under review

எஸ். பரசுராம ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
m (Spell Check done)
 
Line 22: Line 22:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 11:39, 19 October 2023

எஸ். பரசுராம ஐயர்

எஸ். பரசுராம ஐயர் (பரசுராமய்யர்; பரசுராமைய்யர்) (1905-ஆகஸ்ட் 24,1988) எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர். சிறார் இதழ்கள் பலவற்றை அச்சிட்டார். ‘டிங் டாங்’ சிறார் இதழின் நிறுவனர், வெளியீட்டாளர்.

பிறப்பு, கல்வி

எஸ். பரசுராம ஐயர், 1905-ல், மயிலாடுத்துறைக்கு அருகே உள்ள ஆறுபாதி என்ற சிற்றூரில், சீனிவாச ஐயர்-மீனாட்சி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வி கற்றார். குடும்பச் சூழலால் உயர்நிலைப் படிப்போடு இடை நின்றார்.

தனி வாழ்க்கை

எஸ். பரசுராம ஐயர், மணமானவர். மனைவி, அலமேலு. மகன்கள்: எஸ்.பி. சீனிவாசன், எஸ்.பி. கோபாலகிருஷ்ணன், பி. வெங்கட்ராமன், பி. நடராஜன். எஸ்.பி. பாலு. மகள்: ஜெயா.

அச்சகம்

எஸ். பரசுராம ஐயர், மயிலாடுதுறையில் உள்ள வசந்த அச்சகத்தில் அச்சக ஊழியராகப் பணியாற்றினார். கும்பகோணம் காமாட்சி அச்சகத்தில் அச்சகராகப் பணிபுரிந்தார். புதுக்கோட்டையில் உள்ள தேசபந்து நாளிதழின் அச்சகத்தில் அச்சுக்கோர்ப்பவராகப் பணியாற்றினார். தொடர்ந்து புதுக்கோட்டை தர்மராஜப் பிள்ளை நடத்தி வந்த கண்ணபிரான் அச்சகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். பின் அச்சகத்தை அவரிடமிருந்து விலைக்கு வாங்கி தானே பொறுப்பேற்று நடத்தினார்.

இதழியல்

எஸ். பரசுராம ஐயர், அக்காலத்தில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘பாலர்மலர், டமாரம், 'சங்கு' போன்ற சிறார் இதழ்கள் பலவற்றைத் தனது கண்ணபிரான் அச்சகம் மூலம் அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் நிலையத்தின் நூல்களை அச்சிட்டார். எழுத்தாளர்கள் பலரது நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். புதுக்கோட்டையின் சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்தார்.

டிங் டாங்

1952-ல், காகித விலையேற்றத்தால் புதுகோட்டையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த அனைத்துச் சிறார் இதழ்களும் நின்று போயின. எஸ். பரசுராம ஐயர், சிறுவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், 1953-ல், ‘டிங் டாங்’ என்ற வார இதழைத் தொடங்கினார். எட்டுப் பக்கங்களில் இரு வண்ணங்களில் இவ்விதழ் வெளியானது. ஆரம்பத்தில் அழ.வள்ளியப்பா ஆசிரியராக இருந்தார். அதன் பின் எஸ். பரசுராம ஐயரின் மகனான பி. வெங்கட்ராமன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். இதழின் தலையங்கத்தை எஸ். பரசுராம ஐயர் எழுதினார். அக்காலத்துச் சிறார் எழுத்தாளர்களான அழ. வள்ளியப்பா, ஜெ. எத்திராஜன், தம்பி சீனிவாசன், மாயூரன் போன்றோர் இதழ்தோறும் எழுதினர். அக்காலத்தின் இளம் எழுத்தாளர்கள் பலரது படைப்புகள் டிங் டாங்கில் தொடர்ந்து வெளியாகின. சுமார் நான்காண்டு காலம் டிங் டாங் வெளிவந்தது.

அமைப்புச் செயல்பாடுகள்

எஸ். பரசுராம ஐயர், தனது அச்சகம் மூலம் பல இலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தார். அக்கால புதுக்கோட்டை எழுத்தாளர்கள் கூடுமிடமாக கண்ணபிரான் அச்சகம் இருந்தது. கண்ணபிரான் அச்சகத்தில் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், சுப. சொக்கலிங்கம் செட்டியார், பாடலாசிரியர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி, திரைப்பட இயக்குநர் ப. நீலகண்டன், அழ. வள்ளியப்பா, அகிலன் உள்ளிட்ட பலர் வந்து இலக்கிய உரையாடல்ளை நிகழ்த்தினர்.

மறைவு

எஸ். பரசுராம ஐயர் ஆகஸ்ட் 24, 1988-ல் காலமானார்.

மதிப்பீடு

எஸ். பரசுராம ஐயர், புதுக்கோட்டையின் சிறார் வளர்ச்சிக்கு உதவிய முக்கிய இதழாளராக, முன்னோடிப் பதிப்பாளராக மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

  • எதிரொலி விஸ்வநாதன் எழுதிய நட்புத்திலகம் பி. வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பக வெளியீடு.
  • குழந்தை இலக்கிய முன்னோடிகள், ஆர்.வி. பதி


✅Finalised Page