second review completed

நவீனன்

From Tamil Wiki
எழுத்தாளர், இதழாளர் நவீனன் (படம் நன்றி: தினமணி)

நவீனன் (பி.கே. முத்துசாமி) (1918-2012) எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி.கே. முத்துசாமி என்னும் இயற்பெயரை உடைய நவீனன், திருவையாறுக்கு அருகில் உள்ள பூதலூரில் பிறந்தார். பள்ளிக் கல்வி மற்றும் புதுமுக வகுப்பு படித்தார்.

தனி வாழ்க்கை

நவீனன் இதழாளராகப் பணியாற்றினார். சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். மணமானவர். மனைவி: ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்; நான்கு மகள்கள்.

நவீனன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

நவீனன் தொடக்க காலத்தில் ‘பி.கே. முத்துசாமி’ என்ற தனது இயற்பெயரில் சிறுகதை, கட்டுரைகளை எழுதினார். அவரது எழுத்தில் இருந்த நவீனத்துவத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் சிரஞ்சீவி, ‘நவீனன்’ என்ற பெயரைச் சூட்டினார். அது முதல் ‘நவீனன்’ என்ற பெயரில் எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தினமணி கதிர்’ இதழில் தொடராக எழுதினார். அது ‘அண்ணாவின் கதை’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அதுபோல எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களைத் தொகுத்து ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்.’ என்ற தலைப்பில் எழுதினார்.

நவீனன் என்.டி. ராமராவ் தொடங்கி எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலிதா, சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பலருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார். எம்.ஜி.ஆரின் படங்கள் சிலவற்றிற்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றினார். சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை தினமணி கதிரில் தொடராக எழுதினார். தனது திரைப்படத்துறை அனுபவங்களை ‘நவீனின் நினைவுக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் எழுதினார்.

சினிமா எக்ஸ்பிரஸ் முதல் இதழ்

இதழியல்

நவீனன், தனது இளம் வயதிலேயே ‘நவயுவன்’ என்ற இதழுக்கு ஆசிரியரானார். அதில் அக்காலத்தில் இளம் எழுத்தாளர்கள் பலரது படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார். ஜெகசிற்பியன், பூவை எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட பலரது சிறுகதைகளை நவயுவன் இதழில் வெளியிட்டார். ‘மாலதி’ என்ற மாதமிருமுறை இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். விக்கிரமனின் முதல் சிறுகதை அதில் தான் வெளியானது.

’நவீனன்’ என்ற பெயரில் முழுக்க முழுக்க சினிமா செய்திகளை வெளியிடுவதற்காகவே இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். பொருளாதாரக் காரணங்களால் இதழ் சில மாதங்களிலேயே நின்று போனது. தொடர்ந்து சுதேசமித்திரன், மஞ்சரி, தென்றல் திரை உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றினார். சாவியின் வேண்டுகோளின்படி தினமணி கதிர் இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றினார்.

சினிமா எக்ஸ்பிரஸ்

தினமணி குழுமம் திரைப்படத்துறைக்காகவென்றே முதன் முதலில், 1980-ல், ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழைத் தொடங்கியது. நவீனன் இதழின் முதல் ஆசிரியராகப் பணியாற்றினார். சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழை அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

நவீனன், சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பல்வேறு புதுமைகளைக் கையாண்டார். திரைப்பட நடிகர்களின் வாழ்க்கையை, திரை அனுபவங்களை, திரைப்படச் செய்திகளை சுவாரஸ்யமான மொழியில் கட்டுரைகளாக்கினார். நடிகர்களின் நேர்காணல்கள், படங்களின் விமர்சனங்கள், சினிமா தொடர்பான பல அரிய செய்திகளை பல்வேறு புனைபெயர்களில் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் எழுதினார்.

பணி ஓய்வுக்குப் பின் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். இதழ்களில் பல கட்டுரைகளை, தொடர்களை எழுதினார்.

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது – 2009
  • மணிமேகலை மன்றம் வழங்கிய இலக்கியச் சாதனையாளர் விருது

மறைவு

நவீனன், பிப்ரவரி 29, 2012 அன்று, தனது 94-ம் வயதில் வயது மூப்பால் காலமானார்.

மதிப்பீடு

நவீனன் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், நாவல்கள் பலவற்றை எழுதியிருந்தாலும் திரைப்படத்துறை சார்ந்த மூத்த செய்தியாளராகவும், முன்னோடி இதழாளராகவுமே அறியப்படுகிறார்.

நூல்கள்

  • அண்ணாவின் கதை
  • நான் கண்ட எம்.ஜி.ஆர்.
  • சுவையான சந்திப்புகள் - டாக்டர் கலைஞர் முதல் ரஜினிகாந்த் வரை
  • நான் கண்ட தமிழ்வாணன்
  • மதுரம்: வாழ்க்கையோ வாழ்க்கை
  • வரலட்சுமியின் வாழ்க்கை
  • என் திரைப்படக் காதலர்கள் : அஞ்சலிதேவி (தொகுப்பு: நவீனன்)

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.