being created

நாகராஜா கோவில்

From Tamil Wiki

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜா. ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சந்நிதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கிறது. நாகர்கோவில் ஊர் பெயர் நாகராஜா கோவில் காரணமாக உருவானது .

இடம்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி என்னும் பகுதியில் உள்ளது. கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பெயர்

நாகர்கோவில் என்னும் பெயர் பழங்காலத்தில் நாகராஜா கோவிலை குறிப்பதாகவே இருந்துள்ளது. பின்னர் கோவிலை சுற்றி உள்ள ஊர் பெயராகவும் அவ்வூர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலை நகராகவும் மாறியுள்ளது. நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கப் பட்டிருந்தாலும் கோட்டாறு என்னும் பெயரே பெருவழக்காக இருந்துள்ளது. கி.பி. 1800 க்குப் பின் புரட்டஸ்டாண்டுக் கிறிஸ்த்தவர்கள் வருகைக்குப் பின்னர் நாகர்கோவில் என்னும் பெயர் பெருவழக்காக மாறியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மூலவர்

கோவில் மூன்று கருவறைகளைக் கொண்டது. மூலக்கருவறை நாகராஜா அல்லது நாகரம்மன் கருவறை என அழைக்கப்படுகிறது. மூலக்கருவறை காலத்தால் பழையது. இக்கருவறை மண்சுவரால் எழுப்பப்பட்டு மூங்கில் கம்புகளில் தென்னை ஓலைகளால் வெயப்பட்ட கூரைக் கொண்டது. கருவறை முன்பாக வாகனம், பலிபீடம் இல்லை. கருவறைக்குள் இருக்கும் மூல கற்சிலை நான்கு தலைகள் கொண்டது. இச்சிலை ஐந்து தலைக்கொண்ட உலோக அங்கியால் பொதியப்பட்டுள்ளது. ஐந்தாவது தலை அறுபட்ட நிலையில் காணப்படுகிறது.

சிவன் கருவறையில் மூலவர் ஆவுடையாரில் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறையின் முன் அறையில் நந்தி சிலை உள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறையில் அனந்த கிருஷ்ணனன் சிலையும் அதன் இருபுறங்களிலும் பாமா மற்றும் ருக்மிணி சிற்ப்பங்கள் உள்ளன.

தொன்மம்

நாகராஜா கோவிலுக்கு எழுதப்பட்ட தலவரலாறு கிடையாது. செவிவழி கதைகளே உள்ளன. ஆய்வாளர் செந்தீ நடராசன் அனந்த கிருஷ்ணன் என தற்போது அறியப்படும் தெய்வம் சமண சமய தெய்வமான தர்னேந்திரன் என கூறுகிறார். அதனால் தர்னேந்திரனின் தொன்மக் கதை ஆலயத்துடன் தொடர்புறுகிறது.

செவிவழி கதைகள்

கோவில் இப்போது இருக்கும் இடம் ஒரு காலத்தில் புல்லும் புதறுமாக இருந்துள்ளது. ஒரு இளம்பெண் புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது திடீரென ரத்தம் கண்டு அஞ்சி பார்த்த போது ஐந்து தலை நாகம் ஒன்றின் தலையில் அறிவாள் வெட்டி ரத்தம் வருவதை காண்கிறாள். அவள் பக்கத்திலிருந்த தன் ஊர் மக்களிடம் நடந்ததை கூற அவர்கள் அங்கு வந்து பார்த்து பரிகாரமாக அவ்விடத்தில் சிறு கோவில் ஒன்றை கட்டினர்.

களக்காட்டு மன்னர் ஒருவர் காட்டுப்பகுதிகளை சீர்செய்து நாடாக்க அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அதிகாரிகள் மக்களை அழைத்துக் கொண்டு காடுகளை சீர்திருத்தினர். அப்போது ஓரிடத்தில் கல் ஒன்று சேதப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்தவர்களுக்கு நாகப்பிம்பம் தெரிந்துள்ளது. அன்று இரவு களக்காடு மன்னர் கனவில் தோன்றிய நாகர் உன் ஆட்கள் தன்னை சிதைத்ததாகவும் உன்னை பீடித்துள்ள தொழுநோய் தீர எனக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி மன்னர் நாகர்க்கு கோவில் எழுப்பினார்.

தர்னேந்திரன் கதை

சமண சமய நெறிபடி ஆன்மா தீர்த்தங்கரராக மாறுவதற்கு பல பிறவிகளில் பக்குவப்படுகிறது. சமண சமயத்தின் இருபதிமூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு பிறவிதோறும் கொடுமைகள் செய்ய கமடன்(கமட்டா) வருகிறான். பார்சுவநாதரின் இறுதிப் பிறவியில் கமடன் மகிபாலனாக பிறந்து தவம் செய்கிறான். அப்போது தீயிலிட ஒரு கட்டையை பிளக்க முயற்சிக்கும்போது சிறுவன் பார்சுவன் அதனுள் ஒரு பாம்பு இணை உள்ளது பிளக்க வேண்டாம் என கேட்கிறான். மகிபாலன் கேட்காமல் கட்டையை பிளக்கிறான் பாம்புகள் இறக்கின்றன. பார்சுவன் மந்திரம் ஓதியதால் அவை கீழுலகு சென்று தர்னேந்திரன் என்னும் நாக அரசனாகவும் பத்மாவதி என்னும் நாக அரசியாகவும் பிறவி எடுக்கின்றன.

பார்சுவநாதர் பிறப்பறுக்க தவம் செய்ய காடு செல்கிறார். கமடன் முற்பிறவி தவத்தால்

நாகவழிபாடு

நாகவழிபாடு மிகத் தொன்மையானது. விஷத்தினல் எதிரிகளைக் கொல்லும் சக்த்தியை பாம்புகள் கொண்டிருப்பதால் அவற்றுக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பி வழிப்பட்டனர். நாட்டுப்புறத் தெய்வங்காளின் கூறுகளை உள்ளடக்கிய வழிபாட்டு முறை. புராணங்கள் அதிக அளவில் உள்வாங்கி கொண்டிருக்கின்றன. கேரளத்திலும் குமரி மாவட்டத்திலும் சர்ப்ப(பாம்பு)க் காவுகள் அதிகமாக ஊள்ளன.

நாகராஜா கோவிலில் நாகவழிபாடு மிகப் பழங்காலத்திலே இருந்துள்ளது. நாகராஜா என்னும் இக்கோவில் மூல தெய்வத்திற்க்கு நேர்ச்சை செய்வதன் மூலம் சரும வியாதிகளைப் போக்கி நலம் பெறலாம் என்னும் நம்பிக்கை இங்கு பல காலமாக இருந்து வருகிறது.

கோவில் அமைப்பு

கோவில் வளாகத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் கல் நாகர் உருவங்களுடன் இருக்கிறது. கோவில் சதுரவடிவில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் வளாகத்தின் கிழக்கிலும் தெற்க்கிலும் வாசல்கள் உள்ளன. அனந்த கிருஷ்ணன் சந்நிதியின் எதிரிலும், நாகராஜர் சந்நிதி எதிருலுமாக வாசல்கள் உள்ளன. கோவில் முகப்பு நுழைவாயில் கேரளபாணியில் அமைந்துள்ளது.

கோவில் வளாகம்

பக்தர் குளம்: கோவில் முன்புறம் இருக்கிற பிரதான வாயில் கிழக்கு வாயில் அல்லது உமை பங்கனேரி வாயில் என அறியப்படுகிறது. கிழக்கு வாயிலின் இருபுறம் தொங்கும் மாலை மற்றும் போக்களின் ஓவியங்களுடன் கேரள பாணி ஓட்டுகூரையுடன் உள்ளது. கிழக்கு வாயில் வழி உள்ளே நுழைந்ததும் வலதுப்பக்கம் வடகிழக்கு மூலையில் நீராழி என அழைக்க்ப்படும் சதுர வடிவ பக்தர் குளம் உள்ளது. பக்தர் குளம் 8 சென்ட் பரப்பளவில் சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் தென்னை, வேம்பு முதலிய மரங்கள் உள்ளன. குளத்தை சுற்றியமைந்துள்ள மதில்சுவரில் நாக சிற்பங்கள் அதிகம் காணப்படுகிறது.

அரசடி விநாயகர்: கிழக்கு வாயில் வழியாக கோவில் இருப்பிடத்திற்க்குள் நுழைந்ததும் இடப்புறம் அரச மரத்தின் அடியில் அமைக்க்ப்பட்ட மேடையில் மேற்கு நோக்கி விநாயகர் சிற்பம் உள்ளது. சுற்றிலும் நிறைய நாக சிற்ப்பங்களும் உள்ளன.

கோயில் முகப்பு: அரசமரத்தின் மேற்க்கு திசையில் கொட்டாரம்(அரண்மனை) வடிவில் அமைந்துளள கோவில் முகப்பு உள்ளது. தெற்கு வாயிலின் வடக்கும் தெற்க்கும் இரு தூண்களுடன் கூடிய இரண்டு திண்ணைகள் உள்ளன. கேரள பாணியில் ஓட்டுகூரையுடன் கோவில் முகப்பு அமைந்துள்ளது. முகப்பின் வலப்புற வாயிலில் ஐந்து தலை நாகச் சிலையும் இடப்புற வாயிலில் ஐந்து தலை நாகக் குடையின் கீழ் கிருஷ்ணன் பாமா ருக்குமணியுடன் நிற்கும் சிற்ப்பமும் உள்ளன. வாயில்களுக்கு நடுவில் மேல் பகுதியில் சங்குச் சிற்ப்பமும் தெற்கு வாயிலின் தெற்கு மேற்ப் பகுதியில் சக்கரச் சிற்ப்பமும் அதன் தென் பகுதியில் காவல் தெய்வ சிலையும் உள்ளன. முன்னர் சிலைகள் இருக்கும் மேல் பகுதி சாரளங்களுடன் இருந்துள்ளது, 2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது இப்போதுள்ள சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அலுவலகம்: கோவிலின் தென்புறம் வடக்கு நோக்கி அறநிலையதுறையின் கோவில் அலுவலகம் உள்ளது. இரு வாயில்கள் கொண்ட அலுவலகத்தில் கிழக்கு வாயில் பகுதியில் அறநிலையத்துறை அலுவல் பணிகள் நடைப்பெறுகிறது. திருப்பணிக்குழு அலுவலகம் என்று அழைக்கப்படும் மேற்க்கு வாயிலில் திருப்பணிக் குழுவின் அலுவல்கள் நடைபெறுகிறது. இப்போது அலுவலகம் உள்ள பகுதியும் அதனை ஒட்டி கிழக்கு தெற்காக உள்ள பகுதியும் முன்னர் கல்வெட்டுகள் குறிப்பிடும் குணவீர பண்டிதன் மற்றும் கமலவாகன பண்டிதன் ஆகியோரின் வீடுகளாக இருந்துள்ளது. அவ்வீட்டினர் கோவிலை நிர்வகித்து வந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அவை இடிக்கப்பட்டு அதன் சிறுப்பகுதி அலுவலகமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபம்: கோவிலின் தென்புறம் தெற்க்கு நோக்கு ஒரு திருமண மண்டபம் உள்ளது.

மகாமேரு மாளிகை(தெற்கு வாயில்): மேரு என்றால் மேரு மலையைக் குறிக்கும். மேரு மலை சிவபெருமானால் தனுவாக தாங்கப் பெற்ற பொன்னிற ஆயிரம் தலைகளுடைய மலை என்னும் தொன்மம் கொண்டது. இத்தொன்மப் பின்னணியில் கோவிலின் பிராதான வாயிலான தெற்கு வாயில் மகாமேரு மாளிகை என அழைக்கப்படுகிறது. மகாமேரு மாளிகை நாகர்கோவில் நகராட்சியின் முத்திரையாக உள்ளது.

தெற்க்கு வாயில் மிகப் பெரிய மரத்திலான கதவுகள் கொண்ட அரண்மனை வாசல் போன்ற உயரமான வாயில். வாயிலின் மேற்புறம் மூன்று கும்ப கலசங்களுடன் ஒட்டுக்கூரை வேயப்பட்ட ஓர் அறை உள்ளது. வாயிலின் இருபுறமும் அறைகள் உள்ளன. வாயிலின் அடியில் நாகராஜா கோவிலின் தேருக்கான மரப் பொருள்கள் பாதுகாக்கப்படும் பாதாள அறை உள்ளது. வாயிலின் மேற்கு பகுதியில் மலபார் கட்டடக்கலை பாணியிலான முழுக்க தேக்கு மரத்தால் ஆன மாளிகை உள்ளது.

வெளிச்சுற்றுச் சுவர்: நாகராஜா கோவில் 73 செண்ட் பரப்பளவு கொண்டது. கோவிலைச்சுற்றி செவ்வக வடிவில் பெரிய கற்களை கொண்டு கட்டப்பட்ட சுற்றுச் சுவர் உள்ளது. சுவரின் உச்சியில் அதிக எண்ணிக்கையில் நாகச்சிலைகள் உள்ளன. சுவரில் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது.

தெற்குச் சுவர் வாயில்கள்: தெற்குச் சுவரில் திருவிழா காலங்களில் மட்டும் திறக்கப்படும் இரண்டு வாயில்கள் உள்ளன. மகாமேரு மாளிகைக்கு நேராக அமைந்துள்ள பெரியவாயில் வழியாக திருவிழா காலங்களில் வாகனங்கள் எடுத்துச் செல்லப்படும். வாயிலின் மேற்பகுதியில் இரண்டு ஐந்து தலை நாகங்கள் மற்றும் அவற்றின் நடுவே பாமா ருக்குமணியுடன் இருக்கும் அனந்த கிருஷ்ணன் ஆகிய சிலைகள் உள்ளன. பெரிய வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மூன்று விளக்குப்பாவைச் சிலைகள் வீதம் உள்ளன. வாயிலின் இருபுறங்களிலும் பூக்கள், பூததின் முகங்கள், அன்னவால் கருக்கு, மாலைகள் ஆகியவற்றின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பெரியவாயிலுக்கு கிழக்காக சிறிய வாயில் ஒன்று உள்ளது. சிறிய வாயிலின் மேற்புறம் மூன்று தலை நாகமும் அதன் மேல் விரிந்த இதள்களைக் கொண்ட பூவும் அதனைச்சுற்றி பூமாலை கொண்டு அலங்காரம் செய்ய்ப்பட்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. வாயில்களின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் 1992-ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அமைக்கப்பட்டதாகும்.

வடக்கு வாயில்: நாகராஜா கோவிலின் முன்பு வடக்கு திசையில் தெற்க்கு நோக்கி வடக்கு வாசல் உள்ளது. வாயிலின் இருபுறமும் விளக்கு பாவைச் சிற்ப்பங்கள் மற்றும் சைவ சமய அடியவர்களின் சிற்பங்கள் உள்ளன. வளைந்த அமைப்புடைய வாயிலின் மேற்பகுதியில் இருபுறமும் ஐந்து தலை நாகத்தின் சிலைகளும் நடுவே இந்து தெய்வங்களின் சிற்பங்கள் பலவும் உள்ளன. அவற்றின் கீழே கையில் கதையுடன் வாயில் காவலர் சிற்பங்கள் உள்ளன. 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்ட வடக்கு வாயில் கோபுரத்தில் பூக்கள், குலை தள்ளிய வாழை ஆகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இடும்பன் சந்நிதி: நாகராஜா கோயில் முன்பக்கம் உள்ள வடக்கு வாயில் உள்ளே இடது பக்கம் இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் பீமனிடம் சண்டையிட்டு மாண்ட அரக்கன் என்றும் முருகனோடு சண்டையிட்டு தோற்று பின்னர் அவன் மனைவி இடும்பியின் வேண்டுகோளை ஏற்று முருகன் அவனை உயிர்ப்பித்து தனது பூத கணங்களோடு சேர்த்துக் கொண்டான் என்னும் தொன்மங்கள் உள்ளன. நாகராஜா கோவிலில் முருகனின் கணங்களின் தலைவனாக முருகனுக்கு காவலாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் சந்நிதி 4 அடி நீளமும் 4.1 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது.

ஆஞ்சநேயர் சந்நிதி: நாகராஜா கோவிலின் வடக்குச் சுவரில் தெற்க்கு நோக்கி ஆஞ்சனேயர் சந்நிதி உள்ளது. ஆஞ்சனேயர் சிலை ஒரு காலை மடக்கி அமர்ந்திருப்பதாக உள்ளது. இரு கைகளில் இசைக்கருவிகளும் தலையில் கிரீடமும் கழுத்தில் மாலைகளும் உள்ளன.

துர்கையம்மன் சந்நிதி: நாகராஜா கோவிலின் வடக்கு வாயில் வழியாக செல்கையில் மேற்க்கு திசையில் கிழக்கு நோக்கி மூன்று சந்நிதிகள் உள்ளன அவற்றில் வடக்கில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நாக்ரம்மன் கோவிலை தோற்றுவித்து வணங்கி வந்த கன்னிமேட்டுச் சேரிப் பெண்ணின் சமாதியின் மேல் இச்சந்நிதி அகட்டப்பட்டுள்ளாதாக வாய்மொழித் தொன்மம் உள்ளது. துர்க்கையம்மன் சந்நிதி 5.3 அடி நீளமும் 4 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டது. துர்க்கையம்மன் சிலை சங்கு சக்கரம் தாங்கி திருமாலின் பெண் வடிவமாக காட்சியளிக்கிறது.

பாலமுருகன் சந்நிதி: துர்கையம்மன் சந்நிதிக்கு தெற்க்கில் கிழக்கு நோக்கி பாலமுருகன் சந்நிதி உள்ளது. இங்கு முருகன் சிலை வாகனமான மயில் இல்லமல் வேலுடன் காட்சியளிக்கிறார். முருகன் சிலையுடன் மயில் சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட போது மயிலின் தலை உடைந்து விழ அதை குளத்தில் போட்டு விட்டனர் என்றும் அதற்கு காரணமாக நாகத்திற்க்கு எதிரியான மயில் கோவிலில் இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. சந்நிதியின் உள்ளே அமர்ந்த நிலையில் விநாயகர் சிலையும் உள்ளது. பாலமுருகன் சந்நிதி 6 அடி நீளமும் 6.8 அடி அகலமும் கொண்டது. சந்நிதியின் வெளி முகப்பில் வீர மகேஸ்வரரும் வீரபாகுவும் வாயில் காவலர்களாக உள்ளனர். 1979 ஆம் ஆண்டு மில் அதிபரான செங்கோட முதலியாரால் இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணன்: முருகன் சந்நிதிக்கு தெற்கில் செவ்வக வடிவ பீடத்தில் புல்லங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. கிருஷ்ணனின் சிலை மயிற்பீலி கொண்ட கிரீடத்துடன் காதுகளில் குண்டலமும் கழுத்தில் மாலையுடனும் உள்ளது. விரிந்த குடையின் கீழ் மூன்றடி உயரத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

புஷ்பக்குளம்: நாகராஜா கோவிலின் வடப்புறம் துர்க்கை சந்நிதிக்கு பின்புறம் சிறிய புஷ்ப்பகுளம் என்று அழைக்கப்படும் சிறியக்குளம் உள்ளது. குளத்தில் கோவில் அர்ச்சகர்களான நம்பூதிரிகள் மற்றும் தந்திரிகள் மட்டுமே நீராட அனுமதி உள்ளது பக்த்தர்களுக்கு அனுமதி கிடையாது.

அர்ச்சகர் வீடு: புஷ்பக்குளத்தின் மேற்குப்பக்கம் கிழக்கு நோக்கி அர்ச்சகர் வீடு உள்ளது. 1960 ஆம் ஆண்டுக்கு பின்னரே அர்ச்சகர் வீடு மற்றும் துர்க்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் இப்பகுதி நந்தவனமாக இருந்துள்ளது.

வெளிப் பிரகாரம்

முன்பக்க வாயில் வழியாக உள்ளே சென்றால் வெளிப்பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளித்திருச்சுற்று காணப்படுகிறது. நாகராஜா கோவிலின் முன்புள்ள இரண்டு வாயில்களில் நாகராஜா சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் உள்ளே செல்வதற்கும் அனந்த கிருஷ்ணன் சந்நிதிக்கு முன்னுள்ள வாயில் வெளியே வருவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. முன்வாயில் வழியாக உள்ளே செல்கையில் காணப்படும் வெளிப்பிரகாரத்தின் வலது பக்கம் திண்ணை அமைந்துள்ளது. திண்ணையில் விளக்குப்பாவை சிற்பங்களுடன் கூடிய கல்தூண்கள் உள்ளன.

மணிக்கூண்டு: வெளிப் பிரகாரத்தில் கோயிலுக்கு முன்பாக மணிக்கூண்டு உள்ளது. இது ஓடு வேயப்பட்ட கூரை மற்றும் ஆறு கல்தூண்களுடன் உள்ளது. ஓட்டுக் கூரையின் உச்சியில் கும்பம் உள்ளது. மணிக்கூண்டின் மேற்பகுதியில் இரு தூண்கள் நடப்பட்டு பெரிய மணி தொங்க விடப்பட்டுள்ளது. சுமார் 1.5 அடி உயரமுள்ள மரத்தில் செய்யப்பட்ட நாகச்சிற்பம் இங்கு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திருவிதாங்கூர் அரச குடும்பத்தால் கோவிலுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முன்னர் திருவிழா காலங்களில் யானைகளை நிறுத்தி வைக்கப் பயன்படுடத்தப்பட்டுள்ளதால் யானைக் குடில் என்றும் அழைக்கப்படுகிறது.

கொடிமரம்: நாகராஜா கோவில் வெளிப் பிரகாரத்தில் மணிக்கூண்டிற்குத் தெற்குப்பக்கம் அனந்தகிருஷ்ணன் சன்னதிக்கு முன்பாக கொடிமரம் உள்ளது. கொடிமரம் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு பித்தளைத் தகட்டால் பொதியப்பட்டுள்ளது. கொடிமரத்தின் அடிபாகம் தாமரைப் பூ கவிழ்த்து வைக்கப்பட்ட வடிவில் உள்ளது. பீடம் அடியிலிருந்து உபானம், உபபீடம், பத்மஜகதி, விருத்த குமுதம், கபோதகம், பத்ம பீடம் என்னும் அமைப்பில் உள்ளது. பீடத்தில் வேதிகை இல்லை. நாற்பது அடி உயர கொடிமரத்தின் உச்சியில் ஆமை உருவம் மற்றும் அதன் அடியில் சதுரமான வடிவில் காணப்படும் பகுதியில் நான்கு மணிகள் உள்ளன மேலும் அதன் அடியில் சாய்வாகக் காணப்படும் நீண்ட கம்புப் பகுதியில் ஒரு மணி உள்ளது. கொடிமரம் 1950 ஏப்ரல் 24 அன்று நிறுவப்பட்டுள்ளது.

பலிபீடம்: வெளிப் பிரகார கொடிமரத்தை அடுத்து கொடிமர அரணுக்குள் பலிபீடம் உள்ளது. பலிபீடம் கொடிமரபீடத்தை போன்ற தோற்றத்தில் அதைவிட சிறியதாக பித்தளை தகட்டால் பொதியப்பட்டு உள்ளது.

நாகமணி பூதத்தான் சந்நிதி: நாகராஜா கோவில் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி நாகமணி பூதத்தான் சந்நிதி உள்ளது. காவல் தெய்வமான நாகமணி பூதத்தான் சிலை மூன்று அடி உயரத்தில் கையில் கதையுடன் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற கோலத்தில் உள்ளது. கோவில் மேற்பகுதி விமானத்துடன் நாகமணி பூதத்தானின் உருவமும் காவல் தெய்வங்களின் உருவங்களுடனும் காணப்படுகிறது. நாகராஜா அனந்த கிருஷ்ணனாக மாற்றம் பெற்ற காலத்தில் நாகமணி பூதத்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டு தனி சந்நிதி உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரம் 1992-ல் அமைக்கப்பட்டுள்ளது.

வாகன அறைகள்: நாகராஜா கோவில் வெளிப்பிரகாரத்தில் மூன்று வாகன அறைகள் உள்ளன. தெற்கு பெரிய வாயிலை ஒட்டி கிழக்குப்பக்க அறையில் பல்லக்கு வாகனங்கள் உள்ளன.வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் நெருப்புக் கோழி வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம் என நான்கு வாகனங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கில் உள்ள வாகன அறையில் மூன்று தேர்வாகனங்கள்(இந்திர வாகனம்), மூஞ்சுறு வாகனம், குதிரை வாகனம், புஷ்ப வாகனம் மற்றும் கற்ப்பகத்தரு வாகனம் ஆகியன உள்ளன.

நந்தவனம்: வெளிபிரகாரத்தின் மேற்கு வாயிலில் குளத்துடன் கூடிய நந்தவனம் ஒன்று உள்ளது. மரங்கள் சூழ்ந்த குளக்கரையைச் சுற்றி ஏராளம் நாகச்சிற்பங்கள் உள்ளன. குளத்தின் நடுவில் ஆவுடையாரின் மேல் அமைந்த ஐந்து தலை நாகச் சிலை உள்ளது. விரிந்த பாப்பின் படத்தினுள் ஒரு மனித உருவம் உள்ளது. குளத்தின் தென்புறம் சுமார் ஒன்றரை அடி உயர கற்பீடத்தில் கிழக்கு நோக்கி ஐந்து நாகச்சிலைகள் உள்ளன.

சாஸ்தா சந்நிதி: வெளிபிரகாரத்தின் வடப்புறச்சுற்றில் கான்கிரீட்டில் கட்டப்பட்டு ஓட்டு கூரை கொண்ட சிறிய சாஸ்தா கோவில் உள்ளது. கூரையின் மேல் கும்ப கலசம் உள்ளது. வாயிலில் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. சந்நிதி முன் ஒரு அர்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு முன்பிருந்த யானைச் சிலை அகற்றப்பட்டு வேலைபாடுகளுடைய ஆறு கல்தூண்களுடன் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்தூண்களின் மேற்பகுதியில் வாழைப்பூ வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. மண்டப மேற்பகுதி பூ வேலைபாடுகளுடன் உள்ளது.

சாஸ்தாகோவில் நாகராஜா கோவிலின் தோற்றம் முதலே உள்ளது. சன்னதியின் முன் யானை சிற்பங்கள் இருந்துள்ளன. சமண சமய தர்ம சாஸ்தாவாக இருந்து பின்னர் அதிகப்படியான சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வருகையால் தர்ம சாஸ்தாவாக மாறியுள்ளது. கருவறை புதுப்பிக்கப்பட்டு யானைச் சிலைகள் அகற்றப்பட்டு முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கற்பலகைகள்: கோவில் முன்பாக வெளிபிரகாரத்தில் ஐந்து கற்பலகைகள் கல்வெட்டுகளுடன் உள்ளன. இவற்றில் நான்கு ஒரே அளவுடையது ஒன்று பிற கற்பலககைகளைவிட சற்று உயரம் குறைவாக உள்ளது.

மன்னர் வென்று மண் கொண்ட பூதல ஸ்ரீ வீரஸ்ரீ உதய மார்த்தாண்ட வர்மா, சமண சமயப்பெரியோர்களான இருவர் கேரளன் நாராயணன் குணவீர பண்டிதன், சீவகாருடையான் கமலவாகன பண்டிதன், தம்பிரான்குட்டி சடையன், மாளுவநம்பி முதலியோர் நாகராஜா கோவிலுக்குச் செய்த கொடைகளும் திருப்பணிகளும் இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் மூலம் நாகராஜா கோவில் சமணப்பள்ளியாக இருந்ததன் சான்றாகவும் உள்ளது.

நாகதுவாரபாலகர்கள்: கிழக்கு வெளிப்பிராகாரத்தில் நாகராஜா சன்னதி முன் அர்த்தமண்டப நுழைவாயிலில் கல்லில் செய்யப்பட்டு பித்தளை அங்கியால் போர்த்தப்பட்ட நாகதுவாரபாலகர் சிலைகள் உள்ளன. இடதுபுறம் உள்ள சிறிய சிலை பார்சுவ நாதரின் காவல் யக்‌ஷன் தர்னேந்திரனான நாகராஜாவாகவும் வலப்புறம் அமைந்துள்ள அளவில் பெரிய சிலை பார்சுவ நாதரின் காவல் யக்‌ஷியும் தர்னேந்திரனின் மனைவியுமான பத்மாவதியுமாகவும் கொள்ளப்படுகிறது. பித்த்ளை அங்கிகள் 2006-ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது அணியப்பட்டுள்ளன.

வெளிபிரகார கிழக்குச் சுற்றில் நாகராஜா சந்நிதி முன் தரையில் படுத்து வணங்கும் மனிதனின் சிற்பம் உள்ளது. இடுப்பில் வேட்டி கட்டி இடது பக்கம் கொண்டை முடியப்பட்டு மூன்று வளையக்ல்களுடன் கைகள் முன்பக்கம் நீட்டி வணங்கும் விதமாக செதுக்கப்பட்டுள்ளது.

உள் பிரகாரம்

நாகராஜா கோவில் கல்லல் கட்டப்பட்டது. உள் திருச்சுற்று அல்லது உள் பிரகார அர்த்த மண்டபத்தில் சந்நிதி முன் வாயில்கள் இரண்டு, வடக்குப் பக்கம் ஒன்று தெற்குப் பக்கம் ஒன்று என நான்கு வாயில்கள் உள்ளன. தென்புறவாயில் திருவிழா காலங்களில் மட்டுமே திறக்கப்படும் வடக்கு வாயில் அர்சகர்கள் புஷ்பகுளத்திலிருந்து நீர் எடுத்து வரவும் பக்தர்கள் வெளித்திருச்சுற்ரில் உள்ள துக்கை, பாலமுருகன், கிருஷ்ணன் சன்னதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. உள்த்திருச்சுற்றில் நாகராஜா சந்நிதியிலிருந்து இடப்புறமாக சுற்றி வருகையில் இடதுபக்கம் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய தூண்களுடன் திண்ணை வடிவில் தியான மண்டபம் உள்ளது. உள்திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி காணப்படுகிறதி. இவ்வறை கோவில் பிரசாதம் தயாரிக்கும் சமயலறையாக செயல்படுகிறது.

கன்னிமூலை கணபதி சன்னிதி: உள்புரகாரத்தின் தென்மேற்கு மூலையில் 6.5 அடி நீள அகலங்களுடன் 7 அடி உயரத்துடன் கணபதி சந்நிதி காணப்படுகிறது. இக்கருவறையில் கணபதி, சிவலிங்கம் மற்றும் வெண்ண்ணெய்க் கிருஷ்ணன் சிலைகள் உள்ளன.

உற்சவ மூர்த்தி சந்நிதி: கன்னிமூலை விநாயகர் கருவறைக்கு வடக்கே கிட்டதட்ட கன்னிமூலை விநாயகர் கருவறை அமைப்பில் உற்சவ மூர்த்தி சந்நிதி உள்ளது. வேட்டைக் கிருஷ்ணன், வேட்டையம்மன், சக்கரத்தாழ்வார், விநாயகர் ஆகிய்யோரின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. திருவிழாக் காலங்களில் வாகனங்கள் மேல் ஊர்வலம் வர இச்சிற்பங்கள் பயன்படுத்தபடுகிறது.

உள்திருச்சுற்றில் வடக்கு சுற்றில் அர்ச்சகர்கள் ஓய்வு எடுக்கும் ஓய்வு அறை மற்றும் மின் அறை ஆகியவவை உள்ளன. நாகராஜா சந்நிதி முன் அர்த்த மண்டபத்தின் வலது பக்கம் ஒரு கிணறு உள்ளது. கிணறு சுமார் 4.5 அடி சுவருடன் கம்பி அழிகளால் மூடப்பட்டு வெளிச்சம் செல்ல அப்பகுதி கூரை திறந்த சிலையில் உள்ளது.

அர்த்தமண்டபம் நடுவில் கம்பிக் குழாய்கள் அமைக்கப்பட்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கருவறியிலிருந்து இடது பக்கம் பெண்களுக்கும் வலதுபக்கம் ஆண்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பகுதியில் பெரிய உண்டியல் உள்ளது. ஆண்கள் பகுதியில் கண் இல்லாத குத்துவிளக்கு மற்றும் ஆமை-நாக விளக்கு ஒன்றும் உள்ளன. ஆமை-நாகவிளக்கில் ஆமை நான்கு கால்களையும் தலையையும் வெளியே நீட்டி உள்ளது அதன் மேல் கண்விளக்கு ஐந்து அடுக்குகளாக உள்ளது அதன் மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளது. அனந்தக் கிருஷ்ணன் கருவறை முன்பும் அர்த்தமண்டபம் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடுவில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

கருவறைகள்

நாகராஜ கோவிலில் நாகராஜா, சிவபெருமான் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஆகிய மூல தெய்வங்களுக்கான மூன்று கருவறைகள் உள்ளன.

நாகராஜா கருவறை: நாகராஜர் கருவறை மண்சுவரால் ஆனது மற்றும் மூங்கில் கம்புகளின் மேல் ஓலை வேயப்பட்ட கூரை கொண்டது. காலத்தால் முந்திய நாகராஜா கருவறை 6 அடி நீளம் 5 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. நாகராஜா கோவில் மூலவரான நாகருக்கு கருவறை முன்பு பலிபீடம், வாகனம் இல்லை. நாகராஜா சிலை நான்கு தலைகள் கொண்ட கற்சிலை ஐந்தாவது தலை உடைந்த நிலையில் உள்ளது. ஐந்து தலைகள் கொண்ட உலோக அங்கியால் போர்த்தப்பட்டுள்ள மூலவர் சிலை சுயம்பு சிலை என கூறப்படுகிறது.

சிவன் கருவறை: நாகராஜா கருவறைக்கு தெற்காக சிவன் கருவறை உள்ளது. இக்கருவறை 19-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. கருவறை 6.25 அடி நீளமும் 6 அடி அகலமும் 6.5 அடி உயரமும் கொண்டது. சிவலிங்கம் பரம பீடம், விஷ்ணு பீடம் உள்ளபட அரை அடி உயரத்தில் ஆவுடையாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிவன் கருவறை முன்பு நந்தி சிலை உள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறை: சிவன் கருவறைக்கு தெற்கே அனந்த கிருஷ்ணன் கருவறை உள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட அனந்த கிருஷ்ணன கருவறை 5.75 அடி நீளமும் 7.25 அடி அகலமும் 7.25 அடி உயரமும் கொண்டது. கருவறையில் அனந்ந்த கிருஷ்ணன் சிலையும் இருபுறங்களில் பாமா மற்றும் ருக்குமணி சிற்பங்களும் உள்ளன. கருவறையின் இடது பக்கம் உள்ள சிறிய அறையில் வேட்டைக் கிருஷ்ணன், வேட்டையம்மன், சக்கரத்தாழ்வார், விநாயகர் சிற்பங்கள் உள்ளன. தைத்திருவிழாவின் எட்டாவது நாள் பரிவேட்டையின் போது வேட்டைக் கிருஷ்ணன் சிலை ஊர்வலமாக கொண்டுச் செல்லப்படும்.

கட்டிட அமைப்பு

நாகராஜா கோவில் மண்டளியாக முதலில் கட்டப்பட்டு பின்னர் கற்றளியாக மாற்றப்பட்ட கோவில். நாகராஜா சந்நிதி இப்போதும் கற்றளியாகவே உள்ளது. கோவில் உள்கட்டமைப்பு திராவிட கட்டட கலைக்கு சான்றாக உள்ளது. கல்லால் ஆன கோவில் விமானம் அதிட்டானம், சுவர், பிரஸ்தரம் கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு பகுதிகளை கொண்டுள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறை

நாகராஜா கோவில் அனந்த கிருஷ்ணன் கருவறை அதிஷ்டானம் உபானம், ஜகதி, முப்படைக் குமுதம், கண்டம், பட்டிகை, பத்ம வேதிகை ஆகிய அங்கங்கள் கொண்டு சுமார் 4.5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜகதிபட்டை எளிமையாகவும் அதன் மேலுள்ள முப்பட்டை வடிவிலுள்ள குமுதப்பட்டையில் அன்னத்தின் தோகை வடிவ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குமுதப் பட்டையின் மேலுள்ள கண்டவரி மேலும் கீழும் எளிய கம்பு என்னும் சுற்றுறுப்பு மற்றும் பூதங்களின் தலையை போன்ற சிற்பங்களுடன் உள்ளது.

அதிஷ்டானத்தின் மேல் மட்டத்திலிருந்து உத்திரத்தின் அடிமட்டம் வரை உள்ள கருவறை சுவரைச் சுற்றி தெற்கில் இரண்டு மேற்கில் ஒன்று வடக்கில் இரண்டு என ஐந்து தேவகோட்ட மாடங்கள்(கோஷ்டபஞ்சரம்) சிற்ப வேலைபாடுகளுடன் உள்ளன. கோஷ்ட பஞ்சர மாடங்களில் தேரின் அமைப்பைப் போன்று புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. மாடங்களின் பக்கங்களில் அரைத்தூண்களும் நடுவில் கால்தூண்களும் உள்ளன. கால், உடல், இடைக்கட்டு, கலசம், தாடி, குடம், கண்டம், பத்மம், பலகை, வீரகண்டம், போதிகை ஆகிய உறுப்புகளைக் கொண்ட தூண்கள் தெற்கில் பத்து மேற்கில் ஆறு வடக்கில் அப்த்து என மொத்தம் இருபத்தியாறு உள்ளன. தூண்களின் அடியில் அன்னவால் கருக்கு புடைப்புச் சிற்பமாக உள்ளது. இத்தூண்களில் பின்புற சுவரின் ஓரமுள்ள இரு தூண்களும் முழுத்தூண்களாக காணப்படுகின்றன. போதிகை குலை தள்ளிய பூ தொங்கியிருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தூண்களின் போதிகையின் மேல் பிரஸ்தரம், மஞ்சம், கபோதகம் என அழைக்கப்படும் தளவரிசை எனப்படும் கூரைப்பகுதி உள்ளது. கூரைப்பகுதி உத்திரம், கம்பு, கபோதகம், யாளிவரி என்னும் உறுப்புளை கொண்டுள்ளது. பிரஸ்தரத்தின் மேலே தெற்கும் மேற்கும் வடக்கும் கர்ணகூடுகள் உள்ளன. கர்ணகூடுகளில் நரசிம்மன், சாஸ்தா, பத்மாவதி, முக்குடை நாதர்கள் மற்றும் தேர் வடிவங்கள் உள்ளன. மேற்கே உள்ள மூன்று கர்ண கூடுகளில் இரு ஓரங்களில் கோடிக் கருக்கும் நடுவில் மையப் பானைக் கருக்கும் செதுக்கப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்பகுதி சிகரம் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

கிழக்கே இந்திரன் ஐராவததில் இடக்காலை மடித்து வலக்காலை தொங்க விட்டு கையில் கத்தி வஜ்ரம் ஆகிய ஆயுதங்களுடன் அபய முத்திரை மற்றும் வரத முத்திரைகளுடன் அமர்ந்துள்ள சிற்பம் உள்ளது. தெற்கில் தட்சிணா மூர்த்தி மேற்கில் நரசிம்மர் வடக்கில் பிரம்மா ஆகிய சிற்பங்களும் உள்ளன. நான்கு மூலகளிலும் இரண்டு சிங்க யாளிகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. சிகரத்தின் உச்சியில் பதுமம் கவிழ்கபட்டது போன்ற வடிவத்தின் மேலே கலசம் அமைந்துள்ளது.

அனந்த கிருஷ்ணன் கருவறை கூரை மேல் தங்க முலாம் பூசப்படாத வட்ட வடிவிலான கன்னி மூலை விநாயகர் கருவறைச் சிகரம் காணப்படுகிறது. விநாயகர் சிகரத்தில் அமர்ந்த மற்றும் நின்ற கோலத்தில் விநாயகர் சிற்பங்கள் உள்ளன. அதன் மேல் பகுதியில் கர்ணகூடு வேலைபாடுகளும் உச்சியில் பூதத்தின் தலை செதுக்கப்பட்டுள்ளன. சிகரத்தின் மேல் கலசம் உள்ளது.

மூலவர் கருவறை

நாகராஜா கோவிலில் மூலவர் கருவறையான நாகராஜா கருவறை விமானம் இன்றி ஓலைக் கூரையுடன் உள்ளது. நாகமணி பூதத்தான், இடும்பன், பாலமுருகன், துர்க்கை ஆகிய சந்நிதிகளுக்கு தற்கால கோவில் கட்டமைப்பில் அமைந்த விமானங்கள் உள்ளன. கிழக்கு வாயில் அருகில் உள்ள விநாயகர் சந்நிதியும் சாஸ்தா சந்நிதியும் விமான அமைப்பு இன்றி உச்சியில் கலசத்துடன் காணப்படுகிறது.

நாகமணி பூதத்தான் கருவறை

நாகமணி பூதத்தான் சந்நிதி கருவறை கோபுர அமைப்பி கொண்ட முன்மண்டபத்துடன் சிறிய கோவில் வடிவில் உள்ளது. கோபுரத்தின் மேற்பகுதியில் நடுவே மாடம் அமைக்கப்பட்டு மாடத்தில் நாகமணி பூதத்தான் சுதைச் சிற்ப்பம் அமைக்கப்பட்டுள்ளது. இரு ஓரங்களில் பூதங்களும் நான்கு முறமும் சிறு உருவங்களும் காணப்படுகிறது. நடு மாடத்தின் மேல் தாமரை பீடம் ஆமைக்கப்பட்டு அதன் மேல் படமெடுத்த பாம்பின் உருவமும் அதன் மேல் பூதத்தலையும் உள்ளன. உச்சியில் கலசம் உள்ளது.

இடும்பன் கருவறை

இடும்பன் சந்நிதி எளிய விமானம் கொண்டது. கருவறை மேல் நான்கு புறமும் காவலர் சிற்பங்கள் வலக்கையில் ஆயுதத்துடனும் இடக்கையில் கதையுடனும் ருத்திராட்ச மாலை, பூணூல் அணிந்து உள்ளன. வாயிலுக்கு மேல்பகுதியில் விநயகர் அமர்ந்த நிலையிலும் விநாயகர் நின்ற நிலையிலும் அமய வரத முத்திரைகளுடன் உள்ளனர். இருபுறங்களிலும் மயிலும் காவடி ஏந்திய பக்தரின் உருவங்களும் காணப்படுகிறது.

பாலமுருகன் கருவறை

பாலமுருகன் சந்நிதி எளிய சிறிய விமானத்துடன் காணப்படுகிறது. நான்கு பக்க சுவர்களில் வாசல் வடிவில் கோஷ்ட பஞ்சரங்கள் உள்ளன. தென்புறம் கணபதி மற்றும் சாஸ்தா சிற்பங்கள் காணப்படுகிறது. சாஸ்தாவின் இருபுறமும் தொங்கும் விளக்குகளும் கணபதியில் இருபுறமும் குத்து விளக்குகளும் வைக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்பகுதியில் முருகன் நின்ற கோலத்தில் அபயமுத்திரையுடன் உள்ள சிற்பம் மற்றும் கஜலட்சுமி சிற்பம் ஆகியவை காணப்படுகிறது. கூரையின் முன்புறம் இடது ஓரம் திருமால் ஒரு தேவியுடன் நாக குடையினுள் அமர்ந்ந்திருக்கும் சிற்பமும் வலது ஓரம் சிவன் சக்தி, விநாயகர், முருகனுடன் அமர்ந்திருக்கும் சிற்பமும் நடுவில் மாடத்தில் முருகன் மற்றும் விநாயகர் சிற்பங்களும் உள்ளன. பின்பக்கம் இரு ஓரங்களில் தாமரைப்பூவில் கையில் அபய முத்திரையுடன் தாமரை மலர்கள் ஏந்தி அமர்ந்துள்ள லட்சுமி சிற்பமும் நாகக் குடையின் கீழ் கிரீடம் அணிந்த சக்தி சிற்பமும் உள்ளன. மாஅடத்தின் மேல் பூதத்தலைகளும் உச்சியில் செம்பு கலசமும் அமைந்துள்ளன.

துர்கை கருவறை

துர்கை அம்மன் கருவறை சிறிதாக ஆனால் வேலைபாடுகளுடன் மூன்று தளங்களை கொண்ட அமைப்பில் உள்ளது. கிழக்கில் இந்திரன், தெற்கில் தட்சணா மூர்த்தி, மேற்கில் நரசிம்மன், வடக்கில் பிரம்மா ஆகியோரில் சுதை சிற்பங்கள் அமைந்துள்ளது. நான்கு மூலைகளிலும் கைகளில் அஞ்சலி முத்திரையுடன் இடக்கால் மடித்து வலக்கால் தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருக்கும் பெண்கள் சிற்பங்கள் உள்ளன. இச்சிலைகளுக்கு நடுவே இந்திரன், தட்சிணா மூர்த்தி, நரசிம்மன் மற்றும் பிரம்ம ஆகியோரின் சிற்பங்கள் இருபுறம் வெள்ளை அன்னங்கள் நடுவே நான்கு பக்கமும் உள்ளன. மாடங்களின் மேலே பூதத்தின் தலையும் உச்சியில் கலசமும் காணப்படுகிறது.

சுற்றுச்சுவர்

நாகராஜா கோவில் சுற்றுச்சுவர் வரிக்கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் ஏராளம் நாகச்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாகச் சிற்பங்கள் படமெடுத்த வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. படமெடுத்த நாகங்கள் சிலவற்றில் நாகக் குடைக்குள் சிவலிங்கம் ஆள் உருவம் என சில வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கோபுரங்கள்

நாகராஜா கோவில் கோபுரம் இரு தளங்கள் கொண்ட கேரள பாணியில் ஓடு வேயப்பட்ட அரண்மனை வாயில் தோற்றம் கொண்டது. இரு வாயில்கள் கொண்ட முன்பகுதியில் உள்ள திண்ணையில் ஏழு தூண்கள் உள்ளன. இரண்டாம் தளத்தின் மூன்று பாடங்கள் நீண்டு உள்ளன. இடது மாடத்தில் காவல் தெய்வம் நாகமணி பூதத்தான் சிற்பமும் நடு மாடத்தில் கிருஷ்ணன் தேவியருடன் நின்றிருக்கும் சிற்பமும் வலது மாடத்தில் படமெடுத்த ஐந்து தலை நாகச் சிற்பமும் உள்ளன. மூன்று மாடங்களுக்கு நடுவே வலது பக்கம் வெண்சங்கு மற்றும் இடது பக்கம் சக்கரமும் காணப்படுகின்றன.

வெளித்திருச்சுற்று நாகராஜா சந்நிதி வாயில் கோபுரம் பிற்காலத்தில் 1992 - ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் நடுவில் படமெடுத்த நிலையில் ஐந்து தலை நாகச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் அடிப் பகுதியில் படமெடுத்தப் பாம்பினுள் அபய வரத முத்திரைகளுடன் ஓர் உருவம் அகாணப்படுகிறது. கோபுரத்தில் கர்ணக்கூடு, பூவேலைபாடுகள், பூதத்தலைகள் மற்றும் உச்சியில் படமெடுத்த ஐந்து தலை நாகம் ஆகியவை உள்ளன.

நாகராஜா வாசல் கோபுரத்தின் இடது பக்கம் 1992-ல் அமைக்கப்பட்ட அனந்த கிருஷ்ணன் வாயில் கோபுரம் உள்ளது. கோபுரத்தின் நடுவில் ஐந்து தலை நாகக் குடைக்குள் கிருஷ்ணன் சிற்பமும் இருபுறமும் மூன்று தலை நாகக் குடைக்குள் பாமா ருக்குமணி சிற்பங்களுடன் உள்ளன. மூவருக்கும் மேலுள்ள திருவாசியின் உச்சியில் கோரைப்பல் கொண்ட பூதத்தலை உள்ளது. கோபுர உச்சியில் படமெடுத்த ஐந்து நாகச்சிலைகள் உள்ளன. கோபுரம் கர்ண கூடுகளும் தேரின் அமைப்பும் சித்தர வேலை பாடுகளும் கொண்டதாக அமைந்துள்ளது.

நாகராஜா கோவில் வடக்கு வாசல் கோபுரம் மூன்று தளங்களைக் கொண்டது. கோபுரத்தின் அடிப்பகுதியில் முனிவர், பாவை விளக்கு, அடியவர் ஆகிய சிற்பங்களும் முதல் தளத்தில் இரு பூதங்களின் சிற்பங்களும் இரண்டாம் மூன்றாம் தளங்களில் தெய்வங்களின் சிற்பங்களும் உள்ளன. கோபுரத்தின் உச்சியில் ஐந்து தலைகள் கொண்ட பூதத்தின் தலை உள்ளது.

கோவில் தெற்கு வாசல் கோபுரம் உச்சியில் மூன்று மாடங்களுடன் அமைந்துள்ளது. நடுமாடத்தில் கிருஷ்ணன் இரு தேவியருடன் நின்ற நிலையில் காணாப்படுகிறார். ஐந்து தலை நாகக் குடையின் அடியிலும் தேவிகள் இருவரும் ஐந்து தலை நாகக் குடையின் அடியிலும் உள்ளனர்.

மகாமேரு மாளிகை என அழைக்க்ப்படும் நாகராஜா தெற்கு வெளிப்புற வாயில் இருபுறமும் கல்லாலும் மேற்பகுதி மரத்தாலும் ஆனது. கேரள பாணி கட்டட அமைப்பில் ஓட்டுக் கூரையுடன் சாரளங்காளுடனும் வாயிலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

நாகராஜ கோவில் கிழக்கு வெளி வாயில் மேல் மரச்சட்டங்கள் மேல் ஓட்டு கூரையுடன் சிறு கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. கேரள பாணியிலான இந்த கோபுர அமைப்பின் இருபுறமும் கலசம் போன்ற உருவம் உள்ளது.

சிற்பங்கள்

கருவறைச் சிற்பங்கள்

அனந்தகிருஷ்ணன்: அனந்தகிருஷ்ணன் கருவறையில் இருக்கும் அனந்தகிருஷ்ணன் சிலை 23 - ஆவது சமண சமயத் தீர்தங்கரரான பார்சுவநாதரின் யகூஷன் தர்னேந்திரனான நாகராஜா சிலை என்று முனைவர் சிவ. விவேகானந்தன் கூறுகிறார். நாகராஜா சந்நிதியாக இருந்து 16 - ஆம் நூற்றாண்டிற்கு பின் அனந்தகிருஷ்ணன் சந்நிதியாக மாறியதாக ஆய்வாளர் செந்தீ நடராசன் கூறுகிறார். அனந்தகிருஷ்ணன் சிலை கடு சர்கரையால் செய்யப்பட்டது. சிற்பம் மூன்றடி உயரம் மற்றும் முக்கால் அடி அகலம் கொண்டது. கடுச் சர்கரையால் செய்யப்பட்ட சிற்பம் என்பதால் சிலைக்கு அபிஷேகம் இல்லை. அனந்தகிருஷ்ணன் ஆடையின்றி நிர்வாணமாக கிரீட மகுடம் அபய முத்திரையுடன் நின்ற நிலையில் நாகக் குடைக்குள் உள்ளார். சிலைக்கு அரைஞாண் பூணப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர் எஸ். ராமச்சந்திரன் கூறுகிறார். மனித உருவ சிற்பத்தின் இடையிலிருந்து நாகம் மேலெழுந்து தலை மேல் படம் விரித்து நிற்கிறது. அனந்தகிருஷ்ணன் சிற்பத்தின் இருபுறமும் மூன்றடி உயரத்தில் உள்ள சிற்பங்கள் தற்போது பாமா மற்றும் ருக்குமணி சிற்பங்களாக அறியப்படுகிறது. இவை பத்மாவதி மற்றும் அம்பிகா சிற்பங்கள் என்று சிவ. விவேகானந்தன் கூறுகிறார்.

நாகர்: நாகராஜா சந்நிதியில் ஐந்து தலைகள் கொண்ட நாகர் சிலை உள்ளது. ஒரு தலை உடைந்த நிலையில் உள்ளது. இச்சிலை சுயம்புவாக தோன்றியதாக பரவலாக அறியப்படுகிறது.

சிவலிங்கம்: நாகராஜா கோவில் சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் மற்றும் ருத்ர பாகம் சேர்த்து அரை அடி உயரத்தில் உள்ளது. பூஜா பாகம் மட்டும் சுமார் 1.25 அங்குலம் உயரம் கொண்டது. கருவறையின் முன் ஒரு அடி உயரமுள்ள நந்தி சிற்பம் அமர்ந்த நிலையில் உள்ளது.

கன்னி மூலை விநாயகர்: ஒன்றரை அடி உயரம் கொண்ட விநாயகர் சிற்பம் நான்கு கைகள் கொண்டது. சிலையின் வலது மேற் கரத்தில் சங்கும் வலது கீழ்க்கரத்தில் அங்குசமும் இடது மேற்கரத்தில் மோதகமும் இடது கீழ்கரத்தில் அபய முத்திரையும் என வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் கருவறையில் 2.25 அடி உயரத்தில் நாகக்குடையின் கீழ் இருக்கும் லிங்கச் சிற்பம் காணப்படுகிறது. சிவலிங்கச் சிற்பம் 3.25 அகல பீடத்தின் மீது உள்ளது. விநாயகர் கருவறையில் வெண்ணைக் கிருஷ்ணன் சிற்பமும் உள்ளது.

துர்க்கை: நாகராஜா கோவில் துர்க்கையம்மன் சிற்பம் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. வலது வெளிப்புற கையில் சக்கரமும் இடது வெளிப்புற கையில் சங்கும் உள்ளன. உள்புற கைகளில் இடது கை தொங்கிய நிலையிலும் வலது கை அபய முத்திரையுடனும் உள்ளன. துர்கையின் சிங்க வாகனம் சந்நிதி முன் படுத்த நிலையில் உள்ளது.

பாலமுருகன்: நாகராஜா கோவில் பாலமுருகன் சிலை மூன்றடி உயர நின்ற கோலத்தில் உள்ளது. கரண்ட மகுடத்துடன் வலது கையில் அபய முத்திரையும் இடது கையில் வரத முத்திரையும் தாங்கியபடி உள்ளது. பாலமுருகன் சந்நிதியில் ராஜ கணபதி சிலை ஒன்று காணப்படுகிறது. கணபதி கரங்கள் உடைந்த தந்தம், சங்கு மற்றும் பாசாங்குசம் தாங்கியபடி உள்ளன. பாலமுருகன் சந்நிதி முன் 3.5 அடி உயரமுடைய வீரபாகு மற்றும் வீரமகேசுவர் சிலைகள் உள்ளன.

கிருஷ்ணன்: நீல நிற குடையின் கீழ் இடக்காலை சாய்வாக மடக்கி நின்ற கோலத்தில் குழல் ஊதும் நிலையில் கிருஷ்ணன் சிலை உள்ளது. தலையில் கிரீடமும் கிரீடத்தில் மயில் பீலியும் காணப்படுகிறது. மூன்றடி உயரத்தில் உள்ள இச்சிற்பத்தின் காதுகளில் குண்டலம் கழுத்தில் மாலைகள் காள்களில் சலங்கை ஆகியவை காணப்படுகிறது.

இடும்பன்: நின்ற கோலத்தில் முறுக்கு மீசையும் விரித்த சடையுமாக இடும்பன் சிலை காணப்படுகிறது. இடும்பன் இரண்டு பக்கங்களிலும் பாரம் கொண்ட கம்பை சுமந்தபடி உள்ளார். மூன்றடி உயரமுள்ள சிற்பத்தின் தலையில் கிரீடம் சூட்டப்பட்டுள்ளது.

சாஸ்தா: சாஸ்தா சிற்பம் வலது தொங்கிய நிலையிலும் இடது கால் மடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. வலது கரத்தில் தாமரை மொட்டும் தலையில் கிரீடமும் அணிந்து காணப்படுகிறார்.

நாகமணி பூதத்தான்: ஐந்து தலை நாகக் குடையின் கீழ் தலையில் கிரீடம் கைகளில் கதையுடன் மூன்றடி உரத்தில் அமைந்துள்ளது நாகமணி பூதத்தான் சிலை.

துவாரபாலகர்கள்

நாக துவாரபாகர்கள்: நாகராஜா கோவிலில் காணப்படும் நாக துவாரபாலகர் சிற்பங்கள் அரிதானவை. சிற்பங்கள் ஏழு அடி உயரத்தில் ஐந்து தலைகள் படமெடுத்தபடியும் வால் சுருண்டபடியும் அமைந்துள்ளன. இடது பக்க நாகத்தின் படம் சிறிதாகவும் வலது பக்க நாகத்தின் படம் பெரிதாகவும் காணபபடுகிறது. இவை பார்சுவநாதரின் யக்‌ஷன் தர்னேந்திரன் மற்றும் யக்‌ஷி பத்மாவதியாக கொள்ளப்படுகின்றன. தர்னேந்திரனின் படத்தில் பார்சுவநாதரின் சிறிய சிலை உள்ளது.

அர்த்தமண்டப துவாரபாலகர்கள்: நாகரம்மன் சந்நிதி வழியாக அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்போது வீரர்கள் போன்ற தோற்றத்தில் இரு அர்த்தமண்டப துவாரபாகர் சிற்பங்கள் உள்ளன. இடப்பக்க சிற்பத்தின் இடது கை விஸ்மயா முத்திரையுடனும் வலது பக்கச் சிற்பத்தின் வலது கை சூசி முத்திரையுடனும் காண்டப்படுகின்றன. இடது பக்க சிற்பத்தின் வலது கால் தூக்கிய நிலையிலும் இடது கை ஊன்றி நிற்கும் கதையின் நுனியை பிடித்தவாறும் அமைந்துள்ளது. சிற்பங்கள் தலையில் கிரீடமும் காதுகளில் குண்டலமும் கழுத்தில் மாலையும் கால்களில் தண்டையும் அணிந்தபடி உள்ளன. கால் முட்டு பகுதிக்கு மேலுள்ள தொடை வரை சல்லடம் போன்ற ஆடை அணிந்துள்ளன. தூக்கிய கால்களுக்கிடையில் மணிமாலை தொங்கியபடி காணப்படுகின்றன.

புடைப்புச் சிற்பங்கள்

நாகராஜா கோவில் கல்தூண்களில் சுவர்களில் தரையில் இந்து மற்றும் சமணம் சார்ந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

மகாவீரர்: மகாவீரர் பத்மாசன நிலையில் கைகளில் சிங்க முத்திரையுடன் அமர்ந்துள்ள சிற்பம் ஒரு தூணின் கிழக்குப் பக்கம் உள்ளது. மகாவீரர் நீண்ட காதுகளுடன் தியான நிலையில் உள்ளார். அவர் தலையின் மேல் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் என்னும் மூன்று குடைகள் உள்ளன.

நேமிநாதர்: நாகராஜா கோவில் தூண் ஒன்றில் நேமிநாதர் முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சிற்பம் அழகிய வேலைபாடுகளுடன் உள்ளது. தேவ கன்னியர் இரு புறங்களிலும் காணப்படுகின்றனர்.

பார்சுவநாதர்: நாகராஜாகோவிலில் நின்ற கோலத்தில் உள்ள பார்சுவநாதர் சிற்பங்கள் இரு தூண்களில் காணப்படுகின்றன. தலை மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளன. நீண்ட இரு கைகள் திங்கிய நிலையில் உள்ளன.

பத்மாவதியும் அம்பிகையும்: ஒரு தூணில் பத்மாவதி சிற்பமும் மற்றொரு தூணில் அம்பிகை சிற்பமும் உள்ளன. பத்மாவதி மூன்று தலை நாகப் பீடத்தின் மீது அபய வரத முத்திரைகளுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.

நாகர் சந்நிதி வாயில் மேற்சுவரில் பத்மாவதியும் அம்பிகையும் நின்ற கோலத்தில் மலர்களுடன் உள்ளனர். அவர்கள் தலைமேல் மூன்று தலை நாகம் படமெடுத்து நிற்கின்றன.

முக்குடை நாதர்கள்: நாகராஜா கோவில் உள்பிரகார சுவர்களிலும் போதிகைகளிலும் பல முக்குடைநாதர்களின் சிற்பங்கள் உள்ளன.

தர்னேந்திரன்: நாகராஜா சந்நிதி வாயில் மேற்சுவரில் கிரீட மகுடம் அணிந்து அபய முத்திரையுடன் தர்னேந்திரன் காணப்படுகிறது. நாகம் ஒன்று தர்னேந்திரனின் இடுப்பில் சுற்றி தலை மேல் படம் விரித்து நிற்கிறது.

பரந்தாமன்: அனந்தகிருஷ்ணன் சந்நிதி சுவரின் மேல் அழகிய வேலைபாடுகளுடைய திருவாசியினுள் பாம்பணையில் படுத்திருக்கும் பரந்தாமன் சிற்பம் உள்ளது. பரந்தாமன் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டியபடி படுத்துள்ளார். இடது கையை நீட்டி வலது கையை மடக்கியபடி உள்ளார். திருவாசியின் வெளியே இருபுறம் இரு பெண்களின் சிற்பங்கள் உள்ளன.

சிவலிங்கம்: அர்த்தமண்டபத் தூண்களில் சிவலிங்க புடைப்பு சிற்பங்கள் உள்ளன. திருவாசியினுள் சிவலிங்கம், நாகங்களின் நடுவே சிவலிங்கம், பசு பால் சுரக்கும் சிவலிங்கம், காகம் பூஜை செய்யும் சிவலிங்கம், குரங்கு பூஜை செய்யும் சிவலிங்கம் என சிவலிங்கங்கள் காணப்படுகின்றன.

கிருஷ்ணன்: புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், ராதையுடன் ஆலிங்கனம் செய்யும் கிருஷ்ணன், கோபியருடன் விளையாடி மரத்தில் இருக்கும் கிருஷ்ணன், தவழும் பாலகிருஷ்ணன், அரிட்டனை வதைக்கும் கிருஷ்ணன், இரண்யவதம் செய்யும் கிருஷ்ணன் என சிருஷ்ணன் சிற்பங்கள் உள்ளன.

காளி: காளி நின்ற கோலத்தில் அபய வரத முத்திரைகளுடன் கதை, கத்தி, சங்கு, சக்கரம், வாள், கேடயம் போன்ற ஆயுதங்கள் தாங்கியபடி காளி சிற்பம் ஒன்று காணப்படுகிறது.

ராமர்: அனுமன் தோள் மீது அமர்ந்த ராமன், வில் ஏந்திய ராமன் என நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் ராமர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. நின்ற கோலத்தில் லட்சுமணன் சிற்பமும் உள்ளது.

முருகன்: முருகன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கால் மடக்கி ஒரு கால் தொங்கவிட்டு அபய வரத முத்திரைகளுடன் முருகன் சிற்பம் அமைந்துள்ளது.

பிற தெய்வங்கள்: நாகராஜா கோவிலில் வால் பீடத்தில் அனுமன், சேதுபந்தன அனுமன், விநாயகர், விஷ்ணு, இருபக்கமும் தேவியருடன் வரதராஜர், கருடாழ்வார், அர்சுணன் தபசு, இசக்கியம்மன், பகவானை ஏந்திய நிலையில் கருடாழ்வார், கரும்பு வில் வளைக்கும் மன்மதன், மலர் ஏந்திய ரதி ஆகிய சிற்பங்களும் உள்ளன.

விலங்குகள்: நாகராஜா கோவில் அர்த்த மண்டப தூண்களில் யானை, ஆமை, சிங்கம், யானையின் வாலைக் கடிக்கும் சிங்கம், யானை முதுகில் ஏறும் சிங்கம், குரங்கு, அன்னம், நாய், குதிரைத் தலை, கருடன், மான் மயில், காகம் ஆகிய விலங்கு மற்றும் பறவைச் சிற்பங்கள் உள்ளன.

மன்னர் குடும்பம்: அரச குடும்பத்தினர் உருவ சிற்பங்கள் அர்த்த மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. அரச குடும்பத்தினர் கை கூப்பி வணங்கியபடி நிற்கும் சிற்பங்கள், யானை மீது மன்னர் அமர்ந்திருக்கும் சிற்பம், மன்னர் ஆகிய மனித சிற்பங்கள் உள்ளன. இவை வேனாட்டை ஆண்ட மன்னர் குடும்பத்தினர் சிற்பங்களாக இருகலாம் என பொதுவாக கருதப்படுகிறது.

முனிவர்: தூண்களில் விரிசடை முனிவர், அஞ்சலி முத்திரையுடன் முனிவர், நிர்வாணப் பெண்ணைக் கண்டு உணர்ச்சியுடன் நிற்கும் முனிவர் என பல முனிவர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. வணங்கிய நிலையில் காணப்படும் அடியவர்கள் உள்பட பல அடியவர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

ஆண்கள்: கம்பு ஊன்றி நிற்கும் வீரன், கத்தியுடன் நிற்கும் வீரன், வில் வாளுடன் குறவன், அசுரன் காலடியில் மனிதன், குறவன் தோளில் மான், மத்தளம் கொட்டுபவர் ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன.

பெண்கள்: பெண்ணின் காலில் முள் எடுக்கும் சிற்பம், கடி முத்திரையுடன் ஒரு கையில் மலரும் கொண்ட பெண், சங்கு ஓது பெண், ஆடல் மங்கை, நிர்வாணப் பெண்(அருகில் உணர்ச்சியுடன் முனிவர்), மரத்தில் சாய்ந்து கண்டாடி பார்த்து ஒப்பனைச் செய்யும் பெண், வெஞ்சாமரம் ஏந்தி நிற்கும் பெண், விளக்குப் பாவை, வளையத்தினுள் முகம் ஆகிய பெண் சிற்பங்களும் உள்ளன.

மலர்கள்: நாகராஜா கோவில் மண்டப தூண்களில் பூக்களின் சிற்பங்கள், பூச்சித்திரச் சிற்பங்கள், வளையுத்துடன் பூச்சிற்பம், லில்லிப்பூச் சிற்பம், வில்வப்பூச் சிற்பம், தொங்க விடப்பட்ட மாலை, மலர்க் கொடி என மலர்களின் சிற்பங்கள் காணபடுகின்றன.

கருக்கணிகள்: நாகராஜா கோவிலில் அடைப்புக் கருக்கு, அன்னவால் கருக்கு, வட்டக் கருக்கு சிற்பங்கள் உள்ளன.

வடிவங்கள்: நாகராஜா கோவிலில் கும்பம், கும்ப பஞ்சரம், யாளி, சிங்க யாளி, ஐந்து தலை நாகம், வாயோடு வாய் ஒட்டிய நிலையில் மீன்கள், பறவையின் தோகை, சங்கு பூதம், பின்னிய நிலையில் இரட்டை நாகம், முகத்தோடு முகம் படம் விரிக்கும் இரு நாகங்கள் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

உலோகச் சிற்பங்கள்

நாகராஜா கோவிலில் நாகரின் அங்கி, அனந்தகிருஷ்ணன் அங்கி, உற்சவ மூர்திகள், விஷ்ணு சக்கரம், ஆமை விளக்கு, நாக விளக்கு, பலி பீடம், கோவில் விமான சிகரம், நாக துவாரபாலகர் அங்கி என உலோக சிற்பங்கள் உள்ளன.

அனந்தகிருஷ்ணன் அங்கி: அனந்தகிருஷ்ணனின் கடு சர்க்கரைச் சிற்பம் அனந்தகிருஷ்ணனின் வெள்ளி அங்கியால் பொதியப்பட்டுள்ளது. கிரீட மகுடம் அணிந்து தலை மேல் ஐந்து தலை பாம்பு படம் விரித்து நிற்பது போல அனந்தகிருஷ்ணன் அங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாகராஜா அங்கி: நாகராஜா கருவறையில் உள்ள நாகர் சிற்பம் ஒரு தலை உடைந்து நான்கு தலைகள் கொண்டதாக உள்ளது. நாகர் சிற்பத்தின் மேல் நிர்மால்ய தரிசனத்திற்கு பிறகு சுமார் ஒரு அடி உயரமுடைய ஐந்து தலை வெள்ளி அங்கி சார்த்தப்படுகிறது.

உற்சவமூர்த்தி(அனந்தகிருஷ்ணன்): அனந்தகிருஷ்ணன் கருவறையில் மூலவர் அனந்தகுஷ்ணன் முன்பாக அனந்தகிருஷ்ணனின் உலோகத் திருப்பலி உற்சவமூர்த்தி சிற்பம் உள்ளது. உற்வமூர்த்திச் சிற்பம் தலையில் கிரீடமும் தலைக்குமேல் படம் விரித்த ஐந்து தலை நாகமும் காணப்படுகிறது. சிற்பம் ஒரு கிலோ எடைக் கொண்ட செப்புத் திருமேனி. பத்மபீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள உற்சவமூர்த்தி சிற்பம் திருப்பலிச் சுற்றின் போது வெளியே எடுத்து வரப்படும்.

உற்சவமூர்த்திகள்(பாமா, ருக்மிணி): அனந்தகிருஷ்ணன் கருவறையில் பாமா மற்றும் ருக்மிணிகளின் திருப்பலி உலோக உற்சவ மூர்த்தி சிற்பங்கள் காணப்படுகின்றன. இப்போது பாமா ருக்மிணியென கருதப்படும் மூலச்சிற்பங்கள் பத்மாவதி மற்றும் அம்பிகை என

மரச் சிற்பங்கள்
வாகனங்கள்

வழிபாடு

திருவிழாக்கள்

வரலாறு

உசாத்துணை

  • தென்குமரி கோவில்கள், முனைவர் ஆ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு - 2018.
  • நாகராஜாகோவில், சிவ. விவேகானந்தன், காவ்யா பதிப்பகம், முதல் பதிப்பு - 2007.
  • குமரியில் சமணத்தின் சுவடுகள், செந்தீ நடராசன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2021.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.