under review

மாறன் அகப்பொருள்

From Tamil Wiki
Revision as of 20:16, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

மாறன் அகப்பொருள் ஒரு பாட்டியல் இலக்கண நூல். திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்டது. இந்நூல் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது.

ஆசிரியர்

மாறன் அகப்பொருளின் ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். மாறனலங்காரம், பாப்பாவினம் ஆகிய நூல்களை இயற்றியவரும் இவரே.

காலம்,பெயர்க்காரணம்

பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார். பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு ஏற்ப நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர். நம்மாழ்வாரைப் பாட்டுடத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதால் மாறன் அகப்பொருள் என்னும் பெயர் ஏற்பட்டது. இந்நூலை கி.பி 1552-ஆம் ஆண்டில் சீனிவாசசீயர் என்பவர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ததாக இந்நூலின் பாயிரத்தில் இருந்து அறிய முடிகின்றது.

நூல் அமைப்பு

தொல்காப்பியம் தொடங்கி வந்த பண்டைய அகப்பொருள் இலக்கண நூல்களில் பரந்து கிடந்த அகப்பொருள் இலக்கணங்களை எல்லாம் முறைப்படி தொகுத்தும் வகுத்தும் புதியவை கூட்டியும் பிரித்தும் கவிராயரின் நூலை செய்தார் . மாறன் அகப்பொருள் பெரும்பாலும் நம்பியகப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து இயல்களாக இயற்றப்பட்டது.

மன்னும் அகத்திணையே மாண்பார் களவியலே
துன்னு வரைவியலே தூத்தொடியே -பின்னமரக்
கூறல் தகுகற்பே, கோதீர் ஒழிபியலே
மாறனகப் பொருளின் வைப்பு

என்ற பாடலிலிருந்து இது புலனாகிறது.மாறனகப்பொருளிலுள்ள மொத்த நூற்பாக்களின் எண்ணிக்கை 363. ஆனால் இப்போது கிடைக்கும் மாறனகப்பொருளில் அகத்திணையியலும், ஒழிபியலும் இல்லை. களவியல் (62) , வரைவியல் (34) , கற்பியல்(10) என 106 பாக்கள் மட்டுமே கிடத்துள்ளன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டு மெய்ப்பாடுகளை முப்பத்திரண்டாக வகுத்து உரைக்கிறார்.

மாறனகப்பொருளுக்கு மேற்கோள் நூலாக 'திருப்பதிக் கோவை' நூலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றினார்.

பாடல் நடை

கற்பெனப்படுவது கற்பினை வழுவாது
தற்கொண்டானையும் தன்னையும் பேணி
இல்லறத்து ஒழுகும் இல்லறக் கிழத்தி
நல்லறத்தவர் மதிநன்மாண்பதனோடு
மகிழ்ச்சியும் ஊடலும் ஊடல் உணர்தலும்
மகிழ்ச்சியில் பிரிவுடன் பிறவும் இயன்ற
மகிழ்ச்சியின் எய்தி இல் பொருந்துவதாகும்”
(மாறன் அகப்பொருள், நூற்பா எண். 225)

உசாத்துணை

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்-மு.அருணாசலம்


✅Finalised Page