டேனியல் பூர்

From Tamil Wiki
Revision as of 21:13, 28 February 2022 by Jeyamohan (talk | contribs)
டேனியல் பூர்

டேனியல் பூர் (Daniel Poor ) ( 27 ஜூன் 1789 - 3 பெப்ருவரி 1855) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை குருமடம் என்னும் கல்வியமைப்பை நிறுவிய அமெரிக்க மதப்பரப்புநர். பிரெஸ்பிடேரியன் (Presbyterian) மதக்குழுவைச் சேர்ந்தவர். கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

டேனியல் பூர் ஜூன் 27, 1789ல் ஜோசப் மற்றும் மேரி (ஆபட்) பூர் தம்பதியினரின் 12ஆவது பிள்ளையாக டென்வர், மாசச்சூசஸ்ட்டில் பிறந்தார். பிலிப்ஸ் அக்காடமி அண்டோவர் ( Phillips Academy, Andover) கல்விநிறுவனத்தில் 1805லும் டார்ட்மவுத்தில் 1811லும் பட்டங்கள் பெற்று தனது இருபத்தைந்தாவது வயதில் அண்டோவர் இறையியல் செமினரியில் 1814லும் பட்டம் பெற்றார். மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நியூபரிபோர்ட் பிரெஸ்பிடேரியன் சபையில் 1815ஆம் ஆண்டு மதப்பணியாளராக திருப்பொழிவு (Ordination) பெற்றார்.

தனிவாழ்க்கை

மாசசூசெட்ஸின் சேலத்தை சார்ந்த மசூசன் பல்பிஃஞ்சை அக்டோபர் 9, 1815ல் மணம் புரிந்தார். திருமணம் முடிந்து இரண்டு வாரங்க்களில் அக்டோபர் 23, 1815ல் சிலோனுக்குக் கிளம்பினார். பயணத்துக்கு முன்பாக மொழியியல் வல்லுனரான ரெவெரண்ட் வில்லியம் பெண்ட்லியை சந்தித்தார், அவருக்கு பூருடைய திறமை மீதோ, திட்டங்க்கள் மீதோ சிறந்த அபிப்பிராயம் இல்லை. பூர் குடும்பத்துடன், ஜேம்ஸ் ரிச்சர்ட்சும் அவரது மனைவியும், பென்சமின் சி. மெய்ஸும் அவரது மனைவியும் பயணித்தனர், கூடவே திருமணமாகாத சபைப்பணியாளர் எட்வர்ட் வாரனும் அவர்களுடன் பயனித்தார். அவர்கள் கொழும்புவிற்கு மார்ச் 22, 1816 அன்று வந்து சேர்ந்தனர், அங்க்கிருந்து விரைவிலேயே யாழ்ப்பாண தீபகர்ப்பத்திற்கு இடம் பெயர்ந்தனர். பூர் குடும்பமும் எட்வர்ட் வாரனும் தெல்லிப்பழையில் அக்டோபர் 16, 1816ல் குடியேறினர். அவர் மனைவி சூசன் மே 7, 1821ல் தெல்லிப்பழையில் காலமானார் அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். பூர் அதன் பின்னர் இங்கிலாந்தின் ஆன் நைட் என்பவரை ஜனவரி 21, 1823ல் மணம் முடித்தார்.

மதப்பணி

பூர் தெல்லிப்பழையிலும் அதன் அருகிலிருந்த கிராமங்களிலும் ஆங்கிலக் கல்வி வழங்குவயதில் முதன்மையானவர். அவரது வியத்தகு சேவையை அப்பகுதியிலுந்த ஏழைகளும், மத்திய மற்றும் உயர் மத்திய தர மக்களும் என்றும் நினைவில் கொள்கிறார்கள். ஏனெனில் 19ஆம் நூற்றாண்டில் பிற கிராமப்புறங்க்கலில் கிடைப்பதையும்விட சிறப்பான கல்வி அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.

அமெரிக்க மதபோதகர்கள் கிறீத்துவத்தைப் பரப்பும் பேரார்வத்துடனும் வெறியுடனும் இருந்தாலும் அவர்கள் அதை மட்டுமே செய்யாமல் நவீன கல்வியை வழுங்குவதிலும் முனைப்பாயிருந்தனர். 1813ல் கொழும்புவில் வந்திறங்கியவுடநேயே ரெவ். சாமுவெல் நெவெல் வரட்சியான வடக்குப் பகுதிகளில் ஆரம்பக் கல்வி வழங்க அனுமதியை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றுக்கொண்டார். உயர்கல்வி வழங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு நேரெதிராக யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த அமெரிக்க மதபோதகர்கள், மெத்தடிஸ்ட்டுக்கள் கல்வி இல்லாமல் மதமாற்றம் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள்ள நான்காண்டுகள் எடுத்துக்கொண்டனர். 1817ல் ரெவ். ஜேம்ஸ் லின்ச் இங்க்கிலாந்து தலைமையகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். ஆயினும் 1816ல் பூர் தடையின்றி தெல்லிப்பழையில் கல்விப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தது.

டிசம்பர் 9, 1816ல் பூர் "பொது இலவசப் பள்ளிக்கூடத்தை" ஆரம்பித்தார், தற்போது அது யூனியன் கல்லூரி என அழைக்கப்படுகிறது. இப்பல்ளி துவங்க்கப்பட்டது தெல்லிப்பழை டச் ஹாலில், 1813ல் ரெவ். சாமுவெல் நெவெல் அங்கே நுழைந்தபோது அது விஷப் பாம்புகள் நிறைந்த இடமாக இருந்தது. "பொது இலவசப் பள்ளிக்கூடம்" யாழ்ப்பாணத்தில் துவங்க்கப்பட்ட முதல் ஆங்கிலப்பள்ளிக்கூடமாகும். 1818ல் பூர் அதை ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியாக மாற்றினார். யாழ்ப்பாணத்தின் முதல் தங்கும் விடுதிகொண்ட பள்ளியும் அதுவே. ஆறு மாணவர்களுடன் அது துவங்க்கப்பட்டது. 1828ல் தேர்ச்சி பெர்ற முதல் மாணவர் சாமுவெல் லோசெஸ்டர் அங்கேயே ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பூர்தான் முதன்முதலில் பெண் மற்றும் தலித் மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்ட பள்ளி முதல்வர். முதன் முதலில் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவி மிராண்டா செல்லதுரை தலித் வகுப்பைச் சார்ந்தவர். 1821ல் மொத்தச் சேர்க்கை 11 மாணவர்களும் 3 மாணவிகளுமாய் இருந்தது.

துவக்கத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மதபோதனை செய்ய ஆரம்பித்த பூர், தமிழில் விரைவில் தேர்ச்சி பெற்று ஒரு வருடத்திற்குள்ளாகவே சரளமாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். பிற மதபோதகர்களில்உடல்னலம் குன்றியவரான எட்வர்ட் வாரன் கொழும்பிலிருந்து கிளம்பி ஆப்ரிக்கா சென்று 18181ல் காலமானார். அவர் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் கல்வியை வழங்க்குவதிலும் ஈடுபட்டிருந்தார். வாரனுடன் கேப் டவுன் சென்ற ஜேம்ஸ் ரிச்சர்ட் அங்க்கே நவம்பர் 25, 18181வரை அங்க்கிருந்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். மேலும் மூன்று வருடங்கள் தாக்குபிடித்தபின்னர் ஆகஸ்ட் 3, 1822ல் மறைந்தார்.

பூர் பின்னர் வட்டுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்து ஆண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். வட்டுக்கோட்டை குருமடம் எனப்படும் இப்பள்ளி அந்தப் பகுதியிலேயே முக்கியக் கல்விமையமாக மாறியது. நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் சபை ஆயர்களும் (பிஷப்) இதிலிருந்து வெளிச்சென்றனர். இன்று இது யாழ்ப்பாணக் கல்லூரி என அழைக்கப்படுகிறது.

பூருக்கு 1835ல் இறையியல் முனைவர் (டி.டி) பட்டம் வழங்க்கப்பட்டது. 1836ல் அவர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டு மதுரைக்கு வந்தார். அங்கே அவர் முப்பத்தேழு பள்ளிக்கூடங்க்களை நிறுவினார். ஊர்கள் தோறும் சென்று மதப்போதனை செய்து, கல்விநிலையங்களை உருவாக்கினார். பலமுறை மக்களிடம் குதிரைமீது அமர்ந்துகொண்டே உரையாற்றினார்.

தனது துவக்கத் தலமான தெல்லிப்பாழைக்கு 1841ல் திரும்பினார். 1848ல் அமெர்க்காவிற்குச் சென்ற அவர் அங்க்கே தனது பேச்சாற்றலால் மதபோதகப் பணி குறித்த ஆழமான தாக்கத்தை உருவாக்கினார்.1850ல் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார் பூர். மானிப்பாயில் பணியத் தொடர்ந்தார்

மறைவு

பூர் 1855ல் மானிப்பாயில் பரவிய கொடிய காலராவினால் காலமானார். அப்போது அவருக்கு வயது 73.


நினைவகங்கள், நூல்கள்

பூர் இலங்கைக்கு ஆங்கிலக் கல்வி வழியாகவும், தமிழ் மொழிச் சேவை வழியாகவும், சமுக முன்னேற்றம் வழியாகவும் மிகப் பெரும் தொண்டாற்றியுள்ளார். டேனியேல் பூர் நினைவு நூலகம் (டி.பி.எம்) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும் மத்திய நூலகம் ஆகும். தென்னிந்தியாவிலுள்ள பழம்பெரும் நூலகங்களில் இதுவும் ஒன்று. இது ஜூன் 28, 1915ல் சேவையைத் துவங்க்கியது. ரெவ். டேனியேல் பூரின் நினைவில் இது கட்டப்பட்டது.


அமெரிக்கர்களின் வாழ்க்கை வரலாற்று அகராதியில் பூரின் பணிகளைக்குறித்த காலவரிசைப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அவரது வாழ்க்கை குறிப்புக்களே அவரது எழுத்துலக பங்களிப்பாக அமைந்தன. பனோப்லிஸ்ட் மற்றும் மிஷனரி ஹெரல்ட் பத்திரிகைகளில் தொடர்ந்து இவை இடம்பெற்றன. அவற்றில் ஒரு மதபோதகர் சேகரித்த பல புதுமையான தகவல்கள் தமிழர்களைக் குறித்தும் அவர்களது நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறித்தும் இடம்பெற்றிருந்தன. அவரது ஆங்கில தமிழ் கடிதங்க்களும் வெளியிடப்பட்டுள்ளன. சீர்திருத்த திருச்சபையின் மதப்பரப்புப் பணியாளர்களிலே குறிப்பிடத்தகுந்த திறமையும் முக்கியத்துவமும் உடையவர் அவர்.