under review

காகித மலர்கள்

From Tamil Wiki
Revision as of 14:38, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
காகித மலர்கள்

காகித மலர்கள் (1977) ஆதவன் எழுதிய நாவல். டெல்லி நகர்சார்ந்த வாழ்க்கையை மூன்று முதன்மைக் கதைமாந்தர் வழியாக பகடியுடன் சித்தரித்த படைப்பு.

எழுத்து வெளியீடு

ஆதவன் எழுதிய காகித மலர்கள் தீபம் 1974 முதல் சிற்றிதழில் மாதந்தோறும் 30 அத்தியாயங்களாக வெளியிடப்பட்டது. 1977-ல் நர்மதா பதிப்பக வெளியீடாக நூல்வடிவம்கொண்டது

கதைச்சுருக்கம்

விசுவம், செல்லப்பா, பத்ரி ஆகிய மூன்று கதைமாந்தர்களின் வாழ்க்கை வழியாக டெல்லி உயர்மட்டத்தின் பாவனைகளையும் சலிப்பையும் மெல்லிய எள்ளலுடன் சொல்லும் நாவல் இது. விசுவம் அறிவுஜீவியாகவும் உயர்நிலையில் இருப்பதாகவும் வரும்போது செல்லப்பா நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவனாகவும் டெல்லி வாழ்க்கையின் நெரிசலில் சிக்கி அழிபவனாகவும் காட்டப்படுகிறான். பத்ரி முரட்டுத்தனமும் பொறுமையின்மையும் கொண்டவனாக எல்லாவற்றுடனும் மோதுபவனாக இருக்கிறான். ’கணேசன் பசுபதி போலவும், பாக்கியம் தன் மருமகள் பத்மினி போலவும், பத்ரி ஒரு கலகக்காரனை போலவும், விசுவம் சமூகத்திற்காக சிந்திக்கும் அறிவுஜீவி போலவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகையில் செல்லப்பா தன்னை எவர் ஒருவர் போலவும் அடையாளப்படுத்திக்கொள்ள விருப்பமில்லாமல் வெளியில் நிற்கிறான். அவன் பிறர் பொருட்டோ பிறரை போலவோ ஒரு செயலை செய்யும் போது மிக அந்நியமாக உணர்கிறான். அவன் எவ்வித பகட்டுகளும் அற்ற இயல்பானதான தன்னை அந்நியப்படுத்தாத எளிமையான வாழ்வை வாழ விரும்புகிறான். அதன் தொடக்கமாக தாராவுடனான தன் பற்றுதலை உணர்கிறான். அந்த வகையில் அவனே கதையின் நாயகன்’ என விமர்சகர் சர்வோத்தமன் சடகோபன் இந்நாவலை சுருக்கிச் சொல்கிறார்.

விமர்சனங்கள்

இந்நாவல் வெளிவந்தபோது அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பாக்கியமுத்து போன்றவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது. தி.க.சிவசங்கரன் மார்க்ஸியப் பார்வையில் இந்நாவலை மறுத்து எழுதினார் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் ஆதவன் “வெவ்வேறு பாத்திரங்களின் தனித்த மனப் போராட்டங்களாக, பிம்பத் தேடல்களாக, அமைந்துள்ள காகித மலர்களின் அத்தியாயங்கள், இன்றைய சமூகம் வெவ்வேறு 'தான்' களாகப் பிளவுபட்டுக் கிடப்பதைச் சித்திரிக்கும் விதமாக அமைந்துள்ளன. மனிதனுள்ளே எப்போதுமிருக்கிற மிருகம் மீண்டும் மீண்டும் நாவலின் பக்கங்களில் 'வன்முறை' வடிவத்திலோ வேறு வடிவங்களிலோ தலைதூக்குகிறது. அதே சமயத்தில் சில 'தான்' களின் சிதறலாகவும் இது அமைகிறது.” என இந்நாவலைப் பற்றி குறிப்பிட்டார்.

இலக்கிய இடம்

ஆதவனின் காகிதமலர்கள் தமிழில் பெருநகர் வாழ்க்கையை நம்பகமாகச் சித்தரித்த நாவல். இருத்தலியல் பார்வையும் ஃப்ராய்டிய உளப்பகுப்பு அணுகுமுறையும் கொண்டது. அங்கதத்துடன் நவீன வாழ்க்கையை ஆராய்வது. தீவிரமான அகமோதல்களோ, தத்துவச் சிக்கல்களோ அற்ற கதைமாந்தர்கள் கொண்ட நாவல் இது. உணர்ச்சிகரமும் கவித்துவமும் இதன் அமைப்பில் இல்லை. அன்றைய பொதுக்கருத்துக்கள் பலவற்றுக்கும் இந்நாவலில் அறிவார்ந்த எதிர்வினைகள் உள்ளன. தமிழின் நவீனத்துவ நாவல்களில் குறிப்பிடத்தக்கது

உசாத்துணை


✅Finalised Page