standardised

கல்குளம் மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
Revision as of 16:21, 25 April 2022 by Tamaraikannan (talk | contribs)
கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம்(கல்குளம்) ஊரில் உள்ள சிவ ஆலயம். நீலகண்டசுவாமி கோவில் என்று அறியப்படுகிறது. மூலவர் நீலகண்டசுவாமி லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஏழாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் நகராட்சி கீழக்குளம் பகுதியில் அமைந்துள்ளது ஆலயம். பத்பநாபபுரம் கல்குளம் என்றும் அழைக்கப்படுகிறது. பழைய கல்வெட்டுகள் பத்பநாபபுரத்தை கல்குளம் என்று குறிப்பிடுகின்றன. கல்குளம் அல்லது பத்மநாபபுரம் என அழைக்கப்படும் இவ்வூர் வேனாட்டு அரசர்களின் காலத்தில் தலைநகராகவும் திருவிதாங்கூர் அரசின் முதல் தலைநகராகவும் இருந்த புராதன நகரம்.

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை என்னும் ஊரின் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர்

கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

கல்குளம் கோவிலின் மூலவர் நீலகண்டசுவாமி. மூலவரின் துணை ஆனந்தவல்லிக்கு தனி கோவில் ஆலய வளாகத்தில் உள்ளது.

கோவில் அமைப்பு

சதுர வடிவில் நான்கு புறமும் 5 மீ உயரமுடைய கோட்டைச்சுவர்களுடன் கூடியது ஆலய வளாகம். ஆலயவளாகத்தில் சிவன் மற்றும் அம்மன் இருவருக்கும் தனித்தனியே கோவில்களுள்ளன. ஆலயத்தின் எதிரே தெப்ப மண்டபத்துடன் கூடிய தெப்ப குளம் உள்ளது. சிவன் சன்னதிக்கு எதிரே உள்ள வாசலில் மூன்று அடுக்கு கொண்ட கோபுரம் உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் சிசீந்திரம் தாணுமலையான் கோவில் மற்றும் கல்குளம் கோவில் இரண்டில் மட்டுமே மாடிகோபுரம் உள்ளது. இரண்டு கோவில்களுக்கும் தனிதனியே கிழக்கு வாசல்கள் இருந்தாலும் வடக்கு வாசலே முக்கிய வாசலாக பயன்பாட்டில் உள்ளது. சிவன் மற்றும் அம்மன் கோவில்களை சுற்றிலும் திறந்த வெளிப்பிரகாரமும் திருச்சுற்று மண்டபமும் உள்ளது. இரு கோவில்களுக்கும் தனி தனி விமானங்கள் உள்ளன.

சித்திர சபை மண்டபம்: சிவன் மற்றும் அம்மன் கோவில்களுக்கு எதிரே தெற்கு வடக்காக நீண்டு இரு கோவில்களையும் இணைக்கும்படி சித்திர சபை மண்டபம் உள்ளது. கொடிமர மண்டபம் என்றும் கிழக்கு பிரகாரம் என்றும் அழைக்கப்படும் மண்டபத்தில் கலைநுட்பமுள்ள சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் மேற்கு பகுதியில் 12 தூண்களும் கிழக்கு பகுதியில் 13 தூண்களும் உள்ளன. மண்டபத்தின் தென்பகுதி திறந்த வெளியாக உள்ளது. வடக்கில் கருவறையுடன் கூடிய மண்டபம் ஒன்று உள்ளது. இக்கருவறையில் முன்னர் இருந்த நடராஜரும் சிவகாமியும் இடம் மாற்றப்பட்டு கருவறையின் பக்கத்து அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். மண்டபத்தின் வடமேற்கில் திருக்கிணறு உள்ளது.

சித்திரசபை மண்டபத்திலிருந்து நீலகண்டன் இருக்கும் ஸ்ரீகோவில் செல்லும் வாசலில் துவாரபலகர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் மற்றும் அம்மன் சன்னதிகளுக்கு எதிரே செப்பு தகடு போர்த்திய கொடிமரமும் பலிபீடமும் உள்ளன. இருகொடிமரங்களின் நடுவே அம்மன் திருகல்யாணத்திற்குரிய சிறிய மண்டபம் உள்ளது. கொடிமரத்தை அடுத்து துவாரபாலகர்களை கடந்தால் 10 தூண்களும் 8 யாளிகளும் கொண்ட யாளி மண்டபம் உள்ளது.

சிவன் கோவில்: கருவறை, நந்தி மண்டபம், திருச்சுற்று மண்டபம், திறந்த வெளி பிராகாரம் கொண்டது. சிவன் சன்னதிக்குள் நுளைந்ததும் நான்கு தூண்களை சிறு மண்டபம் பெரிய திண்ணைகளுடன் உள்ளது. சிறுமண்டபத்தை அடுத்து கிழக்கு பிராகாரம் உள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. ஸ்ரீகோவிலின் முன்னே சோபன படியுடைய சிறு மண்டபம் உள்ளது. நந்தி மண்டபத்தில் அதிக வேலைபாடில்லாத நந்தி சிற்பம் உள்ளது.

கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

ஸ்ரீகோவிலை ஒட்டிய மூன்று பக்க திருச்சுற்று மண்டபத்திலும் உயரமான திண்ணை உள்ளது. திருச்சுற்று மண்டபத்திற்கும் ஸ்ரீகோவிலுக்கும் நடுவில் உள்ள பிரகாரம் திறந்த வெளியுடன் காற்றும் வெளிச்சமும் வரும்படி இடைவெளிவிட்டு கல்லால் அடுக்கப்பட்டுள்ளது.

திருச்சுற்று மண்டபத்தின் தென்பகுதியில் 10 தூண்களும் மேற்கு பகுதி 5 துண்களும் வடக்கு பகுதி 5 தூண்களும் உள்ளன. வடக்கு திருச்சுற்று மண்அபத்தில் சண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கிழக்கு பிராகாரம் வடகிழக்கில் நடராஜர் மற்றும் சிவகாமி அமைந்துள்ள கோவில் தெற்கு நோக்கி உள்ளது. இங்கு பிற்காலத்திய செப்பு விக்கிரகங்கள் உள்ளன.

அம்மன் கோவில்: அம்மன் கோவில் சிவன் கோவிலுக்கு வடக்கே கிழக்கு நோக்கி உள்ளது. கருவறை, பிராகாரம், திருச்சுற்று மண்டபம் ஆகிய பகுதிகளை கொண்டது. சிவன் கோவிலின் அதே அமைப்பை கொண்ட அம்மன் கோவிலின் திருச்சுற்று மண்டபத்தின் தென்பகுதியில் 5 தூண்களும் மேற்கு பகுதி 8 துண்களும் வடக்கு பகுதி 5 தூண்களும் உள்ளன. பிராகாரத்தின் கிழக்கு கோடியில் பள்ளியறை உள்ளது. கருவறையில் ஆனந்தவல்லியின் நின்ற கோல சிற்பம் உள்ளது.

சிவன் கோவிலுக்கும் அம்மன் கோவிலுக்கும் நடுவில் 12 தூண்களை கொண்ட நீண்ட மண்டபம் உள்ளது. அம்மன் கோவில் தென்புறமும் சிவன் கோவில் வடபுறமும் இம்மண்டபத்திற்கு வர வாசல்கள் உள்ளன. இங்கே கணபதி கோவிலும் உள்ளது.

சிவன் மற்றும் அம்மன் கோவிலை சுற்றி பெரிய திறந்த வெளிப்பிராகாரமும் திருசுச்ற்று மண்டபமும் உள்ளன. கிழக்கு பிராகாரத்தில் கொடிமரம் உள்ளது. வெளி பிராகார சுற்று மண்டபத்தின் தென்பகுதியில் 30 தூண்களும் மேற்கு பகுதி 23 துண்களும் வடக்கு பகுதி 23 தூண்களும் கொண்டது. தூண்களில் விளக்கு பாவை சிற்பங்கள் உள்ளன. வெளிபிராகாரத்தின் தென்கிழக்கில் கிழக்கு பார்த்து விமானம் கொண்ட கல்லால் ஆன சாஸ்தா கோவில் உள்ளது.

கோவிலின் மேற்கு வாசலை கடந்து கோவிலுக்கு வெளியே சிவன் கோவில் உள்ளது. ஆவிடையாரில் பிரதிஷ்டிக்கப்பட்ட சிவன் ஆதிமூலம் என்று கொள்ளப்படுகிறார். சிவனின் உயரம் 160 செ.மீ.

சிற்பங்கள்

கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

சித்திரசபை மண்டபத்தின் இடது பக்க தூண் ஒன்றில் யட்சினி சிற்பம் மற்றும் அஞ்சலி ஹஸ்யத்துடன் நிற்கும் ஆண் சிற்பங்கள் உள்ளன. வடக்கு பகுதியில் நடராஜர் இருந்த கோவில் மண்டபத்தை ஒட்டிய தூண்களில் கர்ணன், கங்காள நாதர், வேணுகோபாலன், அர்ஜுனன் தபஸ் ஆகிய கலைநுட்பமுடைய ஆளுயர கருங்கல் சிற்பங்கள் உள்ளன.

கர்ணன்: இரண்டு கைகளும் கைகளில் சற்பமும் வில்லும் உள்ளன.

கங்காள நாதர்: பலவகையான ஆபரணங்களுடன் காணப்படும் கங்காளநாதரின் கழுத்தில் கங்காளமும் அதில் தொங்கும் பிணமும் உள்ளன. இவரது அருகில் தலையில் சட்டி ஏந்திய குள்ள பூதம் உள்ளது. கங்காளரின் வலது கை மானுக்கு உணவு ஊட்டுவட்தாக உள்ளது. மான் துள்ளியபடி நிற்கிறது.

வேணுகோபாலன்: நான்கு கைகளை கொண்ட சிற்பத்தின் முன் கைகள் இரண்டும் புல்லங்குழலைப் பிடித்துள்ளது. புல்லங்குழல் உதட்டின் கீழ் பொருந்தி உள்ளது. மற்ற இரு கைகளிலும் சங்கும் சக்கரமும் உள்ளன. முத்து மாலையுடன் வேறு ஆபரணங்களும் அணிந்துள்ளது. காலின் கீழ் குழலிசை கேட்டு மயங்கியபடி பசுக்கள் தலையை உயர்த்தியபடி உள்ளன. நெற்றியில் நாமம் உள்ளது.

அர்ஜுனன் தபஸ்: கைகள் அம்பையும் வில்லையும் ஏந்தி உள்ளது. சிவனுக்கு தாடி கட்டப்பட்டுள்ளது.

நிர்வாணப் பெண்: மேற்கு பக்க தூணில் நிர்வாணமாக நிற்கும் பெண் சிற்பம் உள்ளது. காலின் கீழ் இருவர் வணங்குவதாக கட்டப்பட்டுள்ளது. இதே தூணில் விளக்கேந்திய பாவை சிற்பமும் உள்ளது.

திருமலை நாயக்கர்: அம்மன் கோவில் வாசலின் இரு பக்க தூண்கலிலும் திருமலை நாயக்கர் (1623-1659) சிற்பமும் அவருடைய தம்பி அல்லது நாயக்க அதிகாரி ஒருவரின் சிற்பமும் உள்ளது. திருமலை நாயக்கர் நிறைய ஆபரணங்களுடன் அஞ்சலி ஹஸ்தமுடையவராய் கம்பீரமாய் தொப்பையுடன் காட்சியளிக்கிறார். அருகே இருக்கும் பணிப்பெண் சிற்பம் கைகளில் வெஞ்சாமரம் மற்றும் அடைப்பையை தாங்கியபடி உள்ளன. மற்றொரு தூணில் இருப்பவர் நிறைய ஆபரணங்களுடன் உள்ளார். அருகே குத்துவாளை ஏந்திய பெண் உள்ளார்.

விளக்கேந்திய பாவை: நாயக்கர் தூணின் அடுத்துள்ள தூணில் பலவைகையான ஆபரணங்களுடன் புல்லாக்கும் அணிந்திருக்கிறாள். தலைமுடி பின்னப்பட்டுள்ளது நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.

சித்திர மண்டபத்தில் உள்ள பிற சிறபங்கள்:

  • யட்சினி
  • அஞ்சலி ஹஸ்தத்துடன் ஆண்
  • சக்கரவர்த்தியான விஷ்ணு
  • வஸ்த்திரங்களை கவரும் கர்ணன்
  • நிர்வாணப்பெண்
  • முனிவர்கள்
  • அஞ்சலி ஹஸ்த அடியவர்
  • கையிலும் தலையிலும் பலாபழத்துடன் குரங்கு
  • விநாயகர்
கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

யாளி மண்டப சிற்பங்கள்:

  • துதிக்கையின் கீழ் யானை என்னும் வடிவத்துடன் 8 யாளிகள்
  • விநாயகர்
  • கருக்கு

அம்மன் கோவில் சிற்பங்கள்:

  • அர்ஜுனன் தபஸ்
  • சிங்கம்
  • முனிவர்
  • நடனமாது
  • வில்லுடன் கூடிய ராமர்
  • வாள்வீரன்
  • அடியவர்
  • ஒப்பனை செய்யும் பெண்(கண்ணாடி பார்த்து ஒப்பனை செய்கிறாள்)
  • இளவரசியை கவர்ந்து செல்லும் குறவன்
  • கர்ணன்
  • மன்மதன்(ஒருகை வரத முத்திரை காட்ட கரும்பு வில்லுடன் நிற்கும் சிற்பம்)
  • சுப்பிரமணியன்(மயில் மேல் அமர்ந்த 4 கைகள் கொண்ட சிற்பம்; மேல் கைகளில் சக்தி, வஜ்ராயுதங்கள், கீழ்கைகளில் அபய, வரத முத்திரை )
  • விநாயகர்
  • சிவன்
  • கருக்கு
  • அன்னம்
  • சாஸ்தா(உட்குடிகா ஆசனத்தில்)
  • மான்
  • மழு ஏந்திய சிவன்
  • வேடன்(மானை தோளில் சுமந்து செல்கிறான்)
  • பாம்பு படுக்கையில் சிவன்(ஆவுடையில் இருக்கும் சிவனுக்கு நாகம் குடைபிடிக்கிறது)

வரலாறு

கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

திருமலை நாயக்கருக்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கல்வெட்டு செய்திகள் இல்லை. திருமலை நாயக்கர் ஆட்சியின் போது திருவிதாங்கூர் பகுதிகளுடன் உறவு கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. திருமலை நாயக்கர் நாஞ்சில் நாட்டு படையடுப்புக்கு பின்னர் நாஞ்சில் நாட்டு கோவில்களுக்கு நிபந்தங்கள் கொடுத்துள்ளார். கட்டுமான பணிகளும் செய்துள்ளார். திருமலை நாயக்கரின் ஆளுயர சிலையை கொண்ட சித்திரசபை மண்டப கட்டுமான பணிகள் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்திருக்கலாம்.

கல்வெட்டுகள்
  • பொ.யு. 1237-ஆம் ஆண்டு கல்வெட்டில்(T.A.S. Vol. VII Part II p.126) வேணாட்டு அரசன் வீரகேரள வர்மன் நிலம் விட்டு கொடுத்ததும் நிபந்தம் அளித்த செய்தியும் உள்ளன. கோவிலில் புத்தரிசி நிகழ்ச்சி நடக்கும் போது உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி செலவு விவரங்களுடன் உள்ளது. [கோவிலில் உள்ளது]
  • பொ.யு. 1577-ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டில்(T.A.S. Vol. VII Part II p.127) மலையாள ஆண்டு 753(1577) இல் கோவில் கும்பாபிஷேகம் நடந்த செய்தி உள்ளது. [கோவில் கலச மண்டபம் மேற்கு பக்க திண்ணை சுவரில் உள்ளது]
  • பொ.யு. 1579-ஆம் ஆண்டு கல்வெட்டில் இரவிவர்மன் என்னும் வேணாட்டரசன் கோவிலுக்கு வந்து தங்கி மராமரத்து பணிகள் செய்ய உத்திரவிட்ட செய்தியும் 1579 கார்த்திகை 1-ஆம் நாள் பணி முடிந்து கலசபூஜை நடந்த செய்தியும் உள்ளது. [கோவில் கலச மண்டபம் திண்ணை சுவரில் உள்ளது]
  • பொ.யு. 1593-ஆம் ஆண்டு கல்வெட்டில் திருப்பாயூர் இரவிவர்மன் என்னும் வேணாட்டரசன் கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பூர்வபட்ச திதியில் கல்குளம் மகாதேவரை வணங்கிவிட்டு நிபந்தம் கொடுத்த செய்தி உள்ளது. [கோவில் கலச மண்டபம் வலதுபக்க தூணில் உள்ளது]
  • பொ.யு. 1681-ஆம் ஆண்டு நிபந்த கல்வெட்டின் மூலம் கல்குளம் மகாதேவர் கோவில் சொத்துகள் நாஞ்சில் நாட்டில் இருந்த செய்தி திருகிறது. [தனிக்கல்லில் உள்ளது]
  • பொ.யு. 1686-ஆம் ஆண்டு கல்வெட்டில் திருவட்டாறு தேசம் இரவி பத்மநாபன் கல்மடம் கட்டி மகேஸ்வர பூஜை செய்ய நிபந்தம் அளித்த செய்தியும் இந்த ம்டத்தில் கல்குளம் மகாதேவர் எழுந்தருளினார் என்னும் செய்தியும் உள்ளன.
  • பொ.யு. 1710-ஆம் ஆண்டு நிபந்த கல்வெட்டில் மகாதேவர், நீலகண்டசுவாமி என்று அழைக்கப்படுகிறார். கோவில் இருந்த பகுதி சாறக்கோணம் என்று அழைக்கப்பட்டுள்ளது. [பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது]
  • பொ.யு. 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மார்தாண்டன் நாராயணன் என்பவன் கோவிலில் வரிசை தூண் அமைத்த செய்தியை கூரும். [கோவில் கலச மண்டபம் இடதுபக்க தூணில் உள்ளது]
கல்குளம் மகாதேவர்(நீலகண்டசுவாமி) ஆலயம்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.