under review

கரைந்த நிழல்கள்

From Tamil Wiki
கரைந்த நிழல்கள்

கரைந்த நிழல்கள் (1977) அசோகமித்திரன் எழுதிய நாவல். தமிழில் திரைப்பட உலகம் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் இலக்கியம் சார்ந்து முக்கியமானதாக கருதப்படுகிறது.

எழுத்து வெளியீடு

அசோகமித்திரன் இந்நாவலை 1967-ம் ஆண்டில் 'தீபம்' இதழில் தொடராக எழுதினார். 1970-ல் நர்மதா பதிப்பகம் வெளியிட்டது. பின்னர் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

பின்புலம்

அசோகமித்திரன் 1953 முதல் 1966 வரை பதிமூன்று ஆண்டுகள் ஜெமினி ஸ்டுடியோவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்தார். அவ்வனுபவங்களை 'My Years with Boss' என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் பின்னர் இருட்டிலிருந்து வெளிச்சம் என்னும் தலைப்பில் தமிழிலும் எழுதியிருக்கிறார். இந்நாவல் அவ்வனுபவங்களின் பின்னணியில் அமைந்தது. சினிமாப் பின்னணியில் அசோகமித்திரன் பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

தொடர்ச்சிகள்

கரைந்த நிழல்கள் நாவலின் கதைமாந்தரின் சாயல்கொண்ட கதாபாத்திரங்கள் அசோகமித்திரனின் மானசரோவர் என்ற நாவலிலும் உள்ளன. அவை அசோகமித்திரனுக்கு தெரிந்த சில மெய்யான ஆளுமைகளின் சாயல் கொண்டவை என சொல்லப்படுகிறது.

கதைச்சுருக்கம்

கரைந்த நிழல்கள் சீரான கதைக் கட்டமைப்பு இல்லாதது. சினிமா தயாரிப்பாளரான ரெட்டியார், ஸ்டுடியோ அதிபர் ராமையங்கார், அவருடைய பொறுப்பில்லாத மகன், அவர் எடுக்கும் சினிமாவில் நடிக்கும் நடிகை ஜெயச்சந்திரிகா, தயாரிப்பு நிர்வாகியான நடராஜன், உதவி இயக்குநர் சம்பத், மற்றும் ராஜகோபாலன் என பல கதாபாத்திரங்கள் சுருக்கமாகச் சொல்லப்படுகிறார்கள். காலம் வேகமாகச் செல்கிறது. ரெட்டியார் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து காணாமல் போகிறார், ஜெயச்சந்திரிகா பிரபல நடிகையாகி உதவி இயக்குனராக இருந்த ராஜகோபாலை திருமணம் செய்துகொள்கிறார், சம்பத் வெற்றி பட இயக்குனராக ஆகிறான், தயாரிப்பு நிர்வாகியாக இருந்த நடராஜன் பிச்சைக்காரானாக ஆகிறார்.

மொழியாக்கம்

  • Star Crossed (V. Ramnarayan)

இலக்கிய இடம்

கரைந்த நிழல்கள் சினிமாவை பின்னணிக் களமாகக் கொண்டது. சினிமாவை வாழ்க்கையின் குறியீடாகவே அசோகமித்திரன் எடுத்துக் கொள்கிறார். அந்தக் களத்தில் ஒருவரின் விதி இன்னொருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறது. சிலர் மேலே செல்ல சிலர் அழிகிறார்கள். வாழ்க்கையின் மிகப்பெரிய சித்திரத்தை சுருக்கமாக இந்நாவலில் அசோகமித்திரன் அளிக்கிறார். இந்நாவலில் சினிமாவின் தயாரிப்பு சார்ந்த தகவல்கள் உள்ளனவே ஒழிய சினிமா உலகம் முழுமையாக இல்லை. சினிமா பற்றிய நாவல் அல்ல இது. சினிமா மனிதர்களின் வாழ்க்கைக்களமாகவே சொல்லப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page