under review

சபரிநாதன்

From Tamil Wiki

To read the article in English: Sabarinathan. ‎

சபரிநாதன்
சபரிநாதன்

சபரிநாதன் (பிறப்பு: ஜனவரி 08, 1989) தமிழில் எழுதிவரும் கவிஞர். கவிதைகள், விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

நன்றி சுருதி டிவி

சபரிநாதன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சம்பத், முருகலஷ்மி இணையருக்கு ஜனவரி 08, 1989-ல் பிறந்தார். கழுகுமலை R.C. சூசை மேல்நிலை பள்ளியில் ஆரம்ப கல்வியும், கோவில்பட்டி புனித பால் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் உயர்நிலை கல்வியும் கற்றார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு (Electronics and Communications) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சபரிநாதன் 2017-ல் யுஹமதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். மகள் மீரா, மகன் அருகன். தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றுகிறார். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சபரிநாதன் பள்ளி காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் அதற்கு பள்ளி ஆசிரியர்கள் ஊக்கம் அளித்ததாகவும் குறிப்பிடுகிறார். பள்ளி மற்றும் கல்லூரி படித்த காலங்களில் எழுதிய கவிதைகளை முறையே 'படைப்பாளி' மற்றும் 'இலைகளுக்கு இடையே வானம்' என தொகுத்தார். தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக பிரமிள், தேவதேவன், தேவதச்சன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

சபரிநாதனின் முதல் கவிதைத் தொகுப்பு 'களம் – காலம் - ஆட்டம்' புதுஎழுத்து பதிப்பகம் வழியாக 2011-ல் வெளியானது. சபரிநாதன் மொழி பெயர்த்த ஸ்வீடிஷ் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் (Tomas Tranströmer) கவிதைகள் 'உறைநிலைக்குக்கீழ்' என்ற தொகுப்பாக வெளியானது. கவிதைகள் சார்ந்த விமர்சன கட்டுரைகள் எழுதிவருகிறார். தேவதச்சன் கவிதைகள் குறித்த தேவதச்சம் கட்டுரை குறிப்பிடத்தக்கது.

இலக்கிய இடம்

சபரிநாதன் தமிழின் பின் நவீனத்துவ கவிஞர். “இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன" என சபரிநாதனை நேர்காணல் செய்த பிரவீண் பஃறுளி குறிப்பிடுகிறார்.

விருதுகள்

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • களம்-காலம்-ஆட்டம் புது (எழுத்து வெளியீடு, 2011)
  • வால் (மணல் வீடு வெளியீடு, 2016)
  • துஆ (தன்னறம் வெளியீடு, 2024)
மொழிபெயர்ப்பு
  • உறைநிலைக்குக்கீழ் (கவிதைகள், கொம்பு வெளியீடு)

வெளி இணைப்புகள்


✅Finalised Page