under review

கா. சிவா

From Tamil Wiki
Revision as of 17:28, 6 August 2022 by Siva Angammal (talk | contribs)
கா. சிவா

கா. சிவா ( பிறப்பு 10.08.1975), தமிழ் எழுத்தாளர் மற்றும் கவிஞர். தமிழ் விக்கி பங்களிப்பாளராகவும் செயல்படுகிறார்.

பிறப்பு மற்றும் கல்வி

கா. சிவசுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட கா. சிவா, சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவலாங்குடி என்னும் கிராமத்தில் 1975- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10- ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் செ. காமாட்சி பிள்ளை மற்றும் வீர. விசாலாட்சி அம்மாள். கா. சிவாவிற்கு இரு மூத்த சகோதரிகள் உள்ளனர். கா. சிவாவின் கல்வி வாழ்க்கை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்தது.  ஆரம்பக் கல்வியை சிவலாங்குடி  அரசு ஆரம்பப் பள்ளிலும் ஆறாவது வகுப்பை திருச்சிராப்பள்ளி, பொன்மலையில் அமைந்த புனித வளனார் மேனிலைப்பள்ளியிலும் பயின்றார். ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை சென்னை அயனாவரம் அரங்கைய நாயுடு உயர்நிலைப் பள்ளியிலும் இயந்திரவியல் பட்டயப் படிப்பை மதுரவாயலில் உள்ள ஏழுமலையான் தொழில்நுட்பக் கல்லூரியிலும் முடித்தார். பின், தமிழ் மீதான ஆர்வத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இளங்கலை இலக்கியத்தில் (B.lit.) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

படிப்பு முடிந்ததும் வெவ்வேறு பணிகளில் இருந்த கா. சிவா சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். அதைத் தொடர்வதில் இடர் ஏற்பட்ட பொழுது ஆர்வத்தில் படித்த பட்டத்தினை தகுதியாக வைத்து போட்டித் தேர்வு எழுதி, தன் நாற்பதாவது வயதில் தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்தார்.

கா. சிவா 2003- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5- ஆம் நாள் க. அங்கம்மாளை மணந்தார். இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகனும் திவ்ய பாரதி என்ற மகளும் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

கா. சிவாவிற்கு சிறுவயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் எதுவும் எழுதவில்லை. இவர் எழுதிய முதல் கவிதை 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'சொல்வனம்' இதழில் வெளியானது. தொடர்ந்து கவிதைகள் மட்டும்  எழுதிவந்தவர், எழுத்தாளர் ஜெயமோகனின் வார்த்தையினால் தூண்டப்பட்டு சிறுகதை எழுதினார். கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன. கா. சிவா எழுதிய நூல் வாசிப்பனுபவக்  கட்டுரைகளும் இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன.

தி. ஜானகிராமன், வண்ணதாசன் மற்றும் நாஞ்சில் நாடன் ஆகிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கருதுவதாகக் கூறும் கா. சிவா தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடுகிறார்.

கா. சிவாவின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

இலக்கிய இடம்

கா. சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'விரிசல்' நூலுக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; "முதல் தொகுப்பு ஒரு அடையாள அட்டையை போன்றது. எழுத்தாளரின் மொழி, பாணி, அவருடைய முதன்மையான அக்கறைகள் மற்றும் கேள்விகள் பெரும்பாலும் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுவிடும். . அவ்வகையில் கா. சிவாவின் இத்தொகுப்பு நம்பிக்கையளிக்கும் வருகை என தயங்காமல் சொல்லலாம். வலுவான கேள்விகளும், கருப்பொருட்களும் கொண்ட கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலப்போக்கில் கதைகூறும் விதமும் மொழியும் கூர்மையடையும்போது மேலும் செறிவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகள் இந்த தொகுப்பில் உள்ளன"

கா. சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு விரிசல் நூலைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; "ஒருவகையான லௌகீக விவேகம் திகழும் கதைகள் இவை. இத்தனை தூரம் கதைகள் எழுதப்பட்டபின்னரும் இக்கதைகளுக்கு ஓர் இடம் இருப்பது அதனால்தான். இந்த லௌகீகவிவேகம் மிக அரிதாகவே இங்கே கதைகளில் வெளிப்படுகிறது. எழுதப்பட்டவற்றில் இருந்து எழுதும்போதோ, பொதுவான பேசுதளத்திலிருந்தே கருக்களை எடுக்கும்போதோ அது அமைவதில்லை. அதை நேரடியாக வாழ்க்கையிலிருந்தே எடுக்கவேண்டும். அதுவே இத்தொகுதியின் பலகதைகளை கவனத்திற்குரியனவாக ஆக்குகிறது. ஒருவகை அன்றாட விவேகமே  இக்கதைகள் அனைத்திலும் ஓடும் பொதுவான இலக்கியக்கூறு ஆகும்".

நூல்கள்

உசாத்துணை

  • அன்றாடத்திலிருந்து திரள்பவை, எழுத்தாளர் ஜெயமோகன்; https://www.jeyamohan.in/144291/


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.