தக்கை இராமாயணம்

From Tamil Wiki
Revision as of 22:20, 6 May 2022 by Navingssv (talk | contribs) (Created page with "thumb|''தக்கை (இசைக்கருவி)'' தக்கை இராமாயணம், தக்கை என்னும் இசைக்கருவியின் தாளத்துக்கு ஏற்ப அமைந்த பாடல்களைக் கொண்ட இராமாயணம். தக்கை உடுக்கை போன்ற அமைப்பைக் கொண்ட இசைக்கரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தக்கை (இசைக்கருவி)

தக்கை இராமாயணம், தக்கை என்னும் இசைக்கருவியின் தாளத்துக்கு ஏற்ப அமைந்த பாடல்களைக் கொண்ட இராமாயணம். தக்கை உடுக்கை போன்ற அமைப்பைக் கொண்ட இசைக்கருவி. கொங்கு நாட்டில் இந்த இசைக்கருவி பிரபலமானது. வைணவக் கோயில்களில் கவுசிக ஏகாதசியிலும், அரையர் சேவையிலும் இக்கருவி வாசிக்கப்படும். கம்பனின் இராமாயணத்தை பின்பற்றி அப்படியே இயற்றப்பட்டது தக்கை இராமாயணம்.

ஆசிரியர்

Thakkai ramayanam.png

தக்கை இராமாயணத்தை இயற்றியவர் எம்பெருமான் கவிராயர். இவரை ஆதரித்தவன் மோரூர் கண்ணன், அத்தப்பனின் மகன் நல்லதம்பி காங்கேயன் என்பவன். எம்பெருமான் சங்ககிரி (பத்தார்பாடி) ஊரைச் சேர்ந்தவர். கொங்கு நாட்டில் வருவாய்த் துறையில் அதிகாரியாக இருந்தார். மதுரை முத்து வீரப்ப நாயக்கர் (1609 - 1623) காலத்தில் மதுரையில் சில காலம் இவர் இருந்திருக்கிறார். எம்பெருமான் வடமொழியில் புலமையும், வேதாந்த அறிதலும் கொண்டவர்.

எம்பெருமானின் மனைவி பூங்கோதை. பூங்கோதை ”திருச்செங்கோட்டுக் குறவஞ்சி” என்னும் சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார்.

எம்பெருமானை ஆதரித்த நல்லதம்பி காங்கேயன், நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவரை ஆதரித்த ஹொய்சாளப் படைத்தலைவனான சீயகங்கனின் மரபில் வந்தவன். காங்கேயன் மேரூர் சிவன் கோவிலில் திருப்பணி செய்திருக்கிறான்.

பதிப்பாசிரியர்

கி.பி. 1600 இல் இயற்றப்பட்ட தக்கை இராமாயணத்தைப் கு. அருணாசலக் கவுண்டர் பதிப்பித்தார். இவருக்கு இந்நூலின் ஒரே ஒரு ஏடு மட்டும் கிடைத்தது. அந்த ஏட்டை மேரூர் ஆதீனகர்த்தா சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

இந்நூலைப் பதிப்பிப்பதற்குக் காரைக்குடி கம்பன் விழா நிகழ்ச்சி ஒரு காரணமாக அமைந்தது. கம்பன் விழாவில் அருணாசலக் கவுண்டர் தக்கை இராமாயணத்தை அறிமுகம் செய்து பேசினார். அப்போது விழாவைத் தலைமைத் தாங்கிய தெ.பொ. மீ, “பட்டியும் தொட்டியுமான கொங்கு நாட்டில் தக்கை தவிர வேறு என்ன கிடைக்கும்” எனக் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். பின் அவரே, “இது கம்பனின் மாற்று வடிவம் போல் உள்ளது. இதைத் தேடி எடுத்துப் பதிப்பிக்க வேண்டும்” என்றிருக்கிறார். அதன் பின் அருணாசலக் கவுண்டர் முழு மூச்சாய்த் தக்கைப் பதிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்.

இந்த நூல் தமிழ்நாட் அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளிவந்தது. தக்கை இராமாயணப் பதிப்பு வரலாற்றில் தி. அ. முத்துச்சாமிக் கோனார், வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆகியோரின் பணியும் குறிப்பிடத்தக்கது.

கம்ப இராமாயணமும் தக்கை இராமாயணமும்

கம்பனின் இராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது தக்கை இராமாயணம். இது 3250 பாடல்களைக் கொண்டது. முனைவர் அ.கா. பெருமாள் இதைக், ”கம்பனின் காவியச் சுருக்கம்” என சொல்கிறார். கம்பனின் காவியத்தைப் போல் இதிலும் ஆறு காண்டங்கள் உண்டு. ஆனால் கம்பனின் சுந்தரக் காண்டம் தக்கை இராமாயணத்தில் சௌந்தர்ய காண்டம் என மாற்றப்பட்டுள்ளது. தக்கை இராமாயணத்திலும் படலம் என்னும் உட்பிரிவு வருகிறது. பெரும்பாலான படலத்தில் கம்பனின் படலப் பெயர் மாற்றப்படவில்லை.

இராமனைத் திருப்பி அழைத்துச் செல்ல பரதன் கங்கை நிதிக் கரையில் நிற்கிறான். எதிர் கரையில் குகன் இருக்கிறான். பரதனின் படைகள் இராமனை அழிக்க வந்தது என நினைத்த குகன் கோபம் கொள்கிறான். கச்சையை இறுக்கக் கட்டி கத்தியை இடையில் கட்டிக் கொள்கிறான். பற்களைக் கடித்து வேடர்களைப் பார்த்து வீரவசனம் பேசுவதைக் கம்பன்,

கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்

வெட்டிய பொழியினன் விழிக்கும் தீயினன்

கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்

கிட்டியது அமர் எனக் கிளரும் தோளினன்

என்கிறான். இதனைத் தக்கை இராமாயணத்தில்,

கச்சை கட்டி விற்பிடித்து

கச்சையின் மேல் கெட்டை கட்டி

செச்சை கொட்டி, இப்படை ஓர்

சிற்றொலியாம் நான் அரவம்

விச்சை கெட்டு இவரை விண்மேல்

விடுவன் என்றான் மேதினிமேல்

இச்சை கெட்டு வந்த தென்றான்

எழுக என்றான் தன் படையை

என்கிறது.

எம்பெருமான் கவிராயர் கம்பனில் இருந்து வேறுபடும் இடமும் உண்டு. சீதையை தேடிச் செல்லும் அனுமன் குழுவினர் ஒரு இலக்கில் புகுந்து அங்கு வழிதெரியாமல் மாட்டிக் கொள்கின்றனர். அங்கே தக்கை இராமாயணத்தில் இராமன் தொழுது இலக்கு மீளலாம் என வருகிறது,

கையால் விழி மூடி இராகவன் பேர்

கருதித் துதிசெய்மின் கவிகாள் என்றான்

கம்பனில் அனுமன் கொள்ளும் விஸ்வரூபம் காட்டப்படுகிறது.

ஆய்வாளர்கள் கூற்று

தக்கை இராமாயணத்தைப் பதிப்பித்த கு. அருணாச்சலக் கவுண்டர், “தக்கை இராமாயணம் ஓசையுடன் படிப்பதற்கு உரியது. இது காலசேப மரபைப் பின்பற்றியது” என்கிறார்.

”டி.கே.சி கம்பனைச் சுண்டிப் பார்த்து சுருக்கியது போலவே தக்கை இராமாயண ஆசிரியனும் கம்ப இராமாயணத்தின் சாரமாக ஆனால் தன் பார்வையில் தம் காலத்து நடையில் தக்கை இராமாயணத்தை உருவாக்கியிருக்கிறார்” என தன் இராமன் எத்தனை இராமனடி! நூலில் ஆய்வாளர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார். அருணாசலக் கவுண்டர் இதே கூற்றைச் சொல்ல, “எம்பெருமான் கவிராயர் கொங்கு நாட்டு டி.கே.சி” என்கிறார்.

இணைப் புனைவு

எம்பெருமான் கவிராயர் கம்பனைப் படித்துத் தன் காலமொழியில் பாடல்களை உருவாக்கினார். ஒரு படைப்பாளியின் தேர்ந்தெடுத்த படைப்பை மட்டுமே தரும் வழக்கம் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் நடந்திருக்கிறது. இதே போல் நிகழ்ந்த மற்றொரு படைப்பு கந்த புராணச் சுருக்கம்.

உசாத்துணை

  • இராமன் எத்தனை இராமனடி ! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு

வெளி இணைப்புகள்