under review

முத்தி வழி அம்மானை

From Tamil Wiki
Revision as of 23:44, 11 September 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited; Link Created: Proof Checked)

முக்தி வழி அம்மானை (1895) கிறிஸ்தவ சமயம் சார்ந்த அம்மானை நூல்களுள் ஒன்று. இதனை இயற்றியவர், சுவீகரனார். இந்த அம்மானையை, 1887-ல், நற்போதகம் இதழில் வெளியிட்டார். 1895-ல், இது நூலாக வெளிவந்தது.  இந்நூல் ஒரு தழுவல் படைப்பு. ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ (The Pilgrim's Progress) என்ற நூலைத் தழுவி இந்நூல் இயற்றப்பட்டது. ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம் என்கிற முத்தி வழி அம்மானை’ என்றும் இந்த நூல் அழைக்கப்படுகிறது.

பிரசுரம், வெளியீடு

முத்தி வழி அம்மானை,  1887-ல், நற்போதகம் இதழில் தொடராக வெளியானது. பின் பாளையங்கோட்டை சர்ச் மிஷன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு 1895-ல், நூலாக வெளிவந்தது. 1983-ல், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், இந்த நூலின் செம்மை செய்யப்பட்ட மறுபதிப்பை வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

முக்தி வழி அம்மானை நூலை இயற்றியவர் சுவீகரனார் என்னும் சுவீகர நாடார். இவர், தமிழ், ஆங்கிலம், வடமொழி அறிந்த புலவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்த் தோப்பில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றினார். முத்தி வழி அம்மானை நூலைப் பின்பற்றி, அதே கதையை ஹெச்.ஏ. கிருட்டினப்பிள்ளை, இரட்சண்ய யாத்திரிகம் என்ற காப்பியமாகப் படைத்தார்.

நூலின் கதை

முத்தி வழி அம்மானை நூலில் உள்ள கதை மாந்தர்கள் அனைவரும் உருவகமாகப் படைக்கப்பட்டுள்ளனர். கதையின் தலைவன் கிறிஸ்தியான். நாசபுரி என்ற நாட்டில் வாழ்ந்து வந்த இவன் பாவச்சுமையால் வருந்தினான். வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டான். முக்தி வழியில் முன்னேறிச் செல்ல முயன்றான். முதுகில் அவனது பாவச்சுமை அழுத்த, கையில் விவிலியத்தின் துணைகொண்டு அவன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் பல்வேறு இன்னல்கள், தடைகள், வேதனைகளை எதிர்கொண்டான். சுவிசேஷகர் ஒருவர் அவனுக்குத் தக்க வழிகாட்ட, அவ்வழியில் அவன் ஊரார் எதிர்ப்பையும் தடைகளையும் மீறிச் சென்றான். பல்வேறு அனுபவங்கள் வாய்க்கப் பெற்றான். கிறிஸ்துவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டான். அவன் செல்லும் வழியில் திட நம்பிக்கை என்பவன் கிறிஸ்தியானோடு சக பயணியாக இணைந்தான். அவர்கள் நதியைக் கடந்து உச்சிதப்பட்டணம் அடைந்தன. பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகு இறுதியில் அவர்கள் முக்திப் பேற்றை அடைந்தனர். இதுவே முத்தி வழி அம்மானை நூலின் கதைச் சுருக்கம்.

நூல் அமைப்பு

முத்தி வழி அம்மானை நூல், பாயிரம் முதல் வாழ்த்து ஈறாக 48 படலங்களைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் கடவுள் வாழ்த்து, நூல்பொருள், நூல் பயன், அவையடக்கம் முதலியன கூறப்பட்டுள்ளன. இந்நூலில் 165 விருத்தங்களும், 5978 அம்மானைக் கண்ணிகளும் உள்ளன. வடசொற்களும் விரவி வந்துள்ளன. கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ள இந்நூல் இலக்கியச் சுவையுடன் இயற்றப்பட்டுள்ளது.

இந்நூல் ஒரு தழுவல் படைப்பு. ஆங்கிலத்தில் ஜான் பனியன் எழுதிய ‘மோட்சப் பிரயாணம்’ (Pilgrim's Progress) என்ற நூலைத் தழுவி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. சாமுவேல் பவுல் The Pilgrim's Progress நூலை உரைநடைக் காவியமாக, ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். சுவீகரனார் அதனை அம்மானையாகப் பாடினார். எதுகை, மோனை, அணிச் சிறப்பு, உவமை, உருவகச் சிறப்புடன் இந்நூலை சுவீகரனார் படைத்துள்ளார்.

பாடல்கள்

நூல் ஆக்கம்:

இங்கிலிஷில் செய்தோன் இயற்றுபொருள் ஆனதெல்லாம்

சங்கையுடனே தமிழ் திருப்பி னோர்கள்தம்மில்

செம்மையுடன் நல்ல தெளிவாய்ப் பொருள்காட்டி

உண்மை பவுலையர் உரைதிருப்பும் வாசகத்தை

பாட்டாக அம்மானைப் பாவில்இசைத்தது அல்லாமல்

கட்டினதும் இல்லை குறைக்கவும் இல்லை பொருளே


நூல் நோக்கம்:

பாவவினை தீர்க்க பரன்சுதனார் தேடிவைத்த

சீவவழி தன்னைஇந்நூல் செம்மையுடன் காட்டுதுகாண்

ஆகையினால் இந்நூலை அம்மானை யாய்இயற்றி

ஏகன் அருளாலே இப்புவியில் பாடுகிறேன்

மலக்கம் இல்லாநல்ல தமிழ்முன்னே இந்நூலை

இலக்கணமாய் பாடுதற்கு ஏலுமோ என்னாலே

நன்னூல் அறியேன் நறுந்தொகையும் நான்அறியேன்

பன்னூல் அறியாதான் பாடுகிறேன் இத்தமிழை

இந்நாட்டின் மாந்தர் கிறிஸ்தேசு தன்னைநம்பிப்

பொன்நாட்டில் சேரும்வகை போதிக்கும் நூல் இதுகாண்

விந்தையுள்ள வேதமதை விரும்பி வாசிப்பவர்கள்

கந்தைத் துணி எனவே காகிதத்தைத் தள்ளார்போல்

இந்நூலில் என்பா இசைக் குறைவை எண்ணாமல்

முன்னூல் பொருள் அறிந்து மோட்சமதை நாடிடுவீர்


பயணியின் அபயக் குரல்:

உலையின் மெழுகாய் உருகினான் உள்ளம்எல்லாம்

கனவருத்தம் ஆகிஅவன் கைகால் உளைவதிலும்

மனவருத்தம் இப்பொழுது மட்டு மிஞ்சிவந்ததுவே

வந்ததுயராலே மனதை அசையாது இருத்தி

அந்தரத்தைநோக்கி அபயம் இட்டான் அம்மானை


இயேசுவின் பெருமை:

பீடுபெறு பூவுலகில் பிச்சை எடுப்போர்களையும்

வீடுமின்றிக் குப்பையதின் மேடுகளிலே வசித்து

இரக்கும் பரதேசி ஏழைகளிலே பலரைச்

சிறக்கும் பிரபுக்கள்போல் செய்துவிட்டார் கண்டாயே

மதிப்பீடு

கிறித்தவர்களுக்கு நல்லொழுக்க நெறிகளைக் கற்பிப்பதற்காகவும், கிறித்தவர்கள் வீட்டில் நிகழும் துக்க நிகழ்வுகளின் போது அவர்கள் படித்து ஆறுதல் அடைவதற்காகவும் இயற்றப்பட்ட நூல் முத்தி வழி அம்மானை. இந்நூல் கிறித்தவ சமயக் கொள்கைகளைக் கூறுவதோடு, சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்களையும் முன் வைக்கிறது. கிறித்தவ அம்மானை நூல்களுள் நீதிநெறிகளை, மோட்சத்தை வலியுறுத்தி இயற்றப்பட்ட முன்னோடி அம்மானை நூலாக ‘முத்தி வழி அம்மானை' நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.