being created

பிரமிள்

From Tamil Wiki
Revision as of 15:14, 31 January 2022 by Siva Angammal (talk | contribs) (made link)

==


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

இப்பக்கத்தை User:Siva Angammal உருவாக்கிக் கொண்டுள்ளார் ==


பிரமிள்
பிரமிள்

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம் தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளுள்  ஒருவர்.  மேலும், விமர்சகராகவும்  சிறுகதையாசிரியராகவும் , ஓவியராகவும் இவர் விளங்கினார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பிரமிள் பல புனைப் பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கையில் பிறந்திருந்தாலும் தன்  வாழ்நாளில் பாதியை தமிழகத்தில் வாழ்ந்ததால் தமிழக எழுத்தாளராகவே உணரப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

பிறப்பு ஏப்ரல் 20, 1939.

  தருமு சிவராம் என்று அழைக்கப்பட்ட பிரமிளின் இயற்பெயர் சிவராமலிங்கம் ஆகும். இவர், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையைச்  சேர்ந்தவர். 1971- ஆம் ஆண்டு  தமிழ்நாட்டிற்கு வந்து விட்டார். பிறகு தன் பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார்

தனிவாழ்க்கை

பிரமிள், இலங்கையில் பல்வேறு இடங்களில் சிற்சில காலம் வசித்திருக்கிறார். இந்தியாவிலும் டெல்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர் கோயில், மதுரை, சென்னை போன்ற இடங்களில் வாழ்ந்திருக்கிறார்.

தருமு சிவராம் என்றே ஆரம்ப காலங்களில் இவர் அழைக்கப்பட்டார். எண்கணித ஈடுபாட்டால், வாழ்நாள் முழுதும் விதவிதமாகத் தன் பெயரை பல முறை மாற்றி எழுதிக்கொண்டே இருந்தார். இலக்கிய ஈடுபாட்டையும் மீறி நின்றது அவரது ஆன்மீக அக்கறை. ஜே.கிருஷ்ணமூர்த்தியின்மேல் அவருக்கு அபாரமான ஈடுபாடு இருந்து வந்துள்ளது. இளமையில் அவரை அதிகம் பாதித்தவர் திருக்கோணமலை இல்லறத்துறவி, சாது அப்பாத்துரை. யோகி ராம்சுரத் குமார், பேடா போன்ற பல ஞானிகளின் தொடர்பும் குறிப்பிடத்தகுந்தது

படைப்புலகம்

பிரமிள் தனது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்தார்.  முதன்மையாக கவிஞராகவே அறியப்படும் இவரின் படைப்பாற்றல்  விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றிலும்  வெளிப்பட்டுள்ளது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார். ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே மௌனியின் சிறுகதைத் தொகுப்பிற்கு  முன்னுரை எழுதிய பிரமிள், "கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து எழுத்து இதழில் எழுதிய கட்டுரை முக்கியமான ஒன்று.

இவரது கவிதையும் உரைநடையும், தமிழ் மொழிக்கு நவீன தொனியையும், தமிழ் அறிவுலகுக்ககு புதிய பரிமாணத்தையும் அளித்தன.

தொடக்கத்தில் எழுத்து பத்திரிக்கையும் இடையில் கொல்லிப்பாவை பத்திரிக்கையும் இறுதியில் லயம் பத்திரிக்கையும் பிரமிளுக்கு முதன்மையான படைப்புக்களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்களை கால. சுப்ரமணியம் தனது  லயம் பதிப்பகம் மூலம்  வெளியிட்டுள்ளார்.

  காவியம் என்ற இவரது கவிதை புதுக்கவிதைக்கான மாதிரியாக  அதிக அளவில் மேற்கோளாக காட்டப்படுகிறது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது!'

மதிப்பீடு

தமிழின் மாமேதை என்று தி. ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பிரமிள் பாராட்டப்பட்டார்.

தமிழ்ப் புதுக்கவிதையின் முழுமையான தனித்துவம் பிரமிள் கவிதைகளில் மட்டுமே உள்ளது.  பிரமிள் காலந்தோறும் மனிதனை முடிவிலி நோக்கிச் செலுத்திய அடிப்படை வினாவால் உருவாக்கப்பட்டவர். எந்த வினா ரிக்வேதத்து சிருஷ்டிகீதத்தை, கணியன் பூங்குன்றனின் செய்யுள் வரிகளை உருவாக்கியதோ அதே வினாவால் செலுத்தப்பட்டவர். அவ்வினாவுக்கு விடைதேடும் பொருட்டுமரபு தனக்களித்த படிமப் பெரும் செல்வத்தைக் கருவியாக்கி முன்னைகர்பவர். தன் ஆளுமையின்பெரும் கொந்தளிப்பான கவியுலகு ஒன்றை உருவாக்கியவர். எங்கெல்லாம் அந்த முதல்பெருவினா தன்னைச் செலுத்துகிறதோ அங்கெல்லாம் புத்தம்புது கவிமொழியை உருவாக்கியவர். நவீனத்தமிழ்ப் புதுக்கவிதையில் தமிழ் மரபின் சாரத்தைத் தன் வரிகளில் புதுப்பிக்க முடிந்த முதல் பெரும் கவிஞர். பித்தும் தன்முனைப்பும் தத்தளிப்பும் தரிசனங்களுமாக நம்முன் வாழ்ந்து மறைந்த இப்பெருங்கலைஞனைத் தமிழ் நமக்களிக்கும் பெருமிதம் ததும்பும் அனைத்துச் சொற்களாலும் நாம் கௌரவிக்கவேண்டும் என எழுத்தாளர் ஜெயமோகன் தன் "இலக்கிய முன்னோடிகள்'  (நற்றிணை) நூலில் குறிப்பிட்டுள்ளார்

மறைவு

உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால், பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரமிள், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலூருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

விருதுகள்

கும்பகோணம் சிலிக்குயில் பதிப்பகம் 1995- ஆண்டு  "புதுமைப்பித்தன் வீறு" விருது  வழங்கியது.

நியூயார்க் விளக்கு அமைப்பு 1996-ஆம் ஆண்டுக்கான  "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது.

நூல்பட்டியல்

கவிதைத் தொகுதிகள்

கண்ணாடியுள்ளிருந்து

கைப்பிடியளவு கடல்

மேல்நோக்கிய பயணம்

பிரமிள் கவிதைகள்

சிறுகதை தொகுப்பு

லங்காபுரி ராஜா

பிரமிள் படைப்புகள்

சிறுகதைகள் சில

காடன் கண்டது

பாறை

நீலம்

கோடரி

கருடனூர் ரிப்போர்ட்

சந்திப்பு

அசரீரி

சாமுண்டி

அங்குலிமாலா

கிசுகிசு

குறுநாவல்

ஆயி

பிரசன்னம்

லங்காபுரிராஜா

நாடகம்

நட்சத்ரவாசி

(அடையாளம்).

பிரமிள் நூல் வரிசை

(பதிப்பு : கால. சுப்ரமணியம்)

1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்).

2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).

3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்).

4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்).

5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).

6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி).

7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).

8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)

9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).

10. யாழ் கதைகள். 2009. (லயம்).

11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).

12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி).

13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி).

14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)

15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)

16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)

17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)

18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. (தமிழினி)

19. மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014.(தமிழினி)

18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. (அடையாளம்)

19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. (அடையாளம்)

20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. (அடையாளம்)

21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. (அடையாளம்)

22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. (அடையாளம்)

23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. (அடையாளம்)