நாராயண குருகுலம்

From Tamil Wiki
Revision as of 06:53, 9 April 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "நாராயண குருகுலம் (1924) நடராஜ குரு நிறுவிய குருகுலம். நடராஜ குரு தன் கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தொடங்கிய கல்விநிறுவனம் பின்னர் ஆன்மிகப் பயிற்சிநிலையமாக ஆக்கப்பட்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாராயண குருகுலம் (1924) நடராஜ குரு நிறுவிய குருகுலம். நடராஜ குரு தன் கல்விமுறையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தொடங்கிய கல்விநிறுவனம் பின்னர் ஆன்மிகப் பயிற்சிநிலையமாக ஆக்கப்பட்டது. நடராஜகுருவுக்குப் பின் நித்ய சைதன்ய யதி, அவருக்குப்பின் முனி நாராயணப் பிரசாத் ஆகியோர் தலைமையேற்றனர். உலகமெங்கும் பல கிளைகள் கொண்ட அமைப்பு. தலைமையகம் கேரளத்தில் வற்கலாவில் உள்ளது. தமிழகத்தில் ஊட்டியில் ஃபெர்ன்ஹில் பகுதியில் உள்ளது

வரலாறு

கேரளத்தின் ஆன்மிகஞானியான நாராயணகுருவின் முதன்மை மாணவரான நடராஜகுரு 1924ல் நாராயணகுருகுலத்தின் முதல் வடிவை நிறுவினார்.

நீலகிரி

1923 ல் நீலகிரியில் குன்னூரில் நாராயண குருவின் மாணவரான போதானந்தருடன் வந்து தங்கினார். 8 ஜூன் 1923ல் குன்னூரில் மாணவர்களுடன் உண்டு உறையும் ஒரு குருகுல அமைப்பை உருவாக்கி வேதாந்த குருகுலம் என பெயரிட்டார். அங்கே மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார். அவ்வமைப்பே பின்னாளில் நாராயணகுருகுலம் என உருமாறியது.

குருகுல கடும் நிதிநெருக்கடி நடுவே நடைபெற்றது. மாணவர்களுடன் சந்தையில் நன்கொடை வசூலித்து குருகுலத்தில் உணவு ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருந்தது. 8 ஜூன் 1924 ல் இக்குருகுலத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. அமைச்சர் ஏ.பி.பத்ரோ (A. P Patro) விழாவுக்கு தலைமை வகித்தார். திவான் பகதூர் ராமசாமி சாஸ்திரி ஆகியோர் பங்கெடுத்தனர். அவ்விழா குறித்த செய்தி இந்து நாளிதழிலும் வெளிவந்தது. ஆயினும் குருகுலத்தின் நிதிநிலைமை மேம்படவில்லை. நாராயண குருவிடம் பக்தி கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த ராமசாமிப்பிள்ளை என்னும் தமிழ் வணிகரிடமிருந்து ஒரு தேயிலைத் தொழிற்சாலை இருந்த இடத்தை அன்பளிப்பாகப் பெற்று குருகுலத்தை நடத்தினார்.

ஊட்டி

1926ல் அரசிடமிருந்து ஃபெர்ன்ஹில் பகுதியில் நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பெற்று சிறிது சிறிதாக அதன் தொகையை கட்டி நிரந்தர உறைவிடமாக ஆக்கிக்கொண்டார். 13 ஜூன் 1926,ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா ஶ்ரீசித்திரைத் திருநாள் பாலராம வர்மா புதிய குருகுலத்திற்கு அடிக்கல் இட்டார். மூன்றாமாண்டு நிறைவு விழாவில் திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமஸ்வாமி ஐயர் தலைமை வகித்தார். பொப்பிலி அரசர், அவருடைய ஆங்கிலப்பயிற்றுநர் திரு டாட்வெல் ஆகியோர் பங்கெடுத்தனர்.

ஆயினும் குருகுலம் கடும் பொருளியல் நெருக்கடியில் இருந்தது. நடுவே சின்னம்மை நோயும் தாக்கவே குருகுலம் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் போதானந்தரின் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். 1926ல் நடராஜ குரு வர்க்கலாவுக்கு சென்றார்

சார்போனில் தத்துவக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்று திரும்பி வந்த நடராஜகுரு 1935ல் ஊட்டிக்கு வந்தார். ஊட்டி ஃபெர்ன் ஹில் நிலத்தில் தன் கையாலேயே மண்ணாலும் தகரத்தாலும் கட்டப்பட்ட குடிசையில் நாராயணகுருகுலத்தை மீண்டும் தொடங்கினார். தத்துவப் பயிற்சி, தியானம் ஆகியவற்றுடன் மாணவர்களுக்கு இலவசக் கல்வியும் அளித்தார்.

நடராஜ குரு எழிமலை குருகுலம்
நடராஜ குரு, ஜான் ஸ்பியர்ஸ்
வற்கலாவில்

நாராயண குருகுலம் அமைப்பு வர்க்கலாவை தலைமையிடமாகக் கொண்டு 24 பிப்ரவரி 1959-ம் ஆண்டு முறையாகத் தொடங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது. மங்கலானந்தர், ஜான் ஸ்பியர்ஸ், நித்ய சைதன்ய யதி, முனி நாராயண பிரசாத் ஆகியோர் ஆசிரியர்நிரை என அறிவிக்கப்பட்டனர்.