second review completed

சாலிவாஹனன்

From Tamil Wiki
சாலிவாஹனன் கட்டுரை

சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) (1920-1967) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் இலக்கியத்தின் முன்னோடி. கலாமோகினி இதழின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாலிவாஹனனின் இயற்பெயர் வி.ரா. ராஜகோபாலன். 1920-ல் பிறந்தார். காலமோகினி இதழ் நடத்துவதற்காக தன் கல்லூரிப்படிப்பைக் கைவிட்டார். கலாமோகினி இதழ் நடத்தி நஷ்டப்பட்டு பின்னர் கதர்கிராமத் தொழில் வாரியத்தில் பணியாற்றினார். திருமணம் 1944-ல் நடந்தது.

இதழியல்

சாலிவாஹனன் கலாமோகினி என்னும் மாதம் இருமுறை இதழைத் தொடங்கினார். ஜூலை 1942-ல் முதல் இதழ் வெளியாயிற்று. கலாமோகினி பழைய சென்னை மாகாணத்தின் திருச்சிராப்பள்ளி மட்டக்காரத் தெருவிலிருந்து வெளிவந்தது. மணிக்கொடி இதழ் உருவாக்கிய இலக்கிய அலையை முன்னெடுத்த இலக்கிய இதழ் என மதிப்பிடப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

சாலிவாஹனன் கவிதைகள் அதிகம் எழுதினார். சிறுகதைகள், கிண்டல் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், நாடகங்கள் எழுதினார். பழந்தமிழில் ஆர்வம் உடையவர். மணிமேகலையின் கதையை சுயசரிதையாக மணிமேகலையே கூறுவது போல உரை நடையில் தொடர்ந்து எழுதி வந்தார். ஒவ்வொரு கலாமோகினி இதழிலும் ’சங்க இலக்கியத்திலிருந்து’ என்று பாடல்களின் பொருளை வசனப்படுத்தி கொடுத்தார். கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய இடம்

சாலிவாஹனன் எழுத்தில் உண்மையின் வேகத்தோடு பரிகாசமும் நளினமான நகைச்சுவையும் இருக்கும். ”கவிதையில் ஒரு வேகமும், வசனத்தில் ஒரு கிண்டலும் அவர் சிறப்புகள்” என சி.சு. செல்லப்பா மதிப்பிட்டார்.

”க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சாலிவாஹனன் போன்ற சிற்றிதழ் முன்னோடிகள் சொந்தவாழ்க்கையை முற்றாகவே தியாகம் செய்து ஒருவகை தற்கொலைப்போராளிகள் போல இலக்கியம் என்ற இயக்கத்தை முன்னெடுக்க உழைத்தார்கள். விடாப்பிடியான அவர்களின் முயற்சியால்தான் இலக்கியம் இன்றளவும் நீடிக்கிறது.” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

விவாதம்

டி.கே.சி கம்பன் பாடல்களைத் திருத்தி பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்ததைக் கண்டித்து சாலிவாஹனன் கலாமோகினியில் ‘ஐந்தாம்படை வேலை’ என்ற கட்டுரையில் எழுதினார். “ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு உதவி செய்பவர்களைப் போல் நடித்துக் கொண்டு அதே காரியத்திற்கு பாதகமான செயல் செய்வதைத்தான் ஐந்தாம்படை வேலை என்கிறோம்” என்று தொடங்கி டி.கே.சி யைக் கண்டித்து கட்டுரை எழுதினார். இதற்கு வந்த எதிர்வினைகளை கலாமோகினியில் 'அம்பலம்' என்ற பகுதியில் எழுதினார்.

மறைவு

சாலிவாஹனன் 1967-இல் காலமானார்.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.