under review

சங்கரி புத்திரன்

From Tamil Wiki
Revision as of 21:35, 14 February 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் சங்கரி புத்திரன் (படம் நன்றி: தினமலர்)
சங்கரி புத்திரன் சேஷன் சம்மான் விருதுடன் (படம் நன்றி: அமுதசுரபி இதழ்)

சங்கரி புத்திரன் (வெ. சுப்பிரமணியன்) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1932) எழுத்தாளர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றினார். இதழ்களில் பல்லாயிரக்கணக்கான துணுக்குச் செய்திகளை எழுதினார். ஆன்மிக நூல்கள் சிலவற்றை எழுதினார். சங்கரி புத்திரன் எழுதிய ’ஆன்மிகச் செல்வர்கள்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

வெ. சுப்பிரமணியன் என்னும் இயற்பெயர் கொண்ட சங்கரி புத்திரன், ஆகஸ்ட் 24, 1932 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆரணிப்பட்டியில், வெங்கட்ராமன் - சங்கரி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே தாயை இழந்ததால் தாத்தாவால் வளர்க்கப்பட்டார். திருச்சியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.

தனி வாழ்க்கை

சங்கரி புத்திரன், கோவை மற்றும் சென்னை மத்திய சிறைகளில் நான்காண்டுகள் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார். 1957-ல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியில் சேர்ந்து, 1990-ல், கணக்கு மேற்பார்வையாளராக ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: லட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள்; 2 மகள்கள்.

சங்கரி புத்திரனின் ஆன்மிகச் செல்வர்கள் நூல்

இலக்கிய வாழ்க்கை

சங்கரி புத்திரனின் 12-வது வயதில் அவரது ஊருக்கு வருகை தந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஆன்மிக விஷயங்களை ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பொதுமக்களுக்குப் படித்துக்காட்டுமாறு சங்கரி புத்திரனிடம் கூறினார். அதனை ஏற்று ஊரில் இருந்தவரை அப்பணியைச் செய்தார் சங்கரிபுத்திரன். அதற்காக வாசித்த புத்தகங்கள் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார்.

சங்கரி புத்திரன் தான் வாசித்த புத்தகங்களில் இருந்த இலக்கிய, ஆன்மிகத் தகவல்களை துணுக்குகளாக, சிறு சிறு கட்டுரைகளாக இதழ்களுக்கு எழுதினார். சங்கரி புத்திரனின் முதல் துணுக்கு தினமணி கதிரில் வெளியானது. 'தாய்' என்னும் தலைப்பிலான முதல் கட்டுரை கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் வெளியானது.

'சங்கரி புத்திரன் கோவை மத்திய சிறையில் பணிபுரிந்தபோது, அங்கு சிறையிலிருந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பால. தண்டாயுதம், வெ. சுப்பிரமணியன் என்ற பெயரில் எழுதி வந்தவரை, தாயாரின் பெயரையும் இணைத்து 'சங்கரி புத்திரன்' என்ற பெயரில் எழுதுமாறு கூறினார். அது முதல் ‘சங்கரி புத்திரன்’ என்ற பெயரில் எழுதினார்.

கிருபானந்த வாரியார், புலவர் கீரன், ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, கண்ணதாசன், அண்ணாதுரை, மு. கருணாநிதி என ஆன்மீக, இலக்கிய, அரசியல் நிகழ்வுகளுக்குப் பார்வையாளராகச் சென்று, நிகழ்வில் இடம்பெற்ற சுவையான விஷயங்களை துணுக்குகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதினார். தினமணி கதிர், கணையாழி, தீபம், அமுதசுரபி, கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, குமுதம், குங்குமம், ஆனந்த விகடன், சக்தி விகடன் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான துணுக்குகளையும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார்.

தினமணி கதிர் இதழின் ஆசிரியராக இருந்த கி. கஸ்தூரிரங்கன் ஆலோசனைப்படி கிருபானந்த வாரியார், கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், கீரன், சின்மயானந்தர், ஹரிதாஸ் கிரி உள்ளிட்ட பல ஆன்மீகச் சொற்பொழிவாளர்களை நேர்காணல் செய்து அதனைத் தொடராக எழுதினார். இத்தொடர் ‘ஆன்மீகச் செல்வர்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது. வானதி பதிப்பகம் அதனை வெளியிட்டது.

விருதுகள்

  • பாரதி இளைஞர் சங்கம் அளித்த ‘இலக்கியத் தேனீ’ பட்டம்.
  • அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பாராட்டு
  • துணுக்கு சக்கரவர்த்தி பட்டம்
  • சேஷன் சம்மான் விருது

மதிப்பீடு

ஆங்கில இதழ்களில் 'Tit Bits' என்ற தலைப்பில் வெளியான செய்திக் குறிப்புகளின் தமிழ் வடிவமே துணுக்குகள். சுதேசமித்திரன், விவேக சிந்தாமணி, ஆனந்தபோதினி, அமிர்த குணபோதினி போன்ற பல இதழ்கள் இச்செய்தித் துணுக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன. பிற்காலத்தில் இதழ்களின் தன்மைக்கேற்ப இலக்கியம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல வகைமைகளில் துணுக்குகள் முக்கியத்துவம் பெற்றன. சங்கரி புத்திரன் தமிழின் முன்னோடித் துணுக்கு எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • ஆன்மீகச் செல்வர்கள்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.