standardised

செண்பகராமன் பள்ளு: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
No edit summary
Line 55: Line 55:
* [https://www.jeyamohan.in/140503/ ஒரு மீனவ மன்னனின் புகழ் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]
* [https://www.jeyamohan.in/140503/ ஒரு மீனவ மன்னனின் புகழ் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)]


{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:32, 2 April 2022

செண்பகராமன் பள்ளு

செண்பகராமன் பள்ளு பள்ளு வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். இது குமரிமாவட்டத்தில் உள்ள கோவைக்குளம் என்னும் ஊரின் தலைவனான செண்பகராமன் காலிங்கராயன் என்னும் மீனவகுடியைச் சேர்ந்த ஆட்சியாளனை புகழ்ந்து பாடப்பட்டது.

தமிழகத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் தனியாட்சி செய்திருக்கிறார்கள் என்றாலும் ஒரு சில சாதியை சேர்ந்த ஆட்சியாளர்களைப் பற்றிய பதிவுகளே கிடைக்கின்றன. மீனவ குடியைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளரின் புகழைப் பாடும் இந்நூல் அந்த சாதியும் தனியாட்சி செய்தது என்பதற்கான ஆதாரம். தமிழகத்தின் மக்கள் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளில் ஒன்று என்னும் வகையில் இந்நூல் முக்கியமானது.

ஆசிரியர்

இந்நூலில் நூலாசிரியர் பெயர் இல்லை. ஆய்வாளர்களாலும் அதை கண்டறியமுடியவில்லை. ஆகவே வாய்மொழிப்பாடலாகவே இது நீடித்தது. பாடல் ஒன்றில் ஆசிரியர் ‘எந்த சந்நீக் குலாயு’ என்று சொல்வதிலிருந்து இவர் கிறிஸ்தவர் என்று ஊகிக்கமுடிகிறது. இவர் வேளாள குடிப்பிறந்த கவிஞர் என்றும் ஓர் ஊகம் உண்டு.

பதிப்பு வரலாறு

செண்பகராமன் பள்ளு

நாகர்க்கோயில் கோட்டாறு கார்மேல் அங்கில உயர்ர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக இருந்த எம்.ஜே.காலிங்கராயர் இந்நூலை 1942-ல் பதிப்பித்தார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை பிரதி ஒப்பீட்டு ஆய்வு செய்து உதவினார். எஸ். வையாபுரிப் பிள்ளை ஆங்கிலத்தில் ஒரு முன்னுரையும் அளித்தார். செய்குத்தம்பிப் பாவலர் சாற்றுகவி அளித்தார். திருவிதாங்கூர் அரசால் இந்நூல் பள்ளிப்பாடங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. 1947-ல் மறுபதிப்பு வந்துள்ளது.

இந்நூலை பதிப்பித்த எம்.ஜே.காலிங்கராயர் செண்பகராமன் காலிங்கராயனின் நேரடி வாரிசாக வந்தவர். இவர் எழுதிய குறிப்பில் தன் தந்தை சு.மரிய இஞ்ஞாசி காலிங்கராயரின் பழைய நூல்சேகரிப்பில் இந்நூலின் ஏட்டுப்பிரதியை கண்டடைந்ததாகவும், அதை பதிப்பிப்பதாகவும் சொல்கிறார். 150 பாடல்கள் கொண்ட இந்நூலில் 137 பாடல்களே கிடைத்தன. மொத்தம் மூன்று ஏடுகள் கிடைத்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி என்னும் ஊரில் ஒரு பிரதி கிடைத்தது.

நூல்வடிவம், உள்ளடக்கம்

இந்நூல் சிற்றிலக்கியங்களில் ஒருவகையான பள்ளு என்னும் வடிவம் கொண்டது. குமரிமாவட்டத்தில் உள்ள கோவைக்குளம் என்னும் ஊரின் தலைவனான செண்பகராமன் காலிங்கராயன் என்னும் மீனவகுடியைச் சேர்ந்த ஆட்சியாளனை புகழ்ந்து பாடப்பட்டது. பள்ளர்கள் தங்கள் பாட்டுடைத் தலைவனரான செண்பகராமன் காலிங்கராயனை புகழ்ந்து பாடுவதாக அமைக்கப்பட்டது. இது ஒரு செவ்வியல் நூல். நாட்டார்ப்பாடல்களின் கூறுகள் ஆங்காங்கே பயின்று வருகின்றன

வில்லேபுருவம் சரமே இருகண்கள் வெண்நகை ஒண்

பல்லே தரளம் இதழே பவளம் பழகு தமிழ்ச்

சொல்லே தரும் செண்பகராமன் வெற்பில் சுருண்டிருண்ட

அல்லே குழல் என்னை இவ்வண்ணமாக்கிய ஆயிழைக்கே

என்பதே பொதுவான இந்நூலின் மொழிநடை. பள்ளன் – பள்ளி உரையாடல்களில் பேச்சுமொழி வருகிறது

அந்தப்பேச்சை விடு போனபுத்தியை

     ஆனை கட்டி இழுத்தால் வருமோ

இந்தப்பாடு பட என் தலையின் எழுத்தைச்

    மற்றதேன் சொல்லவேணும்?

என்னும் நடை அமைந்துள்ளது. இந்த மொழிமாறுபாடு பொதுவாக பள்ளு இலக்கியங்களின் பாணி. குறவஞ்சி, பள்ளு இரண்டுமே நாட்டார்ப்பாடல் வடிவிலிருந்து சிற்றிலக்கியத்தகுதி பெற்ற இலக்கியங்கள். செண்பகராமன் என்பதும் காலிங்கராயன் என்பதும் பட்டப்பெயர்கள்தான். செண்பகராமன் என்பது சோழர்காலத்தில் நிலவுடைமையாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சோழமன்னர்களால் அளிக்கப்பட்ட பட்டம். பின்னர் திருவிதாங்கூர் ஆட்சியாளர்களும் அதை கடைப்பிடித்தனர். காலிங்கராயன் என்பது பழைய பாண்டியர்களால் அளிக்கப்படுவது. குமரிமாவட்டத்தில் கோவைக்குளம் பகுதியிலிருக்கும் பல கல்வெட்டுகளில் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. இந்த குடி எப்படியும் ஆயிரமாண்டுகள் தொடர்ச்சியாக இங்கே ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது என்பது இவ்விரு பட்டங்களுமே இவர்களுக்கு இருப்பதிலிருந்து தெரியவருகிறது.

”பகர அரிய செண்பகராமன் பண்ணை விளங்க நண்ணியே பறளியாறு பெருகி வார பான்மை பாரும் பள்ளீரே” என்ற வரி பறளியாற்றின் கரையில் இவனுக்கு நிலங்கள் இருந்திருப்பதை காட்டுகிறது. பறளியாறு இன்றைய மேல்மணக்குடி அருகேதான் கடலில் கலக்கிறது.

செண்பகராமன் காலிங்கராயன் கிறிஸ்தவ மதத்தினன் என்பது நூலில் சொல்லப்பட்டுள்ளது. கோவைக்குளத்திலுள்ள இஞ்ஞாசியார் கோயில், கன்யாகுமரியிலுள்ள அலங்காரமாதா கோயில் போன்றவற்றுக்கு இவன் நிதியளித்ததை நூல் குறிப்பிடுகிறது. ‘சந்த இஞ்ஞாசியார் பதசேகரத்தான்’ என்று நூலாசிரியர் பாட்டுடைத்தலைவனைக் குறிப்பிடுகிறார். கோவைக்குளத்தில் ஒரு பாறைமேல் கல்லுமூலை என இன்று அழைக்கப்படும் இடத்திலுள்ள பெரிய கற்சிலுவை செண்பகராமன் காலிங்கராயனால் நிறுவப்பட்டது என இந்நூலே சொல்கிறது.

செண்பகராமன் காலிங்கராயன் அக்கால சேரநாட்டு ஆட்சியாளர்களைப்போல் மருமக்கள் வழி முறைமை கொண்டவன். அவன் தந்தைபெயர் பெரியகுட்டி. செண்பகராமன் காலிங்கராயனின் மருமகன்களின் பெயர்களை நூல்கள் சொல்கின்றன. கற்பூரக் காலிங்கராயன், இவனை ஆசிரியர் மூத்தநயினார் என அழைக்கிறார். இவனே செண்பகராமன் காலிங்கராயனின் வாரிசு என்பது தெளிவு. இவன் தம்பி பிரஞ்சீஸ் கொலிவேர். இவனை நூலாசிரியர் இளையநயினார் என்று அழைக்கிறார். கற்பூரக் காலிங்கராயனின் மகன் சுவானி நயினார் என்று சொல்லப்படுகிறான்.

செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர் ராமேஸ்வரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் இருந்து குமரிமாவட்டத்தில் குடியேறியவர்கள் என்று நூலாசிரியர் சொல்கிறார். திரு உத்தரகோசமங்கையில் அவர்கள் கல்ரதம் ஓட்டினர் என்னும் செய்தி அங்கும் அவர்கள் அரசகுடியாகவே இருந்தனர் என்பதை காட்டுகிறது. செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர்  திருச்செந்தூர் முருகனுக்கு கல்மண்டபம் கட்டி அளித்த செய்தியும் சொல்லப்படுகிறது.

வரலாற்றுப் பின்புலம்

காலிங்கராஜன் பரத [பரதவ] குலத்தவன் என நூலாசிரியர் பல இடங்களில் சொல்கிறார். ‘குருகுலச் சாதிப் பரதன்’ என்கிறார். பண்டையன் என்றும் பழையன் என்றும் குறிப்பிடுகிறார். இவை பாண்டியர்களுக்குரிய அடைமொழிகள். செண்பகராமன் காலிங்கராயனுக்கு கொடியும் மாலையும் இருந்ததை நூல் குறிப்பிடுகிறது. கடம்பமாலையும், மயில்கொடியும். இவை அவன் தனிக்கோல் கொண்ட அரசன் என்றே காட்டுகின்றன. கோவைக்குளத்தை அடுத்து செண்பகராமன் புத்தன்துறை என்னும் கடற்கரை உள்ளது. இது செண்பகராமன் காலிங்கராயனால் அமைக்கப்பட்ட கடல்துறையாக இருக்கலாம். கீழ்மணக்குடி என்று அருகிருக்கும் கடற்கரை அழைக்கப்படுகிறது. இது அக்காலத்தைய முக்கியமான ஒரு துறைமுகம். அதன்மேலிருந்த கட்டுப்பாடே செண்பகராமன் காலிங்கராயனை செல்வாக்கு மிக்கவனாக ஆக்கியது, தனியாட்சி நடத்தவும் செய்தது.

இந்நூல் எழுதப்படும் காலகட்டத்தில் குமரிமாவட்டத்திலுள்ள கடற்கரைகள் முழுக்கவே போர்ச்சுகீசியர் ஆதிக்கத்திலிருந்தன. குறிப்பாக மணக்குடி துறைமுகம் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. செண்பகராமன் காலிங்கராயன் அவர்களுக்கு கப்பம் கட்டி வந்திருக்க வாய்ப்புண்டு. அக்காலகட்டத்தில் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் பாண்டியர்வழிவந்த அரசர்கள் ஆட்சியமைத்திருந்தனர். அவர்கள் நடுவே பூசல்கள் இருந்தன. இன்னொரு நாட்டார் பாடலான ‘கன்னடியன் போர்’ வள்ளியூரை ஆண்ட பாண்டியர்கள் நடுவே நிகழ்ந்த போரைப்பற்றிச் சொல்கிறது. இந்நூல் அந்தக் காலப்பின்னணி கொண்டது.

இந்நூலில் பல குறிப்புகளில் இருந்து இது எழுதப்பட்ட காலகட்டத்தில் கன்யாகுமரிப் பகுதி பாண்டியர்களின் நேரடி ஆட்சியில் இருந்தது என்று தெரிகிறது. 1738-ல்தான் திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மாவின் ஆட்சிக்கு வருகிறது. 1766 வரை கன்யாகுமரி பாண்டியர்களின் வசமே இருந்தது. 1766-க்குப்பின் மார்த்தாண்டவர்மா சிற்றரசர்களை ஒழித்து திருவிதாங்கூர் முழுக்க ஒரே ஆட்சியை கொண்டுவந்தார். ஆகவே இந்நூல் 1766-க்கு முன் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று தொகுப்பாசிரியர் கருதுகிறார். கோட்டாறில் சவேரியார் ஆலயம் கட்டப்பட்ட செய்தியை இந்நூல் அளிக்கிறது. சவேரியாருக்கு புனிதர் பட்டம் 1622-ல் அளிக்கப்பட்டது. எனவே இந்நூல் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக இருக்கலாம் என்பது பொதுக்கருத்து.

இந்நூலில் மதுரையின் வடுகர்படை நாஞ்சில்நாட்டில் நுழைந்ததும், அதனால் உருவான அராஜகமும் பேசப்படுகின்றன. இது 1634-ல் திருமலைநாயக்கரின் படைகள் நாஞ்சில்நாட்டில் நுழைந்த செய்தி. அதற்குப் பிந்தைய அராஜக நிலை முப்பதாண்டுகள் நீடித்தது. அப்போது காலிங்கராயன் போன்ற சிற்றரசர்கள் போர்ச்சுக்கீசியர்களுடன் தொடர்புகொண்டு தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு தனி முடியாட்சி நடத்தியிருக்க வாய்ப்புண்டு.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.