under review

கும்பகோணம் ராமையா பிள்ளை

From Tamil Wiki
கும்பகோணம் ராமையா பிள்ளை

கும்பகோணம் ராமையா பிள்ளை (1900 - 1972) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

ராமையா பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே அணக்குடி என்ற கிராமத்தில் கந்தஸ்வாமி பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞருக்கும் கோமளவல்லி அம்மாளுக்கும் 1900-ஆம் ஆண்டு பிறந்தார்.

நாதஸ்வரப் பயிற்சியை தந்தையிடமும், தந்தை வழிப் பாட்டனார் சிவவடிவேல் பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரிடமும் கற்றார்.

தனிவாழ்க்கை

ராமையா பிள்ளையின் மூத்த சகோதரர் ரத்தினம் பிள்ளை காஞ்சி காமகோடி மடத்து இசைக் கலைஞராக இருந்தவர். ரத்தினம் பிள்ளை, திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளையின் மகள் செல்லம்மாள் என்பவரை மணந்தார்.

கும்பகோணத்துக்கு அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த தவில்கலைஞர் சிவராம பிள்ளையின் சகோதரி மாரிமுத்தம்மாளை மணந்தார். இவர்களது ஒரே மகளான காமாக்ஷி, இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளையின் மனைவி.

இசைப்பணி

மரபான இசைமுறையிலிருந்து வழுவாத வாசிப்பு எனப் பெயர் பெற்று பல ஊர்க்ளில் இருந்து அழைப்புகள் வந்தாலும், ராமையா பிள்ளை தொழில்முறை வெளியூர் கச்சேரிகளை ஏற்றுக்கொள்ளவே இல்லை. உறவினர் வீட்டுத் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் வாசித்தார்.

ராமையா பிள்ளையின் நாதஸ்வர இசை மிக சன்னமாக இருக்கும். பலகாலம், இவரும் கும்பகோணம் ராஜண்ணா பிள்ளையும் சேர்ந்து வாசித்திருக்கிறார்கள்.

முகவீணை வாசிப்பதிலும் திறன் பெற்ற ராமையா பிள்ளை, 1950ஆம் ஆண்டு நடைபெற்ற இசைமாநாட்டில் அக்கருவி பற்றிய விளக்க நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். எப்போதும் இசை நூல்களை வாசிப்பதிலும், புதிய ராகங்களைக் கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார் ராமையா பிள்ளை.

மாணவர்கள்

ராமையா பிள்ளை நாதஸ்வரம் கற்பிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர். தான் வாசிப்பதை விட பிறரைப் பயிற்றிவிப்பதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்.

கும்பகோணம் ராமையா பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • வல்லம் கிருஷ்ண பிள்ளை
  • பந்தணைநல்லூர் மஹாலிங்கம் ராமலிங்கம் சகோதரர்கள்
  • திருக்கருகாவூர் சுப்பிரமணியம்
  • கோட்டூர் ஸ்வாமிநாதன்
  • வைக்கம் கோபாலகிருஷ்ணன்
  • பந்தணைநல்லூர் சந்திரசேகரன்
  • கொச்சி நாராயணன்
  • திருமங்கலம் மீனாக்ஷிசுந்தரம்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கும்பகோணம் ராமையா பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

கும்பகோணம் ராமையா பிள்ளை 1972-ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page