under review

சைவ எல்லப்ப நாவலர்

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சைவ எல்லப்ப நாவலர் பொ.யு. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர், அருணாசல புராணம் போன்ற சைவ இலக்கியங்களை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சைவ எல்லப்ப நாவலர் திருவெண்காட்டிற்கு அருகிலுள்ள ராதாநல்லூரில் கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தார். அவர் பிறந்த ஊர் சீர்காழிக்கருகிலுள்ள பூந்தாழை எனவும் சிலர் கருதுகின்றனர். 'எல்' என்ற சொல் ஒளியைக் குறிப்பதால் 'எல்லப்பன்' சூரியனைக் குறிக்கும் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்வி கற்று தமிழில் புலமை பெற்றார். தருமபுரம் ஆதீனத்தில் சிவஞான தீட்சதரிடம் சமயக்கல்வி கற்று தீட்சை பெற்றார். தமிழ்ப் புலமையால் 'நாவலர்' என்ற அடைமொழியைப் பெற்றார். சைவத்தை நிலைநாட்டியவர் என்பதால் சைவ எல்லப்ப நாவலர் என்று பெயர் பெற்றார். திருவரங்கக் கலம்பகம் இயற்றிய பிள்ளைப்பெருமாள் ஐயங்காருடைய சமகாலத்தவர் எனச் சிலர் கருதுகின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

சைவ எல்லப்ப நாவலர் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது அத்தலத்தை சிறப்பித்து அருணாசல புராணம் திருவருணை அந்தாதி என இரண்டு நூல்களை இயற்றினார். திருவாரூர், திருவெண்காடு முதலிய தலங்களைப் பற்ரிய இலக்கியங்கள் எழுதினார். சௌந்தர்யலஹரிக்கு இவர் எழுதிய உரையும் அருணாசல புராணமும் சென்ற நூற்றாண்டில் பரவலாகப் பயிலப்பட்டு வந்தன.

சைவவெல்லப்ப நாவலனெனும்பேர்
தரித்தவன் சங்கரன் வசிக்கு
மைவகைத் தலத்தினடுவெனக்குலவு
மருணையின் புராணமாதியநூல்
தெய்வநேர் வரக்கண்டவருமெச் சிடுஞ்ச்சிர்
திகழ்தரத் தொடுத்தனவற்றை
கைவயினெழுதிச் சுமந்துரைத்துணர்ந்து
களிப்பவர் கணிக்கரும் பலரே

என்று புலவர் புராணமுடையார் பாடல் இவர் இயற்றிய சைவ இலக்கியங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பாடல்கள்

திருவருணைக் கலம்பகம்

சைவத்தின் மேல்சமயம் வேறு இல்லை அதில் சார்சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்திருத் தேவார மும்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் றாள்எம் உயிர்த்துணையே

அருணாசல புராணம்

ஒன்று உளது பூமிதனில் இன்று புதிதன்று உலகு முப்பரும் உயர்ந்த வெளியும்
என்று உளது அந்நாள் உளது வேத முடி மீதினில் இருப்பது அகலாமல் அதில் ஓர்
குன்றுதல் இல்லாத ஒரு வெற்பு உளது புண்டரிக கோளகையும் ஊடுருவியே
நின்று உளது தென் திசையில் என்றும் அழியாது நெடுநீர் உலகு வாழ்வு பெறவே.

படைப்புகள்

  • அருணாசலப் புராணம்
  • திருவருணைக் கலம்பகம்
  • செவ்வந்திப் புராணம்
  • செங்காட்டங்குடி புராணம்
  • திருவிரிஞ்சைப் புராணம்
  • தீர்த்தகிரிப் புராணம்
  • திருவெண்காட்டுப் புராணம்

உசாத்துணை

திருவருணைக் கலம்பகம், தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page