நவவேதாந்தம்

From Tamil Wiki

நவவேதாந்தம் (புதுவேதாந்தம்) : இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தம் காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்துகொண்டு அதன் அடிப்படைகளை தவறவிட்டுவிட்டது என்று எண்ணிய ஞானிகள் வேதாந்தத்தின் தத்துவ அடிப்படைகள் சமரசமில்லாமல் வலியுறுத்தியமையால் உருவானது. பின்னர் அவர்களின் மாணவர்களால் இந்திய வேதாந்தத்தை நவீன காலகட்டத்தின் மானுடவிடுதலைக் கருத்துக்களுடனும், சமூக மறுமலர்ச்சிக் கருத்துக்களுடனும், நவீன ஐரோப்பிய தத்துவக் கருத்துக்களுடமும் இணைத்து விரிவாக்கம் செய்வதன் வழியாக விரிவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சியில் நவவேதாந்தம் பெரும் பங்களிப்பாற்றியது.

வரலாறு

முதற்காலகட்டம்

இந்திய வேதாந்தத்திற்கு பல காலகட்டங்களிலாக பல பரிணாமப்படிநிலைகள் உண்டு. ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் பாடல்பகுதியே வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி எனப்படுகிறது. அதில் பிரம்மவாதம் கவித்துவதரிசனமாக உள்ளது. பிரம்மமே முழுமுதன்மை கொண்டது, பிற அனைத்துமாகி நின்றிருப்பது அதுவே என அப்பாடல் உணர்த்துகிறது. வேதங்களின் தத்துவ அடிப்படையை விளக்கும் ஆரண்யகங்கள் வழியாக பிரம்மவாதம் வளர்ச்சி அடைந்தது. பின்னர் உருவாகி வந்த உபநிடதங்கள் வழியாக திட்டவட்டமான தத்துவக் கொள்கையாக திரண்டது. பாதராயணர் எழுதிய பிரம்மசூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரங்கள் வேதாந்தத்தின் பிரம்மவாதக் கொள்கையை வரையறை செய்தது. வேதாந்தத்தின் இலக்கணநூலாக அது கருதப்படுகிறது. பிரம்மசூத்திரத்தின் பிரம்மவாத தத்துவத்தை பிற தத்துவங்களுடன் இணைத்து மேலும் வளர்த்தெடுத்த நூல் பகவத் கீதை. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகியவை மூன்றும் மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) எனப்படுகின்றன. (பிரஸ்தானத் த்ரயம்)

இரண்டாவது காலகட்டம்

பொமு 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்திய தத்துவ சிந்தனை மரபில் சமண- பௌத்த மதங்கள் மேலாதிக்கம் பெற்றன. அவை வேதாந்தத்திற்கு எதிரானவை என்பதனால் வேதாந்தம் பின்னடைவு பெற்றது. பின்னர் பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் தோன்றி பௌத்த சமயத்தின் தத்துவங்களுடன் விவாதித்து வேதாந்தத்தை தர்க்கபூர்வமாக விரிவாக்கினார். அது அத்வைதம் எனப்படுகிறது. அத்வைதத்திற்குப்பின்னர் வேதாந்த மரபு அத்வைதத்திற்கு எதிர்த்தரப்புகளாகவும் மாற்றுத்தரப்புகளாகவும் ஓரு விவாதக்களத்தை உருவாக்கிக்கொண்டது. விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் போன்ற வேதாந்தப் பிரிவுகள் உருவாயின. வேதாந்தத்துடன் விவாதித்து சைவசித்தாந்தம் உருவாகியது. சைவசித்தாந்தத்திற்குள்ளும் வேதாந்தம் சார்ந்த ஒரு தரப்பு உண்டு.

மூன்றாவது காலகட்டம்

ொயுக12டஆம் நூற்றாண்டுக்குப்பின் கடுமையான போக்கு கொண்ட இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் உருவானமையால் இந்து மரபை ஒருங்கிணைத்துக் காக்கும் பொறுப்பை வேதாந்தம் ஏற்றுக்கொண்டது. ஏனென்றால் வேதாந்தத்தின் பிரம்மவாதக் கோட்பாடு இந்து மதத்தின் எல்லா பிரிவுகளுக்கும் ஏற்புடையது. சங்கரர் ஆறு மதங்கள் (இந்து மரபு) ஐ ஒன்றாக்கினார். பொதுவான பூசகர்களின் மரபையும் சங்கர மடங்கள் உருவாக்கி நிலைநிறுத்தின. இதன் விளைவாக, மரபான வேதாந்தம் காலப்போக்கில் இந்தியச் சாதியமைப்புடனும், ஆசாரவாதத்துடனும் சமரசம் செய்துகொண்டது. வேதாந்தத்தை அது ஓர் உயர்நிலை தத்துவமாக மட்டுமே வைத்துக்கொண்டு நடைமுறையில் ஆசாரவாதம், வழிபாட்டுமுறைகள், சடங்குவாதம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது.

பொயு 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கமும், ஐரோப்பியக் கல்வியும் பரவியது. ஐரோப்பிய மனித சமத்துவக் கருத்துக்களும், மனித உரிமைக் கருத்துக்களும் வேரூன்றத்தொடங்கின. அக்கருத்துக்களின் விளைவாக இந்து மதத்தின் பழமைவாதம், ஆசாரவாதம், சாதிமுறை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான சீர்திருத்தங்கள் உருவாயின. இது இந்து மறுமலர்ச்சி எனப்படுகிறது. இந்து மறுமலர்ச்சியின்போது இந்துமதத்தின் அறிவார்ந்த மையமாக வேதாந்தமே முன்னிறுத்தப்பட்டது. வேதாந்தம் நவீன சிந்தனைகளுடன் உரையாடி தன்னை மறுஆக்கம் செய்துகொண்டது. அந்த புதியவேதாந்தம் நவவேதாந்தம் என பிற்கால தத்துவ வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறது.

தத்துவம்

வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்கள் இரண்டு. ஒன்று 'தூய அறிவு' என்னும் அணுகுமுறை. இது ஞானமார்க்கம் எனப்படுகிறது. இரண்டு 'அனைத்தும் ஒன்றே' என்னும் ஒருமைவாதம். இது பிரம்மவாதம் எனப்படுகிறது.

தூய அறிவு

வேதாந்தம் அறிந்து கடத்தல் வழியாக விடுதலை அடையப்படும் என முன்வைக்கும் அறிவுப்பாதை (ஞானமார்க்கம்) ஆகும். வேதங்கள் தூய அறிவையே முன்வைக்கின்றன என்று வேதாந்தம் சொல்கிறது. நவவேதாந்திகளில் ஒருவரான சி.சுப்ரமணிய பாரதியார் 'பல ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் உண்டாம் எனல் கேளீரோ!' என்று இதை தன் அறிவே தெய்வம் என்னும் பாடலில் குறிப்பிடுகிறார். தூய அறிவை முன்வைப்பதனால் வேதாந்தம் விசேஷ தளம் எனப்படும் உயர்நிலையில் வழிபாடுகள், சடங்குகள், ஆசாரங்கள், மதநம்பிக்கைகள் ஆகியவற்றை ஏற்பதில்லை. அவை சாமானிய தளம் எனப்படும் அன்றாடத்தில் ஓர் எல்லைவரை இருக்கலாம் என ஏற்கிறது. ஆனால் அவை அறிவுக்குத் தடையாக ஆகும் என்றால் அவற்றை மறுக்கிறது.

ஆகவே நவவேதாந்தம் மூடநம்பிக்கைகள், பழைய ஆசாரங்கள், பொருளிழந்துபோன சடங்குகள் ஆகியவற்றை நிராகரிக்கிறது. இந்து மரபின் மெய்ஞானம் என்பது பிரம்மமே என்றும், அதுவே இந்து மரபின் சாரம் என்றும் அது கூறுகிறது. இந்து மதத்தில் உள்ள பொருளிழந்துபோன பழைய ஆசாரங்களையும், மூடநம்பிக்கைகளையும், வெற்றுச்சடங்குகளையும் களைந்தால் அதன் மையம் மேலும் துலக்கமடையும் என்று நவவேதாந்தம் விளக்கியது.

ஒருமைவாதம்

வேதாந்தம் பிரம்மமே உண்மை, பிற அனைத்தும் மாயையே என்கிறது. பிரபஞ்சமாகவும், உயிர்க்குலமாகவும். உயிர்களில் பிரக்ஞையாகவும் திகழ்வது பிரம்மமே. பிரம்மம் அன்றி வேறேதும் இல்லை. அந்த ஒருமைவாதம் வேதாந்தத்தின் அடிப்படையான பிரம்மவாதம். ஒன்றான பிரம்மத்தை உயிர்கள் மாயையால் பலவான பிரபஞ்சமாக எண்ணி மயங்குகிறார்கள். அதில் இருந்து உலகியல் உருவாகிறது. உலகியலைக் கொண்டு எந்த அறியப்படும் குணங்களும் இல்லாத நிர்குண பிரம்மம் ஆகிய பரம்பொருளை உணர முடியாது. ஆகவே உலகியலில் திகழும் ஒருவர் பிரம்மம் என்னும் அறியமுடியாத ஒன்றை அறியப்படும் குணங்களை அளித்து சகுண பிரம்மம் ஆக வழிபடலாம் என வேதாந்தம் ஏற்கிறது. ஆனால் ஞானமார்க்கத்தின் உயர்நிலையில் பிரம்மத்தை அறிந்து, உணர்ந்து, பிரம்மமென தன்னை உணரும் நிலையே வீடுபேறு என முன்வைக்கப்படுகிறது

அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேனும் வேறுபாடில்லை. சங்கரரின் மனிஷாபஞ்சகம் போன்ற படைப்புகளின் சாராம்சம் அதுவே. ஆகவே நவவேதாந்தம் மானுடரிடையே பிரிவினையை நிராகரித்தது. உயிர்க்கொலையையும் மறுத்தது. நவவேதாந்திகள் தீண்டாமை, சாதிவேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான சீர்திருத்தப்பார்வை கொண்டிருந்தார்கள். மானுட இனத்தையே ஒன்றாகப் பார்த்தனர். உயிர்களனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் பார்வையை முன்வைத்தனர்.

நவவேதாந்திகள்

இந்தியா உருவாக்கிய நவவேதாந்திகள் மூன்று காலகட்டத்தினர். முதல் காலகட்டத்தில் அவர்கள் அன்று அறிமுகமான ஐரோப்பியக் கல்வியின் விளைவான ஐரோப்பிய சிந்தனைக்கு மிக அணுக்கமானவர்களாக இருந்தனர். இந்து மரபிலுள்ள பிரம்மவாதம் போன்ற சில கொள்கைகளை மட்டுமே முன்வைத்தார்கள். இந்து மரபிலுள்ள ஏராளமான பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்தனர். இரண்டாவது காலகட்டத்தினர் இன்னும் விரிவான பார்வை கொண்டிருந்தனர். தூய அறிவு, ஒருமைவாதம் ஆகியவற்றை அவர்கள் முன்வைத்தாலும் இந்து மரபிலுள்ள வழிபாடுகள், சடங்குமுறைகள் ஆகியவற்றிலுள்ள சிறந்த அம்சங்களை ஏற்றுக்கொண்டனர். இந்து மரபிலுள்ள பண்பாட்டுக் கூறுகளையும் முன்வைத்தனர். மூன்றாவது காலகட்டத்தினர் முந்தைய நவவேதாந்திகளின் மாணவர்களின் வரிசையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நவவேதாந்தத்தை நவீனக்கல்விமுறையுடன் சேர்த்து முன்வைத்தனர். பெரிய அமைப்புகளை உருவாக்கினர்.

முதல் காலகட்டம்

முதல்காலகட்டத்தைச் சேர்ந்த நவவேதாந்திகள் ஐரோப்பியக் கல்வி கற்று, கிறிஸ்தவ மரபுடனும் ஐரோப்பாவின் நவீன மானுடவிடுதலைக் கொள்கைகளுடனும் விவாதித்து உருவானவர்கள். அவர்கள் கடுமையான ஆசாரஎதிர்ப்பு மனநிலையும், பகுத்தறிவுப்பார்வையும் கொண்டிருந்தார்கள். இந்து மதத்தில் இருந்து வேதாந்தம் முன்வைக்கும் அடிப்படைத் தத்துவங்களை மட்டும் முன்னெடுத்து எஞ்சியவற்றை நிராகரிக்கவேண்டும் என்று கருதினர். அதற்கான அமைப்புகளை உருவாக்கினர்

ராஜா ராம்மோகன் ராய்

ராஜா ராம்மோகன் ராய் (1772 – 1833) வேதாந்தத்தின் தத்துவமான பிரம்மவாதத்தை மட்டுமே இந்து மரபில் இருந்து எடுத்துக்கொண்டு, கிறிஸ்தவ வழிபாட்டுமுறைகளின் வழியில் பிரம்மத்தை அறிந்து அணுகும் ஒரு துணைமதத்தை உருவாக்கினார். இது பிரம்ம சமாஜம் என அழைக்கப்பட்டது. ராஜா ராம்மோகன் ராய் இந்து மதத்தில் இருந்த மறைஞானச் சடங்குகள், ஆலயவழிபாடு, நோன்புகள், அன்றாடச்சடங்குகள் ஆகிய அனைத்தையும் நிராகரித்தார். கூடவே யோகப்பயிற்சிகள் போன்றவற்றையும் நிராகரித்தார்.

தயானந்த சரஸ்வதி

தயானந்த சரஸ்வதி (1824 –1883) வேதாந்தத்தின் பிரம்மவாதத்தையும், வேதகாலச் சடங்குகளையும் மட்டுமே இந்து மரபில் இருந்து எடுத்துக்கொண்டு ஒரு துணைமதத்தை உருவாக்கினார். இது ஆரியசமாஜம் எனப்படுகிறது. இந்துமதத்தில் வேதங்கள், முற்கால உபநிடதங்கள் ஆகியவற்றை மட்டுமே ஏற்றுக்கொண்டார். வேதஞானத்தை மட்டுமே முன்வைத்து பிற்கால வழிபாடுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை நிராகரித்தார். யோகப்பயிற்சிகளையும் பயனற்றவை என்று கருதினார்.

இரண்டாம் காலகட்டம்

ராமகிருஷ்ண பரமஹம்சர்

நவவேதாந்தத்தின் இரண்டாம் காலகட்டம் ராமகிருஷ்ண பரமஹம்சர் ( 1836 - 1886) ரில் இருந்து தொடங்குகிறது. அவர் தூய வேதாந்த மரபை முன்வைத்தாலும் இறைவழிபாடுகள், கலாச்சாரச் சடங்குகள் ஆகியவற்றை நிராகரிக்கவில்லை. யோகப்பயிற்சிகளையும் தேவையானவை என நினைத்தார். நவீனக் கல்வி பயின்ற இளைஞர்களுக்குரியதாக வேதாந்த மரபை முன்வைத்தார். அவருடைய வேதாந்தம் பக்திமரபுடன் முரண்பாடு இல்லாததாக இருந்தது.

விவேகானந்தர்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதாந்தக் கருத்துக்களை நவீன உலகுக்கு கொண்டுசென்றவர் விவேகானந்தர். (1863 - 1902) வேதாந்தத்தின் குரலாக ஐரோப்பா நோக்கி பேசியவர். வேதாந்தத்தை இந்துமதச் சீர்திருத்தக் கொள்கையாகவும், உலகுதழுவிய தத்துவக் கோட்பாடாகவும் முன்வைத்தார். யோகமரபுடன் வேதாந்தத்தை இணைத்து அதை ஒரு முழுமையான மெய்ஞான மரபாக நிலைநிறுத்தினார். நவவேதாந்தத்தின் முகம் விவேகானந்தர் வழியாகவே திட்டவட்டமாக துலங்கியது. ஹாஜிமா நகௌமுரா (Hajime Nakamura) போன்ற ஆய்வாளர்கள் நவவேதாந்தத்தை விவேகானந்தரில் இருந்து தொடங்குகின்றனர்

நாராயண குரு

நாராயணகுரு (1856 -1928 ) நவவேதாந்தத்தின் ஞானிகளில் முக்கியமானவர். சமூகசீர்திருத்தவாதி, தத்துவஅறிஞர் , மெய்ஞானி எனும் முகங்கள் கொண்டவர்.

மூன்றாம் காலகட்டம்

உசாத்துணை

அறிவே தெய்வம் பாரதி