first review completed

முருகடியான்

From Tamil Wiki
Revision as of 22:02, 16 May 2023 by Tamizhkalai (talk | contribs)
பாத்தென்றல் முருகடியான்
பாத்தென்றல் முருகடியான்

முருகடியான் (பாத்தென்றல் முருகடியான்; வே. பழநி) (ஜூலை 15, 1944) கவிஞர், எழுத்தாளர். தமிழ்நாட்டில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்பவர். தமது இலக்கியப் பணிக்காக தமிழவேள் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வே. பழநி என்னும் இயற்பெயரை உடைய முருகடியான், ஜூலை 15, 1944-ல், தஞ்சை மாவட்டம் பூம்புகாருக்கு அருகிலுள்ள வாணகரி என்னும் ஊரில், வேல்முருகன்- அமுதச்செல்வம் இணையருக்குப் பிறந்தார். கீழக்கரையில் வளர்ந்தார்.அங்கு மேல்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார்.

தனி வாழ்க்கை

முருகடியான், 1957-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார். கப்பலில் பணிபுரிந்தார். மின்னாளுநராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: சரோஜா. மகன்: நிலவழகன். மகள்கள்:  புனிதா, குமுதா.

நீரும் நெருப்பும் - கவிதை நூல்

இலக்கிய வாழ்க்கை

முருகடியான், இளம் வயது முதலே கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது பதின்மூன்றாம் வயதில் இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கினார். கதை, கட்டுரை, கவிதை எனப் பல பங்களிப்புகளைத் தந்தார். பாடல், நடிப்பு, சொற்பொழிவு போன்ற துறைகளிலும் பங்களித்தார். பல மேடைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் இவருடைய படைப்புகள் இடம்பெற்றன. புராணம், இதிகாசம், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு பொருள்களில் 25 வில்லுப்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றினார். பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்.

சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தில் மாதந்தோறும் மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்புகளை நடத்தினார். கவிச்சோலை நிகழ்ச்சிகளில் மாதந்தோறும் இலக்கண வகுப்புகளை நடத்தினார். பல நூல்களை எழுதினார்.

கவிமாலையின் கணையாழி விருது
சங்கமம் காப்பியம்

முருகடியான், சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை, ஒரு எளிய தமிழனின் வாழ்வைக் கருவாகக் கொண்டு 'சங்கமம்' என்ற தலைப்பில் காப்பியமாக இயற்றினார். இந்நூலில், சிங்கப்பூரின் வரலாறு, புகார் நகரின் சிறப்பு, மலேசியக் குறிப்புகள், சிங்கப்பூரின் அரசியல், சிங்கப்பூரில் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் வளர்த்தது, தமிழ் விழாக்கள் நடத்தியது, சீன மலாய் மக்களின் பழக்க வழக்கங்கள், சிங்கப்பூர் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு, சிங்கப்பூரில் தமிழ் வளர்த்த பெரியார்களின் அரும்பணிகள், தொண்டுகள், சிங்கப்பூர் மக்களின் சமய நல்லிணக்கம் எனப் பல தரவுகளை ஆவணப்ப்டுத்தினார்.

ஆன்மிகம்

முருகடியான், இளம் வயதிலிருந்தே நாத்திகச் சிந்தனை கொண்டவராக இருந்தார். பின்பு முருகன்பால் பக்தி கொண்டு ’முருகதாசன்’ (முருகடியான்) ஆனார்.

தமிழவேள் விருது

பொறுப்புகள்

  • சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றச் செயலாளர்.
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் துணைச் செயலாளர்.
  • சிங்கப்பூர் தமிழர் இயக்கத் துணைத் தலைவர்.
கரிகாலன் விருது

விருதுகள்

  • கோலாலம்பூர் தமிழ் இளையர் மணிமன்றம் வழங்கிய குறுங்காவியத்திற்கான முதல் பரிசு..
  • சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் அளித்த பாத்தென்றல் பட்டம்.
  • தமிழவேள் நாடகமன்றம் அளித்த வில்லிசை வேந்தர் பட்டம்.
  • மோண்ட் பிளாங்க் இலக்கிய விருது.
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய தமிழவேள் விருது.
  • தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் அளித்த திருக்குறள் விழா விருது.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய கரிகாலன் விருது.
  • தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றம் அளித்த சிங்கப்பூர் இலக்கியப் பரிசு
  • சிங்கப்பூர் கவிமாலை வழங்கிய கணையாழி விருது

இலக்கிய இடம்

முருகடியான் கவிஞர். சந்தத்தில் தேர்ந்தவர். பக்திப் பாடல்கள் பலவற்றை எளிய தமிழில் எழுதியவர். பேராசிரியர் முனைவர் திண்ணப்பர் மீது இவர் இயற்றிய பிள்ளைத் தமிழ் நூல் இவரது புலமைக்குச் சான்றாக மதிப்பிடப்படுகிறது. முருகடியான் எழுதிய ‘சங்கமம்’ காப்பிய நூல் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. இந்நூல் பற்றி சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பொற்கோ, ‘உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் இந்தப் படைப்புக்கு ஒரு சிறப்பிடம் அளிப்பது தகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திண்ணப்பர் பிள்ளைத் தமிழ்

நூல்கள்

  • திருமுருகன் காவடிச் சிந்து
  • தேன்மலர்கள்
  • முருகதாசன் கவிதைகள்
  • அழகோவியம் (குறுங்காவியம்)
  • மழலை மருந்து (சிறார் பாடல்கள்)
  • வாழ்வருள்வாள் வடகாளி (பக்திப் பாடல்கள்)
  • சூரியதாகம்  (கவிதைத் தொகுப்பு)
  • நெற்றிக்கண் (கவிதைத் தொகுப்பு)
  • வானவில் (கவிதைத் தொகுப்பு)
  • தேம்பாவை
  • நீரும் நெருப்பும்
  • வாடா மலர்கள்
  • பாத்தென்றல் முருகடியானின் சங்கமம் : கூடுகை (காப்பியம்)
  • பேராசிரியர் முனைவர் திண்ணப்பர் பிள்ளைத் தமிழ்
  • விழி! எழு! விரைந்து வா!

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.