மயிலை சிவமுத்து

From Tamil Wiki
Revision as of 15:01, 24 August 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

மயிலை சிவ முத்து (1892 - 1968) என அழைக்கப்படும்  மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி,  இசைப்பாடகர், பேராசிரியர், மாணவர் மன்றத் தலைவர், சமூகத் தொண்டர், எழுத்தாளர், குழந்தைக் கவிஞர் மற்றும் இதழாளர்.

பிறப்பு மற்றும் கல்வி

மயிலை சிவ முத்து 1892- ஆம் ஆண்டு ஜனவரி  15- ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

மயிலை சிவ முத்து மயிலாப்பூரில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பச் சூழ்நிலை காரணமாக அக்கல்வி தடைபட்டது. பின்னர் 1904- ஆம் ஆண்டில் எழுப்பூரில் உள்ள சென்னை கைவினைக் கல்லூரியில் (தற்பொழுது கவின்கலைக் கல்லூரி, சென்னை) ஓவியம் கற்கச் சென்றார். தந்தையின் மறைவின் காரணமாக அக்கல்வியும் தடைபட்டது.  சென்னை உயர் நீதிமன்ற  அச்சகத்தில் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். மயிலை சிவ முத்து தனது  பணிகளுக்கிடையில் கிடைத்த  நேரத்தில் சிறு சிறு நூல்களைப் படித்துத் தன்னுடைய தமிழ் அறிவையும் ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண்டார்.

மயிலை சிவ முத்து, இசைப் பாடகராக இருந்ததால் சென்னை சிவனடியார் திருக்கூட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அக்கூட்டத்தால் நிறுவப்பட்ட பால சைவ சபையில் சொற்பொழிவாற்றப் பழகினார். அங்கே தமிழறிஞர்களான ஆதிமூல முதலியார், மணி. திருநாவுக்கரசர் ஆகியவர்களின் நட்பைப் பெற்றார். திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். இதனால் உயர் நீதிமன்ற அச்சகப் பணியிலிருந்து 1912- ஆம் ஆண்டில் விலகினார். 1912-14- ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

ஆற்றிய பணிகள்

மயிலை சிவ முத்து,  1914- ஆம் ஆண்டில் சென்னை கொண்டியம்பதியில் சிவனடியார் கூட்டத்தாரால் நடத்தப்பட்டு வந்த சைவ ஆரம்பப் பாடசாலையில் தலைமையாசிரியராகத் தம் பணியைத் தொடங்கினார்.

1917- ஆம் ஆண்டில் மயிலை சிவ.முத்து தம் ஆசிரியரான திருநாவுக்கரசரின் விருப்பத்திற்கிணங்க முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியை ஏற்றார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றி 1947- ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

தமிழ்ப்பணி

  • 1931- ஆம் ஆண்டில் மருத்துவர் தருமாம்பாள் தலைமையில் உருவாக்கப்பட்ட மாணவர் மன்றப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
  • 1938- ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
  • மருத்துவர் தருமாம்பாள் தலைவராக இருந்த தாய்மார்கள் கழகத்தில் திருக்குறள் தொடர் வகுப்புகளை நடத்தினார்.
  • 1957- ஆம் ஆண்டில் மருத்துவர் தருமாம்பாள் மறைவுக்குப் பிறகு மயிலை சிவ முத்து, மாணவர் மன்றத்தின் தலைவர் ஆனார். அப்பொழுது,  சென்னையில் வாழ்ந்த மாணவர்களிடையே கலை நலமும், கல்வி வளமும் பெருக கலைப்போட்டிகளை நடத்தினார். உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரை பயின்ற மாணவர்களுக்கு முன் மாதிரித் தமிழ்த் தேர்வுகளை மாநில அளவில் நடத்தினார்.
  • மயிலை சிவ முத்து, 1961- ஆம் ஆண்டில் மாணவர் மன்றத்தின் சார்பில் 'நித்திலக்குவியல்' என்னும் இதழைத் தொடங்கி அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். மாணவர் மன்றத்திற்கென சொந்தக் கட்டடம் கட்டினார். அம்மன்றத்தின் சார்பில் 1963- ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

நூல்கள் இயற்றல்

மயிலை சிவ முத்து, பல நூல்களை இயற்றினார். அவற்றுள் 'தமிழ்த் திருமண முறை' மற்றும் 'நித்திலக் கட்டுரைகள்' முக்கியமானவை. இவர் சில சிறுவர் நூல்களையும் இயற்றியுள்ளார்.

தமிழ்த் திருமண முறை

அக்காலத்தில் திருமணம் புரியாத வேற்று மொழியில் மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படுவதை கண்டு பழந்தமிழர் நெறிமுறையை காக்க வேண்டி பேராசிரியர் மயிலை சிவமுத்து, திரு.வி.கலியாணசுந்தரனார், பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார், மணி. திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்களுடன் கூடி ஆராய்ந்து அறிவுக்கு ஒத்த, மண வாழ்க்கைக்கு இன்றியமையாத சடங்குகளை வகுத்து, மணமக்களுக்குப் புரியக்கூடிய வகையில் தமிழ் மொழியிலேயே மந்திரமான தேவார, திருவாசகப் பாடல்களை ஓதி மணம் செய்து வைக்கும் ‘தமிழ்த் திருமண முறை'யை உருவாக்கினார். அம் முறையில் மயிலை சிவ முத்து பல்லாயிரக்கணக்கான தமிழ்த் திருமணங்களை நடத்தி வழிகாட்டினார். மற்றையவர்களுக்கும் பயன்படும் வகையில்    அத் 'தமிழ்த் திருமண முறை' யை அழகிய நூல் வடிவில் சென்னை மாணவர் மன்றம் வெளியிட்டது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரிட்டோரியா தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு.அம்பலவாணன் சென்னை மாணவர் மன்றத்திற்கு வந்து இச்சங்கத்தின் சார்பில் தென்னாப்பிரிக்காவில் வாழும் தமிழ்  மக்களுக்குப் பயன்படும்          வகையில் மாணவர் மன்ற வெளியீடான ‘தமிழ்த் திருமண முறை'யை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட வேண்டும் என்று விரும்பினார். மயிலை சிவமுத்து அவர்களின் 'தமிழ்த் திருமண முறை' கடல் கடந்து அயல்நாட்டிலும் பரவ ஒரு வாய்ப்பு ஏற்படுவதறிந்து இதற்கு மாணவர் மன்றம் முயற்சி எடுத்தது.   வல்லை. பாலசுப்பிரமணியம் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் இன்றியமையாத மணச் சடங்குகள், அவற்றைச் செய்யும் முறை, அப்போது மந்திரப் பாடல்களாகப் பாடவேண்டிய தேவாரம், திருவாசகம் முதலிய நூற்பாடல்கள் ஆகியவை தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பாடல்களை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் வெளியிடப்பட்டுள்ளது.  திருமணத்தில் பாடும்போது தமிழ்ப் பாடல்களாகவே இருக்கவேண்டும், அவற்றின் கருத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுதல் கூடாது எனக் கருதி அவ்வாறு வைக்கப்பட்டுள்ளது.

நூல்கள்

மயிலை சிவ முத்து எழுதிய நூல்கள்;

  • என் இளமைப் பருவம்
  • தமிழ்த் திருமண முறை
  • சிவஞானம்; மாணவர் மன்றம், சென்னை.
  • தங்கநாணயம்; மாணவர் மன்றம், சென்னை.
  • தமிழ்நெறிக்காவலர்; மாணவர் மன்றம், சென்னை.
  • திருக்குறள் – எளிய உரை
  • நல்ல எறும்பு; மாணவர் மன்றம், சென்னை.
  • நித்திலக்கட்டுரைகள்; மாணவர் மன்றம், சென்னை.
  • நித்தில வாசகம்
  • முத்துக்கட்டுரைகள்; மாணவர் மன்றம், சென்னை.
  • முத்துப்பாடல்கள் (இந்திய அரசின் பரிசைப் பெற்றது)
  • வரதன்; மாணவர் மன்றம், சென்னை.

மறைவு

மயிலை சிவ முத்து 1968- ஆம் ஆண்டு ஜூலை 6- ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார்

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
  • மயிலை சிவ முத்து படைப்புகள்; https://www.tamilauthors.com/Mayilai_Siva_Muthu/Mayilai_Siva_Muthu.html
  • நாட்டுமையாக்கப்பட்ட மயிலை சிவ முத்து அவர்களின் நூல்கள்; https://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-63-235720