  58. ஜீவநாடி (1950)
  59. சௌபாக்கியவதி (1950)
  60. நம்பிக்கைப் பாலம் (1951 - 2 பதிப்புகள்)
  61. பாதாஞ்சலி (1951)
  62. ரோஜாமலர் (1951)
  63. தைரியலக்ஷ்மி (1952)
  64. சுதந்திரப் பறவை (1953)
  65. நிர்மல நீரோடை (1953)
  66. கிழக்கு வெளுத்தது (1958)

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.