under review

மு.செய்யது முஹம்மது ஹசன்

From Tamil Wiki
Revision as of 01:13, 8 April 2024 by Tamizhkalai (talk | contribs)
மு.செய்யது முஹம்மது ஹசன்

மு.செய்யது முஹம்மது ஹசன் (ஜனவரி 1, 1918 – ஏப்ரல் 5, 2005) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். இந்திய தபால் தந்தித் துறையில் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களை, சிறுகதைகளை எழுதினார். இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த நூல்களை எழுதினார். ’இஸ்லாமிய இலக்கியக் காவலர்’ பட்டம் பெற்றார்.

பிறப்பு, கல்வி

மு.செய்யது முஹம்மது ஹசன், ஜனவரி 1, 1918 அன்று, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில், முஹம்மது சாலிஹ் சாஹிப் - ஜுலைகா பீவி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். நாகப்பட்டினம் தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். தந்தை மற்றும் தாத்தாவிடம் மார்க்கக் கல்வியையும், அரபி, உருது, பார்ஸி ஆகிய மொழிகளையும் கற்றார்.

தனி வாழ்க்கை

மு.செய்யது முஹம்மது ஹசன் 1935-ல் பர்மாவுக்குச் சென்றார். ‘மாந்தலே’ என்ற ஊரில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். 1937-ல் தாயகம் திரும்பினார். 1938-ல், இந்திய தபால் தந்தித் துறையில் தந்திப் பிரிவில் அமைச்சகப்பணி எழுத்தாளராகச் சேர்ந்தார். 38 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்பாளராக உயர்ந்து பணி ஓய்வு பெற்றார்.

மு.செய்யது முஹம்மது ஹசன் மணமானவர். இவருக்கு மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் குழந்தைகள்.

மு.செய்யது முஹம்மது ஹசன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

மு. செய்யது முஹம்மது ஹசன் கல்கியின் எழுத்துக்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். 1941 முதல் எழுதத் தொடங்கினார். கலைமகள், பிரசண்ட விகடன், சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணிவிளக்கு, முஸ்லீம் முரசு போன்ற இதழ்களில் மு.செய்யது முஹம்மது ஹசனின் சிறுகதைகள் வெளியாகின.

'சாபு', 'ஜமீல்', 'ஹசன்' போன்ற புனைபெயர்களில் சிறுகதை, நாவல்களை, தொடர்களை எழுதினார். அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்ட பிரபலங்களின் சிறுகதைத் தொகுப்பில் ஹசனின் சிறுகதையும் இடம்பெற்றது. ஹசன் வரலாற்று நாவல்கள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டார். ‘சிந்துநதிக் கரையினிலே’, ‘சொர்க்கத்து கன்னிகை’, ‘மேற்கு வானம்’ போன்ற சில வரலாற்று நாவல்களை எழுதினார்.

மு.செய்யது முஹம்மது ஹசனின் மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே ஆகிய இரு நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஹசனின் நூல்களை ஆய்வு செய்து சிலர் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பட்டம் பெற்றனர். ‘ஹசனின் வரலாற்று நாவல்கள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து பேராசிரியர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார்.

இதழியல்

மு.செய்யது முஹம்மது ஹசன் 1966 முதல் 1980 வரை ‘முஸ்லீம் முரசு’ மாத இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பின்னர் இதழின் அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுச் செயல்பட்டார்.

மணிவிளக்கு, பிறை, உரிமைக்குரல் ஆகிய மாத இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.

பதிப்பு

மு.செய்யது முஹம்மது ஹசன், அச்சில் இல்லாமல் மறைந்து போன பல நூல்களைத் தேடிக் கண்டறிந்து பதிப்பித்தார். இஸ்லாமியக் காப்பியங்கள் சிலவற்றையும், 20 சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்தார்.

மில்லத் பப்ளிகேஷன்ஸ் என்னும் நிறுவனத்தை நிறுவி இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

பொறுப்பு

  • தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர்.
  • சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளர்.

விருதுகள்

  • தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான முதல் பரிசு - சிந்துநதிக் கரையினிலே (1971)
  • சீதக்காதி அறக்கட்டளையின் செய்கு சதக்கத்துல்லா அப்பா இலக்கியப் பரிசு - சிந்துநதிக் கரையினிலே
  • கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. நினைவுப் பரிசு - - சிந்துநதிக் கரையினிலே
  • இஸ்லாமிய இலக்கியக் காவலர் பட்டம்

மறைவு

மு.செய்யது முஹம்மது ஹசன், ஏப்ரல் 5, 2005 அன்று காலமானார்.

மதிப்பீடு

மு.செய்யது முஹம்மது ஹசன், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டார். மு.செய்யது முஹம்மது ஹசன் எழுதிய இஸ்லாமிய வரலாற்று நாவல்களும், பதிப்பித்த இஸ்லாமிய இலக்கியங்களும் அவரது முக்கியமான சாதனை முயற்சிகளாக இஸ்லாமிய இலக்கிய ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றன.

நூல்கள்

நாவல்கள்
  • மஹ்ஜபீன்
  • சிந்துநதிக் கரையினிலே
  • புனித பூமியிலே
  • சொர்க்கத்து கன்னிகை
  • மேற்கு வானம்

மற்றும் பல

பதிப்பித்தவை
  • சீறாப்புராணம்
  • சின்ன சீறா
  • ஆயிரம் மசலா
  • திருமணி மாலை
  • கனகாபிசேக மாலை

மற்றும் பல

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.