கனவுத்தொழிற்சாலை

From Tamil Wiki
கனவுத்தொழிற்சாலை

கனவுத் தொழிற்சாலை(1979) சுஜாதா எழுதிய நாவல். திரையுலகைப் பற்றிய சித்தரிப்புகளின் தொகுப்பாக அமைந்தது

எழுத்து, வெளியீடு

கனவுத் தொழிற்சாலை சுஜாதாவல் 1979-ல் ஆனந்த விகடனில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்ற நாவல். சினிமா உலகை பின்னணியாகக் கொண்டு சுஜாதா இதை எழுதினார்

கதைச்சுருக்கம்

கனவுத்தொழிற்சாலையின் மையக்கதாபாத்திரம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அருண். அவனை விரும்பும் பிரேமலதாவை மணந்துகொள்கிறான். பின்னர் அவளுடைய பிறதொடர்பை உணர்ந்து விவாகரத்து நோக்கிச் செல்கிறான். அவன் புகழ் மங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே சுயமாக படம் தயாரித்து சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். அவனுடைய வீழ்ச்சியை மக்களும் சினிமா உலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த மையக்கதையுடன் இணையும் பல துணைக்கதைகள். ஒரு நடிகையாகவேண்டும் என வந்து விபச்சாரியாகி தற்கொலை செய்துகொள்ளும் மனோன்மணி. பிச்சையெடுக்கும் நிலையில் இருந்து பாடலாசிரியர் ஆனபின் குடித்தே சீரழியும் அருமைராசன் என பல்வேறு கதைமாந்தர் நாவலுக்குள் உள்ளனர். சினிமாவுலகின் ஒரு முழுச்சித்திரத்தையும் அளிக்கும் நாவல்

இலக்கிய இடம்

கனவுத்தொழிற்சாலை முழுமையாகவே சினிமா உலகம் பற்றி எழுதப்பட்ட நாவல். சினிமாவை புலமாக கொண்டு அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் முன்னரே வெளிவந்துள்ளது. ஜெயமோகன் பின்னர் எழுதிய கன்னியாகுமரி சினிமா உலகை பின்னணியாகக் கொண்டது. இந்நாவலில் சுஜாதா மர்மம், திகில் போன்றவற்றை நோக்கிச் செல்லாமல் சினிமா உலகில் எழுச்சியும் வீழ்ச்சியும் நிகழ்வதை சுருக்கமான மொழியில் விரைவான சித்திரங்கள் வழியாகச் சொல்கிறார். சாமானியர்களுக்கு சினிமாவில் புகழ்பெற்றவர்கள் மேல் இருக்கும் ஈடுபாடும், உள்ளார்ந்த பொறாமைகலந்த வெறுப்பும் ஒரே சமயம் பதிவானமையால் குறிப்பிடத்தக்க படைப்பாக கருதப்படுகிறது

உசாத்துணை