under review

எஸ். சத்தியமூர்த்தி (எழுத்தாளர்)

From Tamil Wiki
எழுத்தாளர் எஸ். சத்தியமூர்த்தி (இ.ஆ.ப. ஓய்வு)

எஸ். சத்தியமூர்த்தி (சீனிவாசன் சத்தியமூர்த்தி: பிறப்பு: டிசம்பர் 3, 1945) தமிழக எழுத்தாளர், கவிஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றினார். ‘இதயம் பேசுகிறது’ இதழில், ‘கடைசி பக்கம்’ என்ற தொடர் மூலம் பரவலான கவனம் பெற்றார். உலக அளவில் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுதினார். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

எஸ். சத்தியமூர்த்தி, டிசம்பர் 3, 1945 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில்,  சீனிவாசன் - நாமகிரி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்தவர், சென்னை லயோலா கல்லூரியில் பி. காம். படித்தார். ஐ.பி.எஸ். தேர்வு எழுதித் தேர்வானார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

எஸ். சத்தியமூர்த்தி, சென்னை ரிசர்வ் வங்கியில் சில ஆண்டுகள் பணியாற்றினார். நாக்பூரில், மாநிலக் கணக்காய்வில், Deputy Accountant General ஆகப் பணிபுரிந்தார்.  கப்பல் வளர்ச்சித் துறையில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார். டெல்லியில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் இங்கிலாந்து, பர்மிங்காம், ஜெருசலேம், காபூல், பாக்தாத், ஸ்பெயின் போன்ற இடங்களில் நிதித் துறை ஆலோசகராகப் பணியாற்றினார். மனைவி ஹேமா சத்தியமூர்த்தி, அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தார். மகன்கள்: ஸ்ரீராம் சத்தியமூர்த்தி (விஞ்ஞானி); அரவிந்த் (நிதி ஆலோசகர்).

எஸ். சத்தியமூர்த்தி நாவல்கள்

இலக்கிய வாழ்க்கை

எஸ். சத்தியமூர்த்தி கவிதைகளில் ஈடுபாடு கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை, கண்ணதாசன் ஆசிரியராக இருந்த தென்றல் இதழில் வெளியானது. மஞ்சரி இதழ் கட்டுரைகளாலும், எழுத்தாளர் நாடோடி, சோமலெ, பிலோ இருதயநாத் போன்றோரது எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு கட்டுரைகள் எழுதினார். சத்தியமூர்த்தியின் எழுத்தால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர் மணியன், தனது இதயம் பேசுகிறது இதழின் கடைசி பக்கங்களை சத்தியமூர்த்திக்காக ஒதுக்கினார். அதில் தொடர்ந்து இருபது ஆண்டுகள் (1985-2005) கட்டுரைகள் எழுதினார் சத்தியமூர்த்தி. அவற்றில் சில பின்னர் நூல்களாக வெளிவந்தன.

எஸ். சத்தியமூர்த்தி, பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா போன்ற பல நாடுகளுக்குப் பயணப்பட்டு அந்த அனுபவங்களைப் பயண நூல்களாக எழுதினார்.

ஊடகம்

  • எஸ். சத்தியமூர்த்தி, சென்னைத் தொலைக்காட்சியில் 50 முறைகளுக்கும் மேல் வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தினார்.
  • சென்னைத் தொலைக்காட்சியில் பேச்சுத் தமிழ், வண்ணத் தமிழ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார்.
  • வானொலியில் பல தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்.
  • வானொலிக்காகப் பலரைப் பேட்டி கண்டார்.

இலக்கிய இடம்

எஸ். சத்தியமூர்த்தி, பத்தி எழுத்தாளர். தனது பணி மற்றும் அனுபவங்களைக் கொண்டு வெகு ஜன இதழ்களில் சுவாரஸ்யமான நடையில் கட்டுரைகள், தொடர்கள் எழுதினார். எதையும் சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்வதைத் தனது எழுத்து முறையாகக் கொண்டார். தனது கட்டுரைகளின் நகைச்சுவைக்காக ஜெயகாந்தன் தொடங்கி சிவசங்கரி, சுஜாதா, எஸ்.ஏ.பி., கமல்ஹாசன் உள்ளிட்ட பலரது பாராட்டுதல்களைப் பெற்றார். பல்வேறு வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களது அன்றாட வாழ்வியல் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்தார்.

எஸ். சத்தியமூர்த்தி நூல்கள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • வானவில்
  • கரையைத் தேடிய அலைகள்
நாவல்
  • ஆயிரம் நிலவே வா
  • அம்மா வந்தாச்சு
கட்டுரை நூல்கள்
  • கடைசிப் பக்கம்
  • சின்னச் சின்னப் பூக்கள்
  • கண் சிமிட்டல்கள்
  • கதம்பச்சரம்
  • தூறல்கள்
  • மின்னல்கள்
  • கிளிஞ்சல்கள்
  • அலைகள்
  • எதிர்கால யுத்தங்கள்
  • பட்டாம்பூச்சிகள்
பயண நூல்கள்
  • பாரத உலா
  • மூன்று நாடுகளில் முன்னூறு நாட்கள்
  • ஐரோப்பாவில் ஐந்து மாதங்கள்
  • மயக்கும் மலேசியா

உசாத்துணை


✅Finalised Page