under review

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

From Tamil Wiki
Revision as of 18:29, 1 November 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல்கள் அகநானுற்றில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

சோழ நாட்டில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சிறுகுடியில் இருந்த பேரரசரின் படைத்தளபதிகளுள் ஒருவரும், இரவலரின் வறுமையை போக்குபவருமான பண்ணனைப் பாடியதால் இவர் அவ்வூரைச் சார்ந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பான அகநானூற்றிலும், நற்றிணையிலும் உள்ளன. வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக அகநானூற்றில்(54) முல்லைத் திணைப்பாடலாகவும், தோழி வரைவு கடாயதாக நற்றிணையில்(259) குறிஞ்சித் திணைப்பாடலாகவும் உள்ளன.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • பண்ணனின் சிறுகுடி நெல்லி மரங்களால் நிறைந்தது. நெல்லிக்கனியை தின்று நீர் குடித்தால் இனிப்பது போல அவன் "தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்" எனப் பாடினார்.
  • ஐம்படைத்தாலி அணிந்த தலைவியின் குழந்தை.
  • மகனுக்கு திங்கள் காட்டி சோறூட்டுதல்

பாடல் நடை

  • அகநானூறு 54

'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி,
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.

  • நற்றிணை 259

யாங்குச் செய்வாம்கொல்- தோழி!- பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்- விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?

உசாத்துணை


✅Finalised Page