ஜே.பி.சந்திரபாபு

From Tamil Wiki
Revision as of 23:41, 15 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஜே.பி.சந்திரபாபு ( 5 ஆகஸ்ட் 1927- ) தமிழ் திரைப்பட நடிகர். பாடகர். நடனக்கலைஞர். தமிழில் நகைச்சுவை நடிப்பில் மேற்கத்திய பாணியை அறிமுகம் செய்தவர். தன் தனிவாழ்க்கையால் சந்திரபாபு தமிழி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜே.பி.சந்திரபாபு ( 5 ஆகஸ்ட் 1927- ) தமிழ் திரைப்பட நடிகர். பாடகர். நடனக்கலைஞர். தமிழில் நகைச்சுவை நடிப்பில் மேற்கத்திய பாணியை அறிமுகம் செய்தவர். தன் தனிவாழ்க்கையால் சந்திரபாபு தமிழில் ஒரு கலாச்சார அடையாளமாகவும் நவீனத்தொன்மமாகவும் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சந்திரபாபு 5 ஆகஸ்ட் 1927 ல் சுதந்திரப்போராட்ட தியாகியும், காங்கிரஸ் செயல்வீரரும், இதழாளருமான ஜே.பி.ரோட்ரிக்ஸ் ஃ பெர்னாண்டோவுக்கும் சுதந்திரப்போராட்ட வீராங்கனையும், கள்ளுக்கடை மறியல்போராளியுமான ரோஸ்லின் ஃபெர்னாண்டோவுக்கும் பதிமூன்று குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தார். சந்திரபாபுவின் இயற்பெயர் ஜோசப் பிச்சை பனிமயதாசன். டன்பிறந்தவர்கள் கிளாஸ்டன், மாணிக்கம்மாள், சத்யா, நெப்போலியன், துரைராஜ், ஏஞ்சலின், பனிமயதாசன் (சந்திரபாபு), ராஜம், ஜவகர், ஜோதி, நோபிள், ரவி, பெஞ்சமின். சந்திரபாபு பரதவர் குடியில் சந்திரகுலத்தில் பிறந்தவர், வீட்டுப்பெயர் பாபு. ஆகவே பின்னாளில் தன் பெயரை சந்திரபாபு என மாற்றிக்கொண்டார்.

தூத்துக்குடியில் அச்சகமும், சுதந்திரவீரன் என்னும் இதழும் நடத்திவந்தார் ரோட்ரிக்ஸ். தூத்துக்குடியில் சந்திரபாபு ஆரம்பக் கல்வி பயின்றார். 1939ல் ரோட்ரிக்ஸ் உப்புசத்யாக்கிரகத்தில் கலந்துகொண்டமைக்காகச் சிறை சென்றார். விடுதலைக்குப்பின் அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். சந்திரபாபு அவருடன் இலங்கைக்குச் சென்றார்.

இலங்கையில் ரோட்ரிக்ஸ் காலச்சக்கரம் என்னும் வார இதழை தொடங்கி நடத்தினார். சந்திரபாபு கொழும்பு செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் வரை பயின்றார். ஆங்கிலமும் சிங்களமும் நன்றாக உரையாடுவார். இலங்கையில்தான் சந்திரபாபு மேலையிசைப் பயிற்சியையும் பெற்றார். பைலோ பாடல்களில் ஈடுபாடு உருவாகியது. அந்த தாக்கம் இறுதிவரை அவருடைய பாடல்களில் இருந்தது.

1942ல் இலங்கையில் உலகப்போரின் நெருக்கடி உருவானபோது சந்திரபாபுவின் குடும்பம் மலைநகரமான ஹட்டனுக்கு குடிபெயர்ந்தது. ரோட்ரிக்ஸ் அங்கே ஒரு சிறிய கடை வைத்து நடத்தினார். அது கைகொடுக்கவில்லை. 1943ல் போர் முடிவுக்கு வந்தபோது ரோட்ரிக்ஸ் தன் குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறினார். அங்கே டி.எஸ்.சொக்கலிங்கம் பரிந்துரையால் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். சென்னைக்கு வந்த சந்திரபாபு திரைப்பட வாய்ப்புகளுக்காக தேடத்தொடங்கினார்.

சினிமா வாழ்க்கை

சந்திரபாபு சினிமாவுக்கு முயற்சி செய்வது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லை. சென்னை கார்ப்பரேஷன் பேரவை உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.வி.ஆச்சாரி சந்திரபாபுவை இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்திவந்த கலைவாணி ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனத்தில் சேர்த்துவிட்டார். அங்கே கோபிநாத் என்பவரிடம் சந்திரபாபு சினிமாநடனம் கற்றார். ஆனால் அங்கிருந்து உடனே வெளியேற நேர்ந்தது.

1945 ல் எழுத்தாளர் பி.எஸ். ராமையா தன அமராவதி என்னும் படத்தை இயக்கவிருந்தார். தினமணி ஆசிரியர்குழுவில் இருந்த புதுமைப்பித்தன் சந்திரபாபுவை ராமையாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். 1947ல் வெளிவந்த தன அமராவதிதான் சந்திரபாபு நடித்த முதல்படம். அதில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதன்பின் சந்திரபாபு மீண்டும் படவாய்ப்புகளுக்காக அலைந்தார். எஸ்.எஸ்.வாசன் தயாரித்து 1952 ல் வெளிவந்த மூன்று பிள்ளைகள் என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். வாய்ப்புக்காக அவர் துத்தநாகத்தை உண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அதைக்கண்டு இரங்கி வாசன் வாய்ப்பளித்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வாசன் சந்திரபாபுவுக்கு வாய்ப்பளிக்கவே மோகனசுந்தரம், சின்னத்துரை, தாய் உள்ளம் என சந்திரபாபு நகைச்சுவை வேடங்களில் நடித்தார். 1953ல் வெளிவந்த கண்கள் என்னும் படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். தன் படங்களில் பாடல்களை தானே பாடுவது சந்திரபாபுவின் வழக்கம். இன்னொருவருக்காக அவர் குரல்கொடுத்தது1954ல் வெளிவந்த பெண் என்னும் படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக ஒரு பாடலைப் பாடினார். 1955ல் எம்.ஜி.ராமச்சந்திரனுடன் குலேபகாவலி என்னும் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

தனிவாழ்க்கை

சந்திரபாபு 29 மே 1958 அன்று ஷீலா என்பவரை மதுரையில் திருமணம் செய்துகொண்டார். ஷீலாவின் அம்மா தமிழில் தமிழ் சினிமா முன்னோடியாகிய சாமிக்கண்ணு வின்சென்ட் குடும்பத்தில் வந்தவர். ஆங்கில இந்தியர். ஷீலாவின் அப்பா மதுரை டி.வி.எஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றினார். ஷீலா திருமணத்திற்கு பின் சந்திரபாபுவை பிரிந்து லண்டன் சென்று இன்னொருவரை மணந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. சந்திரபாபு அதன்பின் மணம்செய்துகொள்ளவில்லை.