under review

தீயின் எடை (வெண்முரசு நாவலின் பகுதி - 22): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 42: Line 42:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
<references />
<references />
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 12:27, 23 December 2022

தீயின் எடை ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 22)

தீயின் எடை[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 22) துரியோதனனின் மரணம், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் பாண்டவ மைந்தர்கள் தீயிட்டுக் கொல்லப்படுவது ஆகியனவற்றை விவரிக்கிறது. நகுலன் குருஷேத்திரப் போரில் பாண்டவர்கள் வென்ற செய்தியை முறைப்படி அஸ்தினபுரிக்கு அறிவிக்க வருவது வரையிலான செய்திகள் இந்தத் தீயின் எடையில் இடம்பெற்றுள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 22-ஆம் பகுதியான 'தீயின் எடை’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜூலை 2019 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 2019-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் தீயின் எடையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

குருஷேத்திரப் போரின் இறுதியில், சுனைநீருள் பேரூழ்கத்தில் ஆழ்ந்து தன் பிறவியைக் கடக்க முயற்சிசெய்யும் துரியோதனனைப் பீமனும் இளைய யாதவரும் இணைந்து, அவனின் தவத்தைக் கெடுக்க முயற்சி செய்கின்றனர். பின்னர், கதாயுதப்போரின் பீமன்ஆகப்பெரிய பிழையினைத் துணிந்துசெய்து, துரியோதனனை வீழ்த்துகிறான். பீமன் செய்த அந்த மாபெரும் பிழையினைத் தலைவணங்கி ஏற்பதுபோலவே துரியோதனன் எந்த விதமான சலனமும் இல்லாமல் தன் உயிரை ஒரு சுடரை அணைப்பதுபோல அணைத்து, தன்னை இந்த உலகிலிருந்து நீக்கிக் கொள்கிறான்.

துரியோதனனின் மரணத்தால் நிலைகுலைந்த அஸ்வத்தாமன் அதற்கு நிகரீடு செய்யவே இரவில், ஆயுதமின்றி, மருத்துவ முகாமில் புண்பட்டு வீழ்ந்திருக்கும் பாண்டவர்களின் புதல்வர்களைக் கொன்றுகுவிக்கிறான். இந்தப் போர்க்களத்தில் அதிசக்தியுடைய ஆயுதங்களைப் பயன்படுத்தாதவன் அஸ்வத்தாமனே என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். அதனை ஒரு நோன்பாகவே கொண்டிருந்தான் அஸ்வத்தாமன். உச்சமான மனநிலையழிவின் போது மானுடர்கள் எந்தக் கீழ்மைக்கும் இறங்குவார்கள் என்பதற்கு அஸ்வத்தாமனே சான்று.

தீயின் எடையில்தான்  சகுனியின் அகவாழ்க்கை பற்றிய வரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன. சகுனிக்கும் அவரின் மகனுக்குமான மனப்போராட்டங்கள் கூர்மையாக வெளிப்பட்டுள்ளன.

'வெண்முரசு’ நாவல் பகுதிகளில் அர்சுணனின் 'காண்டீபம்’ என்ற வில் பற்றியும் கர்ணனின் 'விஜயம்’ என்ற வில் பற்றியும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. இந்தத் தீயின் எடையில்தான்  தர்மரின் 'தயை’ என்ற வில் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. படைக்களத்துக்குப் பெயர் 'தயை’யா? என்ற இளிவரலுடன் அறிமுகமாகும் இந்த வில், எல்லா விற்களைக்காட்டிலும் அதிசிறந்தது என்பதை அறியமுடிகிறது. காரணம் இது தெய்வங்கள் கையாளும் வில். இது அறத்தின் சீற்றம். தன்னிலக்கைத் தானே தேரும் அம்புகளை எய்யும் வில் இது. எல்லாவற்றுக்கும் மேலாக இது தர்மனின் கையில் இருக்க வேண்டிய வில். அதை உணர்ந்ததால்தான், துரியோதனன் இதனைத் தான் வைத்துக்கொள்ளாமல் தர்மனிடமே கொடுத்துவிடுகிறான்.

பாண்டவர்கள் தன் தந்தையைப் போரறம் மீறிக் கொன்ற பின்னர் அவரைச் சிறுமை செய்த திருஷ்டத்யும்னன் மீது அஸ்வத்தாமன் பெருஞ்சினத்தில் இருந்தான். பெருஞ்சினம் எளிதில் தணிவதில்லை. அவை உள்ளத்திலும் உடலிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இலக்கை அடைந்த பின்னரும் தன்னுடைய தொடக்க விசையால் உந்தப்பட்டு அம்பு மேலும் மேலும் முன்னகர்வதைப் போல. அதனால்தான், திருஷ்டத்யும்னன் இறந்த பின்னரும் அஸ்வத்தாமனின் கால் அவனுடலை உதைத்துக்கொண்டே இருக்கிறது.

குருஷேத்திரத்தில் நிகழ்த்தப்பட்ட 'முற்றழிவு’ குறித்துத் துயருறும் யுதிஷ்டிரரிடம் இளைய யாதவர் கூறும் பதில், மானுட வாழ்வியல் யதார்த்தத்தை மேலும் மேலும் நிறுவி, உறுதிப்படுத்துகிறது. இளைய யாதவர் புன்னகையுடன், "எல்லாக் களங்களும் மண்மூடும்… இன்னும் பதினாறு நாட்களில் நினைவு என ஆகும். நாற்பத்தொரு நாட்களில் கடந்தகாலம் என உருக்கொள்ளும். ஓராண்டில் வெறும் சடங்கென்று நின்றிருக்கும்" என்றார்.

போர்க்களச் செய்திகளைப் பெண்கள் அறிந்து எதிர்கொள்ளும் மனப்பாங்கினை எழுத்தாளர் வெவ்வேறு வகையாகச் சித்தரித்துள்ளார். குந்தியும் திரௌபதியும் காந்தாரியும் பானுமதியும் வெவ்வேறு முறைகளில் அவற்றை எதிர்கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர். குந்தி அழிக்கப்பட்டவர்களைவிட அழிபடாமல் தப்பித்தவர்களைப் பற்றியே சிந்திக்கிறார். திரௌபதியின் உள்ளத்தில் எழுந்த மாயை அழிக்கப்பட்டவர்களின் குருதியை உண்டு செரிக்கிறார். பானுமதிக்குத் தன் கணவன் துரியோதனனின் மரணம் முன்னமே தன்னுள் பலமுறை எதிர்பார்க்கப்பட்டது போலத்தான் இருக்கிறது. காந்தாரிக்கு யாருடைய அழிவும் பெரிதாகத் தெரியவில்லை. பாண்டவ புதல்வர்களின் படுகொலை சார்ந்த ஒற்றைச் செய்திதான் அவரைக் கதறச் செய்கிறது.

அஸ்தினபுரியைத் துரியோதனன் ஆட்சிசெய்தாலும் அவனின் நிழலாக இருந்து ஆண்டவர் துரியோதனனின் முதல் மனைவி பானுமதிதான். துரியோதனன் குருஷேத்திரப் போருக்குப் புறப்பட்டதும் அஸ்தினபுரியின் ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பும் பானுமதியிடம் வந்துவிடுகிறது. அவள் தன்னளவில் திரௌபதியாகவே மாறிவிடுகிறாள். குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வென்ற செய்தியை நகுலன் முறைப்படி அஸ்தினபுரிக்கு அறிவிக்க வருகிறான். அப்போது, அஸ்தினபுரி எவ்வாறெல்லாம் பெண்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது விவரிக்கப்படுகிறது.

கதை மாந்தர்

இளைய யாதவர், துரியோதனன், பீமன், அஸ்வத்தாமன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் திருஷ்டத்யும்னன், கிருபர், கிருதவர்மர், திரௌபதி, பானுமதி, உப பாண்டவர்கள், சகுனி ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page