வேதாந்தம்

From Tamil Wiki

வேதாந்தம் : இந்திய தத்துவசிந்தனை மரபில் மையமான ஞானக்கொள்கைகளில் ஒன்று. இந்து மெய்ஞான மரபின் மையத்தரிசனம். பிரம்மவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றான பிரம்மம் மட்டுமே உண்மை, பிறிதெல்லாமே மாயை என்பது வேதாந்தத்தின் கொள்கை. இது ரிக்வேதத்தில் உருவாகி உபநிடதங்கள் வழியாக திரண்டு பாதராயணரின் பிரம்ம சூத்திரம் வழியாக வரையறை செய்யப்பட்டது. பகவத் கீதை இதன் முதன்மை நூல். வேதாந்தத்தின் பிற்கால வடிவங்கள் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் முதலியவை.

கலைச்சொல்

வேதாந்தம் என்னும் கலைச்சொல் வேத+அந்தம் என்று பிரிக்கப்படத்தக்கது. வேதங்களின் முடிவு, வேதங்களின் அறுதி என்னும் பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இப்பெயர் தொல்காலம் முதலே புழக்கத்திலுள்ளது. இப்பெயர் அமைந்தமைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன

  • ரிக்வேதத்தின் இறுதியாகிய பத்தாவது காண்டத்தில் பேசப்பட்டுள்ள பிரம்மதரிசனத்தின் தத்துவார்த்தமான விரிவாக்கமே வேதாந்தம். ஆகவே இப்பெயர் அமைந்தது
  • வேதங்கள் சொல்லும் மெய்ஞானத்தின் உச்சப்புள்ளி பிரம்மவாதமே. அதை பேசுவதனால் இப்பெயர் அமைந்தது
  • வேதம்பயிலும் மாணவன் தன் கல்விநிறைவிற்காக இறுதியாகக் கற்கவேண்டியது பிரம்மவாதம், ஆகவே இப்பெயர் அமைந்தது

தத்துவ மரபில் இடம்

இந்திய சிந்தனை மரபில் ஆறு தரிசனங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் வேதங்களை முதல்நூல்களாகக் கொண்டவை மீமாம்சம் எனப்படுகின்றன. வேதங்களின் கர்மகாண்டம் எனப்படும் சடங்குசார்ந்த பகுதிக்கு முதன்மை அளிக்கும் தரிசனம் பூர்வமீமாம்சம் எனப்படுகின்றது. வேதங்களின் ஞானகாண்டம் எனப்படும் தத்துவப்பகுதிக்கு முதன்மை அளிக்கும் தரிசனம் உத்தர மீமாம்சம் எனப்படுகிறது. ஆறாவது தரிசனமாகிய உத்தர மீமாம்சமே வேதாந்தம் ஆகும்.

நூல்கள்

வேதாந்தத்தின் நூல்கள் மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) எனப்படுகின்றன. இவை உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. வேதங்களில் உள்ள பிரம்மதரிசனம் ஆரண்யகங்கள் வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. உபநிடதங்களில் அது முழுமை அடைந்தது. பாதராயணர் எழுதிய பிரம்மசூத்திரம் வேதாந்தத்தை தத்துவார்த்தமாக வரையறை செய்தது. பிற இந்திய தத்துவமரபுகள் மற்றும் ஞானமரபுகளுடன் இணைத்து வேதாந்தத்தை விரிவாக்கம் செய்தது பகவத்கீதை.

இம்மூன்று நூல்கள் தவிர பிற்காலத்தையவையான அஷ்டவக்ர கீதை, யோக வாசிஷ்டம், கௌடபாதர் இயற்றிய மாண்டுக்ய காரிகை போன்ற நூல்களும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

தத்துவம்

வேதாந்தம் பிரம்மம் என்னும் முழுமுதற்பொருளை ஒரே மெய்யாக முன்வைக்கிறது. பிரமமே அனைத்தும். பிரபஞ்சம் என்பது உயிர்கள் கொள்ளும் மாயத்தோற்றம் மட்டுமே. உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மா அல்லது ஜீவாத்மா தன்னை ஒரு தனித்த இருப்பாக எண்ணி மயங்குகிறது. பிரபஞ்சம் என்பதை தன்னைச்சுற்றி கற்பிதம் செய்துகொள்கிறது. ஆனால் ஜீவாத்மா என்பதும் பிரம்மத்தின் ஒரு வடிவமே. பிரம்மமே அனைத்து ஆத்மாக்களுமாகி நிற்பது என்பதனால் அது பரமாத்மா எனப்படுகிறது.

தொடக்கம்

வேதாந்த தத்துவத்தின் தொடக்கம் ரிக் வேதத்தில் உள்ளது. ரிக்வேதம் பல்வேறு இறையுருவகங்களை முன்வைக்கிறது. அந்த தெய்வங்களே இங்குள்ள அனைத்துமாகி நின்றுள்ளன என்று பல பாடல்களில் கூறுகிறது. பின்னர் எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று கூறுகிறது. படிப்படியாக பிரம்மம் என்னும் தரிசனத்தை வந்தடைகிறது. இங்குள்ள எல்லாம் பிரம்மமே என்ற உணர்வை முன்வைக்கிறது. அறியமுடியாத, விளக்கமுடியாத, எல்லாவகை வரையறைகளுக்கும் அப்பாற்பட்டதான பிரம்மமே பிரபஞ்சமாகவும் காலமாகவும் தோற்றமளிக்கிறது என்ற தரிசனத்தை முன்வைக்கிறது. ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் இத்தரிசனத்தை மிகுந்த கவித்துவத்துடன் முன்வைக்கிறது. அப்பாடலே பிரம்ம தரிசனம் மிகமுழுமையாக முன்வைக்கப்பட்ட தொடக்கம் எனப்படுகிறது. ஆனால் பிரம்மம் என்பதை அறியமுடியாத ஒன்றாக, ஒரு பெரும் புதிராகவும் வியப்பாகவுமே சிருஷ்டிகீதம் முன்வைக்கிறது.

முதிர்வு

ரிக்வேதத்தில் இருந்த பிரம்மதரிசனம் வேதங்களின் தத்துவார்த்தமான விவாதக்களமான ஆரண்யகங்களில் வளர்ச்சி அடைந்தது. உபநிடதகளில் கவித்துவமாக அது விரிவாக்கப்பட்டது.

உபநிடதங்கள்

உபநிடதங்கள் அனைத்துமே பிரம்மவாதத்தை கவித்துவமான உரையாடல்களாகவும், விவாதங்களாகவும் முன்வைப்பவை. உபநிடதங்கள் வெவ்வேறு கோணங்களில் பிரம்மத்தை விளக்கும் வரிகளைக் கொண்டவை. இந்தக் கூற்றுகள் மகாவாக்கியங்கள் எனப்படுகின்றன

  • இவையனைத்திலும் இறை உறைகிறது (ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்) - ஈஸோவாஸ்ய உபநிடதம்
  • பிரக்ஞையே பிரம்மம் (பிரக்ஞானம் பிரம்ம:) - ஐதரேய உபநிடதம்
  • அது நீதான் (தத்துவமஸி) - சாந்தோக்ய உபநிடதம்
  • இந்த ஆத்மாவே பிரம்மம் (அயம் ஆத்ம பிரம்ம:) மாண்டூக்ய உபநிடதம்
  • நானே பிரம்மம் (அஹம் பிரம்மாஸ்மி) பிருஹதாரண்யக உபநிடதம்
பிரம்மசூத்திரம்

பாதராயணர் உத்தரமீமாம்சை என்னும் வேதாந்தத்தின் தத்துவ ஆசிரியர். உபநிடதங்களில் திரண்டுவந்த பிரம்மவாதத்தை தன்னுடைய பிரம்மசூத்திரம் என்னும் இலக்கணநூலில் சுருக்கமான சூத்திரங்களாக வகுத்துரைத்தார். அந்நூலே வேதாந்தத்தின் முதன்மை இலக்கணநூலாக கொள்ளப்படுகிறது.

கீதை

பகவத்கீதை பிரம்மவாதத்தை வெவ்வேறு யோகங்களாக பகுத்து 18 அத்தியாயங்களாக முன்வைக்கிறது. யோகம் என்னும் சொல்லுக்கு இணைவு என்று பொருள். கீதை பிரம்ம தரிசனத்தை செயல்தளத்திலும் (கர்ம யோகம்) அறிவுத்தளத்திலும் (ஞானயோகம்) வெவ்வேறு தியான தளங்களிலும் விரித்தெடுக்கிறது . வேதாந்தத்தின் மிகப்புகழ்பெற்ற நூலாக கீதை திகழ்ந்து வருகிறது.

வளர்ச்சி

வேதாந்தம் பிற்காலத்தில் வெவ்வேறு அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. பௌத்தம் முதலிய பிற தத்துவங்களுடன் நிகழ்ந்த உரையாடலும் அதற்கு உதவியது. வரலாற்று ஆளுமைகளாக அறியக்கிடைப்பவர்கள் கீழ்க்கண்ட தத்துவஞானிகள்

கௌடபாதர்

கௌடபாதர் (பொயு 6/7 நூற்றாண்டு கௌடபாதர் மாண்டூக்ய உபநிடதத்திற்கு எழுதிய மாண்டூக்ய காரிகை என்னும் உரை வேதாந்தத்தின் விளக்கநூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கோவிந்த பகவத்பாதர்

கோவிந்த பகவத்பாதர் (பொயு 6/7 நூற்றாண்டு) கோவிந்த பகவத்பாதர் கௌடபாதரின் மாணவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கோவிந்த பகவத்பாதர் சங்கரரின் ஆசிரியர் என்றும், அவர் அளித்த கல்வியைக்கொண்டே சங்கரர் பிரம்மசூத்திரங்களுக்கு உரை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.

மண்டனமிஸ்ரர்

சங்கரரின் சமகாலத்தவர் எனப்படும் மண்டனமிஸ்ரர் (பொயு 7/8 ஆம் நூற்றாண்டு வேதாந்தத்திற்கு எதிரான பூர்வமீமாம்சையைச் சேர்ந்தவராக இருந்தார். பட்டமீமாம்சையை முன்வைத்த குமரில பட்டரின் மாணவர். சங்கரருடன் விவாதித்து தோல்வியடைந்து அத்வைதத்தை ஏற்றுக்கொண்டார். மண்டனமிஸ்ரரின் பிரம்ம சித்தி முக்கியமான வேதாந்த நூலாக பயிலப்பட்டது.

பிற்கால வேதாந்தங்கள்

பொயு 7 ஆம் நூற்றாண்டுக்குப்பின் பின்னர் சங்கரரின் பங்களிப்பால் வேதாந்தம் புத்துயிர் கொண்டது. சங்கரர் முன்வைத்த வேதாந்த மரபு அத்வைதம் என்ற சொல்லால் சுட்டப்பட்டது. அவருடன் விவாதித்தும், மாறுபட்டும் பல்வேறு வேதாந்த மரபுகள் உருவாயின. அவை பிற்கால வேதாந்தங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

தத்துவ மதிப்பு

உசாத்துணை