ஆறு மதங்கள் (இந்து மரபு)

From Tamil Wiki

ஆறு மதங்கள் (இந்து மரபு) இந்து மெய்யியல் மரபுக்குள் உள்ள ஆறு வழிபாட்டுப்பிரிவுகள் ஆறுமதங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சைவம், வைணவ, சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மிகத்தொன்மையான காலத்திலேயே தனித்தனி வழிபாட்டு முறைகளாக உருவாகி மதங்களாக வளர்ந்தவை. இவற்றுக்கிடையே தத்துவப் பொதுத்தன்மைகளும், தொன்மங்கள் நடுவே இணைப்பும் உண்டு. இவற்றுக்கிடையே பூசல்களும் நிகழ்ந்ததுண்டு. சங்கரர் பொயு 8/9 ஆம் நூற்றாண்டில் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்தார். பின்னர் அவருடைய மரபினரால் ஆறுமதங்களுக்கும் உரிய பொதுவான பூசகர்மரபான ஸ்மார்த்த மரபு உருவாகியது. ஆறுமதங்களும் ஒன்றுடனொன்று இணையத்தொடங்கி சைவம் வைணவம் என இரண்டு பெருமதங்களாக மாறின. சாக்தம், கௌமார, காணபத்யம் ஆகியவை சைவத்துடனும் சௌரம் பெரும்பாலும் வைணவத்துடனும் இணைந்தது. இன்று இந்த ஆறுமதங்களின் தொகுப்பே இந்துமதம் என அழைக்கப்படுகிறது

பிற ஆறு மதங்கள்

மதம் என்னும் சொல்லுக்கு சம்ஸ்கிருதத்தில் உறுதியான தரப்பு என்றுதான் பொருள். ஐரோப்பியச் சொல்லான religion என்பதற்காந கலைச்சொல்லாக மதம் மாறியது பதினெட்டாம்நூற்றாண்டில்தான். ஆகவே பழைய நூல்களில் வெவ்வேறு ஆறு மதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை

வேதமதப்பிரிவுகள்

வேதங்களிலுள்ள மையத்தெய்வ வழிபாட்டை ஒட்டி வேதத்தை ஆறு மதங்களின் தொகுப்பாகப் பிரிப்பதுண்டு. ஐந்திரம் (இந்திரனை மையத்தெய்வமாகக் கொண்டது) சௌரம் (சூரியன்) ஆக்னேயம் (அக்னி) ஆகியவை முதன்மையானவை. சி.சுப்ரமணிய பாரதியார் ஆறுமதங்கள் என்னும் போது இந்த ஆறு வேதமதங்களையே குறிப்பிடுகிறார்

தரிசனங்கள்

ஆறு தரிசனங்களையும் ஆறு மதங்களாகக் குறிப்பிடும் வழக்கம் பழைய நூல்களிலுண்டு. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்னும் ஆறு தரிசனங்களும் ஆறு மதங்களாகச் சொல்லப்பட்டாலும் இன்று மதம் என்னும் கலைச்சொல் சுட்டும் பொருளில் அவை மதங்கள் அல்ல. அவற்றில் மையத்தெய்வங்களோ, வழிபாட்டு முறைகளோ ,அமைப்புகளோ இல்லை. அவை பிரபஞ்சத்தைப் பற்றிய கொள்கைகள் மட்டுமே

பிற மதங்கள்

பழைய நூல்களில் தார்க்கிக மதம், சார்வாக மதம் என பல்வேறு மதங்கள் குறிப்பிடப்படுகின்றன. தமிழில் மணிமேகலை அந்நூலில் உள்ள சமயக்கணக்கர் திறம் கேட்ட காதையில் ஏராளமான மதங்களை குறிப்பிடுகிறது. இவை மதங்கள் அல்ல, மெய்யியல் கொள்கைகளோ, தத்துவக் கொள்கைகளோ மட்டுமே

சம்பிரதாயங்கள்

ஆறுமத வரையறை

உசாத்துணை

Six Dharsanas Sivanada Online

The Darshanas: Six Schools of Indian Philosophy