under review

மய்யம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 10:38, 29 March 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மய்யம் (இதழ்)

மய்யம் (இதழ்) (ஜூன் 15, 1987- ஆகஸ்ட் 1990) கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக ஆரம்பித்த இதழ். இந்த இதழில் சினிமா, இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகள் வெளியாகின. இதன் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் கவிஞர் புவியரசு பங்களிப்பாற்றினார்.

மய்யம் இதழ் வெளியீட்டு விழா

பிரசுரம், வெளியீடு

கமல்ஹாசன் 'மய்யம்' எனும் இதழை ஜூன் 15, 1987-ல் தொடங்கினார். 1987-ல் 12 இதழ்களும், 1989-ல் 9 இதழ்களும் வெளியாகின. கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ஜி. நாகராஜன் இந்த இதழின் பதிப்பாளராக இருந்தார்.ராசி.அழகப்பன் ஆசிரியராக இருந்தார். கவிஞர் புவியரசு, ஞானக்கூத்தன் ஆகியோரை ஆலோசகர்களாகக் கொண்டது.

உள்ளடக்கம்

தலையங்கம், ரசிகனுக்குக் கடிதங்கள், எனக்குப் பிடித்தவை, ரசனைப் பக்கங்கள், எதிர்த்துப் பார்க்கிறேன் பழைய கமலை (தன்வரலாற்றுத் தொடர்), கமல் கேள்வி-பதில், சிறுகதைகள், கவிதைகள், இரங்கல் குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றன. உலக சினிமா அறிமுகங்கள், சினிமா ரசனை, போன்ற அம்சங்களும், சமூகப் பிரச்னைகளில் கமல்ஹாசனின் கருத்துக்களும் உள்ளடக்கமாக இருந்தன.

பங்களிப்பாளர்கள்

மய்யம் இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் கவிஞர் புவியரசு பங்களிப்பாற்றினார். ரசிகர்களுக்கான பத்திரிகை என்றபோதும் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், ஆதவன், க.நா.சுப்ரமணியம், சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன.

இதழ் நிறுத்தம்

இருபத்தியிரண்டு இதழ்கள் வெளிவந்தபின் ஆகஸ்ட் 1990-ல் மய்யம் இதழ் நின்று போனது.

மதிப்பீடு

மய்யம் கமல்ஹாசன் தன் ரசிகர்களின் ரசனை மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய ஓர் இடைநிலை இதழ்.

"மையம் மூன்று புள்ளிகள் நடுவே ஒரு கழைக்கூத்தை ஆடியது. அதன் விற்பனை கமல்ஹாசனின் ரசிகர்களால் ஆனது. அவர் அதில் வெளியிட்ட கேள்விபதில்கள், அவருடைய படங்களுக்காகவே அவ்விதழ் வாங்கப்பட்டது. கமல் ரசிகர்மன்றம் வழியாகவே வினியோகமும் செய்யப்பட்டது. இரண்டு, அன்றைய குமுதம் வகை வணிக இதழ்களின் சாயலை அது பின்பற்றியது. ஜெயராஜ் ஓவியம், சுஜாதா முதலியோரின் கதைகள். மூன்றாவதாக கூடவே இலக்கியத்தையும் கொஞ்சம் சேர்த்து வெளியிட்டது. அதில் வெளியான இலக்கியப் படைப்புகளை விட, அவ்வாறு ஓர் இலக்கிய இயக்கம் தமிழில் உள்ளது என்பதை அவ்விதழ் தொடர்ச்சியாகச் சுட்டிக்கொண்டே இருந்ததுதான் இன்று முக்கியமான நிகழ்வாகத் தோன்றுகிறது. பொதுவாசகர்களுக்கு இலக்கியம் சினிமா ஆகியவற்றை அறிமுகம் செய்யும் ஓர் இதழாக கமல் அதை உருவகித்துள்ளார்." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

உசாத்துணை


✅Finalised Page